சிம்ம ராசி ஆண் - ஸ்டைல் கிங் - ஆட்ட நாயகன்

என்னோட  ராசி  நல்ல  ராசி

சிம்ம ராசி / சிம்ம லக்கினத்தில் பிறந்தவர் , ஜூலை 15க்கு மேல்  ஆகஸ்ட் 15 க்குள் அல்லது ஆவணி மாதம் பிறந்த ஆண்கள் பெரும்பாலும் இப்பண்புகளுடன் இருப்பார்.

தோற்றமும் இயல்பும்

ஏழையோ பணக்காரரோ யாராக இருந்தாலும் சிம்மராசி ஆண்களுக்கு தலைமுடி அதிகமாகவும்  அடர்த்தியாகவும் இருக்கும்.  முறுக்குமீசை வைத்திருப்பர். தாடி வைக்க விரும்புவதில்லை. சுத்தமாக ஸ்டைலாக உடை உடுத்துவார். சட்டையை ‘டக் இன்’ செய்வார். தேவைப்பட்டால் கோட் சூட் மாட்டி கம்பீரமாக காட்சி அளிப்பார். இஸ்திரி போடாமல் இவர்கள் சட்டை போடுவதில்லை.  செருப்பு ஷு போடுவதில் மிகுந்த கவனம் செலுத்துவர்.  அரைக்கை சட்டை விரும்புவதில்லை. முழுக்கை  சட்டை ‘கஃப்சில்’ பட்டன் மாட்டி போடுவர். கையை மடித்து விடும் பழக்கம் இல்லாதவர்கள். அப்படி மடித்து விட்டால் முண்டா தெரியும் வகையில்  ‘மசில்’  காட்டுவர்.

காலர் வைத்த டைட்டான டி ஷர்ட் அணிவர். அடிக்கடி தலை முடியைக்  கோதி விடுவர். நெற்றியில் முடி சுருண்டு விழும். லூசான சட்டை பழைய சட்டை பூ போட்ட லேடிஸ் கலர் சட்டைகள் அணிவதில்லை. பார்ப்பவர்கள் ‘நல்லா நீட்டாக டிரஸ் செய்திருக்கிறாரே’ என்று பாராட்டும்படி தோற்றம் அளிப்பார். சிம்ம ராசி ஆண்கள் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் எல்லோரும் தன்னைப் பார்க்கின்றனரா என்பதில் கவனமாக இருப்பார்கள். மற்றவர்களின் கவனத்தில் ஈர்ப்பதில் வல்லவர்கள். குரலை உயர்த்திப்[ பேசும் பழக்கம் இல்லாதவர். அமைதியாக அனால் உறுதியான குரலில் பேசி ஆணையிடுவர். இவர்களின் வார்த்தை அனைத்தும் முத்தாய்ப்பான கருத்துகள் அல்லது கட்டளைகள்.  

திருவாய்க்கு மறுவாய் ஏது என்ற பழமொழிக்கு உரியவர்கள். இவர்கள் பேச்சுக்கு மறு பேச்சு என்பது எங்கும் இருக்காது. அப்படி எதிர்த்துப் பேசினால் கேட்டுக்கொண்டு போகமாட்டார்கள். உடனடியாக அவர்கள் பேச்சு அர்த்தமற்றது என்பதை அந்த இடத்திலேயே நிரூபித்துவிடுவர். யாராக இருந்தாலும் தமது கருத்தை துணிவோடும் பணிவோடும் முன் வைப்பர். நிறைய விஷயம் தேர்ந்தவர்கள் .தெரியாத விஷயத்தைப் பற்றி கண்டுகொள்வது கிடையாது. ஆனால் பின்பு அதைப் பற்றி தெரிந்துகொண்டு இன்னொரு சந்தர்ப்பத்தில் அழகாக எடுத்துரைப்பர். எனக்குத் தெரியாது என்னால் முடியாது என்று சொல்வதில்லை. சவாலை எடுத்து முடித்துக் காட்டுவதில் வல்லவர்கள்

உணவு

சிம்மராசி ஆண்ருசியான உணவு உண்பதில் [lion’s share] விருப்பம் உடையவர். பழைய உணவை சாப்பிட விரும்ப மாட்டார்கள். கூழோ கஞ்சியோ  வெந்ததை சாப்பிட்டு விதி வந்தால் சாவோம் என்ற புலம்பல் இவர்களிடம் கிடையாது. தெருவில் நின்று கடையில் விற்கும் கூழ் குடித்தால் கூட அதற்கு அங்கு வைத்திருக்கும் அத்தனை சைட் டிஷ்ஷையும் ஒரு மடக்குக்கு ஒன்றாக எடுத்து சாப்பிடுவர். ஒவ்வொரு வேளை உணவும் இவருக்கு விருந்துதான்.

சுடச்சுட சுவையாக சமைத்துத் தர வேண்டும் என்று விரும்புவர். சிம்ம ராசிக்காரர் தாய்ப்பாசம் மிக்கவர்கள் இவர்களின் தாயார் நல்ல ருசியாக சமைத்துத் தருவர். தாரமும் சமையலில் அப்படியே இருக்க வேண்டும் என்று விரும்புவர். சமையல் தெரியாத மனைவிக்கும் பயிற்சி அளித்து  தேற்றிகொண்டு வந்துவிடுவர். சுவையாக சமைக்கத் தெரியாத  சுத்தமாக வீட்டை வைக்க தெரியாத, அழகாக பரிமாறத் தெரியாத மனைவியை விவாகரத்துச் செய்துவிடுவர். சுத்தம் சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவர்.

சுற்றுப்புறம்

சிம்ம ராசிக்காரர் வீட்டின் அளவு முக்கியமல்ல சிறிய வீடாக இருந்தாலும் வெகு நேர்த்தியாக அழகாக இருக்கும். உயர் அந்தஸ்துக்கு உரியவை அனைத்தும் அங்குக் காணப்படும். சிறிய வீட்டிலும் சாமி படம், அலங்காரப் பொருட்கள், புத்தகங்கள் சுவர் அலங்காரம், பத்திரிகை  போன்றவை ஒன்றாவது இருக்கும். பெரிய வீடு களில் வகை வகையாக வைப்பார். பொதுவாக இவர்களுக்கு தோட்டம் வைத்து பராமரிப்பதில் ஆர்வம் இருக்காது. கையில் அழுக்குப்படும் வேலைகளை இவர்கள் செய்ய விரும்புவதில்லை. இவர்கள் குடியிருக்கும் பகுதியில் ஏதேனும் சுகாதாரப் பிரச்னை வந்தால் உடனே சம்பந்தப்பட்ட அதிகாரியை அணுகி அதை தீர்த்து வைப்பார். சுத்தம் சுவை இவரது இரண்டு கண்கள்

பழக்க வழக்கம்

 சிம்ம ராசிக்காரர் நல்ல நட்புணர்வு உடையவர். நண்பருக்கும் உறவினருக்கும் உதவிகளை தானே முன் வந்து செய்வார். அதிகம் உணர்ச்சி வசப்படுவதில்லை. ஆனால் இவரை யாராவது மட்டம் தட்டி பேசினால் பொறுத்துக்கொள்ள மாட்டார். கடுமையாக திட்டி விடுவார். அவரை எல்லோரும் கொண்டாடவேண்டும் என்று ஆசைப் படுவார். அவரது அழகை, திறமையை, கலை நுட்பத்தை யாராவது பாராட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

அதே சமயம் அவரது எதிரிகளை அவர்கள் ஏசிக்கொண்டும் நக்கலடித்துக்கொண்டும் இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார். இவர் தன் வாயால் யாரையும் ஏசிப் பேச மாட்டார். நையாண்டி நக்கல் செய்ய மாட்டார். யாராவது அப்படி பேசினால் ரசித்து மகிழ்ந்து புளகாங்கிதம் அடைந்து வாய்விட்டுச் சிரிப்பார். தர்மப் பிறப்பு. யார் உதவி கேட்டாலும் செய்வார். உங்களை நம்பித் தான் வந்தேன் என்று சொல்லிவிட்டால் கையில் இருப்பதைத் தூக்கி கொடுத்து விடுவார். புகழ்ச்சிக்கும் முகஸ்துதிக்கும் மயங்குவார்.

காதல் - கல்யாணம்

சிங்கம் காட்டிலும் ராஜா, வீட்டிலும் ராஜா. காதல் நிறைவேற ஆண்டுக்கணக்கில் கூட காத்திருக்கும் சிம்ம ராசி ஆண் கல்யாணம் ஆனதும் வேறு மாதிரி இருப்பார். பெரும்பாலும் சிம்ம ராசிக்காரகளுக்கு கல்யாணம் வெற்றிகரமாக அமைவதில்லை. காரணம் அவர்களின் சட்ட திட்டங்களுக்கும் அதிகாரப் போக்குக்கும் அடிபணியும் பெண்கள் கிடைப்பதில்லை. காதலில் தாராளம் காட்டும் சிம்ம ராசி ஆண் கல்யாணம் முடிந்ததும் பல கட்டுப்பாடுகளை விதிப்பார். அழகான விஷயங்களை காதலிக்கு பரிசுகளாக கொடுப்பதில் சிம்மராசி ஆணுக்கு  நிகர் வேறு எவரும் இல்லை. உலகின் அனைத்து சந்தோஷங்களையும் வாரிவாரி கொடுப்பார்.

அல்லது கொடுத்ததாக காதலி  நம்பி மகிழ்வாள்]  . காதலியை வானளாவப் புகழ்வார். பழம்பஞ்சாங்கமான சிம்ம ராசி ஆண் மரபுக்கும் பாரம்பரிய விஷயங்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பார். வீட்டில் ஆறு மணிக்கு சாமி விளக்கு ஏற்ற வேண்டும் என்பதில் இருந்து வெள்ளிக்கிழமை பெண்கள் தலைக்குக் குளிக்க வேண்டும் என்பது வரை கண்ணும் கருத்துமாக இருப்பார். சோம்பலாக பெண்கள் இருப்பது இவருக்குப் பிடிக்காது. தலை சீவாமல், ஹவுஸ் கோட் அல்லது நைட்டி போட்டுக்கொண்டு பெண்கள் ரிலாக்ஸ்டாக பகலில் இருப்பதை இவர் வெறுப்பார். பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் வீடு என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பார்.

மனைவி அல்லது காதலிக்கு சேலை ஜாக்கெட்டில் இருந்து பிரா பெட்டிக்கோட் வாங்குவது வரை கவனம் செலுத்துவார். பெண்கள் அவர்களுக்கு பிடித்த உடை வாங்கி போடட்டும் என்று விட மாட்டார். மாமியார் மற்றும் மச்சினர் மனைவி உடைகளிலும் இவர் அதிகாரம் செலுத்துவார். இப்படி உடை அணிந்துகொண்டு நம் வீட்டுக்கு வரக் கூடாது என்று சொல் என மனைவியிடம் அதட்டுவார். இவர் மட்டுமல்ல இவரை சுற்றியுள்ள அனைவரும் சுத்தமாக கண்ணியமாக உடை உடுத்த வேண்டும். சாப்பிட வேண்டும் சிரிப்பதாக இருந்தால் கூட பெண்கள் அளவாக, அழகாக சிரிக்க வேண்டும். சத்தம் போட்டு பிறரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சிரிக்கக் கூடாது என்பதில் கவனமாக இருப்பார்.

இவர் விருப்பப்படி நடந்துகொண்டால் மட்டுமே இவர் அவர்களுடன் வாழ்வார் அல்லது வெளியேறி விடுவார்/ வெளியேற்றிவிடுவார். பிரைவசி நிறைய எதிர்பார்ப்பதால் இவர்கள் பெரிய குடும்பம் அல்லது கூட்டுக் குடும்பத்தை விரும்புவதில்லை.  பெண்கள் வேலைக்கு போவது இவருக்குப் பிடிக்காது. அப்படியே வேலைக்குச சென்றாலும் இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் வேலை பார்க்கலாம். இவருடன் அலுவலகத்துக்குச் சென்று இவருடனேயே திரும்பி வந்துவிட வேண்டும்.

அல்லது இவரது சொந்த நிறுவனத்தில் பணி புரிய வேண்டும். வேறு முக்கிய பெரிய நிறுவனம் அல்லது அரசு அலுவலக உயர்பதவி என்றால் அனுமதிப்பார். ஆனால் பணி நேரத்துக்கு மேல் ஒரு நிமிடம் கூட அலுவலகத்தில் இருக்கலாகாது. வீட்டுக்கு வந்த பின்பு அலுவலகத்தார் யாருடனும் பேசக்கூடாது. மனைவியின் படிப்புக்கேற்ற வேலை இல்லாமல் வீட்டுக்கு அருகில் இருக்கும் அலுவலகத்தில் வேலை செய்ய அனுமதிப்பார். மனைவி பஸ்ஸில் போவது இவருக்கு பிடிக்காது. மற்ற ஆண்கள் இடித்து விடுவார்களாம். நூறு சதவீதம் பொசசிவ்வாக இருப்பார். மனைவி இவரிடம் அல்லது இவருக்கு முன்னால் வேறு யாரையும் புகழ்ந்து பேசக் கூடாது.

பிள்ளைகள்

சிம்ம ராசி ஆண் குடும்பத்தினர் மீது மிகுந்த பாசம் உடையவர். பிள்ளைகள் உயர் கல்வி கற்க வேண்டும் நல்ல நிறுவனத்தில் வேலைக்கு அமர வேண்டும் என்பதில் ஆரமபத்தில் இருந்தே சிரத்தையுடன் இருப்பார். பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக எதையும் செய்வார். ஆனால் இவரது கண்டிப்பு இவரை அன்பான அப்பாவாகபாசமான அண்ணனாக குடும்பத்தினரை உணர வைக்காது. குறிக்கோளுடனும் சிறந்த இலட்சியத்துடனும் பிள்ளைகளை வளர்ப்பார்.

அவர்களுக்கு எந்தப் பொருளாக இருந்தாலும் உயர்ந்தவற்றை மட்டுமே வாங்கி தருவார். பத்து கடை ஏறி இறங்குவார். சலிக்காமல் அலைந்து பல கடைகளுக்குப் போய் எந்தப் பொருளையும் தான் நினைத்தபடி இருக்கிறதா என்று பார்த்து பார்த்து வாங்கித் தருவார். தமக்கென்று தனி விருப்பு வெறுப்பு இல்லாத பட்சத்தில் சிம்மராசிக்காரரின் மனைவியும் பிள்ளைகளும் கொடுத்து வைத்தவர்கள்.

பொருளாதாரம்

சிம்ம ராசி ஆண் எப்போதும் தனக்குத் தேவையான பண வசதியுடன் இருப்பார். தனிநபர் தோழர்கள் சொந்தக்காரர்கள் என யாரிடமும் கடன் வாங்க மாட்டார். வங்கியிடம் வாங்கலாம் ஆனால் இவர் கடன் வாங்கியிருப்பது யாருக்கும்  தேறாத  மாதிரி நடந்து கொள்வார். கொடுக்கல்  வாங்கலில் கண்ணியமாக நடந்து கொள்வார். வரவுக்கு மிஞ்சி செலவு செய்வது பிடிக்காது. ஆனால் உங்களால் தான் முடியும் என்று இவரை கொஞ்சம் உயர்த்தி பேசிவிட்டால் இவரிடம் இருந்து எவ்வளவு பணம் வேண்டுமென்றாலும் கறந்து விடலாம்.  நேர்மையானவர்களிடம் கணக்கு பார்க்கும் இவர் முகஸ்துதிக்காரரிடம் பணத்தை இழந்துவிடுவார். இதனால் இவருக்கு நல்ல நண்பர்கள் இருப்பதில்லை.

புதிய புதிய தொழில்களைத் தொடங்க ஆர்வம் கொள்வார்.  சிரமப்பட்டு சிறப்பாக நடத்துவார். சில சமயம் தவறான ஆட்களை நம்பி ஏமாந்துவிடுவார். வீட்டில் மனைவி சொல்வதைக் கேட்க மாட்டார். இவரிடம் எச்சரிக்கையாக இருங்கள் இந்த தொழிலில் கஷ்டம் வரும் நஷ்டம் வரும் என்று சொல்வது பிடிக்காது. அதனால் மனைவி மக்கள் உறவினர் நண்பர் யாரும் இவர் மனம் நோகக் கூடாது என்று அறிவுரை சொல்ல மாட்டார்கள். கடுமையான உழைப்பாளியான இவர் ஒரு நேரம் வேலை செய்வதைப் போல தொடர்ந்து செய்ய விரும்புவதில்லை.

அவர் செய்ததைப் பார்த்து பணியாட்கள் அல்லது மற்றவர்கள் அவரை பின்பற்றி அப்படியே செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார். ஒரே வேலையைத் திரும்ப திரும்ப செய்ய இவர் பணியாள் அல்ல; வழிகாட்டி. சொகுசுப் பேர்வழி. பண விஷயத்தில் தனக்கு கீழே வேலை பார்க்கும் யாரையும் நம்ப மாட்டார் கணக்கு கேட்டு தன் கண்டிப்பை காட்டுவார். கடுகு போவது தெரியும் பூசணி போவது தெரியாது என்பது இவருக்கென எழுதிய பழமொழி.

கர்வம் பிடித்தவர் ஆணவக்காரர், தலைமைப் பொறுப்பு ஏற்பவர். படை பரிவாரங்களோடு ராஜா போல வலம் வருவார். எந்த வேலையும் தான் செய்யாமல் தன் ஆட்களைக் கொண்டே செய்வார். அடுத்தவர் பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்குவதில் கெட்டிக்காரர். ஆனால் தன்பிரச்னைகளை வெளியே சொல்லாமல் மனதுக்குள் பூட்டிவைத்து  மன அழுத்தத்தால் நொந்து போவார். தனது  பிரச்னையைத் தீர்க்க வழி தெரியாமல் மற்றவர்களைக் குற்றம் கூறி  சலித்துக்கொள்வார்.

சில சமயம் இரவு பகல் பாராமல் உழைப்பார் ஆனால் அப்போதும் தனது சம்பளத்தை கறாராகக் கேட்டு வாங்க மாட்டார். பிறரிடம் எதையும் கேட்டுப் பெறுவது  இவருக்கு கௌரவக் குறைச்சலான விஷயம் ஆகும். சிம்ம ராசிக்காரரிடம் யாரும் நெகட்டிவாகப் பேசுவது அவருக்குப் பிடிக்காது. இல்லை முடியாது வேண்டாம் என்று சொல்லக் கூடாது. இவர் எதையும் சவாலாக எடுத்து செய்யக் கூடியவர். தொடர்ச்சியாக செய்யமாட்டார் வழிகாட்டுவதோடு சரி. தலைமைப் பொறுப்புக்கு ஏற்றவர். பின் தொடர்பவர் கிடையாது.

சிம்மராசிக்காரரோடு வாழ்வது எப்படி?

ஒவ்வொரு செயலையும் ஒவ்வொரு முறையும் புகழ வேண்டும். எக்காரணம் கொண்டும் இவரை அலட்சியப்படுத்தவோ திட்டவோ கூடாது. உங்களுக்கு ஒன்றும் தெரியாது கம்முனு இருங்க என்று சொல்லவே கூடாது. அடுத்தவரிடம் விட்டுக்கொடுக்காமல் இவர் மாதிரி உண்டா என்று மட்டுமே சொல்ல வேண்டும். இவரைப்பற்றி புறம் பேசவோ கேலி செய்யவோ கூடாது. அன்பும் அக்கறையும் பாசமும் நெஞ்சு நிறையக் கொண்டிருக்கும் இவரிடம் எப்போதும் ஆக்கப்பூர்வமான பாசிட்டிவான நல்ல விஷயங்களைப் பற்றியே பேச வேண்டும்.  இவரது திறமைகளை கலாரசனையை மதித்துப் போற்ற வேண்டும்.

இவரைப் பின்பற்றி வாழும்படி பிள்ளைகளிடம் மச்சினர், கொழுந்தியாள்,  தம்பி தங்கைகளிடம் சொல்ல வேண்டும். கண்ணுக்குத்  தெரியாத இவரது பாச உணர்வையும் ஆழமான அன்பையும் உணர்ந்து கொள்ளும் தாயும் தாரமும் இவருக்கு இரு கண்கள். இவர் ஒரு முரட்டுக் குழந்தை. இவரை அதட்டாமல் கொஞ்சி கொண்டாடினால் இவரை ஒரு சிறந்த தலைவர் ஆக்கலாம். அல்லது ‘டான்’ ஆக்கலாம். இவரைக் கொஞ்சம் பாராட்டிப் பேசி சமாளித்து வழிக்குக் கொண்டு வந்து இவரது நம்பிக்கையைப் பெற்றுவிட்டால் ரிங் மாஸ்டரின் சொல் கேட்கும் சர்க்கஸ் சிங்கத்தைப் போல அடங்கிப்போவார். ஆனால் அது எல்லாராலும் முடியும் காரியம் அல்ல. சிலரால் மட்டுமே முடியும். முயற்சி திருவினையாக்கும்.

முனைவர் செ. ராஜேஸ்வரி

Related Stories:

More