
சுதா கொங்கரா இயக்கியுள்ள ‘பராசக்தி’ என்ற படத்தில், முதல்முறையாக வில்லனாக நடித்துள்ளார் ரவி மோகன். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசுவதற்கே கொஞ்சம் கூச்சமாக இருக்கும். ஆனால், எஸ்கே படத்தில் பேசுவது அப்படி இல்லை. பலரது கடின உழைப்பால் உருவாக்கப்பட்ட தங்கம்தான் ‘பராசக்தி’. இந்த வருடத்தின் மிகச்சிறந்த படமாக ‘பராசக்தி’ வரும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சிவகார்த்திகேயன் எதுவுமே இல்லாமல் இதுபோன்ற மேடைகளில் ஆரம்பித்து. தற்போது இந்த இடத்துக்கு வந்திருக்கிறார் என்றால், இவர் அனைத்துக்கும் தகுதியானவர். அவர் இன்னும் பெரிய மேடை ஏறி பேச வேண்டும்.
அதற்கு ரசிகர்கள் அவர் கூடவே இருக்க வேண்டும். பொதுவாக பல நல்ல ஆண்கள் இருக்கும் இடத்தில், ஒரு பெண் பாதுகாப்பாக உணர்வார் என்று சொல்வார்கள். ஆனால், முதல்முறையாக ஒரு பெண் (சுதா கொங்கரா) இருக்கும் இடத்தில் நான் பாதுகாப்பாக உணர்ந்தேன். எந்த தடைகள் வந்தாலும் தனி ஆளாக நின்று எதிர்கொள்வது என்பது, தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க போகிறது. இந்த தீயை (பராசக்தி) நிறையபேர் அணைக்க வெளியில் முயற்சி செய்தார்கள். இந்த தீ ஆபத்தான தீயில்லை, கடவுள் முன்பு ஏற்றப்படுகிற ஒரு அகல் விளக்கு. ‘பராசக்தி’ படத்தில் ஏன் வில்லனாக நடிக்கிறீர்கள் என்று பலர் கேட்டனர். அதுபற்றி சொல்வதற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தது.
ஒன்று, சுதா கொங்கராவின் கதை, மற்றொன்று சுதா கொங்கரா. ஆனால், இந்த முடிவு குறித்து தற்போது நினைத்து பார்க்கும்போது எந்த கவலையும் இல்லை, மகிழ்ச்சியாகவே இருக்கிறது. என்னை இத்தனை நாட்களாக ஹீரோவாக பார்த்தீர்கள். இனிமேல் வில்லனாக பார்ப்பீர்கள். இப்படித்தான் நான் ஜாலியாக பேசுவேன். இந்த படம் சுயமரியாதையை காப்பாற்றும் படம். நானும் எனது வாழ்க்கையில் எனது சுயமரியாதையை காப்பாற்ற முயற்சி செய்திருக்கிறேன். முதுகில் அடிப்பவர்களை பற்றி எனக்கு கவலை கிடையாது.
எனது கண்ணுக்கு தெரிபவர்களை பற்றித்தான் எனக்கு கவலை. அனைவருக்கும் அண்ணனாக இருந்து சொல்கிறேன், சுயமரியாதையை மட்டும் இழக்கக்கூடாது. இதை மட்டும் மனதில் வைத்துக்கொண்டால், இந்த உலகத்தில் ஒரு நல்ல மனிதனாக வாழ முடியும். இந்த படத்தை எல்லோரும் கொண்டாடுங்கள். பொங்கல் கொண்டாட்டமாக வரும் 10ம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வருகிறது’ என்றார்.
