முத்துக்கள் முப்பது-திருக்கார்த்திகை தீபம்

கவலை எனும் இருள் அகற்றும் கார்த்திகை தீபம்

பழந்தமிழர் திருநாள்களில் ஒன்று திருக்கார்த்திகை தீபம். இது பற்றிய பல குறிப்புகள் தமிழ் இலக்கியங் களில் உண்டு. குறிப்பாக தொல்காப்பியத்தில் பொருள் அதிகாரம் புறத்திணை இயலில் “வேலி நோக்கிய விளக்கு நிலையும்” என்று வருகிறது.இதற்கு நச்சினார்க்கினியர் உரை வகுத்துள்ளார்.

வேலி நோக்கிய விளக்கு நிலையும்- என்ற சூத்திர வரிகளுக்குப் பொருள் கூறுகையில் “கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் ஏற்றிய விளக்கு” என்று விளக்கம் அருளி அக்காலத்தில் இருந்து இக்காலம் வரை தமிழர்கள் போற்றிக் கொண்டாடும் பண்டிகை இது என்று பதிவு செய்கிறார்.தீபத்திருவிழாவின் ஆன்மீக நோக்கம் ஒரு பக்கம் இருந்தாலும் சமூக நோக்கமும் அதில் இணைத்திருக்கும். தமிழ்நாட்டின் எல்லாக் கோவில் களிலும் அன்று சொக்கப்பனை கொளுத்துதல் நிகழ்ச்சி நடைபெறும். காரணம்  என்ன தெரியுமா? ஐப்பசி கார்த்திகை மாதங்

களில் பயிர்களை அழிக்கும் வெட்டுக்கிளி முதலிய பூச்சிகள் பெருகி இருக்கும் என்பதால், சொக்கப்பனை கொளுத்துவர். அதில் பூச்சிகள் விழுந்து இறந்துவிடும்.

வீடுகளிலும் பழைய பொருட்களை வெளியே போட்டு சொக்கப்பனை கொளுத்தும் வழக்கம் இருந்திருக்க வேண்டும். அது பின்னால் தள்ளி போகியாக மாறியிருக்கலாம். அகநானூறு,  நற்றிணை போன்ற அகத்துறை நூல்களில் கூட கார்த்திகை விழா பற்றிய குறிப்புகள் உண்டு. சங்க இலக்கியத்தில் ‘பெருவிழா’ என்று குறிப்பிடப்படும் கார்த்திகை தீபத்தின் பல்வேறு சிறப்புகளை 30 முத்துக்களாகக்  காண்போம்.

1. ஏன் கார்த்திகை தீபம்?

தமிழ் மாதங்கள் 12 .சித்திரையில் ஆரம்பித்து பங்குனியில் முடிகிறது. இந்த மாதங்களுக்கு எப்படி பெயர் வைக்கப்பட்டது?

ஒவ்வொரு மாதமும் எந்த நட்சத்திரத்தில் பௌர்ணமி வருகிறதோ,  அந்த நட்சத்திரத்தின் பெயரே அந்த மாதத்தின் பெயராக வைக்கப்பட்டது. அன்றைய தினம் ஏதேனும் ஒரு பண்டிகை தினமாக அல்லது விரத தினமாக கொண்டாடப்பட்டது.

உதாரணமாக சித்திரை மாதத்தில் பௌர்ணமி வருகின்ற நட்சத்திரம் சித்திரை நட்சத்திரம். அந்த மாதத்தின் பெயர் சித்திரை. அந்த நாளின் சிறப்பு பண்டிகையாக சித்ராபௌர்ணமி  கொண்டாடப்பட்டது. விசாக நட்சத்திரமும் பவுர்ணமியும் இணைந்து வரும் வைகாசி மாதத்தில் வைகாசி விசாகம் பெரிய அளவில் கொண்டாடப்பட்டது. அதைப்போலவே கார்த்திகை விண்மீனும் பௌர்ணமியும் இணைந்து வரும் கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபப் பெருவிழா மிகச் சிறப்பாகக்  கொண்டாடப்படுகிறது.

 

2. கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை தீபத்தை தமிழ்நாட்டில் பன்னெடுங்காலமாகவே கொண்டாடி வருகின்றார்கள். கார்த்திகை மாத பௌர்ணமி நாளில், வீடுகளிலும், கோயில்களிலும் பிரகாசமான தீபங்களை ஏற்றி மக்கள் கொண்டாடுவது வழக்கம். இதற்கு “கார்த்திகை விளக்கீடு” என்று பெயர். மாலை வேளைகளில் வீடுகளிலும் வீட்டுக்கு வெளிப்புறங்களில் வீட்டு முற்றங்களில் மாடங்களிலும் விளக்கேற்றிக் கொண்டாடப்படும், கார்த்திகை தினத்தன்று ஆலயங்களிலும் தீபப் பெருவிழா நடக்கும். சிவ ஆலயங்களிலும் முருகன் ஆலயங்களிலும் மாலை ருத்ர தீபம் ஏற்றப்படும். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் லட்ச தீபம் ஏற்றப்படும்.

3. சங்க இலக்கியத்தில் கார்த்திகை தீபம்

சங்க காலத்தில் நிகழ்ந்த கார்த்திகை விழா ஒளிவிளக்கை எடுத்துக் காட்டுகிறது நற்றிணை.

வீரை வேண்மான் வெளியன் தித்தன்

முரசுமுதல் கொளீஇய மாலை விளக்கின்

வெண்கோடு இயம்ப, நுண்பனி அரும்பக்

கையற வந்த பொழுது - நற்றிணை 58

கார்த்திகை மாதம்.வீரை என்னும் ஊரிலிருந்து கொண்டு ஆண்ட வேளிர்குடி அரசன் அவன். வெளியன் என்பது அவன் பெயர். அவன் மகன் தித்தன். பனி பொழிந்த கார்த்திகை மாதத்தில் அவன் முரசில் திரி போட்டு விளக்கேற்றி வைத்தான். மாலையில் அந்த விளக்கை ஏற்றியபோது வெண்சங்கு ஊதப்பட்டது.

பரிபாடல் திரட்டு 10 ம் பாடல் வேறு விதமான அழகியலை படம் பிடித்துக் காட்டுகிறது.“கார்த்திகை காதில் கனமகர குண்டலம்போல்சீர்த்து விளங்கித் திருப்பூத்தல்”என்று விளக்குகிறது. கார்த்திகை என்னும் விண்மீன் கூட்டம் காதில் அணியும் மகரக்குண்டலம் போல ஒளிர்ந்தது என்கிறது இப்பாடல். மலைபடுகடாம் (10) என்ற இலக்கிய காட்சி வேறு விதமானது.

அகலிரு விசும்பின் ஆஅல் போல

வாலிதின் விரிந்த புன்கொடி முசுண்டை”

என்று ஒரு காட்சியைப்   பதிவு செய்கிறது.ஆஅல் என்பது கார்த்திகை மாதத்தில் தோன்றும் கார்த்திகை என்னும் நட்சத்திரத்தைக் குறிக்கும். இந்த மீன் கூட்டத்தின் வெண்ணிறம் போல முசுண்டைப் பூ மலர்ந்ததாம் என்கிறது மலை படுகடாம். இப்படி சங்க இலக்கியத்தில் கார்த்திகை விழா பற்றிய பல குறிப்புக்கள் இருக்கின்றன.

4. நால்வகை விளக்குகள்

விளக்கு என்பது விளக்குவது. அடையாளம் காட்டுவது. ஜோதியான இறை வனை, ஜோதியின் துணைகொண்டு காண்பது. விளக்கின் ஒளி, புற இருளை போக்கும். ஈசனின் நினைவு அக இருளைப் போக்கும். நால்வகை விளக்குகளை நாவுக்கரச பெருமான் நயத்தோடு விளக்குகிறார். இல்லத்தில் தோன்றும் விளக்கு இருள் கொடுக்கும். எளிமையான சொல்லால் விளையும் விளக்கு தெளிவைக் கொடுக்கும். எல்லோரும் பார்க்கும் பிரமாண்ட விளக்கான சூரிய விளக்கு பலருக்கும் வழியைக் கொடுக்கும். ஆனால் நெஞ்சத்தில் தோன்றும் ‘நமசிவாய’ என்னும் நல்ல விளக்கு ஒன்றுதான் இறைவனை அடைய உதவும்.

இல்லக விளக்கது விருள்கெ டுப்பது

சொல்லக விளக்கது சோதி யுள்ளது

பல்லக விளக்கது பலருங் காண்பது

நல்லக விளக்கது நமச்சி வாயவே.’

5. விண்மீன்களில் கார்த்திகை

இந்திய நட்சத்திர விண்மீன்கள் உருவாகி 100 மில்லியன் ஆண்டுகள் ஆவதாக விஞ்ஞானிகள் சொல்லுகின்றார்கள்  கார்த்திகை நட்சத்திரம் இந்திய வானிய லிலும் ஜோதிடத்திலும் குறிக்கப்படும் 27 நட்சத்திரத்தில் மூன்றாவது நட்சத் திரம் ஆகும். இதை வானத்தில் வெறும் கண்ணால் கூட இனம் கண்டு கொள்ள முடியும் கார்த்திகை நட்சத்திரம் மிகச்சிறந்த வெளிச்சம் மிகுந்த நட்சத்திரம் ஆகும். ஜோதிடத்தில் சூரியனுக்கு உரிய நட்சத்திரம்.  மேஷ ராசியின்  கடைசி சில பாகைகளில் இந்த நட்சத்திரம் தொடங்கி ரிஷப ராசியின் முதல் பத்து பாகைகள் வரை வியாபித்திருக்கும்.

 

6. அக்னி நட்சத்திரம்

இந்த கார்த்திகை நட்சத்திரம்  ஆயிரக்கணக்கான நட்சத்திரங்களின் தொகுப்பு என்றாலும் கூட அதில் உள்ள பிரகாசமான நட்சத்திரங்கள்  ஆறு. ஆறு  நட்சத்திரங்கள் “கார்த்திகை நட்சத்திரக் கூட்டம்” என்று வழங்கப்படுகிறது. ஜோதிட விதிகளின் படி இந்த கார்த்திகை நட்சத்திரத்தில் தான் சூரியன் அதிக வீரியம் பெறுகிறார். இந்த நட்சத்திர மண்டலத்தின் மேல் சூரியன் பிரகாசிக்கும் போது பூமிக்கும் சூரியனுக்கும் உரிய தூரம் குறைவதால் உஷ்ணம் அதிகரிக்கும்.இந்த காலத்தை அக்னி நட்சத்திர காலம் என்கிறோம்.இதே கார்த்திகை விண்மீன் மீது நிலவு செல்லும் போது, அதற்கு நேர் எதிர் ராசியான விருச்சிக ராசியில், சூரியன் பிரகாசித்து பௌர்ணமி எனும் முழு நிலவு நாளை உண்டாக்குகிறது. கார்த்திகை மாதமான விருச்சிக மாதத்தில், ரிஷப ராசியில், கார்த்திகை நட்சத்திரத்தில், முழுநிலவு நாளில் தீபம் ஏற்றுவது கார்த்தி கையின் தீப தின வானியல் சிறப்பாகும்.

7. உமாதேவியார் செய்த தவப்பயன் தான் தீபவிழா

திருக்கார்த்திகை தோன்றுவதற்கு பல்வேறு காரணங்களும் புராணங்களும் இருக்கின்றன. ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெரும் ஜோதியாய் இறைவன் காட்சி தந்த நாள் என்பதே பெருவாரியான கருத்து. ஆயினும் வேறு சில கதைகளும் உண்டு. அதில் ஒன்று.  ஒருமுறை உமாதேவியார் சிவனின் கண்களை விளையாட்டாக மறைக்க பிரபஞ்சமே இருட்டில் தவித்தது. உயிர்கள் அனைத்தும் துயரத்தில் இருந்தன.

அகில மாதாவாகிய தானே இப்படிப்பட்ட தவறு செய்து விட்டோமே என்று உமாதேவி வருந்தினார். தான் பாவம் செய்து விட்டதாகக் கருதி அதற்கு பிராயசித்தத்தைத்  தேடி காஞ்சி புரத்தில் சிவபெருமானை நோக்கி தவத்தில் இருந்தார். இறைவன் தேவிக்கு காட்சி அளித்தார். உமாதேவியாரை திருவண்ணாமலைக்கு வரும்படியாக அருள்புரிந்தார். உமாதேவியாரும் அண்ணாமலையில் உள்ள பவழக்குன்று மலையில் கௌதம மகரிஷியின் ஆசிரமத்தில்  தவம் செய்தார் .விருச்சிக மாதம்  திருக்கார்த்திகை பௌர்ணமி  நாள் அன்று இறைவன் தேவிக்கு காட்சி யளித்து இடப்பாகத்தில் ஏற்று அருள்புரிந்தார். அந்த தினமே திருக்கார்த்திகை தினமாக கொண்டாடப்படுகிறது.

8. திருவண்ணாமலை தீபம்

தீபம் என்றால் முதலில் நினைவுக்கு வருவது திருவண்ணாமலை. இத்தலம்  சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில் அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும்.

வான னைம்மதி சூடிய மைந்தனைத்

தேன னைத்திரு வண்ணா மலையனை

ஏன னையிகழ்ந் தார்புர மூன்றெய்த

ஆன னையடி யேன்மறந் துய்வனோ

என்ற அற்புதமான தேவாரம் இதன்

பெருமையைக்  கூறும்.

9. விண்ணும் மண்ணும் பரந்த ஜோதி

கார்த்திகை திருநாள் திருவண்ணாமலையில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

திருவண்ணாமலையில் சிவபெருமான் கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் விண்ணும் மண்ணும்

பரந்த ஜோதி சொரூபமாக தம்முடைய

ஒளிமயமான உருவத்தைக் காட்டி அருளினார்.

மாணிக்க வாசகர் திருவெம்பாவை

தொடங்கும் போது சிவபெருமானை, ஒளி

வடிவமாகவே காண்கிறார்.

இந்த பாடலின் முதல் வரியை பதம் பதமாகப் பிரித்து ஆராய வேண்டும். இறைவன் ஜோதி. சாதாரண ஜோதியல்ல; பெரும் ஜோதி.அவனுக்கு இணையான ஒளி இல்லை. கண்ட ஜோதி. அடுத்து அந்த ஜோதியின் அருமை எளிதில் உணர முடியாது. ஞானத்தால் மட்டுமே   உணர முடியும். அடுத்து அது எங்கிருந்து வந்தது.எங்கு போய் முடிவது என்பது யாராலும் சொல்ல

முடியாது. இத்தனையும் இந்த பாடலில் உண்டு.

“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ்

சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள்தடங்கண்

மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

போதார் அமளியின்மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே”

இறைவன் ஜோதி பிழம்பாகத் தன்னைக் காட்டிய திருநாள் திருக்கார்த்திகை தீபத் திருநாளாக கொண்டாடப்படுகிறது. ஞானமலையாக  விளங்குகின்ற திருவண்ணாமலையில் காலையில்

பரணி தீபம் ஏற்றப்பட்டு மாலையில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது.

10. திருவண்ணாமலை தீப பிரம்மோற்சவ திருவிழா

பஞ்ச பூதங்களில் நெருப்புக்குரிய தலமாக திகழ்வது திருவண்ணாமலை. திருவண்ணா மலையே அக்கினிப் பிழம்பாக ஆதிசிவன் நின்ற இடம் என்பார்கள். இந்த மலை 2,668 அடி உயரம் கொண்டது. கார்த்திகை தீப நாளை ஒட்டி கார்த்திகை தீப பிரம்மோற்சவ திருவிழா அண்ணாமலையார் கோவிலில் நடைபெறும். இதில் பத்து நாட்கள், உற்சவர் ஊர்வலங்களும், மூன்று நாள் தெப்ப திருவிழாவும், அதனையடுத்து சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடை பெறும். கார்த்திகை தீபத்திருவிழா உற்சவத்தின் நிறைவாக மகாதீப பெருவிழா நடைபெறும்.

11. பரணி தீபம்

10ஆம் நாள் கோவில் வளாகத்தினுள் அதிகாலை 4.00 மணிக்கு, மூலவர் கருவறைமுன் மிகப்பெரிய கற்பூரக் கட்டியில் ஜோதி ஒளி ஏற்றி, தீபாராதனை காட்டி, அதில் ஒற்றைத் தீபம் ஏற்றுவார்கள். இந்த ஒற்றை நெய்தீபத்தால் நந்திமுன் ஐந்து பெரிய அகல் விளக்கு ஏற்றுவார்கள். அதன்பின் உண்ணாமுலை அம்மன் சந்நதியிலும் ஐந்து பெரிய அகல் விளக்கில் தீபம் ஏற்றுவார்கள். இந்த பரணி தீபம் காலையில் நடக்கும்.பரணி தீபம் ஏற்றப்பட்ட பிறகு, அதைக் கொண்டு பஞ்ச முகதீபம் ஏற்றப்படுகிறது. பரணி தீபத்தினை இறுதியாக பைரவர் சந்நதியில் வைக்கின்றனர்.

12. மலை மீது மகா தீபம்

இதைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்படும் . இதற்காகவே உள்ள பிரதியேகமான  தீபக்கொப்பரையை மலைக்கு கொண்டு செல்வார்கள். பொதுவாக தீபம் ஏற்றுவதற்காக ஆயிரம் மீட்டர்  திரி, 3,500 கிலோ நெய் பயன்படுத்தப்படும்.மாலை நேரத்தில் பஞ்சமூர்த்திகள் தீப மண்டபத்தில் எழுந்தருளுகின்றனர். அவர்களைத் தொடர்ந்து வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே காட்சிதருகின்ற அர்த்தநாரீஸ்வரர் உற்வச கோலம் தீப மண்டபத்திற்கு எடுத்து வரப்படுகிறது. அவர் முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படுகிறது. இத்தீபம் ஏற்றப்படுகின்ற அதே நேரத்தில், மலையில் மகாதீபம் ஏற்றப்படுகிறது.

13. ஏகன் அனேகன்

மாணிக்க வாசகர் பாடிய சிவ புராணம் இப்படி தொடங்குகிறது.

நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க

இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க

கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க

ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள்வாழ்க

ஏகன் அநேகன் இறைவ னடிவாழ்க.

இதில் “ஏகன் அனேகன்” என்ற வரி

முக்கியம். ஒரு தீபத்தில் இருந்து பல தீபங்கள்.

எல்லாவற்றிலும் ஒரே ஒளி.

அதிகாலையில் அண்ணாமலையார் சந்நதியில் ஒரு தீபம் ஏற்றி, அதன் மூலம் மேலும் ஐந்து தீபங்கள் ஏற்றி பூசைசெய்வர். பின்பு அந்த தீபங்களை ஒன்றாக்கி அண்ணாமலையார் அருகில் வைத்து விடுவர். இதனை, ‘ஏகன் அநேகனாகி அநேகன் ஏகனாகுதல்’தத்துவம் என்கிறார்கள். பரம் பொருளான சிவனே, பல வடிவங்களாக அருளுகிறார் என்பதே இந்நிகழ்ச்சியின் உட்கருத்தாகும்.

14. திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்பவர்களுக்கு

அண்ணாமலையார் தீபம் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு எரியும். 60 கிலோ மீட்டர் வரை இதனுடைய ஒளி தெரியும். தீபம் குளிர்ந்த பின்னர், திருக் கோயிலுக்கு தீபக் கொப்பரையை கொண்டு வந்து, சிறப்புப் பூஜை செய்வார்கள். இதன் சாம்பலுடன் சில வாசனைத் திரவியங்கள் கலந்து மை  போல ஆக்கி நடராஜருக்கு சார்த்தி வழிபாடுகள் நடத்துவார்கள். இந்தப் பிரசாத “மை” பக்தர்களுக்கும் வழங்கப்படும். திருவண்ணாமலை தீபத்தை தரிசிப்பவர்களுக்கு இருபத்தி ஒரு தலைமுறைக்கு புண்ணியம் கிடைக்கும் என்கிறது அருணாசல புராணம். இந்த தீபத்தைப்  பார்த்தவர்களுக்கு எந்தவிதமான இடையூறுகளும் வருவதில்லை என்பது மட்டுமல்ல அவர்களுக்கு எந்த நாளிலும் சாப்பாட்டு பஞ்சம் வராது என்றும் அருணாசல புராணம் கூறுகின்றது.

15. கார்த்திகை  விரதம்இருப்பது எப்படி?

கார்த்திகை தீப விரதத்தைப் பரணி நட்சத்திர நாளில் துவங்க வேண்டும். பரணி நட்சத்திரத்தன்று ஒருவேளை மட்டுமே உணவு உண்ணலாம். பக்கத்தில் உள்ள  கோவிலுக்குச் சென்று விரதத்தைத் தொடங்கலாம். இரவு உபவாசம் இருக்க முடியாதவர்கள்  பால் பழம் அரை வயிறு எடுத்துக் கொள்ளலாம்.

கார்த்திகை திருநாளில் அதிகாலை எழுந்து, நீராடி இறைவனை வணங்க வேண்டும். தெய்வத் துதிகளையும் பாமாலைகளையும் ஜபிக்க வேண்டும். காலையில் வீட்டை சுத்தப்படுத்திக் கொள்ளவேண்டும். பூஜையறையில் உள்ள தூசுகளையும் அழுக்குகளையும் அகற்றி, பூஜையறையின் விளக்குகளைத் தேய்த்து, அலம்பி வைத்துக்கொள்ளவேண்டும். மாலையில் வீட்டு வாசலில் மாவிலைத் தோரணம் கட்டி மாக்கோலமிட்டு, அகல்விளக்குகளில் எண்ணெய் விட்டு, திரிவைத்து விளக்கேற்ற வேண்டும். மாலை திருவண்ணாமலை தீபம் ஏற்றியவுடன் நம் பூஜை அறையில் பூஜை முடித்து தீபாரா தனை காட்டி விரதத்தை முடிக்க வேண்டும். ஆனால் அன்று அரிசி  உணவு உண்ணக்கூடாது. பால், ஜவ்வரிசி கஞ்சி, பயத்தம்பருப்பு கஞ்சி, நிவேதனங்கள் சாப்பிடலாம்.

16. எத்தனை விளக்குகள் ஏற்றலாம்?

வீடு முழுக்க எண்ணற்ற விளக்குகளை ஏற்ற வேண்டும். குறிப்பாக 27 விளக்குகள் ஏற்றுவது என்ற முறை உண்டு. இந்த 27 விளக்குகள், 27 நட்சத்திரங்களைக் குறிக்கும். இப்படிச் செய்தால் சகல சவுபாக்கியங்களும் மங்களங்களும்  வாழ்க்கையில் கிடைக்கும். 27 விளக்குகள் ஏற்ற முடியாதவர்கள், குறைந்தது 9  (நவகிரகம் ஒன்பது அல்லவா) தீபங்களை ஏற்றலாம். முக்கியமாக ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்கை ஏற்றுவது சிறப்பு. குறைந்த பட்சம் 3 தீபங்களாவது ஏற்ற வேண்டும் என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஒன்று உங்கள் குடும்பத்துக்காக, ஒன்று உங்கள் மூதாதையர்களை வழிபடும் பொருட்டு, மூன்றாவது விளக்கு உங்கள் எதிர்கால சந்ததிகள் நலமுற்று வாழ என்று கூறப்படுகிறது.

17. புதிய விளக்கா? பழைய விளக்கா?

விளக்குகள் அனைத்தும் புதிதாக இருக்கவேண்டும் என்கிற அவசியமில்லை. தலைவாசலில் ஏற்றப்படும் இரண்டு விளக்குகள் மட்டும் புதிதாக இருக்க வேண்டும். விளக்குகள் பழையதாக இருந்தாலும், நன்கு சுத்தம் செய்து  மஞ்சள், குங்குமம் வைத்து அலங்கரித்து, அதில் சுத்தமான நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றிப் பயன்படுத்துங்கள். நெய் அல்லது

நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்தவேண்டும். பெரிய அகல் விளக்கில் முதலில் ஒரு தீபத்தில் தீக்குச்சியால் ஏற்றி வைத்து விட்டு பின்னர் மற்ற தீபங்களை அந்த முதல் தீபத்தில் இருந்து ஏற்றி வர வேண்டும். ஒரு தீபத்திலிருந்து மற்ற தீபங்களை ஏற்றுவது தான் கார்த்திகை தீபத்தின் சிறப்பம்சம்.

18. எங்கெங்கு ஏற்றவேண்டும்?

நம்முடைய வீட்டில் எங்கும் இருளே இல்லாதபடி நிறைய அகல் விளக்குகளை, வீட்டில் இருக்கும் அனைத்து வாசல்களிலும் ஏற்ற வேண்டும். தலைவாசலில் புதிய அகல் விளக்குகள் கொண்டு தீபமேற்ற வேண்டும். பின்னர் மறந்து விடாமல் சமையல் அறையில் நிச்சயம் தீபம் ஏற்றி வைக்க வேண்டும். பால்கனி, வராண்டா, மாடிப்படிகளில் கோலம் போட்டு தீபம் ஏற்றலாம். துளசி செடிக்கு ஏற்றுங்கள். நெல்லி, மாதுளை இருந்தால் நிச்சயம் ஏற்றி வைக்க வேண்டும் இந்த மரங்கள் மகாலக்ஷ்மி அம்சம் கொண்டவை. இன்றைய தினம் தீபம் ஏற்றி வழிபட, நம் இல்லங்களில் மட்டுமல்ல, உள்ளங்களிலும் மகாலட்சுமி குடியேறுவாள்.

19. என்ன பாடலாம்?

தீபம் பற்றிய ஸ்லோகங்களையும் பாடல்

களையும் பாடலாம். சிவபெரு மானை

மனமுருகித் தரிசிக்கும்போது, நிச்சயம்

நன்மைகள் ஏற்படும் என்பது நம்பிக்கை.

உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய வொருவன்

பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ

மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம்முழ வதிரும்

அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே”

இதுபோன்ற சிவபெருமான் பாடல்களைப் பாடியபடியே தீபங்கள் ஏற்றுவது மேலும் நன்மைகள் தரும்.

இந்தச்  ஸ்லோகத்தை சொல்வதும் நல்லது.சக்தி வாய்ந்தது. எளிமையானது.

தீப ஜோதி பரப்பிரம்மம்; தீப ஜோதி

ஜனார்த்தனம்;

தீபோமே ஹரது பாபம்; தீபம் ஜோதி

நமோஸ்துதே.

20. கார்த்திகை பொரி,பனையோலை கொழுக்கட்டை

தீபம் அன்று விரதமிருக்க வேண்டும். அன்று கார்த்திகை பொரி அவசியம் படைக்க வேண்டும். பழம், வெற்றிலை பாக்கு, பொரி, பொரி வெல்லம் சேர்த்த உருண்டை முக்கியம்.சிலர் கொழுக்கட்டை செய்து படைப்பது உண்டு.தென் தமிழகத்தில் பனையோலைக் கொழுக்கட்டைபிரசாதம் படைப்பார்கள். பச்சரிசி மாவு, பாசிப்பயறு, வெல்லம், ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்து செய்வார்கள்.பனையோலையில் பொதிந்து வைத்து அவித்துச் செய்யப்படும் கொழுக்கட்டைதான் பனை ஓலைக் கொழுக்கட்டை. வெப்பத்தில், பச்சைப் பனை ஓலையின் சாறு கொழுக்கட்டையில் இறங்கி அதன் சுவை கூடியிருக்கும்.

21. தீபம் ஏற்றுவதை விட சிறப்பு இல்லை

சிவபெருமான்  ஒளிமயமானவன். தேவாரத்தில் “திருவையாறகலாத செம் பொற் சோதி” என்றும்,“வெண்பளிங்கினுட் பதித்த சோதியானை” என்றும், திருவாசகத்தில், “ஆதியும் அந்தமுமில்லா அரும்பெரும்சோதி” என்றும், “சோதியாய்த் தோன்றும் உருவமே” -

என்றும், “சோதியே சுடரே சூழொளி விளக்கே”

என்றும், திருவிசைப்பாவில் “ஒளிவளர்விளக்கே” - “சுடரொளி விளக்கினுள்ளொளி விளக்குந் தூயநற் சோதியுட் சோதி” என்றும், சிவஞான சித்தியாரில் “சோதிக்குட் சோதியாய்த்

தோன்றிடுவன்காணே” எனவும் பல படியாக சிவனின் ஒளித் தோற்றம் விவரிக்கப்படுகிறது. இதை விவரிக்கும் அடியார் கதை ஒன்று உண்டு.

சோழமண்டலத்திலே, ஏமப்பேறூரிலே, பிராமண குலத்திலே அவதரித்தவர் நமீநந்தியடிகள். 63 நாயன்மார்களின் நமிநந்தி அடிகளே ‘தொண்டர்க்காணி’ என்று போற்றப்படு

கிறார். அவர் தினமும்  திருவாரூருக்குப் போய் வன்மீக நாதரை வணங்கினார்.  திருக்கோயில் விளக்கு ஏற்றுவது சிறந்த தொண்டு என நினைந்து எண்ணில் லாத

தீபமேற்றுதற்கு விரும்பினார்.  ஒரு வீட்டில், அது சமணர்வீடென்று அறியாமையினாலே புகுந்து, “சிவாலய த்தில் விளக்கேற்றுதற்கு நெய் தாருங்கள்” என்று கேட்டார். அதற்கு அவர்கள் இவர் திருநீற்றுக் கோலம் கண்டு கேலி பேசினர்.

“உங்கள் இறைவன் அக்கினியையுடைய பரமசிவன் அல்லவா? அவனுக்கு எதற்கு விளக்கு? இங்கே  நெய்யில்லை. அப்படியும்  விளக்கெரிப்பீராகில் நீரை முகந்து எரியும்” என்றார்கள்.

நமிநந்தியடிகள்  மிகுந்த மனவருத்தத்தோடு திரும்பிப்போனார். சுவாமி சந்நிதானத்திலே விழுந்து நமஸ்கரித்தார். அப்பொழுது ஆகாயத்திலே “நமிநந்தியே!  நீ உன்னுடைய கவலையை விடு. பக்கத்தில் இருக்கின்ற குளத்தில் நீரை முகந்து கொண்டு வந்து விளக்கேற்று” என்று ஒரு அசரீரி வாக்கு தோன்றிற்று, நமிநந்தியடிகள் அதைக்கேட்டு, மனமகிழ்ந்து திருவருளை வியந்து, குளத்தில் இறங்கி, சிவநாமத்தை உச்சரித்து,  நீரை முகந்துகொண்டு, திருக்கோயிலிலே வந்து அகலிலே முறுக்கிய திரியின்மேலே அந்நீரை வார்த்து, விளக்கேற்றினார். அது சுடர்விட்டெழுந்தது. இதில் நமக்கு தெரிய வரும் செய்தி.

1. நெய் விளக்கு சிறந்தது.

2. திருக்கோயிலில் திருவிளக்கு போடுவது மிக மிக சீரிய தொண்டு. அதுவும் தீப நாளான திருக்கார்த்திகையில் தீபம் போடுவது கோடி புண்ணிய பலன் தர வல்லது.

நீரால் தீபம் ஏற்றிய இன்னொரு மஹான் வடலூர் வள்ளலார். அவரும் இறைவனை அருட்பெரும் ஜோதியாகவே கண்டவர்.

22. ஞானம் பெற ஒரே வழி விளக்கிடுவதுதான்

“துளக்கில் நன்மலர் தொடுத்தால் தூயவிண் ணேறலாகும்; விளக்கிட்டார் பேறு சொல்லின் மெய்ந்நெறி ஞானமாகும்!” என்கிறது தேவாரம். ஞானம் பெற ஒரே வழி விளக்கிடுவதுதான் என்கின்றன மறைகள். திருக்கோயிலில் சுவாமிக்கு நாம் நேரடியாகச் செய்யும் ஒரே தெய்வக் கைங்கர்யம் விளக்கிடுவதுதான். அகத்தில் தோன்றும் மெய்ஞ்ஞான விளக்கே ஈசனின் கழலை

அடைய உதவும் என்று திருமூலரும் வலியுறுத்திக் கூறுகிறார்.

“விளக்கைப் பிளந்து விளக்கினை யேற்றி

விளக்கினுக்குள்ளே விளக்கினைத் தூண்டி

விளக்கில் விளக்கை விளக்கவல்லார்க்கு

விளக்குடையான் கழல் மேவலு மாமே”

அதாவது விளங்கிக் கொண்ட விளக்கத்தில் இருந்து விலகி, மெய்ஞ்ஞான பரம் பொருளை நம்முள் தூண்டி விளக்கேற்றி, சிவ ஒளிக்குள் ஆன்மா எனும் சீவ ஒளி விளங்கும்படி

செய்து வழிபட்டால் சகலத்தையும் விளக்கும் ஈசனின் கழலை அடையலாம் என்கிறார் திருமூலர். பல சிவன் கோயில்களில் சங்காபிஷேகம் நடத்தி மாலையில் லட்ச தீப திருவிழா நடத்துவார்கள்.

23. தத்துவ எண்ணிக்கையில் விளக்குகள்

திருப்பெருந்துறை திருக்கோயிலில் ஆகம தத்துவங்களை விளக்கும் முகமாக பற்பல விளக்குகளை அணி அணியாக ஏற்றுகின்றனர். 27 நட்சத்திரங்களை குறித்த 27 தீபங்களை கருவறையில் ஏற்றுகின்றனர். முத்தொழில்களையும் குறிக்கும் வண்ணம் மூன்று விளக்குகளை மஞ்சள், பச்சை, சிவப்பு நிற கண்ணாடி பெட்டியில் வைத்துள்ளனர். தேவசபையில் 36 தத்துவங்களை குறிக்கும் 36 விளக்குகளை ஏற்றுகின்றனர். ஐந்து வகை கலைகளைக் குறிக்க 5 தீபங்களை கருவறையில் ஒன்றன்கீழ்  ஒன்றாக அடுக்குகின்றனர். 51 தீபங்களை அர்த்தமண்டபத்தில் ஏற்றி வைக்கின்றனர். 87 உலகங்களை குறிக்க கனக சபையில் 87 தீபங்களை ஏற்றி வைக்கின்றனர். நடன சபையில் 11 மந்திரங்களை குறிக்க பதினோரு விளக்குகளை ஏற்றுகின்றனர்.

24. குமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபம்

குமரி மாவட்டத்தில் கார்த்திகை தீபத்தன்று வீட்டின் முன் பக்கத்தில் உள்ள முற்றத்தில் ஒரு தாம்பாளத்தில் பூக்களை நிரப்பி அதன் மத்தியில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கின்றனர். அதன் அருகில் ஒரு பெரிய அகல் விளக்கில் அகல் விளக்கு ஏற்றுகின்றனர்.

25. திருச்செந்தூர், சுவாமிமலை திருக்கார்த்திகை தீபம்

திருச்செந்தூரில் திருக்கார்த்திகை தினமன்று ஜெயந்திநாதர் எழுந்தருளியுள்ள சண்முக விலாசத்தில் எதிரே கடற்கரையில் பனையோலையால் சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெறும்.

பனை ஓலை பச்சையாக இருந்தாலும் தீ பட்டவுடன் கொழுந்துவிட்டு எரியும் தன்மை உடையது. பனை மரத்தினைப் போல, வாழ்க்கை முழுவதும் பிறருக்கு உதவியாக இருந்தால், ஸதேக முக்தி அதாவது இந்த வாழ்க்கையிலேயே சுவர்க்கத்தைக் கண்டு, முக்தியை அடைய  முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே சொர்க்கப்பனை அல்லது சொக்கப்பனை அமைந்துள்ளது.

இதில் ஏராளமான பக்தர்கள் பரவசத்துடன் கலந்து கொள்வர். பின் அந்த பஸ்பத்தை எடுத்து ஜெயந்தி நாதருக்கு திலகம் வைப்பார்கள். இந்த சாம்பல் விவசாயிகளுக்கு கொடுப்பார்கள். இதை விளைநிலத்தில் தூவினால் அந்த ஆண்டு நன்றாக பயிர் செழித்து வளரும் என்ற நம்பிக்கை உண்டு.

தந்தைக்கு உபதேசம் செய்து சுவாமி நாதனாக விளங்குகின்ற சுவாமி மலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின்போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்து தரிசிப்பார்கள். குமராலய தீபம் என்று அநேகமாக எல்லா முருகன் சந்நதிகளிலும் கார்த்திகை தீபம் ஏற்றுவார்கள்.

26. மிதி மலை விஷ்ணு தீபம்

திருவண்ணாமலைக்கு அருகே படவேடு பக்கத்தில் கங்கா தேவி கோயில் உள்ளது. அதன் பின்புறம் ராஜ கம்பீர மலை உள்ளது. மிதி மலை என்று இந்த மலையை அழைக்கிறார்கள். திருவண்ணாமலைக்கு வருவதற்கு முன் சிவ பெருமான் இந்த மலை மீது பாதம் பதித்தார் என்று சொல்லப்படுகிறது. இங்கு சிவனின் பாதச்சுவடு காணப்படுகிறது.  திருக்கார்த்திகை மறுநாள் ராஜ கம்பீர மலையில் மிக விமர்சையாக விஷ்ணு தீபம் எனப்படும் தீபப் பெருவிழா நடைபெறுகிறது. மலை ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது. பார்க்க பரவசமான இந்த ஒளித் திருவிழாவில்

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்கின்றனர்.

27. எலி தூண்டிய விளக்கு

வேதாரண்யம் கோயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது. அந்த விளக்கின் திரி பின்னுக்கு வந்து விளக்கு நின்று விடும் போல இருந்தது. அப்பொழுது அங்குமிங்கும் ஓடித்  திரிந்த எலி ஒன்று அந்த விளக்கின் மீது குதித்ததால் அந்த விளக்கின் திரி தூண்டப்பட்டு, விளக்கு பிரகாசமாக எரிந்தது. இந்தக் கதை சிவலோகத்தில் அதாவது கைலாயத்தில் நடந்ததாகவும் சில நூல்களில் உண்டு. வைணவத்திலும்  எலி தூண்டிய விளக்கு கதை உண்டு.

இதில் கதையை விட  கருத்து முக்கியம். ஒரு கோயில் விளக்கை தூண்டி இறைவனுக்குச் சமர்பித்த எலி பெரிய சக்கரவர்த்தியாக ஆனது. இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், விலங்கினமான எலி தன்னை அறியாமலேயே செய்த ஒரு நல்ல காரியத்துக்காக மகாயோகம் பெற்றது  என்றால், அறிவு மிகுந்த மனிதப் பிறவியில் பிறந்த நாம், ஏதேனும் ஒரு கோயிலில் விளக்கு ஏற்றுவதன் மூலம் எத்தனை புண்ணியம் செய்ய முடியும் என்பதைச் சொல்வதே இக் கதையின் நோக்கம். புண்ணியங்களிலே பெரும் புண்ணியம் கோயிலில் திருவிளக்கு இடுவது.வைணவம், சைவம் இரண்டிலும் இது மிகப்பெரிய புண்ணியமாகவும்,கிரக தோஷ பிரசித்தமாகவும் சொல்லப்படுகிறது.

28. சிவன் மலையில் தீபத் திருவிழா, எல்லாம் ஆறு

திருப்பூர் மாவட்டம் சிவன் மலையில் அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் முருகப் பெருமான் வள்ளி தெய்வானையுடன் காட்சி தருகிறார். இங்கே பங்குனி உத்திரம், தைப்பூசம், வைகாசி விசாகம் முதலிய திருவிழாக்கள் சிறப்பாக நடைபெற்றாலும், திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிக விமர்சையாகக்  கொண்டாடப்படுகிறது. அன்று முருகப்பெருமான் எழுந் தருளியுள்ள சிவன்மலை அகல்  விளக்குகளால் ஜொலிக்கும்.

முதல் நாள் பரணி தீபமும், திருக்கார்த்திகை அன்று கார்த்திகை தீபமும், மூன்றாம் நாள் ரோகிணி தீபமும் ஏற்றி, முருகக் கடவுளுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்து வார்கள். திருமணத் தடை உள்ளவர்கள் இங்குள்ள முருகப்பெருமானை ஆறு நெய் விளக்குகள் ஏற்றி, ஆறு வகை பழங்களால் நெய்வேத்தியம் செய்து, ஆறுவகை பூக்களால் அர்ச்சனை செய்து, ஆறு வாரங்கள் தொடர்ந்து வழிபட்டால் திருமணத்தடை விலகும் என்கிறார்கள்.

29. திருக்கார்த்திகை ருத்திர தீபம்

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்தி மதியம்மன் திருக்கோயிலில் திருக்கார்த்திகை ருத்திர தீபம்  மாலை 6.30 மணிக்குமேல் இரவு 7 மணிக்குள் ஏற்றப்படும் . இதையொட்டி சுவாமி சந்நதியில் முதல் நாள்  மாலையில் பரணி தீபம் ஏற்றப்படும். மாலை சுவாமி, அம்பாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி, சுவாமி சந்நதி பாரதியார் தெரு செல்லும் வழியில் சொக்கப்பனை முக்கில், சுவாமி சொக்கப்பனை தீபம் இரவு 7 மணிக்குள் ஏற்றப்படும் காட்சி  பரவசமாக இருக்கும்.

30. வேறு காரணங்கள் உண்டா?

சூடாமணி என்ற நிகண்டு நூலில் கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்களும் கார்த்திகை நாளை குறிக்கும் சொற்களும் இருக்கின்றன. கார்த்திகை மாதத்தைக் குறிக்கும் சொற்கள்: தெறுகால், தேள், விருச்சிகம். கார்த்திகை நாளைக் குறிக்கும் சொற்கள்: அங்கி, அளக்கர், அளகு, அறுவாய், ஆரல், இறால், எரிநாள், நாவிதன். கார்த்திகை மாதம், மழைக்காலம் சற்றே ஓய்ந்து, குளிர் பரவும் காலம். சிறு பூச்சிகளும் கொசுக்களும் அதிகம் உலாவும்.

இதனால் ஊரெங்கும் காய்ச்சலும் சளியும் பரவும். இதை பெருமளவு கட்டுப்படுத்தவே வீடெங்கும் வீதியெங்கும் அப்போது தீபமேற்றப்பட்டது. நல்லெண்ணெய், காட்டா மணக்கு, சிற்றாமணக்கு, பேராமணக்கு, பசு நெய், வேப் பெண்ணெய், புங்கமர எண்ணெய் மற்றும் பலவகை மூலிகை எண்ணெய்களை பயன்படுத்தி ஊரெங்கும் விளக்கேற்றினார்கள்.  இதனால் கொசு மற்றும் பூச்சிகள் குறைந்து நோய்களும் கட்டுப்பட்டன.

மேலும் பல்வேறு மூலிகைகளை இந்நாளில் தூபமாக எரிப்பதாலும், பல்வேறு நன்மைகள் விளைகின்றன எனலாம். எனவே அறிவியல் ரீதியாகவும் நன்மைகள் பலபுரியும் விழா தீப விழா. இந்தத்  தொகுப்பில் முப்பது செய்திகள் மட்டுமே பல் சுவையாக தொகுக்கப்பட்டுள்ளன. இன்னும் நிறைய செய்திகள் உண்டு. உண்மையில் கார்த் திகை தீபத்தின்  பெருமையை இத்தனை செய்திகள்தான் என்ற எண்ணிக்கையில் அடக்கி விட முடியாது.

 நல்வாக்கு நாயகர் ஜோதிடர் எஸ். கோகுலாச்சாரி

Related Stories: