காஷ்மீரபுர வாஸினி

நன்றி குங்குமம் ஆன்மிகம்

தொன்று தொட்டு காஷ்மீர் பாரததேசத்தின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. காஷ்மீரின் அருகில் உள்ள ஆப்கானிஸ்தானும் பாரதத்தின் ஒரு பகுதியாக ‘காந்தாரம்’ என்ற பெயரில் இருந்தது குறிப்பிடத்தக்கது. மகாபாரதத்தில் கௌரவர்களின் தாயான காந்தாரி இந்நாட்டைச் சேர்ந்தவர்.

காஷ்மீர், பாரதத்தின் மணிமகுடம். காஷ்மீரிலிருந்து ராமேஸ்வரம், கன்னியாகுமரி மற்றும் துவாரகாவிலிருந்து பூரி போன்ற க்ஷேத்திரங்களுக்கும் பக்தர்கள் சென்று வந்து கொண்டிருந்தனர் என்பதைப் பண்டைய நூல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தென்னிந்தியாவிலிருந்தும் பக்தர்கள் காஷ்மீருக்கும் நேபாளத்திற்கும் அதைத் தாண்டி அமர்நாத் மற்றும் கைலாக்ஷிற்கும் சென்று வந்தனர், வருகின்றனர்.

தென்னிந்தியாவில் பிறந்த ஆதிசங்கரர் பல தடவை பாரததேசம் முழுவதும் சுற்றி வந்திருக் கிறார். இன்னும் பல பக்தர்கள், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவியைக் காண வருடம் தோறும் செல்கின்றனர். அமர்நாத்தில் உள்ள சிவலிங்கத்தைத் தரிசிக்கச் செல்கின்றனர். பண்டைய காலங்களில் காஷ்மீர், மஹா பண்டிதர்களின் ராஜ்யமாகக் கோலோச்சி வந்தது. சமஸ்கிருதம் அவர்களின் பாஷையாக பரிணமித்திருந்தது.

சமஸ்கிருத இலக்கியங்கள் பெருமை பெற்றிருந்தன. மருத்துவம், வானியல், ஜோதிடம், கணிதம், சட்டம், இசை, உளவியல், நுண்கலைகள், பொறியியல், கட்டிடக்கலை போன்ற பல துறைகளிலும் பல வல்லுனர்கள் காஷ்மீரில் வசித்துவந்தனர். இந்த பெருமைகளுக்கெல்லாம் காரணம் காஷ்மீரில் உள்ள ஸ்ரீசாரதா தேவி. அவளுடைய அருட்கொடையே எல்லாவற்றிற்கும் காரணம். ஒரு காலத்தில், காஷ்மீரே ஸாரதா தேசம் என்றே அழைக்கப்பட்டு வந்ததென்றால், அந்த தேசத்தின் கல்வி, கலாசாரச் செழிப்பை சொல்லவும் கூடுமோ?

பம்பாய் நகரிலுள்ள ஸ்ரீமஹாலட்சுமியின் அருளால் அந்த நகரம் செல்வச் செழிப்பாய் இருப்பது போல், காஷ்மீரில் உள்ள ஸ்ரீசாரதா தேவியின் (ஸ்ரீசரஸ்வதி) அருளால் காஷ்மீர் கல்விச் செல்வத்தில் சிறந்து விளங்கியது எனலாம். அறுபத்தினான்கு கலைகளின் தலைவி அந்த நகரை பலதுறைகளிலும் மேன்மையுறச் செய்தாள் என்பர். காஷ்மீரை ஆண்ட உட்பலா மன்னர்கள் தங்கள் நாணயங்களில் (9 ம் நூற்றாண்டு) சாரதா தேவியின் உருவத்தைப் பொறித்திருந்தனர்.

காஷ்மீர் மன்னர்களின் முக்கிய தெய்வமாக விளங்கியவள் ஸ்ரீசாரதா தேவியென்பது இதிலிருந்து விளங்கும். காஷ்மீரின் ஸ்ரீசாரதா மஹாத்மியத்தின்படி, மதங்க முனிவரின் மகனான சாண்டில்ய முனிவர், சாரதா தேவியைக் குறித்து அவளுடைய அருளைபெற தவமிருந்தார். அவரது தவத்திற்கு மகிழ்ந்த தேவி, அவரை சியாமளா என்ற இடத்திற்கு (இப்பொழுது

குப்வாரா மாவட்டம்) சென்று அங்குள்ள கிருஷ்ணா நாக்சுனையில் ஸ்நானம் செய்ய பணித்தாள்.

அவரும் அங்கு சென்று அந்த தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து எழும்பொழுது அவரது உடலின் பாதி பொன்னிறமாக மாறி ஜொலித்தது. இது அந்த சுனை மற்றும் அதைச் சுற்றியுள்ள இடத்தின் தெய்வீகத் தன்மையை உணர்த்தியது. பெருமகிழ் வெய்திய சாண்டில்ய முனிவர் தேவியையும் (தேவியின் மூன்று திருவுருவங்களையும் சரஸ்வதி, சாரதா, வாக்தேவி) பல்வேறு புகழ்ந்தார். இந்த இடம் இப்பொழுது ‘சோனாடிராங்’ என அழைக்கப்படுகிறது.

ரங்கவாடிகா என்ற பள்ளத்தாக்கைக் கடந்து தேஜ்வனா என்ற இடத்தில் கௌதமரிஷியைச் சந்தித்து ஆசி பெற்றார். பின்னர் கிஷன்கங்காவைக் கடந்து தேவி மீண்டும் அவர் முன்தோன்றி சிரஹ்சிலாவிலுள்ள சாரதா வனத்திற்கு செல்லுமாறும், அங்கு தான் சக்தி ரூபத்தில் காட்சியளிப்பதாகவும் தெரிவித்தார். தேவியின் ஆணைப்படி சாண்டில்ய முனிவர் சாரதா வனத்திற்குச் சென்றார். செல்லும் வழியில் மஹா சிந்து நதியில் தன் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்தார்.

அவ்வாறு தர்ப்பணம் செய்ய கையில் நீரை ஏந்தி கீழே விடும் பொழுது, அந்நீர் தேனாக மாறி ஓடியதாம். அவ்வாறு தேனாக மாறிய நதியே தற்போது மதுமதி நதியென்று அழைக்கப்படுகிறது.தேவியின் கட்டளைப்படி சாரதாவனத்திற்கு வந்து தேவியை நோக்கித் துதிக்க, தேவி மகா ஒளிபொருந்திய சாரதா தேவியாக முனிவருக்குக் காட்சி கொடுத்தாள். தன்னைக் கண்ட மகிழ்ச்சியில் திளைத்து தன்னை மறந்து நிற்கும் முனிவருக்கு தேவி ஆசி வழங்கி திவ்ய திருஷ்டியையும் அளித்தாள்.

தேவி அவ்வாறு சாண்டில்ய முனிவருக்குக் காட்சி கொடுக்க, அங்கிருந்த குண்டத்திலிருந்து எழுந்ததாகவும் பின்னர் அதிலுள்ள நீரிலேயே மறைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த இடம் இப்பொழுது ஒரு கற்பாறையால் மூடப்பட்டுள்ளது. இந்த இடமே ‘சாரதா பீடம்’ என்றழைக்கப்படுகிறது. இதுவே ஆதி சாரதா பீடமாகும். இந்த இடத்தில் குடி கொண்டுள்ள ஸ்ரீசாரதா தேவியின் அருளால் அந்த பிரதேசம் முழுவதும் செழித்து வளர்ந்தது. கல்வி கேள்வியில் சிறந்த அறிஞர்கள் அங்கு வாழ்ந்து வந்தனர்.

இந்த இடத்தில் பெரிய பல்கலைக்கழகம் ஒன்றும் சாரதா தேவியின் பெயரில் (ஸ்ரீசாரதா பல்கலைக்கழகம்) நடந்து வந்தது. இதில் பல தேசங்களிலிருந்தும் பல்லாயிரக் கணக்கான மாணவர்கள் பயின்று வந்தனர். அதில் `ஸ்ரீசாரதா விலாஸம்’ என்ற பெரிய நூலகமும் அமைந்திருந்தது. ஸ்ரீஆதி சங்கரருக்கு காஷ்மீரகத்தில் ஒரு ஆலயம் உள்ளதும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஓம்காரேஸ்வர் சிவாலயத்தில் அவர் தவம் இருந்த குகையும் உள்ளது என்பது பலருக்குத் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை. சன்யாச வாழ்வை ஏற்ற அவர், ஆன்மிக ஞானத்தின் உச்சியை இளம்வயதிலேயே அடைந்தார்.

தனது கொள்கைகளை மக்களிடத்தில் சொல்வதற்காக பல இடங்களுக்கும் சென்று வந்தார். அப்போது, அவர் தனக்குக் குருவாக கோவிந்த பாகவத்பாதாவை பெற்றார். அவரிடம் போதனைகளைப் பெற்றுக்கொண்டவர் பல இடங்களுக்கும் சென்று பல பண்டிதர்களை வாதில் வென்று வந்தார். பல புத்தகங்களை எழுதினார். அவருக்கு பலர் சீடர்களாயினர். ஆதி சங்கரர் பல இடங்களுக்கும் சென்றவர் மத்தியப் பிரதேசத்தில் உள்ள ஜோதிர்லிங்கமான ஒம்காரீஸ்வரர் ஆலயத்தின் கீழே உள்ள ஒரு குகையில் தவம் இருந்துள்ளார். இந்த குகை இன்றும் பார்வையாளர்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அந்த காலத்தில் அனைத்து இடங்களிலிருந்தும் பெரியபெரிய பண்டிதர்கள் காஷ்மீரத்தில் இருந்த சரஸ்வதி ஆலயத்துக்கு சென்று அங்குள்ள அனைத்துப் பண்டிதர்களுடன் விவாதம் செய்வார்கள். அது பெரிய பெருமை தரும் சாதனையாகக் கருதப்பட்டது. எவர் வெற்றி பெறுவாரோ அவரே சர்வஞ்ஞர் (எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவர்) எனப்பட்ட பட்டத்தைப் பெறுவார். ஸ்ரீஆதி சங்கரர் தனது இளம் வயதிலேயே காஷ்மீரத்துக்குச் சென்று அங்கிருந்த ஆலயத்தில் தங்கி பல வித்வான்களையும் தோற்கடித்து பெருமை பெற்றார். அதுவரை தென் இந்தியாவில் இருந்து எந்த பெரும் பண்டிதரும் சென்று அந்தப் பெருமையைப் பெற்றதில்லை.

காஷ்மீரத்தில் உள்ள சாரதா பீடம், அதன் பெருமைக்கும் தெய்வீகத்திற்கும் பெருமைபெற்று விளங்கிவந்தது. மாபெரும் அறிஞர்கள் பலரும் தங்களின் திறமையை இங்கு நிகழ்ந்த வண்ணம் இருக்கும். இப்பீடத்தில் நுழைவதற்கு நான்கு புறமும் கதவுகள் உண்டு. ஆனால், எல்லோராலும் பீடத்தில் உட்பகுதிக்குச் (கர்பகிரகம்) செல்ல முடியாது. வாதத்தில் வென்றவர்கள் மட்டுமே அவ்வாறு உள்ளே செல்லும் முன் கலைமகளே அவர்களை சோதனை செய்ததாக நம்பப்படுகிறது.

ஆதி சங்கரர் ஒருவரே சாரதா பீடத்தின் தெற்கு வாயில் வழியாக உள்ளே சென்று சர்வக்ஞபீடமேற்னார் என்று கூறப்படு கிறது. ஸ்ரீசங்கரர் இப்பீடத்திற்கு வருவது தெரிந்து பல மாமேதைகளும், அறிஞர்களும் அவரைக் காண்பதற்காக, அவரிடம் உரையாடுவதற்காக, அவருடன் வாதிடுவதற்காக அங்குக் குழுமியிருந்தனர். ஜைன, புத்த, சம்க்ய, நியாஸ, வைசிக உள்ளிட்ட பலரும் அவருடன் வாதிட்டனர். அனைவரையும் தன் வாதத்திறமையால் வென்று, தென் பகுதியிலிருந்து வாயில் வழியாக ஸ்ரீசாரதா பீடத்தின் உள்ளே நுழைந்தார் ஸ்ரீசங்கரர். அவ்வாறு உள்ளே சென்ற போது, சரஸ்வதி அவரைச் சோதனை செய்ததாகவும் அதில் வெற்றி பெற்று சர்வக்ஞபீடமேறினார் ஸ்ரீசங்கரர். ஸ்ரீசாரதா தேவி, அவரது அறிவுத் திறமையை மெச்சி அவருக்கு மேலும் ஞானம் வளர அருளாசி வழங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்த பீடத்தில், அமர்வதற்கு எல்லோராலும் முடியாது. எல்லா சாஸ்திரங்களையும் கலைகளையும் கற்றவர்கள் மட்டுமே அமரமுடியும். மற்றவர் அமர இடம் தராது. இதில் அமராமல் யாராலும் ‘சர்வக்ஞர்’ என்று அழைத்துக் கொள்ளவும் முடியாது. இப்பீடத்தில் அமர முயற்சித்தவர்கள் யாரும் வெற்றி பெற்றதில்லை. அதுவும் தென் கதவு வழியாக வந்து இப்பீடத்தில் அமர்ந்தவர் ஸ்ரீசங்கரர் ஒருவரே. இது அவரது ஞானத்திற்கும் தெய்வீகத்திற்கும் ஒரு அடையாளமாகும்.

தன் 30 வயதில் ஒரு இளைஞர் இச்சாதனையை செய்வதென்பது அரிதன்றோ? இத்தகைய சிறப்புப் பெற்ற பீடத்தை நோக்கி அறிஞர்கள் படையெடுத்தது வியப்பில்லையன்றோ! இத்தகு பெருமை மிக்க சாரதா பீடம் காஷ்மீரில் எங்கிருக்கிறது? காஷ்மீரில் நீலும் மாவட்டத்தில், நீலும் நதிக்கரையில் அமைந்துள்ளது.

தொகுப்பு: ரஞ்சனா பாலசுப்ரமணியம்

Related Stories: