
பல படங்களில் காவல்துறை அதிகாரியாகவும், தீவிரமான கதாபாத்திரங்களிலும் பார்த்து பழகிய ‘ஆடுகளம்’ கிஷோர், ‘மெல்லிசை’ என்ற படத்தில் உடற்கல்வி ஆசிரியராக நடித்துள்ளார். அன்றாட வாழ்க்கை, அமைதியான கனவுகள், உணர்வுப்பூர்வமான உண்மைகள் ஆகியவற்றை பற்றி ’மெல்லிசை’ பேசுகிறது. படம் குறித்து ‘ஆடுகளம்’ கிஷோர் கூறுகையில், ‘நிறைவேறாத கனவுகள், பொறுப்புகள், நம்பிக்கையுடன் கூடிய சாதாரண வாழ்க்கையை பற்றிய கதையாக ‘மெல்லிசை’ என்னிடம் சொல்லப்பட்டது.
எந்தவித சமரசங்களும் இல்லாமல் கதை நேர்மையாக இருந்தது. வாழ்க்கையுடன் நெருக்கமாக இருக்கும் இந்த கேரக்டரில் நடித்திருப்பது, நான் நடிப்பை ஏன் இவ்வளவு நேசிக்கிறேன் என்பதை எனக்கு நினைவூட்டியது. படக்குழுவினருக்கு நன்றி. அனைவரும் மனப்பூர்வமாக பணியாற்றி இருக்கிறோம் என்பதே இந்த படத்தை இன்னும் ஸ்பெஷலாக்கியது’ என்றார். திரவ் எழுதி இயக்கியுள்ளார். சுபத்ரா ராபர்ட், ஜார்ஜ் மரியன், ஹரீஷ் உத்தமன், தனன்யா, ஜஸ்வந்த் மணிகண்டன், புரோக்டிவ் பிரபாகரன், கண்ணன் பாரதி நடித்துள்ளனர்.
விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட ‘வெப்பம் குளிர் மழை’ படத்தை தயாரித்த ஹேஷ்டேக் எஃப்டிஎஃப்எஸ் புரொடக்ஷன்ஸ், ’மெல்லிசை’ படத்தை தயாரித்திருக்கிறது. சங்கர் ரங்கராஜன் இசை அமைக்க, தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
