மீன் ஏந்தும் மச்ச வாராகி

சௌரஷி, புவனேஸ்வர், ஒடிசா மாநிலம்

தாய் தெய்வ வழிபாடுகளில் ஒன்றாக இருப்பது பன்றிமுகம் கொண்ட பாவையான வாராகிதேவி வழிபாடு ஆகும். பூமியின் வடிவமான வாராகி, பாதாள விஷ்ணுவாராகி, சப்தமாதரில் ஐந்தாவதான வாராகி, லலிதாம்பிகையின் மந்திரியும் படைத் தலைவியுமான வாராகி என பல வாராகியரைக் காண்கிறோம். இங்கே மச்ச வாராகி பற்றியும் அறியலாம் வாருங்கள். இவள் சக்தி கணங்களில் ஒன்றான யோகினியரில் ஒருத்தியாக இருக்கிறாள்.

பராசக்தியின் உக்ர வீரதீர பரிவாரங்களில் ஒன்றாக யோகினி கணங்கள் உள்ளனர். இந்த சக்தி கணத்தில் பன்றி முகத்துடனான வாராகி என்னும் பெயரில் பலர் உள்ளனர். இவர்களில் மச்ச வாராகியும் ஒருத்தியாவாள். இவள் மீனைக் கையில் ஏந்தி இருப்பதால் இப்பெயர் கொண்டுள்ளாள்.

ஒடிசாவிலுள்ள உலகப் புகழ்பெற்ற கொனார்க் கோயிலில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும், ஒடிசாவின் தலைநகரான புவனேஸ்வரில் இருந்து 45 கிலோ மீட்டரிலும் உள்ள சௌரஷி என்னுமிடத்தில் மச்ச வாராகிக்கு தனிக்கோயில் உள்ளது. இது கலைச்சிற்பங்கள் மிகுந்த கோயிலாக உள்ளது. இங்குள்ள நெடிய சுவர்களும் உயர்ந்த விமானங்களும் கலையழகு மிக்கதாக நுணுக்கமான கலைச் சிற்பங்களைக் கொண்டதாக இருக்கிறது.

இங்கு விநாயகர், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தில் வரும் சூரியன், தூண்களைச் சுற்றிக் கொண்டுள்ள நாகர்கள் போன்ற சிற்பங்கள் பேரழகு படைத்தவைகளாகும்.

கருவறையில் வலதுகையில் மீனையும் இடது கையில் மதுப் பாத்திரத்தையும் கொண்டவளாக இந்த வாராகி இருக்கிறாள். இவளுக்கு மூன்றாவதாக நெற்றியில் கண் உள்ளது. வயிறு பிள்ளையாரைப் போல் பெரியதாக இருக்கிறது.

வலதுகாலை தொங்கவிட்டு, இடது காலை மடித்து சுகாசனத்தில் வீற்றிருக்கின்றாள். தொங்க விட்டுள்ள காலின் கீழ் எருமை படுத்துள்ளது. அது தூங்கும் நிலையில் உள்ளதாகச் சொல்கின்றனர். வாயிலில் நெடிய தூண்களும் அதைச்சுற்றி கொண்டுள்ள நாகதேவதைகளையும் காண்கிறோம். கருவறைக்கு எதிரே வெற்றித்தூண் உள்ளது. அதன் மீது பாயும் சிங்கத்தைக் காண்கிறோம்.

ஆலயத்தின் அருகில் பராச்சி என்னும் ஆறு ஓடுகிறது. இக்கோயில் கி.பி. பத்தாம் நூற்றாண்டு வாக்கில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் கோபுரம் 25 அடி உயரம் உள்ளது. மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு போற்றப்படுகிறது. வாராகிக்கு என்று கட்டப்பட்டுள்ள கோயில் என்பதால் தனிச் சிறப்பை பெற்றுள்ளது. இது வேறு எங்கும் காணமுடியாததாக அதிசயக் கோயிலாக இருக்கிறது.

தினமும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. வழிபாட்டில் மீன் இடம் பெறுகிறது. இவள் மீனை ஏந்தியிருப்பதுடன் மீன் விரும்பி உண்பவளாக நேபாள நாட்டில் பரவலாக பல இடங்களில்  சிலைகள் உள்ளன. வடநாட்டுச் சிற்பங்கள் பலவற்றில் குழந்தைகளை மடியில் வைத்துக் கொண்டிருக்கும் சப்தமாதர் சிற்பங்களை காண்கிறோம்.

இவ்வரிசையில் உள்ள வாராகியும் குழந்தையோடு இருக்கின்றாள். இதுபோல் மச்ச வாராகியும் குழந்தையோடு இருக்கும் சிற்பம் ஒன்று கிடைத்துள்ளது. இதிலுள்ள குழந்தையின் தலை உடைபட்டுள்ளது. இங்கே நாம் விநாயகரைத் தம்மடியில் வைத்துக் கொண்டு கொஞ்சும் மச்ச வாராகியைக் காண்கிறோம். நேபாளத்து அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதும், புடைப்புச் சிற்பமானது ஒன்றுமாகிய இரண்டு மச்ச வாராகி சிற்பங்களைக் காண்கிறோம்.

உலோகச் சிலையில் அவள் நாற்கரம் கொண்டவளாக மேற்கரங்களில் பெரிய மீனையும் இடது கரத்தில் மூன்றாக மடிக்கப்பட்ட பாம்பையும் கொண்டுள்ளாள். முன் கைகளில் பான பாத்திரத்தை ஏந்தி அதை மந்திரத்தால் தூய்மைப்படுத்துபவளாக உள்ளாள். முகம் ஆண் காட்டுப் பன்றியின் முகமாக உள்ளது. தலை உச்சியில் நீலக்கல் பதித்திருக்க வேண்டும். இப்போது அந்த இடம் வெற்றிடமாக உள்ளது.

இன்னொரு வாராகியும் இடது மேல் கரத்தில் மீனை ஏந்தியுள்ளாள். மேல் வலது கரத்தில் பட்டாக் கத்தியை ஏந்தியுள்ளாள். ஆர்ப்பரிப்புடன் நடக்கும் கோலத்தில் இருக்கும் இவளது இரண்டு கால்களும் கீழே இரண்டு எருமைகள் மீது உள்ளன. மச்ச வாராகிக்கான வயிறு பெரியதாக உள்ளது. வலது கையில் மதுப் பாத்திரத்தை ஏந்தி இடது கரத்தில் மந்திரிக்கிறாள் காட்டுப் பன்றியைப் போன்ற முகம் கொண்ட இவளின் தலைமீது தர்மச் சக்கரம் உள்ளது.

தொகுப்பு : ஆட்சிலிங்கம்

Related Stories: