×

விதியை வெல்லவைக்கும் விளாங்காடு

தமிழகத்தில் எத்தகைய தெய்வீக பொக்கிஷங்கள் மக்களுக்கே தெரியாமல் மறைந்துள்ளன என்பதை நினைக்கும்போது, மனதில் ஏற்படும் வேதனையை விவரிக்க இயலவில்லை. சுமார் 900 ஆண்டுகளாக அன்னியர்களின் படையெடுப்புகள், கொலைகள், கற்பழிப்புகள், மதமாற்றங்கள் ஆகியவற்றினால் நமது புராதன சரித்திரத்தையும், பொருட்களையும் மக்கள் மறந்தேபோயினர். தன்மானம் இழந்து, கோழைகளாகவே இன்றும் நாட்களைக் கடத்தி வருகின்றனர்.நமது கலாசாரம், பண்பு, வாழ்க்கை நெறிமுறைகள் ஆகியவற்றின் அஸ்திவாரமே நம் திருக்கோயில்கள்தான் என்பதை உணர்ந்த அன்னிய மதவெறியர்கள் நம் திருக்கோயில்களைச் சூறையாடி, அதன்பின்பு அவற்றை இடித்து, தரைமட்டமாக்கினர். குடும்பங்கள், குடும்பங்களாக, மக்கள் தங்கள் பூர்வீக ஊர்களைக் காலி செய்துவிட்டு வெளியேறினர்.

அவ்விதம் மக்கள் காலம், காலமாகப் பூஜித்து வந்த திருக்கோயில்களையும் கூட புறக்கணித்து விட்டு, உயிர் பிழைக்க பிற மாநிலங்களுக்கு ஓட வேண்டிய நிலைமை ஏற்பட்டது. பின்பு, பலகாலம் மக்கள் அவ்வூர் திரும்பமுடியாமல் போய்விட்டதால், மிகப் பழைமைவாய்ந்த ஏராளமான திருக்கோயில்கள் க்ஷீணமடைந்தன. அத்தகைய திருக்கோயில்களில் ஒன்றுதான், சென்னைக்குத் தெற்கே அச்சிறுப்பாக்கம் மற்றும் மேல்மருவத்தூர் திருத்தலங்களுக்கு சுமார் 10கி.மீ. மேற்கில் அமைந்துள்ள கபிதாரன்ய க்ஷேத்திரம் என்னும்  ஸ்ரீ விளாங்காடு மிகப் புராதன க்ஷேத்திரமாகும்.

பிருகு மகரிஷிக்கு நாரத மகரிஷியின் உபதேசம்!

இத்திருத்தலத்தின் பெருமையும், சக்தியும் அளவற்றவை. ஸ்ரீ பிருகு மகரிஷிக்கு, நவக்கிரக மண்டலத்தின் ரகசியங்களை, நாரத மகரிஷி உபதேசித்தருளிய மகத்தான திவ்ய க்ஷேத்திரம் இந்த விளாங்காடு!வேத வியாஸ பகவானின் பவிஷ்ய புராணத்திலும், பிரும்மாண்ட புராணத்திலும் இத்திருத் தலத்தின் மகிமைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

ஆனைக்கு அருளிய அரும்பெரும் கருணை!

‘புஷ்கரம்’ (ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ளது) ஸ்வயம்வ்யக்த (தாமாகவே தோன்றிய) மகத்தான க்ஷேத்திரங்களில் தனிச்சிறப்பு பெற்றதாகும். இங்கு பகவான் ஸ்ரீ மந் நாராயணன், தீர்த்த ஸ்வரூபியாக (ஜலமாக) எழுந்தருளியிருக்கிறான். இந்த தீர்த்தத்திற்குத்தான் தினமும் ஆராதனை நடைபெறுகிறது. பிற்காலத்தில், பல திருக்கோயில்கள், பாரத மன்னர்களால் இங்கு நிர்மாணிக்கப்பட்டன.

பாரத புண்ணிய பூமியில் பிரம்ம தேவருக்கென ஏற்பட்ட ஒரே கோயில் புஷ்கரம் மஹா க்ஷேத்திரத்தில்தான் உள்ளது. இது கிருத யுகத்தில் ஏற்பட்ட கோயிலாகும். புஷ்கரம் தீர்த்தக்கரையில் சதுர்முக பிரம்மா இயற்றிய மிகப்பெரிய யாகத்தின்போது அவர் அமர்ந்து யாகம் நடத்திய இடத்தில்தான் மிகப் புராதனமான இக்கோயில் அமைந்துள்ளது. (பிற்காலத்தில் பல க்ஷேத்திரங்களில் பிரம்மதேவருக்கு ஆலயங்கள் அமைந்தன).

இந்த புஷ்கரம் புஷ்கரணியில்தான் ‘கஜேந்திரன்’ எனும் யானையை, முதலையின் வாயிலிருந்து, பகவான் ஸ்ரீ மந் நாராயணன் காப்பாற்றி அருள்புரிந்தான். தன் பக்தர்களின் மீது பகவான் எத்தகைய வாத்ஸல்யம் வைத்திருக்கிறான் என்பதை எடுத்துக்காட்டும் இந்த தெய்வீக நிகழ்ச்சி பக்தியின் சக்தியையும், உயர்வையும் எடுத்துக்காட்டுகிறது.

முதலையின் வாயில் அகப்பட்டு, உயிருக்கு மன்றாடிய யானைக்கு ‘நாராயண நாமம்’ தெரியாது. ஆதலால், அது “இந்த ஈரேழு பதினான்கு உலகிற்கும் எவர் ஆதிமூலமோ-எவர் காரணமோ, அவர் என்னை காப்பாற்றட்டும்…” என்று அலறி, புஷ்கரம் தீர்த்தத்தில் மலர்ந்திருந்த தாமரை மலர் ஒன்றை தனது துதிக்கையால் பறித்து, ஆதிமூலமான அந்த பகவானைப் பார்த்து, வானத்தில் எறிந்தது. அதனை ஏற்ற ஸர்வலோக சரண்யனான ஸ்ரீ மந் நாராயணன், கருடனுக்காகக்கூட காத்திராமல், வானவெளியில் தோன்றி, அந்த யானையைக் காப்பாற்றினான்.

பரம பக்தனாகிவிட்ட யானையின் காலைப் பற்றியதான், அந்த முதலைக்குத்தான் முதலில் மோட்சமளித்தான் பிரபு!

அந்த பக்தவத்ஸலன் தான் விளாங்காடில் எழுந்தருளி, அற்புத ஸேவை சாதிக்கிறான் (தரிசனம் தந்தருள் புரிகிறான்). ‘ஆதிமூலமே’ என்று பூரண நம்பிக்கையுடன் கஜேந்திரன் அழைத்தபோது ஓடி வந்த காரணத்தால் இப்பெருமானுக்கு ‘ஸ்ரீ ஆதிமூல நாராயணன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. கஜேந்திரன் நீராடியதால், இங்குள்ள திருக்குளம் ‘கஜேந்திர புஷ்கரணி’ எனப் பூஜிக்கப்படுகிறது.பகவானின் பேரழகு!ஸ்ரீ தேவி, பூதேவி சமேதனாக தரிசனம் அளிக்கும் ஸ்ரீ  ‘ஆதிமூல நாராயணப் பெருமானின் திவ்ய செளந்தர்யத்தை, சாதாரண வார்த்தைகளினால் விவரிக்க இயலாது. புராதன க்ஷேத்திரப் பெருமான்களுக்கே உரிய பேரெழிலுடன், காணும் அந்த விநாடியே உள்ளத்தை ஈர்த்துவிடுகிறான் எம்பெருமான்!

நாரத மகரிஷியே, மிருகு மகரிஷிக்கு ஜோதிடக் கலையின் சூட்சுமங்களை உபதேசித்த க்ஷேத்திரமாதலால், எந்தவித கிரகதோஷ மானாலும் அவற்றை நிவர்த்தி செய்யும் பரிகாரத்தலமாகத் திகழ்கிறது விளாங்குடி. மேலும், ஜோதிடம் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள அன்பர்கள் இப்பெருமானை தரிசித்து, பிரார்த்தித்துக் கொண்டால், அவர்களுக்கு குருவாக இருந்து, ஜோதிட சாஸ்திரத்தை உபதேசித்தருள்வதாக தலவரலாறு விளக்கியுள்ளது.

திருப்பணிகள்!
கிடைத்தற்கரிய பொக்கிஷமான விளாங்காடு திருக்கோயிலை ஓரளவே திருப்பணிகள் செய்து, அதன் அஷ்டபந்தன, ஜீர்ணோத்தாரண மஹா ஸம்ப்ரோக்ஷணம். மகாத்மா, மைசூர் ஸ்ரீ பரகால மடத்தின் ஜீயர் ஸ்வாமிகளின் பரமானுக்ரகத்தினால் 29.6.2014 அன்று சிறப்பாக நடைபெற்றது.

இருப்பினும், நாளுக்கு நாள் அதிகரித்துவரும் பக்தர்களின் நலனுக்காகப் பல திருப்பணிகள் செய்ய வேண்டியுள்ளன. மேலும், திருக்கோயிலின் பல பகுதிகளில் திருப்பணி வேலைகள், நிதிவசதிக் குறைவினால் நின்றுபோயுள்ளன. இதற்காக, ‘ஆதிமூல நாராயண அறக்கட்டளை’ ( அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட்டது) என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அதன் உறுப்பினர்கள் அல்லும், பகலும் அரும்பாடுபட்டு வருகின்றனர். வசதியுள்ள அன்பர்கள் மகத்தான இக்கைங்கர்யத்திற்கு நிதியுதவி அளித்தால் பல தலைமுறைகளுக்கு பரம புண்ணியம் கிடைக்கும். நாட்டை ஆண்ட மன்னர்கள், காலம் காலமாக நம் திருக்கோயில்களைப் பராமரித்தனர். ஆனால் கலியின் தோஷத்தினால், இன்று நமக்கு உதவுவாரில்லை. தமிழகத்தில்தான் எத்தனை, எத்தனை திருக்கோயில்கள்!
நமக்கும், நம் நாட்டிற்கும் நல்ல காலம் வரும் வரையில், இத்திருக்கோயில்களை அடியோடு அழித்து விடாமல் நாம் பாதுகாக்க வேண்டியது நமது கடமையல்லவா?

Tags :
× RELATED சூரிய பகவானின் தேரைக் கொண்ட சூரிய கோயில்