கிருஷ்ண கலய பிரசாதம்

எட்டெழுத்து பெருமாள் கோயில் - திருநெல்வேலி மாவட்டம்.

தாமிரபரணி கரையில் அருகன்குளம் என்னும் இடத்தில், தர்மபதி என்றழைக்கப்படும் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் கோயில், மிகவும் சிறப்புவாய்ந்ததாகும். இந்த கோயிலில்  கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்களுக்கு ``கிருஷ்ண கலய பிரசாதம்’’ வழங்குகிறார்கள். மண் கலயத்தில், அழகான வர்ணம் தீட்டப்பட்டு அதில் இனிப்பு வகைகள் நிரப்பப்பட்டு, கிருஷ்ணர் அருளுடன் பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

இந்த கலயத்தினை வீட்டில் வைத்து நாம் எதை நினைத்து வேண்டுகிறோமோ அவை நிறைவேறுகிறது. கலயத்திற்காக, பக்தர்கள் பல நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிடுவார்கள். 1891 ஆம் ஆண்டு ஆனி மாதம் 18 ஆம் தேதி அருகன் குளத்தில் பிறந்தவர் மாயாண்டி சித்தர். சிறு வயது முதலே ஆன்மிகத்தில் மிகவும் நாட்டம் கொண்டவர்.

ஒரு காலகட்டத்தில், இவர் வல்லநாட்டு மலைக்கு சென்று தியானம் செய்தார். அதன் பின்னர், அவர் பல காலமாக வீடு திரும்பவில்லை. வல்லநாட்டு மலையில் தியானம் இருந்த அவரின் கனவில், ராமர் தோன்றினார். ‘தான் ராம அவதாரத்தின் போது ஜடாயுக்கு தாமிரபரணி கரையில் திதி கொடுத்த பின், ஓய்வுக்காக வந்து அமர்ந்த இடம் அருகன் குளத்தில் உள்ளது.

அதில் நான் எட்டெழுத்து பெருமாளாக இருந்து அருள் வழங்க உள்ளேன். அதனால், எனக்கு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி வணங்குவீராக’ என உரைத்தார்.

அதன்படி மாயாண்டி சித்தர், 28 ஆண்டுகளுக்கு பின் அருகன் குளத்திற்கு வந்தார். அங்கு பெருமாளுக்கு கோயில் கட்டினார். ``ஒம் நமோ நாராயணா’’ என்ற எட்டெழுத்து மந்திரத்தினை உச்சரிப்பதால் ஸ்ரீஎட்டெழுத்து பெருமாள் என பெருமாளுக்கு பெயர் சூட்டினார். எட்டெழுத்துப் பெருமாள், ஸ்ரீராமர் மகா விஷ்ணுவாக நின்ற கோலத்தில் இங்கு பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

பெருமாளின் வாக்குகளை மாயாண்டி சித்தர் வாக்குமூலமாக, பகவான் பக்தர்களுக்கு உரைக்க ஆரம்பித்தார். இதனால், பக்தர்கள் கூட்டம் பெருகியது. பெருமானின் அருள்பெற, பத்தர்கள் அருகன் குளம் வந்து குவிந்தனர். மாயாண்டி சித்தர் மழை பொழியாத நேரத்தில், மழை பொழிய வைத்து விவசாயிகளை மகிழ்விக்க செய்தார். அதே நேரத்தில் மழை பெய்து விவசாய நிலங்களை அழித்த வேளையில், மழையை நிறுத்தினார், மாயாண்டி சித்தர்.

கலியுகத்தில், ``ஸ்ரீராமநாம’’ பாராயணமே மோட்சத்தை தரும் என்பதற்கு இணங்க, மிக சிறந்த மந்திரமான ``ஸ்ரீராமஜெயம்’’ என்ற கோஷம் அருகன் குளத்தில் கேட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த இடம் பகவானின் தர்மபதியாக கொண்டாடப்படுகிறது. எத்தகைய பிரளயத்திலிருந்தும், என் தருமக்குடையின் கீழ்வரும் தர்ம மக்களை காப்பேன். தருமம் ஒன்றே நிலையானது. தர்மமே வெல்லும்.

தர்மம் மட்டுமே வெல்லும் என பகவான் மானிடன் மூலம் இறங்கி, நாடிவரும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் இடமாக தருமபதி விளங்கி வருகிறது. மாயாண்டி சித்தர் முக்தியடைந்த பிறகு அவர் வழித் தோன்றலாக சிதம்பரம் சுவாமிகள் பொறுப்பேற்றார். அதன்பின், மாயாண்டி சித்தரின் பெண் வழி வாரிசாக வரதராஜபெருமாள் என்ற ராஜி சுவாமிகள் பொறுப்பேற்றார். பகவான் பக்தர்களின் தேவைகளை இவரின் வாயிலாக கணக்கு (வாக்கு) கூற ஆரம்பித்தார்.

அப்போது, பழங்காலத்து ஒலைச் சுவடிகள் ஒன்றை மாயாண்டி சித்தர் பாதுகாத்து வந்ததாகவும், அதன்படி இந்த தர்மபதி உலகம் போற்றும் உன்னத நிலை அடைய அந்த ஓலைச்சுவடியில் குறிப்பு உள்ளதாகவும் கூறப்பட்டது. ராஜி சுவாமிகள் ஓலைச் சுவடிகளை தேட ஆரம்பித்தார். சில காலங்களுக்குப்பின் அந்தப் பழங்காலத்து ஓலைச்சுவடிகள் கிடைத்தது.

அதில் தர்மபதிக்கு விரைவில் ஒரு பெண் துறவி தர்ம அன்னையாக வருவார் என்றும், அவர் வரவுக்கு பின் மிகப்பெரிய கோசாலை உருவாகும் என்றும், தாமிரபரணி கரையில் பகவான் கல்கி அவதாரத்திற்கு முன்பாகவே உலகம் போற்றும் விதமாக இந்த இடத்தில் மகாவிஷ்ணு ஆலயம் உருவாகும் என்றும் குறிப்பிட்டு எழுதப்பட்டுள்ளது.

அந்த ஓலைச்சுவடியின் கூற்றுக்கு இணங்க, பெண் துறவியாக தர்ம அன்னையாக ராமலட்சுமி கோயிலுக்கு வந்தார். தருமபதி அருள்மிகு எட்டெழுத்து பெருமாள் தர்மஸ்தாபன அறக்கட்டளையை உருவாக்கினார். கோயிலில் கோசாலை உருவாக்கினார். கோசாலை உள்புறம் ஸ்ரீமகா கிருஷ்ணர் சந்நதியை உருவாக்கினார். தற்போது, தொளாயிரத்திற்கும் மேற்பட்ட பசுக்கள் இங்கு பராமரிக்கப்பட்டுவருகிறது.

தர்மத்தின் மற்றொரு அங்கமாக உலகம் சுபிட்சமடைய, மேன்மேலும் செழிப்படையவும், கல்வியில் சிறந்து விளங்கவும், ஸ்ரீமகாதேவகோபால கிருஷ்ணன் கோசாலைக்கு, முதல் தளத்தில் ஸ்படிகலிங்கம் ஸ்தாபிதம் செய்ய அய்யா உத்தரவு வழங்கினார். அந்த உத்தரவின் படி முதல் தளத்தில் சிவபெருமான் பிரதான மூர்த்தியாக ஸ்ரீசக்த நாத ஸ்படிகலிங்கமாகவும், மேலும், பரிவார மூர்த்தி களாக ஸ்ரீலட்சுமி கணபதி, ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஸ்ரீஆஞ்சநேயர், ஆதிசங்கரர் பஞ்சலேகத்தில் தனித்தனி சந்நதிகளில் ஸ்தாபனம் செய்து கடந்த 11.2.2022 கும்பாபிசேகம் நடந்து முடிந்துள்ளது.

இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்றில், 2018ல் மகாபுஷ்கரம் மிகச்சிறப்பாக நடந்தது. இந்த வேளையில், கோசாலை - ஜடாயு துறையில் தாமிரபரணி ஆற்றில் புதிதாக அறக்கட்டளை மூலமாக கட்டப்பட்டுள்ள 144 அடி கல் படித்துறையில், பிரதி தமிழ் மாதம் முதல் ஞாயிற்று கிழமைகளில், மாலை 6 மணிக்கு தாமிரபரணி அன்னைக்கு, பரணி ஆரத்தி நடைபெறுகிறது. வைசாசி விசாகம் அன்று தாமிரபரணி பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, ஓடும் தாமிரபரணி அன்னைக்கு பட்டுசாத்தி வணங்கப்படுகிறது.

இரண்டாயிரம் தர்ம மக்கள் ஒரே நேரத்தில் அன்னதானம் உண்டு செல்லவும், தியான மண்டபம் அமைக்கவும், திருப்பணி சிறப்பாக நடந்துவருகிறது. இக்கோயிலில், துலாபாரம் மூலம் தங்கள் பாரங்களை இறக்கி வைக்கவும் முடியும். ஆண்டுதோறும் திருவிழா காணும் கோயில் இது. இக்கோயிலில், கோசாலையின் நடுவில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் ஸ்ரீமகாவிஷ்ணுவை காணலாம். இந்த கோயிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா 19.8.2022 அன்றும், உறியடி திருவிழா 21.8.2021 அன்றும் மிக விமர்சையாக நடைபெற உள்ளது.

எப்படிச் செல்வது?

நெல்லை சந்திப்பில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இத்திருத்தலம். நெல்லை சந்திப்பிலிருந்து கோயிலுக்கு செல்ல, ஆட்டோ மற்றும் மினி பஸ் வசதி உண்டு.

காலை: 6மணி முதல் 10 மணி வரை; மாலை 5 மணி முதல் 8 மணி வரை கோயிலின் நடை திறந்திருக்கும்.

தொகுப்பு: முத்தாலங்குறிச்சி காமராசு

Related Stories: