நிலம் காப்பாள் நித்யகல்யாணி

செங்கோட்டை, நெல்லை

நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் அருள் பாலிக்கிறாள் நித்ய கல்யாணி அம்மன். செங்கோட்டை, கேரளா திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்தபோது திருவிதாங்கூர் மன்னர் குற்றாலத்திற்கு அடிக்கடி விஜயம் செய்வார். அவ்வாறு வந்துவிட்டு செல்லும்போது செங்கோட்டை அருகே இலத்தூரில் உள்ள மதுநாதசுவாமியை தரிசனம் செய்துவிட்டுத் தான் செல்வார். ஒருமுறை இலத்தூருக்கு சென்று கொண்டிருக்கும்போது கானகத்தின் நடுவே உள்ள பாதையில் மூங்கில் மரங்கள் அடர்த்தியாக வளர்ந்த பகுதியில் வந்ததும் மன்னரின் வண்டி நின்றுவிட்டது.

சாரதி எவ்வளவோ முயன்றும் குதிரைகள் நகரவே இல்லை. அப்போது, அடர்த்தியாக நின்ற மூங்கில் மரக்காட்டில் இருந்து ஒரு பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. திடுக்கிட்ட மன்னர், தனது சேவகர்களை உடனே அந்த மூங்கில்களை வெட்டி அகற்றுங்கள் என்று கட்டளையிட்டார். அப்போது, அங்கிருந்து பெண் குரல் வந்தது. ‘‘மன்னா, நான் குலசேகரநாதரின் மனைவி என் பெயர் நித்ய கல்யாணி. விலக்கப்பட்ட உணவை உண்ண ஆசைப்பட்டு அந்த உணவை உண்டு விட்டேன். அதற்கு தண்டனையாக எனது கணவர் என்னை வீட்டை விட்டு வெளியே அனுப்பினார்.

அது மட்டுமல்ல ஹரிஹர ஆற்றுக்கு அந்தப்பக்கம் சென்றுவிட வேண்டும் என்றும் தினமும் கால்படி அரிசியும், ஆறு மாதத்திற்கு ஒரு முறை ஒரு புடவையும் தருவதாக கூறினார். அதன்படி நான் இங்கே இருக்கிறேன்.’’ என்று கூறியது. ‘‘சரி, நான் இப்போ என்ன செய்ய வேண்டும்’’ என்று மன்னன் கேட்க, ‘‘எனக்கு தினமும் வழிபாடு வேண்டும்.

கோயில் எழுப்ப வேண்டும்.’’ என்று கூற, சரி. உடனே அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன் என்று மன்னன் கூற, அந்த பெண், ‘‘மன்னனே, எனது உருவம் சிலையாக அரிஹர ஆற்றில் கிடக்கிறது. அதனை எடுத்து பூஜிக்க வேண்டும்.  

அதன்படி மன்னன் உடனே கோயில் கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்யவும் அதற்கான பொருளை, தான் தருவதாகவும் கூறினார். உடனே அவர்கள் ஆற்றிலிருந்து அம்மன் சிலையை எடுத்து வந்து ஓலைகீற்றில் கூரையுடன் கூடிய கோயில் அமைத்து நித்ய பூஜை செய்து வழிபட்டனர். பின்னர் கோயில் கட்டப்பட்டது. கர்ப்பகிரஹம் கல் மண்டபத்தில் அமைக்கப்பட்டது. அப்போது, மண்டப வாயில் சிறியதாக அமைந்துவிட்டது. சிலையை உள்ளே கொண்டு போக முடியாத நிலை உருவானது. இதனால் மண்டபபணியில் ஈடுபட்ட பணியாளர்கள் முதல் ஊர்மக்கள் அனைவரும் மனம் வருந்தினர். சரி மறுநாள் மண்டபத்தின் வாயிலை இடித்து விட்டு மீண்டும் பெரிதாக கட்டலாம் என்று முடிவு செய்தனர்.

இரவானதால் அனைவரும் அவரவர் இல்லம் சென்றனர். மறு நாள் காலையில் மண்டபத்தின் வாயிலை இடிக்க பணியாளர்கள் வந்தபோது கல் மண்டபத்தின் உள்ளே அம்மன் சிலை இருந்தது. அனைவரும் வியந்தனர். ஊர் மக்கள் திரண்டனர். ``அம்மா... தாயே கல்யாணி...’’ என்று உணர்ச்சி பொங்க குரல் எழுப்பி கை தொழுதனர். அம்மன் கோயில்களில் எந்த கோயிலிலும் இல்லாத தனிச்சிறப்பு இந்த கோயிலுக்கு உண்டு. சிலையை யாரும் வடிக்கவில்லை. சிலையை யாரும் கோயிலில் கொண்டு வந்து நிறுவவும் இல்லை. அம்மன், தானே வந்தமர்ந்ததாக ஊர் மக்கள் கருதுகின்றனர்.

பொதுவாக கோயில் கட்டி, சிலையை பிரதிஷ்டை செய்யும்போது உரு ஏற்றும் நிகழ்ச்சியும், மருந்து சாத்துதலும் நடைபெறும். இந்த கோயிலில், ஆகம விதிப்படி கும்பாபிஷேகம் நிகழ்ந்த போதும், மூல விக்கிரகத்தினை எதுவும் செய்யாமல் பிற சடங்குகளை செய்தனர்.  ஐந்தடி உயர சிலையில் அம்மன் அமர்ந்த கோலத்தில், எட்டு கரங்களுடன் நித்ய கல்யாணி அம்மன் வீற்றிருக்கிறாள். நிலபுலங்களை காத்து அருள்கிறாள் என்கின்றனர், அப்பகுதி மக்கள். இக்கோயிலில் பேச்சியம்மன், பைரவர், விநாயகர், வள்ளி, தெய்வானையுடன்

சுப்ரமணியர் மற்றும் காவல் தெய்வம் மாடன் உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர்.

ஆண்டு தோறும் சித்திரை மாதம் செவ்வாய்க்கிழமை கொடை விழா நடத்தப்படுகிறது. ஆனி மாதம் வருஷாபிஷேகமும், ஆடிப்பூரத்தில் சிறப்பு வழிபாடும், புரட்டாசி மாதம் நவராத்திரி விழாவும் நடத்தப்படுகிறது. உடம்பில் உள்ள வடுக்கள், பாலுண்ணிகள் மற்றும் முகத்திலுள்ள பருக்கள் மறைவதற்கு இந்த அம்மனை வேண்டி, கோயிலுக்கு உப்பும், மிளகும் வாங்கிக் கொடுத்தால் எட்டு நாளைக்குள் அது மாறிவிடுவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். இக்கோயில் செங்கோட்டை ஊரின் வடக்கு எல்லையில் ஓடுகின்ற ஹரிஹர ஆற்றின் வட கரையில் வயல்கள் சூழ அமைந்துள்ளது.

தொகுப்பு: சு. இளம் கலைமாறன்

Related Stories: