ஸ்ரீ ராமனின் ஜாதகம் சொல்லும் உண்மைகள்-ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ  ராமனின் ஜாதகம் பூஜை அறையில் வைத்து பலரும் வழிபடுகிறோம். பொதுவாகவே “தெய்வங்களுக்கு ஜாதகமா?” என்று கேட்கலாம். அவர்கள் இந்த கர்ம பூமியில் அவதாரம் எடுத்த நாள், நட்சத்திரங்களைக் கொண்டாடுகிறோம் அல்லவா? அந்த நாளின் கிரக நிலைகளையும் ரிஷிகள் கொடுத்திருக்கிறார்கள். ராமன் பிறந்த நேரத்தை வால்மீகி பகவான் வெகு விரிவாகச் சொல்லியிருக்கிறார். ராம அவதாரத்தில், என்னென்ன காரியங்கள் நடக்க வேண்டுமோ, எப்படி நடக்க வேண்டுமோ, அதற்கு  தகுந்த மாதிரியான கிரக சேர்க்கைகள் இருக்க வேண்டும் என்பதற்காகவும், ஜாதக அமைப்பினைக் கொடுத்திருக்கிறார்கள்.

வால்மீகி கொடுத்த ஜாதக விளக்கம்.“சைத்ர நாவாமிகே திதௌ” என்று சித்திரை மாதம் நவமி திதி என்று காட்டுகிறார். அடுத்த ஸ்லோகத்தில் என்ன நட்சத்திரம் என்பதை “நட்ஷத்ரே அதிதி தேவஸு” என்று அதிதியின் நட்சத்திரமான புனர்வசு என்று குறிப்பிடுகிறார். ``கிரகேஷு கற்கடக லக்னே” என்று கடக லக்னத்தில் சகல லோக நாதனும், சகல சுப லட்ஷணங்கள் பொருந்தியவனும், மகாவிஷ்ணுவின் அவதாரமாகிய ராமன் என்ற புத்திர ரத்தினத்தை கோசலை பெற்றார் என்று ஸ்லோகம் செய்தார் ஆதிகவி வால்மீகி. அப்பொழுது சூரியனும் அங்காரகனும் குருவும் சுக்கிரனும் சனியும் தங்கள் உச்ச வீடுகளில் இருந்தனர். குருவும் சந்திரனும் கூடிப் பிரகாசித்தார்கள் என்று மிக விளக்கமாக ஸ்ரீ  ராமன் ஜாதகக் குறிப்புகளை விளக்குகிறார் வால்மீகி.

கம்பன் காட்டும் ஜாதகம்

கம்பனும், ராம அவதாரம் நிகழ்ந்த நாளின்

கோள்களைப் பற்றிய குறிப்புகளைக் கொடுத்திருக்கின்றார்.

ஆயிடை, பருவம் வந்து அடைந்த எல்லையின்,

மா இரு மண்மகள் மகிழ்வின் ஓங்கிட,

வேய் புனர்பூசமும், விண்ணுளோர்களும்,

தூய கற்கடகமும், எழுந்து துள்ளவே,

மேடம் ஆம் மதி; திதி நவமி; மீன் கழை;

நீடு உறு மாலை கற்கடகம்; நீதி சேர்

ஓடை மா களிறு அனான் உதய ராசி கோள்

நாடின். ஏகாதசர் நால்வர் உச்சரே.

(ஓடை - நெற்றிப் பட்டம்; களிறு அனான் - யானை போன்றவன் இராமன்); உதயம் - இலக்கினம் (கடகம்); மதி மேடம் - திங்கள்சித்திரை; மீன் - நட்சத்திரம்; கழை - புனர் பூசம்; மால் - புதன்;  ஐ - பத்தாமிடம்; கோள் - கிரகங்கள்; நால்வர் - செவ்வாய். குரு, சுக்கிரன், சனி, ஜென்ம இலக்கினத்திலிருந்து பதினொன்றுக்குரியவர் நால்வரும்  தங்களது உச்ச வீடுகளான நான்கில்

இருந்தனர் என்பது கருத்து.

பகவானுடைய ஜாதகத்தை பலன் பார்க்க முடியுமா?

பகவானுடைய ஜாதகத்தை வைத்துக் கொண்டு பலன் பார்க்க முடியுமா என்று அடுத்த கேள்வி. இது பலன் பார்ப்பதல்ல. இராமாயணம் என்பது ஒரு சாஸ்திரம். ஜோதிடம் என்பது ஒரு சாஸ்திரம். இரண்டும் வேத சம்பந்தமானது. இரண்டு சாஸ்திரங்களும் எப்படி ஒன்றுக் கொன்று அனுசரணையாக இணைந்திருக்கின்றன என்பதை சுவாரஸ்யமாக தெரிந்து கொள்வதற்காகத்தான் இதை விளக்கமாக பார்க்கிறோம். இன்னொரு கேள்வி இருக்கிறது. ஒன்று இப்படித்தான் நடக்கும் என்று சொன்னால், நாம் பகவானை வணங்கி பிரார்த்தனை செய்வதன் மூலமாக மட்டும் அந்தக்காரியம் எப்படி மாறிவிடும்?

நம் ஜாதகமும் அவதார புருஷர்கள் ஜாதகமும் இதற்கு நுட்பமான ஒரு விடை ஒன்று இருக்கிறது. அவர்களுக்கும் நமக்கும் உள்ள வேறுபாட்டினைத் தெரிந்து கொள்ள வேண்டும். பகவான் மற்றும் அவதார புருஷர்கள் தோன்றுகிறார்கள். நாம் பிறக்கிறோம். நமக்கும் ஜாதக நிலைகள் இருக்கின்றன. அவர்களுக்கும் இருக்கின்றன. ஆனால், இவை இரண்டுக்கும் வேறுபாடு உண்டு. அவன் பரமாத்மா.

தன்னுடைய நோக்கத்திற்காகவே இப்படியெல்லாம் கிரக நிலைகள் இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானித்து ஆணை இட்டு, அந்த கிரகங்கள் அப்படியே நின்று, அந்தந்த காரியங்களைச் செய்வதற்கு உதவி செய்கின்றன. ஆனால் நம்முடைய ஜாதகத்தைத் தீர்மானிப்பது நம்முடைய “கர்மா”. அதைத்தான் அர்ஜுனனிடம் பெருமான் கீதையில் சொல்கிறார்.  “நீயும் பிறக்கிறாய். நானும் பிறக்கின்றேன். உன்னுடைய பழைய பிறவிகள் குறித்து உனக்குத் தெரியாது. ஆனால், நான் எந்தந்தப்  பிறவியில் எப்படி எல்லாம் பிறந்தேன் என்பதெல்லாம் எனக்குத் தெரியும்” என்று சொல்லி, `` நீ உன் வினைகளினால் பிறக்கிறாய். உன் வினைகளை நீக்க கருணையினால் நான் அவதரிக்கிறேன்” என்கிறார்.

தோஷம் விலகுமா?

ஒரு அரசன் தன்னுடைய ராஜ்யத்தில் சில விதிகளை விதிக்கிறான் என்று சொன்னால், முதலில் அந்த விதிகளை தவறாமல், அந்த ராஜா கடை பிடிப்பான். அவன் வகுத்த விதியை அவன் மீற மாட்டான். மற்றவர்களையும் மீற விட மாட்டான். அப்படியானால், நம்முடைய பிரார்த்தனையை பலிக்குமா என்று சொன்னால், அவனுக்குள்ள கருணையினாலும், கிரக தோஷங்களை நிறுத்தும் வல்லமையினாலும் (supreme power), நம்முடைய தகுதியின் அடிப்படையில் (faith and trust) நடக்கும்.

ஒருவருக்கு மரண தண்டனையே கிடைத்துவிடுகிறது. அந்த மரண தண்டனையிலிருந்து விடுவிக்க கூடிய ஒரு சக்தியானது குடியரசுத் தலைவருக்கு இருக்கிறதல்லவா? அதைப்போல், பரம்பொருளாகிய பகவானுக்கு ஒருவருடைய ஜாதக விதிகளை மாற்றி அமைப்பதற்கு அல்லது அந்த பலன்களைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் இருப்பதால்தான், நாம் ஆலயங்களுக்குச் சென்று அவனிடத்தில் சரணம் அடைகின்றோம். விதிகளை திருத்தி, சிறப்பு அரசாணைகள் (special GO) வெளியிடப்படுவது போல், பிரார்த்தனையால் கிரக நிலைகளுக்கான பலன்கள் கூட மாறுவதும் உண்டு. அதனால்தான் ஸ்ரீ  ராமனின் ஜாதகத்தையும் பூஜை அறையில் வைத்து வழிபடுகின்றார்கள். அதன் மூலமாக நம்முடைய கோள் நிலைகள் நம்மை பாதிப்பதில்லை என்பது நம்பிக்கை.

ஸ்ரீ ராமரின் ஜாதக யோகங்கள்

இனி சாஸ்திரப்படி ஸ்ரீ ராமரின் ஜாதக யோகங்களைப் பார்ப்போம்.

1. குரு, செவ்வாய், சூரியன், சனி,

சுக்கிரன் என 5 கிரகங்கள் உச்ச நிலை.

2. குருவும் செவ்வாய்யும் 1,7 என

இருப்பதால் குரு மங்கள யோகம்.

 3. சந்திரனும் செவ்வாயும் 1,7 என

இருப்பதால் சந்திர மங்கள யோகம்.

4. குருவும் சந்திரனும் சேர்ந்து

இருப்பதால் குரு சந்திர யோகம்.

இப்படியெல்லாம் இருந்ததால், அவருக்கு மன உறுதி அதிகம் இருந்தது. பகைவரை வெல்லும் உறுதி வைராக்கியம் இருந்தது. இன்னும் ஒரு விஷயம். பொதுவாக இத்தனை கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் உச்சமடைய கூடாது. ஆயினும் சில விஷேச காரியங்கள் செய்ய பகவானின் அவதாரம் என்பதால் சிறப்பு நிலைகளாக இந்த உச்ச கிரகங்கள்  செயல்பட்டன.

தசரதனும் ராமனும்

1. ராமனின் ஜாதகப்படி தந்தை தசரதன் கடக லக்னத்திற்கு ஒன்பதாவது லக்னமான மீன லக்னத்திற்கு உரியவன்.

2. மீனத்தில் சுக்கிரன் உச்சம்பெற்று இருக்கின்றார். சுக்கிரன் மனைவிக்கு உரிய கிரகம் என்பதால், அது லக்னத்தில் உச்சம் பெற்று இருப்பது மனைவியிடம் கொண்ட அன்பை விவரிப்பது.

3. அந்த சுக்கிரன் மீனத்திற்கு 3,8க்குடையவர் ஆக இருப்பதால், மனைவி மீது கொண்ட பாசம், தசரதனுடைய ஆயுளை முடிப்பதற்கு ஒரு காரணமாக மாறியது.

4. ஐந்தாம் இடத்தில், புத்திர ஸ்தானாதிபதி குரு உச்சம் பெற்று இருக்கிறார். கூட, 5க்குரிய சந்திரன் 5ல் இருப்பது “காரகோ பாவ நாஸ்தி” என்பது போல் சந்தான விருத்திக்கு தடையாக  இருந்தது. அதனால், வெகுகாலம் அவருக்கு பிள்ளை இல்லாமல் இருந்து, பிறகு குருவினுடைய ஆலோசனையால் புத்திர காமேஷ்டி யாகம் செய்து, ஸ்ரீ மன் நாராயணனே பிள்ளையாக அமையக்கூடிய வாய்ப்பு பெற்றான்.

5. 5 ஆம் இடத்தில் குரு சந்திரன் சேர்ந்து இருப்பதால், அழகானவனும் கீர்த்தி உடையவனுமான ராமனை பிள்ளையாக அடைந்தான்.

6. சந்திரன் குருவோடு இணைந்து 9 ஆம் பார்வையாக மீன லக்னத்தைப் பார்ப்பதால் ராமருடைய பரிபூரணமான அன்பு தசரதனுக்கு கிடைத்தது. ராமன் இல்லாவிட்டால் தான் உயிர் வாழ முடியாது என்கிற நிலையிலேயே தசரதன் இருப்பதற்கு இவை தான் காரணம்.

ஸ்ரீ  ராமனின் அழகும் குணங்களும்

1. சாக்ஷாத் பகவானே கடக லக்னத்தில், கடக ராசியில் குருவின் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்தார்.  கடக ராசியில் சந்திரன் ஆட்சி, குரு உச்சம் பெற்று இருக்கிறார். சூரியனும் புதனும் சேர்ந்திருப்பது நுண் கலைகளில் நுண் படிப்புகளில் வித்தகத்தை தரும் புதஆதித்திய யோகமாகும்.

2. ``ஆடவர் பெண்மையை அவாவும் தோளினாய்’’ என்று கம்பன் வர்ணனைக்கு ஏற்ப, அழியா அழகுடன் ராமன் விளங்கினான் என்பதை அந்த ராசியில் இருக்கக்கூடிய இரண்டு ஒளி கிரகங்களும் காட்டுகின்றன.

3. தனுசு ராசிக்கு உரிய குரு, சந்திரனோடு இணைந்து யோகம் பெற்று இருப்பதால் ராமச்சந்திரன் என்கின்ற பெயர் அமைந்தது.

4. சந்திரனைப் போல் அனைவரையும் ஈர்க்கக்கூடிய அழகு இருந்ததால் வால்மீகி, ``சந்திரகாந்தானனம்  ராமம்” என்று குறிப்பிடுகிறார். ஆகர்ஷண அழகு, பிரமிக்கச் செய்பவன் ராமன். (ரம இதி த ராம)

 5. வெற்றி ஸ்தானமாகிய 6ல் ராகு (தனுசு) அமைந்திருப்பதால், தனுர் வித்தையில் கரை கண்டவர். கோதண்டபாணி, வெற்றிச்செல்வன், எதிரிகளை நடுங்க வைப்பவன்.

6. திருமங்கையாழ்வார் இவன் வீரத்தை, சிலை வளைத்து சர மழை பொழிந்த அழகைக் காட்டுகின்றார். “வெந்நகரம் சேரா வகையே சிலை குனித்தான்” என்பது திருமங்கை யாழ்வார் பாசுரத்தில் ஒருவரி.

7. கரதூஷண வதத்திலே, ராமன் தனி ஆளாக வில்லேந்தி போர் புரிகின்ற காட்சி. அசுரர்கள் அங்குமிங்கும் ஓடி மாண்டனர். ஆனால், ராமன் அம்பு பட்டு அவர்கள் நரகத்திற்கு போக வில்லை என்பதுபோல் திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். இப்படி, ரிஷிகளையும் மற்றவர்களையும் நாசம் செய்த அரக்கர்கள் நரகம் சேரவில்லை என்பது பொருந்துமா என்று கேட்ட போது பராசர பட்டர் சொன்னார். இராமனுடைய அம்பு பட்ட பிறகு, ஒருவருக்கு நரகம் இல்லை.

இரண்டாவது கருத்து ராமருடைய  அம்புகள் வருகின்ற வேகத்திலும், அது எதிரியை குத்தி கிழித்துச் சாய்க்கும் கோரத்தையும் கண்டவர்கள் “ இனி இதற்கு மேலும் ஒரு நரகம் வேண்டுமா”? என்று நினைத்து அஞ்சி நடுங்கி, அந்த நரகத்தில் அனுபவிக்கக்கூடிய வேதனைகளை எல்லாம் இங்கேயே அனுபவித்தனர் என்பதால், இனி இவர்கள் இதற்கு மேல் அனுபவிக்கக்கூடிய நரகத்தை அடைவதால் ஒரு பிரயோஜனமும் இல்லை என்பதுபோல் குறிப்பிட்டார்.

சீதையின் அழகும் குணமும்

1. 7ல் செவ்வாய். அதை குருவும் சந்திரனும் பார்ப்பதால் அழகான மனைவி கிடைத்தாள்.

2. செவ்வாய் பூமிகாரகன். 7ம் ராசி நில ராசி. எனவே பூதேவியின் அம்சமான சீதை மனைவியாக அமைந்தாள்.

3. என்னதான் அற்புதமான மனைவி அமைந்தாலும், பகவான் ஸ்ரீ  ராமச்சந்திரமூர்த்தி பட்ட கஷ்டங்கள் அதிகம். சுக்கிரனும் செவ்வாயும் உச்சம் பெற்று இருப்பதால் மனதிற்கு ஏற்ற கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் அமைந்தனர். இருவரையும் குரு பார்க்கிறார்.

4. கடகத்துக்கு 5ம் இட செவ்வாய் 7ல் அமைந்தார். இதை கம்பன் போகமும் யோகமும் ஒத்தார் என்று பாடுவார்.

5. தந்தையின் ராசியில் மனைவியாகிய சுக்கிர கிரகம் அமைந்ததால் தசரதனுக்கு மிகவும் பிடித்த மருமகளாக சீதை அமைந்திருப்பதை நாம் அறிய முடியும்.

6. சீதை, எப்பொழுதுமே தான் ஜனகன் மகள் என்பதைவிட, தசரதனின் மருமகள் என்று சொல்வதையே வழக்கமாக கொண்டிருந்தாள்  என்பதை ராமாயண நிகழ்வுகள் மூலம் அறியலாம்.

ஏன் பிரிவு?

1. ஆனால், நன்மையிலும் தீமை உண்டு. இங்கே சப்தம ஸ்தானத்தில் செவ்வாய் அமைந்திருந்தது அமைந்திருப்பது  ஒரு வகையான தோஷம்தான். என்னதான் செவ்வாய் தோஷத்துக்கு விதிவிலக்கு அளிக்கப் பட்டு  இருந் தாலும்கூட, அந்த தோஷமானது வேலை செய்கிறது என்பதை ராமாயணத்தில் நாம் காண்கின்றோம்.

2. ஏழாமிடத்தில் இருக்கக்கூடிய உச்ச செவ்வாய் பிரிவையும் கஷ்டத்தையும் தருகின்றது. ஆனால் அதற்கு அது மட்டும் காரணம் அல்ல.

3. ராமன் சீதையை மணந்து சில நாட்களிலேயே காட்டிற்குச் செல்லக்கூடிய ஒரு துன்பம் நேர்கிறது. அங்கே கணவன் மனைவி இருவருமே “காயோடு நீடு கனியுண்டு வியன் கான மரத்தின் நீழல் கல்லணை மேல் கண் துயின்று ”என்று ஆழ்வார் பாடியபடி, மரவுரி தரித்து காய்கனிகளை உண்டு வாழக் கூடிய ஒரு நிலையை அடைகின்றார்கள். திருமணத்திற்கு பின் தம்பதிகளுக்கு நேர்ந்த துன்பம் இது.

4. இந்த அவயோகம் ஏன் ஏற்பட்டது? ஏன் சுகம் கேட்டது?  என்று சொன்னால், 7-க்குடைய சனி 4-ஆம் இடத்தில் உச்சம்பெற்றது  ஒரு காரணம்.

5. அந்தச்  சனியை, தந்தை கிரகமான சூரியன் பார்த்ததும் ஒரு காரணம்.

ஆஞ்சநேயர்

1. ராமனுக்கு மிகுந்த பலவானாக, ஒரு சிறந்த தொண்டனாக அமைந்தவர் தான் ஆஞ்சநேய பகவான். அவர் மேஷ லக்னக்காரர். மூல நட்சத்திரக்காரர்.மேஷ செவ்வாய் மகரத்தில் இருக்க, மூல நட்சத்திர ராசியின் அதிபதி குரு, கடகத்தில் இருந்து பார்க்க, பலமான தொடர்பு ஏற்படுகிறது.

2. ஆஞ்சநேயர்  லக்னம் மேஷ லக்னம். மேஷ லக்னம் என்பது கடக லக்னத்திற்கு பத்தாவது அதாவது காரிய ஸ்தானமாக கர்ம ஸ்தானமாக  வருகிறது.அந்த 10-க்குரிய செவ்வாய், ஏழில் இருப்பது ஒரு பலம் பொருந்திய ராமனின் தொண்டனைக் காட்டுகின்றது.

3. ஆறு என்பது வேலையாட்கள் என்று எடுத்துக் கொள்ளலாம். அடுத்து 7-க்குடைய சனி வேலைக்காரர்களை குறிப்பிடுவதாக எடுத்துக்கொண்டால்  மிகச்சிறந்த தொண்டனாக அனுமன் அமைந்ததையும் காணமுடியும்.

இராவணனின் பகை

1. ராமன் பிறக்கும் பொழுதே ஒரு நோக்கத்திற்காக பிறந்தவன். 6-க்குடைய குரு பகையைக் குறிப்பது. குரு என்பது அந்தணனைக்  குறிக்கும். ராவணன் புலஸ்திய

மகரிஷியின் பேரன்.

2. பிரம்மா தன் மனதால் நினைத்த போது தோன்றிய புதல்வர்களில் புலஸ் தியரும் ஒருவர். ஏழு முனிவர்களில், ஒருவரும், பத்து பிரஜாபதிகளில் ஒருவரான புலஸ்திய முனிவரின் மகனான  விஸ்ரவ முனிவருக்கும் - அரக்கர் குல தலைவர் சுமாலியின் மகள் கைகேசிக்கும் பிறந்தவர்களே இராவணன், கும்பகர்ணன், வீடணன் மற்றும் சூர்ப்பனகை ஆவார்.

3. 6ம் ஆதி குரு லக்னத்தில் வலிமை பெற்றதால்  வர பலம் மிகுந்த ஒரு பகையைப்  பெற்றார். அதுமட்டுமில்லை. அந்த ஆறாம் ஆதி, ஏழாம் இடத்துக்குரிய செவ்வாயைப்   பார்ப்பதால், ராமனுடைய மனைவியை, பூமித் தாய் சீதாதேவியைக்  கவர்ந்து சென்றான்.

4. ஏழாம் இடத்திற்குரிய சனி, மூன்றாம் பார்வையால் 6-ஆம் இடத்தைப் பார்ப்பதால், ராவணனுக்கு, சீதையை கவரக்கூடிய ஒரு கெட்ட புத்தி ஏற்பட்டது. அதுவே அவருடைய அழிவுக்குக் காரணமாக மாறியது. இதில் இன்னொரு விஷயமும் உண்டு.

5. சனி பார்ப்பதால் 6ம் இட  வலிமை  குறைந்து போனது. இராவணன்  நவகிரகங்களையும் படிக்கட்டுகளாக போட்டுக் கொண்டிருந்தான். அப்பொழுது கவிழ்ந்து படுத்திருந்த சனியை  அவன் மார்பின் மீது ஏறிச்செல்ல வேண்டும் என்பதற்காக, புரட்டிப் போட்டான். அப்போது சனி  சற்று தாழ்  பார்வையாக(3ம் பார்வை) ராவணனை பார்த்ததால் (6ம் இடத்தையும்  10ம் இட குருவையும்) இராவணன் அழிந்தான்.

இப்படித்  தொட்ட இடமெல்லாம் சாஸ்திர ரீதியான ஜாதகத்தின் பலன்கள் ஸ்ரீ ராமனுடைய ஜாதகத்திலே இருப்பதை நாம் அனுபவிப்போம். மகிமை வாய்ந்த இந்த ராமர் ஜாதகத்தை பூஜை இடத்தில் எழுந்தருளப் பண்ணி தினமும் பக்தி சிரத்தையுடன் ஆராதித்து வரவேண்டும்.

இந்தப் புனிதமான ராமர் ஜாதகத்தை பூஜிப்பவர்களுக்கும் வைத்திருப்பவர்களுக்கும் ஜாதகரீதியாக இருக்கும் நவக்கிரக தோஷங்கள் விலகுவதுடன் சகல விதமான பிணிகளும் நீங்கும். மேலும் ஐஸ்வர்ய அபிவிருத்தியும் ஆயுள் அபிவிருத்தியும் ரகுகுல நாயகனின் அருளால் உண்டாகும்.ஸ்ரீ  ராமர் ஜாதகத்தை பார்த்தல் புண்ணியம்! ஸ்ரீ  ராமர் ஜாதகத்தை வணங்குதல் பெரும்  புண்ணியம்!!

 நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Related Stories: