மகத்துவம் நிறைந்த ஆனி உற்சவங்கள்

எல்லா மாதங்களைப் போலவே ‘ஆனி’ மாதத்திலும் பல உற்சவங்களும், திருவிழாக்களும் விமரிசையாகக் கொண்டாடப் படுகின்றன. திருவண்ணாமலை மாவட்டம் படவேடு என்னும் இடத்தில் ரேணுகாம்பாள் திருக்கோயில் உள்ளது. இந்த கோயில், அருகே ஒரு ஆஸ்ரமம் உள்ளது. இங்குதான் ஜமதக்னி முனிவரும் அவரது மனைவி ரேணுகாதேவியும் யாகம் செய்தனர் என்பது ஐதீகம். இங்கு ஆண்டு தோறும் ஆனி மாதம் நடக்கும் திருமஞ்சன உத்தரவிழாவின் போது முனிவர் யாகம் நடத்திய இடத்தில் இருந்து விபூதி எடுத்து வந்து அதையே ஆண்டு முழுவதும் ரேணுகாதேவி கோயிலில் பிரசாதமாக வழங்குகின்றனர். இந்த விபூதியை வாயில் போட்டுக் கொண்டால் வயிறு தொடர்பான நோய்கள் தீருவதாக நம்பிக்கை.

ஒரு சமயம் வேதவியாசர் பஞ்சபாண்டவர்களிடம் ஏகாதசி விரதம் இருப்பதன் பெருமைகளை கூறினார். அப்போது அருகில் இருந்த பீமன், “உன்னால் உணவில்லாமல் ஒரு வேளை கூட இருக்க முடியாது. எவ்வளவு அன்னம் உண்டாலும் என் வயிற்றுப் பசி அடங்குவதில்லை. அப்படியிருக்க நான் எப்படி ஏகாதசி விரதம் இருக்க முடியும்?” என்று கேட்டான். அப்போது வேதவியாசர் ‘ஆனி மாதம் வரும் சுக்ல பட்ச ஏகாதசியன்று விரதம் இருந்தால், ஆண்டு முழுவதும் உள்ள எல்லா ஏகாதசிகளிலும் விரதம் இருந்த பலன்களைப் பெற இயலும்’ என்று கூற, பீமனும் ஆனிமாதம் சுக்லபட்ச ஏகாதசி விரதம் இருந்து அனைத்து ஏகாதசி பலன் களையும் பெற்றான் என்பது வரலாறு.

 வில்லிப்புத்தூரில் ஆண்டாள் திருக்கோயிலில் ஆனிமாதம் பெரியாழ்வார் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று 16-கால்கள் கொண்ட சப்பரத்தேர் வீதி உலா வரும். அன்று தஞ்சையிலிருந்து கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு பசுமையான பனை ஓலைக் குருத்துகளால் வடிவமைக்கப்படும் தேர் மிகவும் அற்புதமாகக் காட்சி தரும். இந்த ஆனித் தேர் பக்தர்களுக்கு 16-வகையான செல்வங்களையும் வழங்கக் கூடியது என்பது ஐதீகம். அடுத்து இந்தத் தேருக்குப் பின்னால் ‘செப்புத்தேர்’ தொடர்ந்து உலாவரும். இதை ‘கோரதம்’ என்றும் அழைப்பர். இரண்டு தேர்களும் திருவீதியுலா வரும்போது கண்கொள்ளாக் காட்சியாகும்.

நாடெங்கிலும் உள்ள எல்லா பெருமாள் கோயில்களிலும் மூலவருக்கு ஆனி ஜேஷ்டாபிஷேகத்தன்று மட்டுமே தைலக்காப்பு சாத்தப்படும். ஆனால், ரங்கத்தில் மட்டும் மூலவருக்கு இத்துடன் ஆவணி பவித்ரோஸ்வத்திலும் இறுதி நாளிலும் தைலக் காப்பு சாத்தப்படும். இந்தப் பெருமாளுக்கு மட்டுமே ஆனி,  ஆவணி ஆகிய இரண்டு மாதங்களில் இருமுறை தைலக் காப்பு நடைபெறுவது சிறப்பு.

ஆறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோயிலில் ‘ஆனி’ மாதம் 29ஆம் தேதி ‘வர்தந்தி’ எனப்படும் உற்சவம் சிறப்பாக நடைபெறும். அன்று முருகப் பெருமானுக்கு வேத கீதம் முழுங்க 108 சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. அன்று இரவு முருகப் பெருமான் தங்க மயில் வாகனத்தில் தரிசனம் தருகிறார்.கபாலீஸ்வரர் கோயிலில், கும்பாபிஷேக நாளைக் கொண்டாடும் வகையில் ஆனி மாதம் 1008 சங்காபிஷேகம் நடைபெறும். ஆனியில் நடைபெறும் பவித்ரோத்ஸவ வைபவத்தின் போது சுவாமிக்கு ஆனிதிருமஞ்சனம் சிறப்பாக நடைபெறும். ஆனிமாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று அன்னை கற்பகாம்பாளின் பிராகார வலமும், ஊஞ்சல் உற்சவமும் சிறப்பாக நடைபெறும்.

காஞ்சிபுரம்  வரதராஜப் பெருமாள்

கோயிலில் ஆனிமாதத்தில் ‘பரதத்துவ நிர்ணயம்’ எனும் ஏழுநாள் ‘ஆனிகருடன்’ உற்சவம் நிகழும். இங்கு முதுவேனில் காலமான ஆனி மாதத்தில் கோடை உற்சவம் எனும் ‘வசந்த விழா’ நடைபெறுகிறது. தமிழ் மாதங்களான வைகாசி, ஆனி, ஆடி ஆகிய மூன்று மாதங்கள் மட்டும் முறையே வைகாசி பிரம்மோற்சவம், ஆனியில் சுவாதி நட்சத்திரத்தன்று பெரியாழ்வார் சாற்று முறை, ஆடி பெளர்ணமியில் கஜேந்திர மோட்சம் ஆகிய வைபவங்களின் போது மட்டும் கருட சேவை நடைபெறும். இந்த மூன்று வைபவங்களுக்கு மட்டும் வருடத்துக்கு மூன்று கருட சேவை நடைபெறும்.

ஆனித்திங்களில், அரனடி சேர்ந்தோர் மூன்று சிவனடியார்கள். ஏயர்கோன் கலிக்காம நாயனார் ஆனிமாதம் ரேவதி நட்சத்திரத்திலும், அமர்நீதியார் பூரம் நட்சத்திரத்திலும், புகழ்த் துணையார் ஆயில்ய நட்சத்திரத்திலும் சிவனடி சேர்ந்தனர்.ஆனி மாதத்தில் திருவாதிரை அல்லது புனர்பூசம் நட்சத்திரத்தில் வரும் அமாவாசையில் செய்கின்ற சிரார்த்தம் பிதுருகளுக்கு 12 வருடம் திருப்தியளிக்கும் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. ஆனி மாதம் பெளர்ணமி நாளில் சிவபெருமானுக்கு மா, பலா, வாழை எனும் முக்கனிகளும், பச்சைப்பட்டாடை, நூறு மாணிக்க மாலை, பாதிரி மாலை, ஆகியவற்றை அணிவித்து மஞ்சள் கலந்த உணவைப் படைத்து வழிபட்டால் எண்ணிய எண்ணமெல்லாம் கைகூடும் என்பது ஐதீகம்.

விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூருக்கு மேற்கே சுமார் 4 கி.மீ. தொலைவில் உள்ளது கொன்றையாண்டி அய்யனார் கோயில். கோடை காலம் முடிந்ததும் இவருக்கு ஆனி மாத வளர்பிறையில் அய்யனாரைக் குளிர்விக்கும் ‘முப்பழ பூஜை’ நடைபெறும். அப்போது மா, பலா, வாழை என முக்கனிகளை ஏராளமான பக்தர்கள் கூடை கூடையாகக் ெகாண்டு வந்து அவற்றால் அய்யனாருக்கு அபிஷேகம் செய்கிறார்கள். அவற்றை பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்குகிறார்கள்.

திருவானைக்காவல் அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஜம்புகேஸ்வரர் திருக்கோயிலில் ஆனி உத்திர நட்சத்திர நாளில் ‘ஆனித் திருமஞ்சனம்’ வைபவம் மேளதாளங்களுடன் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மறு நாள் நடராஜர் சப்பரத்தில் திருவுலா வருகிறார். ஆனி முழுநிலவு நாளில் ‘முப்பழ வழிபாடு’ நடைபெறுகிறது. ஏராளமான பக்தர்கள் முக்கனிகளையும் கொண்டு வந்து அபிஷேகம் செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். திருச்சிக்கு அருகில் உள்ள வயலூர் முருகன் கோயிலில், ஆனித் திருமஞ்சன விழா ஆதிநாதருக்கு செய்யப்படுகிறது. ஆனி மூல நட்சத்திரம் அருணகிரிநாதரின் நட்சத்திரம். அன்று குரு பூஜை மேளதாளத்துடன் விசேஷமாகக் கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலைச் சுற்றி வீதியுலா வருகிறார் அருணகிரிநாத சுவாமிகள். பூவுலகில் 32ஆண்டுகள் வாழ்ந்திருந்த மாணிக்கவாசகர் சுவாமிகள், ஆனி மாதத்தில் மக நட்சத்திரத்தில் சிவ பெருமானுடன் ஐக்கியமானார்.

ஆகவே, ஆனி மாதத்தில் மகத்தில் மாணிக்கவாசகர் திருமேனியை உலாவாக எடுத்து வந்து, நடராஜர் சந்நதியில் ஐக்கியப் படுத்தும் திருவிழா நடைபெறுகிறது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் ஆகிய மூவரின் திருநட்சத்திரங்களின் போது அவர்களுடைய உற்சவப் படிமங்களை சுவாமி சந்நதியில் ஐக்கியப்படுத்துவார்கள். மாணிக்கவாசகர் திருமேனியை மட்டும் நடராஜர் சந்நதியில் ஐக்கியப்படுத்துவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவண்ணாமலை மற்றும் தில்லை நடராஜப்பெருமானுக்கு பழங்கால அரசர்கள், பெரும் நிலக்குழார்கள், நகரத்தார்கள் ஏராளமான விலைமதிப்பற்ற ஆபரணங்களையும், நன்கொடையாக வழங்கியுள்ளனர்.

சுவாமிக்கு ஆனி திருமஞ்சனம், மார்கழித்திருவாதிரை உற்சவத்தின் ேபாது மட்டும் ஆபரணங்கள் அணிவிக்கிறார்கள்.திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோயிலில் ஆனி மாதத்தில் உத்தர நடசத்திரத்தில்  சிவகாம சுந்தரியுடன்  நடராஜப் பெருமான் புறப்பாடாகி ஆயிரம்கால் மண்டபம் எழுந்தருளுகிறார். அங்கே இரவு முழுவதும் ‘அபிஷேகம்’ நடைபெறும். மறுநாள் காலை சுவாமியும், அம்பாளும் அலங்கார பூஜிதகளாக சேர்ந்து நடனமாடிக் கொண்டு ஆயிரம் கால் படியில் இறங்கி வருகிறார்கள். கைலாயத்தில் சிவ பெருமான் நடனம் ஆடி வருவது போல் அக்காட்சியைக் காண் மிகவும் ஆனந்தமாக இருக்கும். பிறகு திருமஞ்சன கோபுரத்தின் வழியாக நடராஜப் பெருமானும் அம்பாளும் திருவீதிக்கு வருகிறார்கள். இதற்கு ஆனித் திருமஞ்சன உற்சவம் என்று பெயர்.

இத்தலத்தில் ஆனி மாதத்தில் ‘தட்சிணாயன புண்ணிய கால விழா’ பத்து நாட்கள் விமரிசையாக நடைபெறுகிறது. இந்திருவிழாவில் காலையில் கொடி ஏற்றியதும் சுவாமி புறப்பாடு நடை பெறுகிறது. காலை மாலை இரண்டு நேரமும், பத்து நாட்கள் பிரம்மோற்சவம் வைபவம் போன்று சுவாமி திருவீதியுலா வருவார்.  விநாயகர்,  சந்திரசேகரர்,  அம்பாள், அஸ்திரதேவர் ஆகியோருடன் பத்து நாட்களும் மாடவீதி உலா நடைபெறும். பத்தாம் நாள் ஐயங்குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும்.

ஆனித் திங்கள் மக நட்சத்திரம் மாணிக்கவாசக சுவாமிகளின் திரு அவதார திரு நட்சத்திரமாகும். நால்வரின் ஒருவரான மாணிக்கவாசக சுவாமிகள், திருவெம்பாவை,     திருப்பள்ளி எழுச்சி மற்றும் திருவண்ணாமலையில் தங்கியிருந்து பாடிய பாக்கள் அநேகம். இவர் இங்கு தங்கியிருந்த காலமும் மிகவும் சிறப்புடையதாகும். இவர் தினமும் ஆலயம் சென்று இறைவனை பல வடிவங்களில் கண்டு ஆனந்தம் அடைந்து பல பாடல்களைப் பாடி அருள்தரும் அண்ணாமலைக்கு பெருமை சேர்த்துள்ளார். இப்பெருமானின் குருபூஜை விழா இங்கு மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

சிதம்பரம்  நடராஜ மூர்த்திக்கு வருடத்திற்கு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. ஒன்று ஆனிமாதம், மற்றொன்று மார்கழியில் நடக்கிறது. முதலாவது ஆனி மாத உத்திர நட்சத்திரத்திற்கு பத்து நாள் முன்பு கொடியேற்றி, முதல்நாள் முதல் ஏழாம்நாள் வரை திருவிழாவரையில் உற்சவ மூர்த்திகளான  சோமாஸ் கந்தர்,  சிவானந்த நாயகி,  விநாயகர்,  சுப்ரமணியர்,  சண்டேஸ்வரர் முதலிய பஞ்ச மூர்த்திகளும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விதமான வெள்ளி, தங்க வாகனங்களில் திருவீதியுலா வருவார்கள்.

8ஆம் நாள் திருவிழாவில் பஞ்ச மூர்த்திகள் இல்லாமல் சுவாமி பிட்சாடனர் கோலத்தில் தங்கரத பவனி வருவார். 9ஆம் நாள் தேர்திருவிழாவிற்கு மூலவராக  நடராஜப் பெருமான்,  சிவகாமி,  விநாயகர்,  சுப்ரமணியர்,  சண்டேஸ்வரர் முதலிய பஞ்ச மூர்த்திகளும் ஐந்து திருத்தேர்களிலும் வீதி வலம் வருவர்.  நடராஜரும்  சிவகாமியும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளி, ஏககால லட்சார்ச்சனை முடிந்து, நைவேத்தியம் ஆனதும், மந்திராட்சதை, தீபாராதனை செய்து, பகல் ஒரு மணிக்கு  நடராஜ மூர்த்தியும்,  அம்பாளும் ஆனந்தத் திருநடனம் செய்து கொண்டு  ஞானாகாச சித்சபா பிரவேசம் செய்தும், தீபாராதனையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

டி.எம்.ரத்தினவேல்

Related Stories: