×

அருள் நாதர் இயேசு சிலுவையில் மொழிந்த ஏழு அருள்வாக்குகள்

 “தந்தையே இவர்களை மன்னியும் ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை. (லூக்கா 23:34) இயேசு நாதர் தம் முதல் அருள் வாக்கில் மன்னிப்பை பற்றி பேசுகிறார். ஒரு அணுவிலிருந்து அண்டம் உருவானது (Bing Bang Theory) என்று அறிவியல் கூறுகிறது. அதே அறிவியல் கண்டுபிடிப்பான ஒரு அணுகுண்டு இந்த உலகத்தை அழித்து விடுகிறது. மேலும், ஒரு அணு அளவும் மன்னிப்பின் எண்ணம் இருந்தால். இந்த உலகத்தை நம்மால் கோடி கோடி ஆண்டுகள் வாழ வைக்க முடியும். மன்னிப்பு தான் உறவையும் உயிர்களையும் இந்த உலகத்தையும் வாழவைக்கிறது. பொதுவாக தவறு செய்தவருக்கு தண்டனை தான் போதிக்கிறது. அப்படியே மன்னிப்பு போதித்தாலும், அதை ஒரு அளவிற்கே போதிக்கிறது. ஆனால், அருள் நாதர் இயேசு அளவில்லாமல் மன்னிக்கவேண்டும் என்று தம் சீடர் பேதுருவிடம் சொல்கிறார் மன்னித்தல் தான் உறவுகளை கட்டிக் காக்கிறது. குற்றம் பார்பின் சுற்றம் இல்லை. குறிப்பாக, நாம் யாரை அதிகமாக நேசிக்கிறோமோ அவர்களை தான் அதிகமாக மன்னிக்கின்றோம்.

 `நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உனக்குச் சொல்லுகிறேன்’ இயேசுவோடு இருப்பதே பேரின்ப
வீட்டில் இருப்பதாகும் (லூக்கா 23:43).

இப்போது, கிறிஸ்தவர்களிடையே எவ்வாறு பரலோகத்தை பற்றிய சிந்தனை இருக்கிறதோ அதேபோன்று இயேசுவின் நாட்களிலும் பரதீசு பற்றிய சிந்தனை இருந்தது. பரதீசு என்பது ஒரு மகிழ்ச்சியான இடம். சிறப்பாக சொல்ல வேண்டுமென்றால், பரதேசி என்பது ஒரு சிறப்பான நிலை. இயேசு கள்வன் இடமும் நீ என்னோடு சிறப்பான மகிழ்ச்சியான நிலையில் இருப்பாய் என்கிறார். அருள்நாதர் இயேசுவோடு இருப்பதே ஒரு சிறப்பான, மகிழ்ச்சியான நிலை. அதனால்தான், இயேசுவோடு எப்போதும் திரள் கூட்டம் சூழ்ந்து இருந்தது (மத்தேயு 5:1). பெருந்திரளான மக்கள் இயேசுவை சூழ்ந்து கொண்டு இருந்தனர் (லூக்கா 6:17-19). `நீ என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பாய்’ என்ற அருள்வாக்கை கள்வனுக்கு அருளப்பட்ட ஒன்று. அவன் இயேசுவை குற்றமற்றவராக பார்க்கிறான். அடுத்து இயேசுவைக் காட்டிக் கொடுத்த யூதாசும் `பழிபாவம் இல்லாதவரை காட்டிக்கொடுத்து பாவம் செய்தேன்’ என்கிறான். `பரலோகம் அல்லது பரதீசு’ பழிபாவம் இல்லாதோருக்கு அருளப்பட்ட ஒரு சிறப்பான நிலை.

இயேசு தம் தாயிடம் `அம்மா இவரே உம் மகன்’... தம் சீடரிடம் `இவரே உம் தாய்’ என்றார். (யோவான் 19:26-27) அருள்நாதர் ஒரு புதிய குடும்பத்தை சிலுவையிலே சுட்டிக்காட்டுகிறார். வழக்கமாக குடும்பம் என்பது ஒரு வீட்டில் உள்ள தாய், தகப்பன், கணவன், மனைவி, பிள்ளை, தாத்தா பாட்டி போன்ற உறவுகளை கொண்டது. அருள் நாதருக்கு பெற்றோரும், சகோதர சகோதரிகளும் இருந்தனர். அவர் வீட்டின் முதல் மகன். ஆனால், தன் பணி காலத்திலேயே யாவரையும் தன் உறவினராக பாவிக்கிறார். `யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்பது அவருக்கு பொருந்தும். அதிலும், குறிப்பாக அவரை சுற்றி இருந்த இல்லாதோர், கல்லாதோர், சமூகத்தில் ஒதுக்கப்பட்டவர்கள், ஓரங்கட்டப்பட்டவர்களை தன் தாயாக, சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொண்டார் (மாற்கு 3: 31-35). கடவுளின் திருவுள்ளத்தை நிறைவேற்றுபவரே என் சகோதரரும், சகோதரியும், தாயும் ஆவார் என்றார். இறைவார்த்தையைக் கேட்டு அதன்படி செயல்படுபவர்களே என் தாயும் என் சகோதரர்களும் ஆவார்கள் (லூக்கா 8:19-21) என்றார். அருள்நாதர் சொல்லுகிற குடும்பம் ஒரு `புதிய குடும்பம்’. அது ரத்த சம்பந்தமான உறவுகளால் ஆனதல்ல பதிலாக அவரிடம் நம்பிக்கை கொண்டு அவரை ஏற்றுக்கொண்ட ஒவ்வொருவருக்கும் அவர் கடவுளின் பிள்ளையாகும் உரிமையை அளிக்கிற குடும்பம்.
(யோவான் 1:12-13).

மூன்று மணியளவில் இயேசு “ஏலி ஏலி லாமா சபக்தானி?” அதாவது என் இறைவா! என் இறைவா! ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று உரத்த குரலில் கத்தினார் (மத்தேயு 27: 45-46) முதலாவது அருள்நாதர் திருமறையை நன்கு கற்றவர். சிலுவையில் மொழிந்த இந்த அருள்வாக்கு தாவீது அரசனுடையது. (திருப்பாடல் 22:1) தாவீது அரசன் தன் மகன் அப்சலோம் என்பவனால் கடும் கஷ்டத்திற்கு உள்ளானார். இந்த திருமறை பகுதியில் சிலுவையிலே நினைவு கொள்கிறார். தாவீது தான் கைவிடப்பட்ட நிலைக்குப் பின்னர் ஒரு வெற்றி மீண்டுமாய் ஆட்சி. இங்கு சிலுவையில் இயேசு தாவீதின் அந்த துயரத்தை நினைவு கூறுகிறார். நீதிக்காகவும், சமாதானத்திற்காகவும் போராடுகின்ற வேளையில் பல நேரங்களில் நாம் தனித்து விடப்படுவோம் அல்லது இந்த உலகம் விடுதலையாளரை புரட்சி செய்பவர்களை தனிமைப்படுத்தும். இயேசு தம் விடுதலை பயணத்திலே தனித்துவிடப்படுகிற நிலை.
(அருள்வாக்குகள் தொடரும்)

Tags : Lord ,Jesus ,
× RELATED ராம நவமியை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் பக்தர்கள் ஊர்வலம்