அகந்தையை நீக்கி ஞான ஒளியை அளிக்கும் ஐங்கரன்!

விநாயகர் என்றால் ‘மேலான தலைவர்’, ‘விக்னேஸ்வரர்’ என்றால் ‘இடையூறுகளை நீக்குபவர்’, ‘ஐங்கரன்’ என்றால் ஐந்து கரங்களை உடையவர், நாயகன் என்றால் தலைவன், கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி, ‘வி’ என்பதற்கு ‘இல்லை’ என்று அர்த்தம். விநாயகர் என்பது, இவருக்கு மேல் பெரிய தலைவர் எவருமில்லை என்பது முழுப் பொருளாகும். இவ்வாறே அவரின் பல நாமங்களுக்கு வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. விநாயகர் அவதரித்த தினத்தைதான் விநாயகர் சதுர்த்தியாக கொண்டாடப்படுவதாக புராணங்கள் கூறுகின்றன. முதற்கடவுள் என்று அழைக்கப்படும் விநாயகருக்கு பல இடங்களில் வழித்தடங்கள் உள்ளன. அவர் வீற்றிருக்கும் முக்கிய ஸ்தலங்கள் மற்றும் அவரை அங்கு சென்று வணங்குவதால் ஏற்படும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

கள்ள விநாயகர்

திருக்கடவூரில் அருளும் விநாயகருக்கு கள்ள விநாயகர் என்று பெயர். பாற்கடலைக் கடைந்தபோது விநாயகரை வழிபட மறந்தனர் தேவர்கள். அதனால் அவர்கள் பல இடர்களை அடைந்தனர். கடைசியில் அவர்கள் அமிர்தம் கிடைத்தும் அதை அருந்த முடியாமல் திண்டாட, விநாயகரை வழிபட்டு வழி பெறுமாறு சிவபெருமான் கூறினார். அதன்படி தேவர்கள் திருக்கடவூரில் உள்ள கணபதியை வழிபட்டு அமிர்தம் கிடைக்கப் பெற்றனர். இந்தத் தலத்தில் விநாயகப் பெருமானை வணங்கினால் அமிர்தம் அருந்தாமலேயே நீடித்த ஆயுளைப் பெறலாம் என்பது நம்பிக்கை. எனவே, நல்ல ஆரோக்கியம் அருளும்படி திருக்கடவூர் கள்ள விநாயகரை வணங்குவோம்.

தேன் உறிஞ்சும் விநாயகர்

குடந்தைக்கு  வடமேற்கில் சுமார் 10 கி.மீ. தொலைவில், மண்ணியாற்றங்கரையில் அமைந்துள்ளது திருப்புறம்பியம் என்ற ஊர். ஒரு பிரளயத்தின்போது, சிவபெருமானின் ஆணைப்படி விநாயகப் பெருமான் அந்தப் பிரளயத்தை அடக்கிக் காத்தாராம். அப்போது வருணன், கடலில் உள்ள பொருட்களான சிப்பி, சங்கு முதலானவற்றைக் கொண்டு இந்த விநாயகரைச் செய்து வழிபட்டார். பிரளயத்திலிருந்து ஊரைக் காத்ததால் இங்குள்ள கணபதிக்கு பிரளயம் காத்த விநாயகர் என்று பெயர். விநாயக சதுர்த்தியன்று இவருக்குக் குடம் குடமாகத் தேன் அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகம் செய்யும் தேன் முழுவதையும் பிள்ளையார் உறிஞ்சிக் கொண்டு விடுகிறார் என்பதால், இவரை தேன் உறிஞ்சும் விநாயகர் என்பார்கள். இந்த விநாயகரை வணங்கினால் துன்பங்கள் நீங்கி வாழ்வில் இன்பம் பெருகும்.

ஆபத் சகாய விநாயகர்

ஆபத்தில் உதவுபவரே ஆபத் சகாயர். திருத்தணியில் அருளும் விநாயகருக்கு ஆபத் சகாய விநாயகர் என்று பொருள். இந்த விநாயகர், முருகப் பெருமானுக்கே ஆபத்தில் உதவியவர். வள்ளியைக் கைப்பிடிக்க, காதல் கைகூட அருளியவர். திருத்தணி மலை மேல் உள்ள முருகன் கோயிலில் 2-வது பிராகாரத்தின் வட கிழக்கில் ஆபத்சகாய விநாயகர் அருள்பாலிக்கிறார். பக்தர்களுக்கு எந்த இடையூறு ஏற்பட்டாலும், உடனே அவர்களைக் காத்து உதவி செய்ய அவர் தயாராக இருப்பார். அவரை மனதில் நினைத்து வணங்கினால், தன் தம்பி முருகனுக்கு உதவியதுபோல் ஓடிவந்து காப்பார் என்பது நம்பிக்கை.

பாலச்சந்திர விநாயகர்

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் வழியில் உள்ளது திருவெறும்பூர். எறும்பு ஈசனை வழிபட்ட தலம் ஆகும். இங்கு விநாயகர் பாலச்சந்திர விநாயகராக காட்சி தருகிறார். தன் அழகினால் கர்வம் கொண்டு இருந்தார் சந்திரன். அவன் விநாயகரை அவமதித்த காரணத்தால் அவரின் சாபத்திற்கு ஆளானான். இதனால் கலக்கமடைந்து ஓடி ஒளிந்த சந்திரனுக்கு விநாயகப்பெருமானை வழிபட்டு நல்ல நிலை அடையுமாறு தேவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி சந்திரனும் விநாயகரைப் பூஜித்து தன் சாபம் நீங்கப்பெற்றார். அதன் அடையாளமாக பிறைச்சந்திரனைத் தன் கிரீடத்தில் சூடி பாலச்சந்திர விநாயகராக இத்தலத்தில் காட்சி கொடுக்கிறார். இங்கு விநாயகரை வணங்கினால், மனதில் உள்ள அகந்தை நீங்கி, ஞான ஒளி மனதில் பிறக்கும் என்பது நம்பிக்கை.

ஔவை விநாயகர்:

ஒளவையால் பூஜிக்கப்பட்டு, அவருக்கு விஸ்வரூபம் காட்டி, நாமெல்லாம் விநாயகர் அகவல் பெறக் காரணமாக இருந்தார் திருக்கோவிலூரில் அருள்புரியும் விநாயகப் பெருமான். விழுப்புரத்தில் மற்றும் திருவண்ணாமலையில் இருந்து 35 கி.மீ. தூரத்தில் உள்ளது இந்தத் தலம். இங்குள்ள வீரட்டேஸ்வரர் கோயிலின் முகப்பு வாயிலில் வலப்புறம் காட்சியளிப்பவர் புகழ்பெற்ற பெரியானைக் கணபதியார். இங்கு ஒளவையார் கயிலை செல்லும் சிற்பக் காட்சியும் உள்ளது. இந்த விநாயகரை அகவல் பாடிப் போற்றினால் கல்வியில் மேன்மையும் முக்தியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

அயல்நாட்டில் விநாயகரை  வழிபடும் இடங்கள்

இலங்கையில் மிகுந்தலேயுக்கு அருகில் கண்டக செட்டிங்க ஸ்தூபத்தில் விநாயகர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. இலங்கை தூணில், ஓர் அழகிய விநாயகரின் திருவுருவம் மாடத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கைகளுடன் செதுக்கப் பெற்றுள்ளது. கதிர்காமம் முருகன் கோயிலில் விநாயகர் தனிச் சந்நதி பெற்று விளங்குகின்றார். அசோக சக்ரவர்த்தியின் புதல்வியாகிய சாருமதி என்பவள் நேபாள நாட்டில் விநாயகருக்கு ஒரு கோயில் கட்டினாள். பவுத்தர்கள் சித்தி நாதா என விநாயகரை வணங்கி மகிழ்ந்தனர். புத்த பெருமான் ராஜக்கிருகம் என்னுமிடத்தில் தமது மாணவராகிய ஆனந்தர் என்பவருக்கு கணபதி ஹ்ருதயம் என்னும் மந்திரத்தை உபதேசித்ததாக நேபாள நாட்டு ஐதிகம் கூறுகின்றது.

ஆப்கானிஸ்தானில் கார்டெஸ் என்னுமிடத்தில் கண்டெடுக்கப்பட்ட விநாயகர் திருவுருவம், காபூலில் தர்க்காபீர் ரச்சந்நாத் என்னும் கோயிலில் வைத்து அங்குள்ள இந்துக்களால் பூஜிக்கப்பட்டு வருகிறது. அதன் பீடத்திலுள்ள பழைய கல்வெட்டுகள் கி.பி 6ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. மேலும் இதன் சிற்ப அமைப்புகளை பார்க்கும் போது மகத நாட்டில் தோன்றியதாக உணர்த்துகின்றன.

சீனாவில் முன்- உவாங் குங்-ஷ்சீன்

முதலிய நகரங்களில் விநாயகர் உருவங்கள் உள்ளன. குங்-ஷ்சீன் உருவம் கி.பி 931ம் ஆண்டிற்குரியதென்று கல்வெட்டுச் சான்றால் அறியப்பெறுகின்றது. இவரது கையில் தாமரைப் பூவும் மற்றொரு கையில் சிந்தாமணி என்னும் அணிகலனும் திகழ்கின்றன.தாய்லாந்து நாட்டில் பாங்காக்கில் உள்ள இந்துக் கோயிலில் விநாயகர் நாக யக்ஞோபவீதத்துடன் சுகாசன நிலையில் ஒரு கையில் எழுத்தாணியுடனும் மற்றொரு கையில் சுவடியுடனும் காணப்படுகின்றார்.கம்போடியாவில் கணேசர் ப்ராகேனஸ் என வழங்கப்படுகின்றார். பிரசாத்பாக் என்னுமிடத்தில் கி.பி 10ம் நூற்றாண்டுக் கோயில் ஒன்று விநாயகருக்காகவே அமைக்கப்பட்டுள்ளது.

குகைக்குள் கணேசரின் தரிசனம்

இந்தோனேஷியா, பாலியில் உபுத் என்னும் இடத்தில் குகைக்குள் விநாயகர் கோயில் உள்ளது. இந்த இடத்தை கோகஜா (யானை குகை) என அழைக்கின்றனர். 700 வருடங்களுக்கு மேலாக இந்த குகை உள்ளதாக வரலாற்றில் இடம்பெற்றுள்ளது. 1365ல் பிரபல சம்ஸ்கிருத இலக்கிய மாமனிதர், ஓலைச்சுவடிகளில் லவ் குஜா என ஒரு படைப்பை எழுதினார். அதிலேயே கோகுஜா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளார்.

1995ல் இந்த இடம் யூனெஸ்கோ பாரம்பரிய இருப்பிடங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டது. விநாயகர் குகையின் வாசலின் அமைப்பு பெண் மந்திரவாதி வாய் திறந்த நிலையில் இருப்பது போல் காட்சியளிக்கிறது. இதற்கான காரணம் குழந்தைகளை விழுங்கும் ரங்கடா என்ற பெண் மந்திரவாதி ஒருத்தி வாழ்ந்ததாகவும், அவளுடைய வாயின் அமைப்பு என்று ஒரு சில புராணங்கள் கூறகின்றன. சிலர் இதனை பூமாதேவியின் உருவம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இருட்டு நிறைந்த குறுகிய குகைக்குள் நடந்து சென்று கருங்கல்லால் பிரதிஷ்டைப் பெற்ற விநாயகரை வழிபட வேண்டும்.

தொகுப்பு: பிரியா மோகன்

Related Stories: