நமது இல்லத்திற்கு புகழ்பெற்ற வாஸ்து சாஸ்திர நிபுணர் (அந்தாதிக் கவிஞர் ஆர்.வீ.சுவாமி) வந்திருந்தார். அவர் மிகச் சிறந்த வைணவ அறிஞர். பக்திமான். 70 வயதுக்கு மேல் ஆகிறது. அரசாங்கத்தில் உயர் பதவியில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவர். கவிஞர். அவர் நம்முடைய வீட்டில் சில வாஸ்து சாஸ்திர குறிப்புகளைக் கொடுத்தார். மிக எளிய விஷயங்கள். செலவில்லாத விஷயங்கள். அவர் சொன்ன அந்த விபரங்களை வேறு பதிவில் பார்ப்போம். இப்பொழுது அவர் ஒரு மிக அற்புதமான விஷயத்தைச் சொன்னார்.
“உங்கள் குடும்பத்தில் உள்ள குறைகள் தீர அந்நியோன்னியம் கூட, சௌஜன்யம் மலர, இல்லத்தில் லட்சுமி கடாட்சம் பெருக ஒரு சின்ன வேலை செய்யுங்கள்” என்றார்.
நான் ஆவலோடு “என்ன?” என்று கேட்டேன்.
“தினசரி பூஜை செய்கிறீர்கள் அல்லவா?”“செய்கிறேன்.” “சுவாமிக்கு என்ன வைத்து படைப்பீர்கள்?” “அது அந்த நாளின் சூழ்நிலையைப் பொருத்து மாறும். சில நாட்களில் வாழைப் பழம் வைத்து படைப்பேன். சில நாட்கள் ஆரஞ்சு பழம் வைத்து படைப்பேன். சில நாட்கள் கற்கண்டு அல்லது பேரீச்சம் பழம் வைத்து படைப்பேன். ஏன் கேட்கிறீர்கள்?”“எல்லாம் சரி, அடைக்காய் அமுது வைக்க மாட்டீர்களா?” என்றார். வைணவ மரபில் அடைக்காய் அமுது என்றால் “வெற்றிலைப்பாக்கு” என்று பொருள்.“வெற்றிலை பாக்கு வைத்து படைக்க மாட்டீர்களா?” என்று கேட்டார்.“நான் முக்கியமான தினங்களில் வைத்து படைப்பேன்” என்று சொன்னேன்.“இல்லை இல்லை. நீங்கள் தினமும் பெருமாளுக்கு அடைக்காய் அமுது சமர்ப்பிக்க வேண்டும்” என்றார். அப்படி சமர்ப்பித்த அடைக்காய் அமுதை, நீங்கள் பிரசாதமாக மதிய உணவு உண்ட பிறகு, போட்டுக் கொள்ள வேண்டும். “அதுவும் உங்கள் மனைவி மடித்துக் கொடுத்து நீங்கள் போட்டுக் கொண்டீர்கள் என்று சொன்னால், அது பல அற்புதமான சுப காரியங்களைச் செய்யும்” என்றார். உண்மைதான். தாம்பூலம் என்பதை நாம் இப்பொழுது மறந்து விட்டோம். ஒரு காலத்தில் வீட்டுக்கு விருந்தினர்கள் வந்தால், சாப்பாடு போடுவது முன்பின் இருந்தாலும், தாம்பூலத் தட்டை தான் முதலில் அவர்கள் முன்னால் வைத்து போடுங்கள் என்பார்கள்.வெற்றிலையை, “செல்லம்” என்று சொல்வார்கள். ஆனால் இப்போது அதையெல்லாம் மறந்து விட்டோம். எவ்வளவு ஏழையாக இருந்தாலும் கூட, வேலை செய்யும்பொழுது அவர்கள் உணவு சாப்பிடாவிட்டாலும், வெற்றிலைப்பாக்கு போட்டுவிட்டு சுறுசுறுப்பாக வேலை செய்வார்கள். அக்கால பாட்டிகளும் தாத்தாக்களும் பல் போனாலும் வெற்றிலைப் பாக்கைப் போட்டு இடித்து தூளாக்கி போட்டுக் கொள்வார்கள். அதில் புகையிலை போன்ற லாகிரி வஸ்துக்களை உபயோகிப்பது தான் தவறே தவிர, வெற்றிலையும் பாக்கும் சுண்ணாம்பும் அற்புதமான மருத்துவ குணம் கொண்டவை. மங்களகரமானவை.ஒருவரை அழைக்கும் பொழுது பாக்கு வெற்றிலை வைத்து அழைப்பது என்று சொல்லுவார்கள். அது ஒருவருக்கு காட்டுகின்ற உயர்ந்தபட்ச மரியாதை. வெற்றிலை பாக்குடன் சுண்ணாம்பு சேர்த்து போட்டுக் கொள்வார்கள். நீண்ட நேரம் நல்ல எனர்ஜி இருக்கும். வயிறு செரிமானத்திற்கு பெரிதும் உதவும். சுப நிகழ்ச்சிகளில், விருந்துக்குப் பிறகு ஜீரணத்துக்காக வெற்றிலை பாக்கு கொடுத்து வழியனுப்பும் வழக்கம் ஏற்பட்டது. வாயுத் தொல்லை நீங்கும். வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவதால் கால்சியம் உடலில் சேரும்.வெற்றிலையைக் கசக்கிக் சாறு எடுத்து அந்த சாற்றில் சிறிதளவு கற்பூரத்தைச் சேர்த்துக் குழப்பி வலியுள்ள இடத்தில் தடவினால் தலை வலி உடனே குணமாகும் என்று கூறப்படுகிறது. தலை வலித்தால் பலர் வெற்றிலையை கிள்ளி தலையில் ஒட்டிக்கொள்வதை பார்த்திருப்போம். வெற்றிலைச் சாறும் சீரகமும் வயிற்று வலிக்கு நல்லது.சளி இருமல் போன்றவற்றுக்கு வெற்றிலையுடன் சுக்கு கஷாயம் குடிப்பார்கள். வெற்றிலையையும் மிளகையும் சேர்த்துத் தின்றால் தேள் விஷம் கூட முறியும் என்பார்கள்.இப்பொழுது, பேருக்கு சுபகாரியங்களில் அதைப் பயன்படுத்துகின்றோம். பூஜையில் அதைப் பயன்படுத்துவதே கிடையாது.இந்த அடைக்காய் அமுது குறித்தே பாடுகின்றார் ஆழ்வார்.“நெய்யெடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்துஎன்னை வெள்ளுயி ராக்கவல்லபையுடை நாகப் பகைக்கொடி யானுக்குப் பல்லாண்டு கூறுவனே...”ஏகாதசி போன்ற விரத நாள்கள் தவிர, மற்ற தினங்களில் இந்த வெற்றிலை பாக்கு போட வேண்டும். முடிந்தால் சிறிது சந்தனம் பூஜையில் வைத்து பிரசாதமாக ஒரு துளி பூசிக்கொண்டால் அது இன்னும் அற்புதமான பலன்களைச் செய்யும். இதுவொரு உளவியல் கலந்த சாஸ்திரம் என்று எடுத்துக்கொள்ளலாம். சந்தனத்தை பார்த்தவுடனே மங்களம் நினைவுக்கு வந்துவிடுகிறது அல்லவா. சுபகாரியங்களில் வெற்றிலை பாக்கு பழம் கொடுப்பது ஏன் தெரியுமா? அது வெற்று இலை அல்ல. வெற்றி இலை. அதனால்தான் எடுத்த காரியத்தில் வெற்றி பெற, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவிக்கிறோம். ஜோதிடத்திலும் வெற்றிலையை வைத்துக் கொண்டு ஜோதிடம் சொல்பவர்கள் இருக்கிறார்கள். எல்லாக் கொடிகளும் பூவிடும், காய் காய்க்கும். ஆனால், வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது. உண்ணக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று. “இறைவனுக்கு வெற்றிலை பாக்கு வைத்து வணங்குவது நமது மரபு. வெற்றிலையில் `A’டூ `Z’ எல்லா வைட்டமின்களும் இருக்கிறது. வெற்றிலையில் இரும்பு, சுண்ணாம்பு, பி.கரோட்டின், அஸ்கார்பிக் அமிலம், லைகோபின், டோட்டல் பினால்ஸ், டோட்டல் ஆன்ட்டி ஆக்சிடென்ட் (Anti oxidants) போன்ற நற்பயன்கள் இருக்கிறதென்று கூறுகின்றனர்.ஆன்மீகமும் அறிவியலும் உளவியலும் கலந்த வெற்றிலைப் பாக்கை பயன்படுத்துங்கள்... செயல்களில் வெற்றி பெறுங்கள்.