அனந்தனுக்கு 1000 நாமங்கள்!

நன்றி குங்குமம் ஆன்மிகம்

490. பூதமஹேஸ்வராய நமஹ (Bhootha Maheshwaraaya namaha)

கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரம் என்ற திவ்யதேசத்தின் தலவரலாறு இது.தேவ-அசுரப் போரில் அசுரர்களின் கை ஓங்க, தேவர்கள், திருமாலின் உதவியை நாடினார்கள். தீயசக்திகளான அசுரர்களிடம் இருந்து தேவர்களைக் காப்பதாக திருமால் தேவர்களுக்கு அபயம் அளித்தார். அசுரர்கள் பிரம்மாவின் உதவியை நாடி, எங்களுக்கு ஏதாவது புகலிடம் காட்டுங்கள் என்று கோரினார்கள். நீங்கள் சிவபெருமானின் உதவியை நாடுங்கள் என்று அவர் களிடம் சொன்னார் பிரம்மா. அசுரர்கள் சிவனின் உதவியை நாட, சிவனும் அவர்களைக் காப்பதாக வாக்களித்துவிட்டார். அடுத்து தேவ அசுரப் போர் நடந்தபோது, தேவர்களின் பக்கம் திருமாலும், அசுரர்களின் பக்கம் சிவபெருமானும் நின்றார்கள். திருமாலுக்கும் சிவனுக்கும் எதிராகப் பெரும் போர் மூண்டுவிட்டது.

(அடடா!!! சைவ-வைணவச் சண்டைகளே வேண்டாம் என்று சொல்லும் காலத்தில், சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் சண்டை என்று நீ கதை எழுதுகிறாயே என்று நீங்கள் புருவங்களை உயர்த்த வாய்ப்புண்டு. ஆனால் இப்போதே முன் முடிவுக்கு வராமல், கதையை முழுமையாகப் படித்தால் ஒரு தத்துவம் நமக்குக் கிட்டும்.)

சிவபெருமான் தனது சூலத்தைத் திருமாலின் மீது ஏவினார். திருமாலின் சக்ராயுதம், சிவனின் சூலத்தை மறைத்துவிட்டது. “இனி என் கையில் ஆயுதமே இல்லை! நான் நாராயணனைச் சரண் அடையப்போகிறேன்!” என்று சொல்லிக் கொண்டு, திருமாலிடம் சரணடைந்தார் சிவபெருமான். “அடடா! நமக்குத் தலைவராக வந்த சிவனே திருமாலின் பாதங்களில் விழுந்துவிட்டாரே! இனி நாம் என்ன செய்வது?” என்று தெரியாமல் திகைத்தார்கள் அசுரர்கள். அப்போது, திருமால் மும்மூர்த்தி வடிவமாகத் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் காட்சி அளித்தார். திருமால் பிரம்மாவுக்குள் அந்தர்யாமியாக இருந்து உலகைப் படைக்கிறார்.

விஷ்ணுவாகத் தானே இருந்து காக்கிறார். ருத்திரனுக்குள் அந்தர்யாமியாக இருந்து அழிக்கிறார். இதை உணர்த்த, தனது திருக்கரத்தில் பிரம்மாவுக்கு அடையாளமான தாமரையை ஏந்தி இருந்தார். சிவபெருமானைக் குறிக்கும் விதமாக நெற்றியிலே மூன்றாவது கண்ணோடு விளங்கினார். அதனால் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் பெயர் பெற்றார்.இந்தக் கோலத்தில் காட்சி அளித்த தெய்வநாயகப் பெருமாள், “ஏ அசுரர்களே! நன்றாகப் பார்த்துக்கொள்ளுங்கள்! பிரம்மாவும் எனக்கு உடலாக இருக்கிறார். சிவனும் எனக்கு உடலாக இருக்கிறார். என் உடலைக்கொண்டு என்னையே அழிக்கப் பார்க்கிறீர்களா? என் கையைக் கொண்டு என் கண்ணையே குத்தமுடியுமா? முட்டாள்களே! நாங்கள் மூவரும் என்றைக்குமே ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்!” என்று கூறினார்.

“இனி வேறு வழியில்லை!” என்று உணர்ந்த அசுரர்கள், அத்தனை பேரும் திருமாலின் திருவடிகளை வந்து அடிபணிந்து மனம் திருந்தினார்கள். இன்றும் கடலூருக்கு அருகில் உள்ள திருவயிந்திரபுரத்தில் தெய்வநாயகன் என்றும், தேவநாதன் என்றும் திருநாமத்தோடு, மூன்றாம் கண்ணோடும் கையில் தாமரையோடும் எழுந்தருளி உள்ளார் திருமால்.

திருமங்கை ஆழ்வாரும் அப்பெருமாளைப் பாடும்போது, “மூவராகிய மூர்த்தியை மூவுலகு உண்டு உமிழ்ந்தானை” என்று மங்களாசாசனம் செய்துள்ளார். இப்படி எல்லாத் தேவர்களையும் தனக்கு சரீரமாகக்கொண்டு, அவர்களையும் இயக்கும் தலைவராகத் திகழ்வதால் திருமால் ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். பூத என்பது உலகில் படைக்கப்பட்ட உயிர்களைக் குறிக்கும். பூதேஸ்வர: என்பது அந்த உயிர்களுக்கெல்லாம் தலைவர் என்னும் ஸ்தானத்தில் இருக்கும் பிரம்மா, இந்திரன் போன்றோரைக் குறிக்கும்.

பூதமஹேஸ்வர: என்றால், தலைவர்கள் என்று சொல்லப்படும் பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களுக்கும் தலைவராக இருப்பவர் என்று பொருள். அப்படி, தேவர்களுக்கும் தலைவராகத் திருமால் விளங்குவதாலே, ‘பூதமஹேஸ்வர:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே, ஸஹஸ்ரநாமத்தின் 490-வது திருநாமம், ‘பூதமஹேஸ்வர:’ என்றால் அனைத்து உயிர்களுக்கும் பெருந்தலைவர் என்று பொருள்.

“பூதமஹேஸ்வராய நமஹ” என்று தினமும் சொல்லிவந்தால், யாரும் நம்மை வெறுக்காதபடி அனைவரோடும் நல்லிணக்க உணர்வுடன் இணைந்து வாழும் பக்குவத்தைத் திருமால் நமக்கு அருள்வார்.

491. ஆதிதேவாய நமஹ (Aadhi Devaaya namaha)

முதலையிடம் சிக்கிக் கொண்ட கஜேந்திரன் என்ற யானை,

“நமோ நமஸ்தே அகில காரணாய நிஷ்காரணாய அத்புத காரணாய”

- என்று திருமாலை அழைத்தது என்று ஸ்ரீமத் பாகவத புராணம் சொல்கிறது.

‘அகிலகாரண’ என்றால் அனைத்து உலகுக்கும் காரணமானவர். ‘நிஷ்காரண’ என்றால் தனக்கொரு காரணம் இல்லாதவர் என்று பொருள். ‘அத்புதகாரண’ என்றால் உலகியலில் நாம் காண்கின்ற காரண-காரியங்கள் போல் அல்லாமல், தானே உலகுக்கு மூலப்பொருளாகவும் படைப்பாளியாகவும் இருப்பவர் என்று பொருள். இதன் சுருக்கமாகவே, ஆதிமூலம் என்ற சொல்லாடலை நாம் பயன்படுத்துகிறோம்.யானை, முதலில் காரணப் பொருள் என்னைக் காக்கட்டும் என்று அழைத்தவாறே, அதைக் காக்க இந்திரன் புறப்பட்டானாம். “நாம்தான் தேவலோகத்தில் நடைபெறும் பல விஷயங்களுக்குக் காரணமாக இருக்கிறோம்! எனவே யானை நம்மைத்தான் அழைக்கிறது!” என்ற எண்ணத்தில் போனான் இந்திரன்.

ஆனால், `அகில காரணாய’ என்று யானை சொன்னவாறே, “அடடா! நாம் அகில உலகுக்கும் காரணம் ஆகமாட்டோமே! அனைத்து உலகையும் படைத்தவர் பிரம்ம தேவர்தானே? இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டான் இந்திரன்.`அகில காரணாய’ என்ற வார்த்தையைக் கேட்டு யானையைக் காக்க பிரம்மதேவர் விரைந்தார். ஆனால் யானையோ, `நிஷ்காரணாய’ தனக்கொரு காரணம் இல்லாதவன் என்று மேலே குறிப்பிட்டது. இதைக் கேட்ட பிரம்மா, “நமக்கும் காரணப் பொருளாக நம்மைப் படைத்த திருமால் இருக்கிறாரே! அப்படியானால் இந்த ‘கேஸ்’ அவரது ‘கேஸ்’!” என்று பின்வாங்கிவிட்டார்.

`அத்புத காரணாய’ என்று யானை கூறியவாறே உலகுக்கு ஒப்பற்ற காரணமாக விளங்கும் திருமாலையே யானை குறிப்பிடுகிறது என்பதை எல்லாருமே ஒருவாறு அறிந்து கொண்டார்கள். ஆனால், அதற்குள் யானையைக் காக்க வேண்டும் என்ற துடிப்போடு திருமால் வைகுண்டத்தில் இருந்து புறப்பட்டு கருட வாகனத்திலே பறந்து கொண்டிருந்தாராம்.

அப்போது பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்கள் எல்லாரும், `இந்த கேஸ்’ அவரது ‘கேஸ்’ என்று சொல்லிவந்தோம்! இது உண்மையிலேயே ‘கேசவரது கேஸ்’ தான்! அதனால் தான் கேசவனே செல்கிறான்!” என்று கொண்டாடினார்களாம் (க என்பது பிரம்மாவைக் குறிக்கும், ஈச என்பது சிவனைக் குறிக்கும். க, ஈச ஆகிய இருவரையும் படைத்து இயக்குபவருக்குக் கேசவன் என்று திருநாமம். நான்முகன், ருத்திரன் போன்றோருக்கும் காரணமான ஆதிமூலம் திருமால் என்பதை இதன்மூலம் அறிகிறோம்.)

இப்படி தேவர்கள் எல்லாரும் பேசிக் கொண்டிருக்கும் நேரத்திலே, திருமால் குளக்கரையையே அடைந்துவிட்டார். விரைவாக முதலையை அழித்து கஜேந்திரனைக் காப்பாற்றி அதற்கு முக்தியும் அளித்தார். `ஆதி’ என்றால் மூலக் காரணமாக இருப்பவர் என்று பொருள். நான் முகனை, நாராயணன் படைத்தான் என்ற திரு மழிசைப் பிரான் பாசுரமும், தேனே ப்ரஹ்ம ஹ்ருதா ய ஆதிகவயே என்ற ஸ்ரீமத் பாகவத சுலோகமும் காட்டுவது போல், பிரம்மாவைத் தனது உந்தித் தாமரையில் படைத்து அவருக்கு வேதங்களை உபதேசித்தவர் திருமால்.

உலகைப் படைக்கும் பிரம்மாவையே படைத்தவர் என்பதன் மூலம், அவரே ஆதிகாரணமானவர் என்பதை அறிகிறோம். தேவர்களுக்கு ஆதிகாரணமாக இருப்பதால் திருமால், ‘ஆதி:’ என்று குறிப்பிடப்படுகிறார்.‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) ஒளிமிக்கவர் என்று பொருள். தனது பொலிவின் முன் தேவர்கள் அத்தனை பேரும் மங்கிப்போகும் படி ஒளி வீசிக்கொண்டு திகழ்வதால் திருமால், தேவ என்று அழைக்கப்படுகிறார்.

ஆக, தேவர்களுக்கு ஆதியாகவும், மற்ற தேவர்களின் ஒளி தன் ஒளியின் முன் மங்கிப் போகும்படியாகவும் விளங்குவதால் திருமால் ‘ஆதிதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 491-வது திருநாமம். ஆதி மற்றும் தேவன் ஆகிய இரு பொருள்களையும் விளக்கும்படி நம்மாழ்வார் திருவாய்மொழியில், நான்காம் பத்து பத்தாம் திருவாய்மொழியில்,

ஒன்றும் தேவும் உலகும் உயிரும்

மற்றும் யாதும் இல்லா

அன்று நான்முகன் தன்னொடு தேவர்

உலகோடு உயிர் படைத்தான்

குன்றம் போல் மணி மாடம் நீடு

திருக்குருகூர் அதனுள்

நின்ற ஆதிப்பிரான் நிற்க மற்றைத் தெய்வம் நாடுதிரே?

- என்றும்,

பொலிந்து நின்ற பிரான்கண்டீர் ஒன்றும்

பொய்யில்லை போற்றுமினே

- என்றும் போற்றி இருக்கிறார்.“ஆதிதேவாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, ஒளிமயமான எதிர்காலமும் தலைமைப் பண்பும் நிறையும்படி அருள்புரிவார்.

492. மஹாதேவாய நமஹ (Mahaa Devaaya namaha)

ராமானுஜரின் சீடரான அனந்தாழ்வான் என்ற மகான் திருவேங்கடமலையில் தங்கி, ராமானுஜன் என்ற தோட்டமும், இராமானுஜப் புத்தேரி என்ற பொய்கையும் ஏற்படுத்தி, அத்தோட்டத்தில் பூக்கும் பூக்களை மாலையாகத் தொடுத்துத் திருவேங்கடமுடையானுக்குப் புஷ்பகைங்கர்யம் செய்துவந்தார்.ஒருநாள் இரவு அனந்தாழ்வானின் தோட்டத்துக்குள் ஒரு தம்பதியர் நுழைந்தார்கள். அந்தக் கணவன், தோட்டத்தில் உள்ள பூக்களைக் கொய்து அவற்றைத் தனது மனைவியின் மீது வீசி விளையாடினான்.

சத்தம் கேட்டு எழுந்து வந்த அனந்தாழ்வான், பெருமாளுக்கு என்று உள்ள பூக்களைக் கொய்து, இப்படி ஒரு தம்பதியர் விளையாடுவதைக் கண்டு கோபமுற்றார். அவர்களைப் பிடிக்க முயன்றபோது, கணவன் தப்பித்து ஓடிவிட்டான். மனைவியைப் பிடித்து அங்கிருந்த ஒரு சம்பங்கி மரத்தில் கட்டிவைத்தார் அனந்தாழ்வான். “உன்னை மீட்டுச் செல்ல உன் கணவன் வருவான் அல்லவா? அவன் வரும்போது அவனைக் கவனித்துக் கொள்கிறேன்!” என்று சொல்லி அந்த மரத்தின் எதிரிலேயே ஒரு பாறை மேல் அமர்ந்து கொண்டார் அனந்தாழ்வான்.

இரவு முழுவதும் அந்த இளைஞனின் வருகைக்காக அனந்தாழ்வான் காத்திருந்தும், மனைவியைக் காப்பதற்காக அவன் வருவதாகத் தெரியவில்லை. அந்தப் பெண்ணும் அனந்தாழ்வானிடம், “சுவாமி! உங்களைப் பார்த்தால் என் தந்தையைப் போல் இருக்கிறீர்கள்! தயவுசெய்து என்னை விட்டுவிடுங்கள்!” என்று கெஞ்சினாள். அனந்தாழ்வானோ, “நீங்கள் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்று உங்களுக்குத் தெரியவில்லை. இந்த மலையில் பூக்கும் அனைத்துப் பூக்களும் பெருமாளுக்கு மட்டுமே. ஆனால், அந்தப் பூக்களைக் கொய்து மானிடர்களான நீங்கள் இருவரும் விளையாடி இருக்கிறீர்கள். இது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? உன் கணவன் வரட்டும் நான் பேசிக்கொள்கிறேன்!” என்று கோபத்துடன் சொன்னார்.

இரவு நகர்ந்து நகர்ந்து, பிரம்ம முகூர்த்த நேரம் வந்தது. அர்ச்சகர்கள் திருவேங்கடமுடையானின் திருக்கோவிலைத் திறந்தார்கள். கருவறையைத் திறந்தால், மலையப்பனின் மார்பை அலங்கரிக்கும் மகாலட்சுமியைக் காணவில்லை. அடடா! அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறை மார்பனின் மார்பில் அலர்மேல் மங்கை அகன்று விட்டாளே! என்ன ஆனதோ என்று எல்லாரும் திகைத்துப்போனார்கள்.

அப்போது திருவேங்கடமுடையானே வாய் திறந்து, “அலர்மேல் மங்கை நாச்சியார் அனந்தாழ்வானின் தோட்டத்தில் இருக்கிறாள். அனந்தாழ்வானின் பூக்கூடையில் அவளை எழுந்தருளச் செய்து இங்கே அழைத்து வரச்சொல்லுங்கள்!” என்று கட்டளையிட்டார்.இச்செய்தியை அர்ச்சகர்கள் சென்று அனந்தாழ்வானிடம் தெரிவிக்க, “ஆஹா! தம்பதியாக வந்தவர்கள் மலையப்பனும் மகாலட்சுமியுமான திவ்ய தம்பதியரா? அதை அறிந்து கொள்ளாமல் அபச்சாரப்பட்டுவிட்டேனே!” என்று கலங்கினார்.

பக்தனின் கட்டை அவிழ்த்துக் கொள்ள முடியாதவள் போல் கட்டுண்டு கிடந்த மகாலட்சுமியை அவிழ்த்துவிட்டார். பெருமாளின் நியமனப்படி அலர்மேல் மங்கைத் தாயாரைத் தன் பூக் கூடையில் அமரவைத்து, அவளைத் தலைமேல் சுமந்து கொண்டு பெருமாளின் கருவறை நோக்கி நடந்தார் அனந்தாழ்வான். “வாரும் மாமனாரே!” என்று அனந்தாழ்வானை வரவேற்றான் மலையப்பன். “நாச்சியார் உம்மைத் தந்தை என்று நேற்றிரவு அழைத்தாள் அல்லவா? அதனால் இன்று முதல் நீர் எமக்கு மாமனார் ஆவீர்!” என்று திருவாய் மலர்ந்தருளினான் மலையப்பன்.

ஆசார்யனுக்குச் செய்யும் கைங்கரியமாக எண்ணி, புஷ்ப கைங்கரியம் செய்து வந்த அனந்தாழ்வான் என்ற பக்தரைக் கௌரவிப்பதற்காக இந்த விளையாட்டை அந்த திவ்ய தம்பதியர் செய்திருக்கிறார்கள். இப்படித் தனது பக்தர்களைக் காப்பதற்காகவும், மகிழ்விப்பதற்காகவும் பற்பல லீலைகள் செய்வதால் திருமால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார்.

‘தேவ:’ என்றால் (இவ்விடத்தில்) விளையாடு பவர் என்று பொருள். ‘மஹாதேவ:’ என்று மிகப்பெரிய விளையாட்டை விளையாடுபவர் என்று பொருள். தோட்டத்தில் பூக்கொய்வது தொடங்கி, உலகைப் படைத்தல், காத்தல், அழித்தல் போன்ற அத்தனைச் செயல்களையும் விளையாட்டு போல் அனாயாசமாகச் செய்ய வல்லவர் திருமால். அதனால் ‘மஹாதேவ:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 492-வது திருநாமம்.“மஹாதேவாய நமஹ” என்று தினமும் சொல்லிவரும் அன்பர்கள், விளையாட்டுத் துறையில் உச்சம் தொடுவதற்குத் திருமால் அருள்புரிவார்.

493. தேவேசாய நமஹ (Deveshaaya namaha)

திருமாலைக் குறித்துத் தியானத்தில் ஈடுபட விழைந்தார் பிரம்மா. ஆனால், அவரது முன் வினைகளாகிய கர்மா அவரது தியானத்துக்குத் தடையாக இருந்தன. அதனால், அவருக்குத் தியானத்தில் மனம் லயிக்கவில்லை. இறைவனின் வடிவைத் தியானிக்க முடியாமல் வருத்தம் அடைந்தார் பிரம்மா. அவரிடம் அசரீரியாகப் பேசிய திருமால், “பிரம்ம தேவனே! உங்கள் பாபங்கள் நீங்க வேண்டும் என்றால் நீங்கள் ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்ய வேண்டும். அதன்பின்தான் உங்களுக்குத் தியானம் கைகூடும்!” என்றார்.

“ஆயிரம் அஸ்வமேத வேள்விகள் செய்வது என்பது மிகவும் கடினமான காரியம் ஆயிற்றே! என் துன்பத்தை விட அதற்கான பரிகாரம் கடினமானதாக உள்ளதே!” என்று பிரம்மா கேட்டார். “அப்படியானால் காஞ்சீபுரத்தில் ஒரு அஸ்வமேத வேள்வி செய்யுங்கள். அங்கே ஒரு வேள்வி செய்தால், ஆயிரம் வேள்விகள் செய்ததற்குச் சமம்!” என்று சொன்னார் திருமால். அதன்படி, காஞ்சீபுரத்தில் வேள்விச் சாலை அமைத்து, கிழக்குமுகமாக அமர்ந்து வேள்வி செய்யத் தொடங்கினார் பிரம்மா. அந்த வேள்வி செய்யும் போது, அவருக்குப் பல தடங்கல்கள் ஏற்பட்டன. அவை அனைத்தையுமே திருமால் போக்கிக் கொடுத்து, அவரது வேள்வி தொடர்ந்து இடையூறின்றி நடப்பதற்கு அருள்புரிந்தார்.

வேள்வியின் நிறைவுப்பகுதி வந்தது. வேள்வியில் அர்ப்பணிக்கப் படும் குதிரையின் வயிற்றுப் பகுதியைக் கொண்டு செய்யும் `வபா’ ஹோமத்தைச் செய்தபோது, பிரம்மாவுக்கு நடுக்கம் ஏற்பட்டதாம். எந்த ஒரு செயலுமே எடுத்து நடத்தும் போது, நிறைவுப் பகுதி வருகையில், அது நன்றாக நிறைவடைய வேண்டுமே என்ற நடுக்கம் வருவது இயற்கையல்லவா? தன் மகளுக்குத் திருமணம் நடத்தி வைக்கும் தந்தை, மகள் கழுத்தில் மாங்கல்யம் ஏறும் நேரத்தில் இனிதாகத் திருமணம் நிறைவடைய வேண்டுமே என்ற ஒருவிதப் பதற்றத்தில் இருப்பார் அல்லவா?

அதுபோல் பிரம்மாவும், “யாகத்தின் நிறைவுப் பகுதி நன்றாகப் பூர்த்தியாக வேண்டுமே! அந்தந்த தேவர்களுக்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகங்களைச் சரியாகத் தந்துவிட வேண்டுமே! யாருக்கும் எந்தக் குறையும் வரக்கூடாதே!” என்றெல்லாம் பலவாறாகப் பதறி நடுங்கிக் கொண்டிருந்தாராம். இந்த நடுக்கத்துடன் வபாஹோமத்தைப் பிரம்மா செய்ய, அந்த வேள்வித் தீயிலேயே அத்திகிரி வரதராஜப் பெருமாளாகத் திருமால், பிரம்மாவுக்குக் காட்சி அளித்தார்.

“அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார்

ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார்

கச்சிதனில் கண்கொடுக்கும் பெருமாள் வந்தார்

கருத வரந்தரும் தெய்வப் பெருமாள் வந்தார்

முத்தி மழை பொழியும் முகில்வண்ணர் வந்தார்

மூலம் என ஓலம் இட வல்லார் வந்தார்

உத்திரவேதிக்கு உள்ளே உதித்தார் வந்தார்

உம்பர்தொழும் கழல் உடையார் வந்தார் தாமே!”

என்று தேவர்கள் போற்றிப் பூமாரி பொழியத் தோன்றிய வரதராஜப் பெருமாள், “பிரம்மா! உனது பாபங்கள் நீங்கிவிட்டன. நீ விரும்பியபடி நான் உனக்குக் காட்சி தந்துவிட்டேன் பார்!” என்று சொன்னார்.அப்போது பிரம்மா, “தேவர்கள் எனக்குக் கீழ்ப்பட்டவர்கள் என்றாலும்கூட அவரவர்க்குக் கொடுக்க வேண்டிய ஹவிர்பாகம் சரியாகப் போய்ச் சேர்ந்து எல்லாத் தேவர்களும் திருப்தி அடைய வேண்டுமே என்ற பெரும் கவலையோடு இருக்கிறேன்!” என்றாராம்.

அதற்கு வரதராஜன் பெருமான், “பிரம்மனே! அதைக் குறித்து நீங்கள் அஞ்சவே வேண்டாம்! தேவர்களின் தலைவனான நானே இப்போது தோன்றி, நீங்கள் சமர்ப்பித்த ஹவிஸ்ஸை ஏற்றுக் கொண்டுவிட்டேனே! தலைவனே திருப்தியடைந்த பின் தொண்டர்கள் குறைசொல்ல இனி ஒன்றுமில்லை! யாகம் இனிதே நிறைவேறிவிட்டது!” என்று சொல்லி

பிரம்மாவைத் தேற்றினார்.

“முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று

கப்பம் தவிர்க்கும் கலியே!”

என்று ஆண்டாள் பாடிய பாசுரம், முப்பத்து முக்கோடி தேவர்களுக்கும் முன்னே யாகசாலைக்கு வந்து, அவர்களுக்கெல்லாம் பிரம்மா கப்பம் கட்ட வேண்டாதபடித் தவிர்த்து, மிடுக்கோடு நின்ற வரதராஜனைக் குறிப்பதாகவும் ரசிப்பதற்கு இடமுள்ளது. இப்படி எல்லாத் தேவர்களுக்கும் தலைவராக, அயர்வறும் அமரர்கள் அதிபதியாக, இமையோர் தலைவராக, தேவராஜனாக - திருமால் விளங்குவதாலே, ‘தேவேச:’ என்று அழைக்கப்படுகிறார். அதுவே ஸஹஸ்ரநாமத்தின் 493-வது திருநாமம்.“தேவேசாய நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்கள், எடுத்த காரியம் அனைத்தும் இனிதே நிறைவடையத் திருமால் அருள்புரிவார்.

494. தேவப்ருதே நமஹ (Devabhruthey namaha)

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் அவதார ஸ்தலமான தேரழுந்தூரின், ஸ்தல புராணத்தில் உள்ள ஒரு சரித்திரம். (அங்குள்ள பெருமாள் கோவிலுக்கும் சிவன் கோவிலுக்கும் இணைத்து ஸ்தல புராணம் இருப்பதை வேற்றுமை நோக்கில் காணாது, ஒற்றுமைநோக்கில் பார்க்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.)பரமசிவனும் திருமாலும் சொக்கட்டான் விளையாட, பார்வதிதேவி நடுவராக அமர்ந்திருந்தாள். போட்டியில் ஒருநிலையில், “நான்தான் வென்றேன்!” என்று திருமால் கூறினார்.

“ஆம்! ஆம்!” என்று பார்வதி தலை ஆட்டினாள். “ஓஹோ! புகுந்த வீட்டை விடப் பிறந்த வீடுதான் உனக்கு முக்கியமோ? கணவனைவிட உன் அண்ணன்தான் உனக்கு முக்கியமோ? அவர் வென்றேன் என்று சொல்ல, நீயும் மாடு போல் தலை ஆட்டுகிறாயே! நீ மாடாகப் பூமியில் பிறப்பாய்!” என்று பார்வதியைச் சபித்தார் சிவன். (நம் வீட்டில் வரும் சண்டைகளைப் போலே சிவன்-பார்வதிக்குள் சண்டை வருமா என்று எண்ணிவிட வேண்டாம்! பூமியில் தேரழுந்தூர் திருத்தலம் உருவாவதற்காக அவர்கள் செய்யும் விளையாட்டு!)

சோழநாட்டிலுள்ள தேரழுந்தூரில் பசுவாக வந்து தோன்றினாள் பார்வதி. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்று சொல்வதற்கேற்ப, பார்வதியைப் பிரிந்து இருக்க முடியாமல் தவித்தார் சிவன். அதனால் அவரும் தேரழுந்தூர் க்ஷேத்திரத்துக்கு வந்து, வேதபுரீஸ்வரர் என்ற பெயரோடு தவத்தில் ஈடுபட்டார்.நாம் விளையாடிய சொக்கட்டான் விளையாட்டால்தானே பார்வதியும் பரமசிவனும் பிரிய நேர்ந்தது. நாமே அவர்களை இணைத்து வைத்து விடுவோம் என்று முடிவெடுத்த திருமால், மாடு மேய்க்கும் கண்ணனாக ஆமருவி அப்பன் என்ற திருநாமத்தோடு தேரழுந்தூருக்கு வந்தார். மாடு வடிவில் வந்த பார்வதி தேவியை அவளது சகோதரனாகிய கண்ணன் காத்து ரக்ஷித்தார்.

கண்ணன் மாடு மேய்ப்பதைப் பார்த்த வேதங்கள், கன்றுக்குட்டிகளாக அவனை நாடி வந்துவிட்டன. கண்ணன் மேய்க்கும்போது அவனது திருக்கரத்தின் ஸ்பரிசம் பசுங்கன்றுகள் மீது படும் அல்லவா அதை விரும்பி வேதங்கள் கன்றுகளாயின.இப்படிப் பசுவையும், கன்றுகளையும் கண்ணன் மேய்த்து வருவதைச் சத்தியலோகத்தில் இருந்து பார்த்த பிரம்மா, அந்தப் பசுவையும் கன்றுகளையும் ஒரு குகைக்குள் ஒளித்து வைத்துவிட்டார். ஆமருவியப்பன் தன் திருமேனியில் இருந்தே பசுவையும் கன்றுகளையும் வெளியிட்டார்.

அதைக் கண்ட பிரம்மா தனது கர்வம் நீங்கப்பெற்று, ஆமருவியப்பனை அடிபணிந்தார்.“கண்ணா! நீதான் தேவர்களான எங்களை எல்லாம் தாங்கிக் கொண்டிருக்கிறாய். அதைப் புரிந்து கொள்ளாமல் உன்னிடம் அபச்சாரப் பட்டுவிட்டேனே!” என்று மன்னிப்பு கோரினார். அதன்பின் தொடர்ந்து மாடு கன்றுகளை மேய்த்தபடி சிவபெருமான் தவம் புரிந்து வந்த மரத்தின் அடிக்கு ஆமருவியப்பன் எழுந்தருளினார். அவரைப் பார்த்தவாறே, அவர்தான் திருமால் என்று பரமசிவன் புரிந்து கொண்டார்.

பசுவின் வடிவில் இருப்பவள் பார்வதி என்பதையும் புரிந்து கொண்டார். “உங்களிடம் பார்வதியை ஒப்படைக்கப் போகிறேன்!” என்று சிவனிடம் சொன்னார் ஆமருவியப்பன். சிவபெருமான், “நான் உனது ராமாவதாரத்தில் அதிகமாக ஈடுபட்டு இருப்பவன். எனவே நீ ராமன் வடிவில் வந்து பார்வதியை என்னோடு சேர்த்து வைக்க வேண்டும்!” என்று ஆமருவியப்பனிடம் கோரினாராம். அப்படியே ஆகட்டும் என்றார் ஆமருவியப்பன். மாசிமாதம் புனர்ப்பூச நட்சத்திர நன்னாளில் சீதா லட்சுமணனோடு கூடிய ஸ்ரீராமனாகப் பரமசிவன் முன்தோன்றிய ஆமருவியப்பன், பசுவின் வடிவில் இருந்த பார்வதியைப் பழைய வடிவத்துக்கு மாற்றிப் பரமசிவனோடு இணைத்துவைத்தார். மீண்டும் பார்வதியை மணந்தபடி வேதபுரீஸ்வரராகத் தேரழுந்தூரிலே கோவில் கொண்டார் சிவபெருமான்.

ஆமருவியப்பனாகத் தேரழுந்தூரிலேயே கோவில் கொண்டார் திருமால். ஆண்டுதோறும் மாசிப் புனர்ப்பூசத்தன்று ஆமருவியப்பன் ராமனாகவும், தேரழுந்தூர் ரங்கநாதப் பெருமாள் சீதையாகவும், தேரழுந்தூர் கோவிந்தராஜப் பெருமாள் லட்சுமணனாகவும் வடிவம்கொண்டு, பசுவோடு புறப்பாடு கண்டருளி, வேதபுரீஸ்வரர் கோவிலில் உள்ள சிவபெருமானிடம் பசுமாட்டைச் சேர்ப்பதாக இந்த உற்சவம்நடைபெற்று வருகிறது.

சக்தியால்தான் சிவனுக்குப் பெருமை என்று சொல்லப்படும் நிலையில், அந்தப் பார்வதியைப் பிரிந்த சிவனுக்கு அவளைப் பழையபடி மீட்டுத் தந்து, அவருக்கு அப்பெருமையைப் பெற்றுத் தந்தார் திருமால். அதுபோல், பிரம்மா போன்ற அனைத்துத் தேவர்களுக்கும் அவரவருக்குத் தேவையானவற்றைத் தந்து அவர்களைத் தாங்கிப் பிடிப்பதால், ‘தேவப்ருத்’ - தேவர்களைத் தாங்குபவர் என்று திருமால் அழைக்கப்படுகிறார். தேரழுந்தூரில் மூலவருக்கு தேவாதிராஜன் என்றே திருநாமம்.

உற்சவர் ஆமருவியப்பன். தேவாதிராஜன் என்பதன் மற்றொரு வடிவமே தேவப்ருத் - தேவர்களுக்குத் தலைவராக இருந்து அவர்களைத் தாங்குபவர். அதுவே ஸஹஸ்ர நாமத்தின் 494-வது திருநாமம்.“தேவப்ருதே நமஹ” என்று தினமும் சொல்லி வரும் அன்பர்களுக்கு, வாழ்வில் அனைத்துப் பெருமைகளும் கிட்டும்படித் திருமால் அவர்களைத் தாங்கிப் பிடித்துக் காத்தருள்வார்.

தொகுப்பு: திருக்குடந்தை டாக்டர்: உ.வே.வெங்கடேஷ்

Related Stories: