பாவங்களை போக்கும் பாபஹரேஸ்வரர்

சென்னையில் இருந்து சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ``அருள் மிகு மரகதவல்லி சமேத பாபஹரேஸ்வரர்’’ சுவாமி திருக்கோயிலாகும். இக்கோயில், திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், வடதில்லை என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. நாங்கள் சென்னையில் இருந்து செல்லும் போது மிகுந்த போக்குவரத்து நெருசல்களும், வாகனத்தின் சத்தம் காதுகளை குடைந்து எடுத்தன. ஆனால், ஊத்துக்கோட்டை அருகில் சென்றவுடன் இடமே அமைதியானது. வாகனமின்றி, சாலைகளின் இருபுறத்திலும் மரங்கள், பச்சை பசேலென்று காட்சி தரும் வயல்வெளிகள், சில்லென்று காற்று இவையனைத்தும் மனதை ஒருநிலைப்படுத்தியது. வடதில்லை கிராமத்திற்கு சென்றடைய பிற்பகல் ஆகிவிட்டது. இருந்தபோதிலும், சற்றும் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. மிக அழகிய கிராமம். அங்கிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில், மாம்பாக்கம் அதாவது, பாபஹரேஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தோம். மிக கம்பீரமான கோபுரங்களுடன் தோற்றமளித்தது கோயில்.

முதலில், பாபஹரேஸ்வரரை தரிசிக்க உள்ளே சென்றோம். பெரிய உருவம் கொண்ட பாபஹரேஸ்வரரை கண்டதும் பக்தி பரவசமடைந்தோம். பாபஹரேஸ்வரர் அருகே, சிறிய அளவிலான சிவலிங்கம் ஒன்றும் இருந்தது. இந்த சிறிய சிவலிங்கத்தை பற்றி பின்வருபவையில் காண்போம். 43 ஆண்டுகளாக கோயிலில் பூஜை செய்யும் சண்முக குருக்கள், மங்கள ஆரத்தி எடுத்து, விபூதி குங்குமம் போன்ற பிரசாதங்களை வழங்கினார். அதன் பிறகு, பாபஹரேஸ்வரர் கோயிலின் சிறப்புகளை பற்றி சண்முக குருக்களிடம் கேட்டறிந்தோம். கோவிந்தபட்டரும் சிவலிங்கமும்: இந்த கோயில், மகான் ராமானுஜர் காலத்தில் கட்டப்பட்டதாகும். ராமானுஜரின் பெரியம்மா மகன் கோவிந்தபட்டர். இவர் வைணவராக இருந்தாலும், இஷ்ட தெய்வமான சிவனின் மீது அதிதீவிர பக்தி கொண்டார். இதன் காரணமாக, சிவபூஜை செய்தும், ஒவ்வொரு சிவஸ்தலங்களுக்கு சென்றும் வழிபாடு செய்துவந்துள்ளார்.

இப்படி ஒருமுறை காசிக்கு சென்றார் கோவிந்தபட்டர். அங்குள்ள கங்கை நதியில் நீராடினார். நீராடி எழுந்தவுடன் அவரின் உள்ளங்கையில் ஒட்டியவாறு சிறியளவிலான சிவலிங்கம் ஒன்று இருந்தது. இதனை கண்டு ஆச்சரியப்பட்ட கோவிந்தபட்டர், உள்ளங்கையில் ஒட்டியிருந்த சிவலிங்கத்தை பலமுறை உதறினார். ஆனால், சிவலிங்கம் அவரின் கையைவிட்டு விலகவில்லை. இதனாலேயே “உள்ளங்கை லிங்கம் கொணர்ந்த நாயனார்’’ என்கின்ற பெயரும் கோவிந்தபட்டருக்கு உண்டு. சிவலிங்கத்தை சிறிது காலம் பூஜை செய்துவந்தார் கோவிந்த பட்டர். அதன் பின், கூடுதலாக வைணவ நிர்வாக பொறுப்புகளை கோவிந்தபட்டருக்கு, ராமானுஜர் வழங்க, அவர் வைத்திருந்த சிவலிங்கத்தை சரிவர பூஜிக்க முடியாமல் போகிறது.

மன்னன் கட்டித்தேவன் யாதவராயன்: ஆதலால், `கட்டித்தேவன் யாதவராயன்’ என்னும் சோழ மன்னனை தொடர்புக்கொண்டு விவரங்களை மன்னனிடம் தெரிவித்து, தான் வைத்திருந்த சிறிய அளவிலான  சிவலிங்கத்தை வழங்கி, கோயில் ஒன்றை கட்ட வேண்டினார். அதன் படி மன்னன், கோவிந்தபட்டர் வழங்கிய சிறிய சிவலிங்கத்தோடு ஒரு பெரிய சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்கிறார். இதுவே இக்கோயில் உருவான காரணமாகும். சுமார் 1000 ஆண்டுகளாக சிதிலமடைந்துள்ள இந்த ஆலயத்தின் மூலவர், அருள் மிகு பாபஹரேஸ்வரர். இவரை ஒரு முறை தரிசித்தாலே நம் பாவங்கள் எல்லாம் நீங்கும் என்பது ஐதீகம். மேலும், இங்கு விசேஷமாக கோயிலின் உள்ளே அஷ்ட கைகளை (எட்டு) கொண்ட பைரவர் இருக்கிறார். மரகதவல்லி என்னும் தாயார் சந்நதி உள்ளது. வெளிப்பிரகாரத்தில் விநாயகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை, மஹாவிஷ்ணு, பால முருகன், என தனித்தனியே சந்நதிகள் உள்ளன. இவ்வாலயத்தின் தல விருட்சமாக வில்வ மரம் உள்ளது.

பக்தர்களுக்கு அருளிய பாபஹரேஸ்வரர்: ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், மீள முடியாத கடன் பிரச்னைகளில் இருந்துள்ளார். இதனால், கண்ணீருடன் பாபஹரேஸ்வரரை அனுதினமும் தரிசித்து தனது துயரங்களை நீக்க வேண்டினார். சிறிது நாட்களிலே அவரின் வேண்டுதலின் படி கடன் பிரச்னை தீர்ந்து, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு மாறியிருக்கிறார். அதே போல், திருமணமாகாத பலரும் பாபஹரேஸ்வரரை வேண்டிக்கொள்கிறார்கள். அவர்களுக்கு மிக விரைவாகவே திருமணம் கைகூடி, திருமணம் நடைபெறுகிறது. திருமணம் நடந்த பின்னர் திருமணக்கோலத்துலேயே வந்து பாபஹரேஸ்வரரை தரிசித்து செல்கிறார்கள்.

விசேஷ பூஜைகள்: சிவராத்திரி அன்று நான்கு கால பூஜைகள் நடைபெறுகின்றன. முதல்காலமாக காலை 6.00 மணி முதல் 9.00 மணிவரை பஞ்சகவி அபிஷேகம் செய்யப்படுகிறது. இந்த அபிஷேகமானது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது. அபிஷேகம் முடிந்த பின், பாபஹரேஸ்வர ருக்கு வெண்பொங்கல் நைவேத்தியம் செய்யப் படுகிறது. இரண்டாம் காலமாக காலை 9.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை பஞ்சாமிர்தம் அபிஷேகம் செய்யப்படுகிறது. அடுத்ததாக மூன்றாம் காலத்தில், பிற்பகல் 12.00 மணி முதல் 3.00 மணி வரை, 108 முறை சங்கினால் தேனாபிஷேகம் செய்யப்படுகிறது. கடைசியாக, நான்காம் காலத்தில் பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை கருப்பஞ்சாறு அபிஷேகம் செய்யப்படுகிறது. அப்பொழுது நைவேத்தியமாக சக்கரைப்பொங்கல் செய்யப்படுகிறது. அதே போல், கார்த்திகை சோமவாரம்(திங்கள்கிழமை) இக்கோயிலில் விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், கார்த்திகை தீபம், ஐப்பசி மாதத்தில் அன்னாபிஷேகம், ஐப்பசி பவுர்ணமி போன்ற விசேஷ தினங்களில் சிறப்பு பூஜைகளும், அலங்காரங்களும் நடைபெறுகின்றன.

இன்னும் நான்கு மாதத்திற்குள் சிதிலமடைந்துள்ள இடத்தை சரிசெய்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் எனவும், அதற்கு பக்தர்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்யுமாறும் சண்முக குருக்கள் (9445296096) கேட்டுக் கொண்டார்.

Related Stories: