குரு பார்க்க கோடி புண்ணியம் என்பது சரிதானா?

பிறவிகளிலேயே மிகச் சிறந்த பிறவி மானிடப் பிறவி. “அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது” என்று சொல்லப்படும் இந்த மானிடப் பிறவியை மதிப்புள்ள பிறவியாக மாற்றக் கூடியவர் குரு பகவான். “குரு பார்க்க கோடி நிவர்த்தி” என்கின்ற பழமொழியும்,” குரு பார்த்தால் குபேரன் ஆவான்” என்கின்ற பழமொழியும் சிந்தித்துப் பார்த்தால் குருவின் பெருமையை

நம்மால் அறிய முடியும்.

பிதுர்  அதிபதியாகவும் குரு

ஜீவ உற்பத்திக்கு குரு தான் காரணமாக இருக்கிறார். எனவேதான் ஒருவருக்கு சந்தான விருத்தி ஏற்பட வேண்டும் என்று சொன்னால், குரு பலம் இருக்க வேண்டும் என்று ஜோதிட நூல்கள் வலியுறுத்துகின்றன. காலச்சக்கரத்தின் ஒன்பதாவது ராசியான தனுசு ராசியையும் பன்னிரண்டாவது ராசியான மீன  ராசியையும் ஆள்பவர் குரு.ஒரு காலத்தில் குருவை  பிதுர்  அதிபதியாகவும் சொல்லியிருந்தார்கள். அதாவது தந்தைக்குரிய காரகமாக குருவைச்  சொல்லியிருந்தார்கள். இதை இரண்டு விதமாகவும் எடுத்துக்கொள்ளலாம். ஒன்று மனிதப் பிறப்பை தருகின்ற தந்தை.இன்னொன்று ஞானமாகிய பிறப்பை தருகின்ற தந்தை. குரு இரண்டுக்குமே காரகத்துவம் படைத்தவராக இருக்கிறார்.

ஒருவருடைய பிறப்பு நிகழவேண்டும் என்று சொன்னால், குருவின் திருவருள் இருந்தால்தான் நடைபெறும். பின்னால்  சூரியனை தந்தைக்குரிய காரகனாக மாற்றிவிட்டார்கள். எல்லா  கிரகங்களுக்கும்  ஒளி  தருபவனாக  இருப்பவன் சூரியன் என்பதால் இதுவும்  பொருந்துகின்றது. அடுத்து,  காலசக்கரத்தில்  ஒன்பதாம் வீடாகிய  பிதுர் ஸ்தானத்திற்கு, ஒன்பதாம் வீடு, என்ற “பாவத் பாவ” முறையில் சிம்மராசி வருகிறது. சிம்ம ராசிக்குரிய  சூரியனை தந்தைக்கு காரக கிரகமாக வைத்தார்கள் என்றும் எடுத்துக் கொள்ளலாம்.  தாய்க்கு உரிய இடமாக நான்காம் பாவம் கடகம் வருகிறது. அந்தக்  கடகத்தில் தான் காலச்சக்கரத்தின் ஒன்பதாவது பாவாதி குரு உச்சம் பெறுகிறார் என்பதையும் நாம்  கணக்கில் கொண்டால், குருவை தந்தைக்கு உரிய கிரகமாக கொள்வதில் உள்ள தர்க்க ரீதியான அர்த்தம் தெரியும்.

தீமையைக்  கட்டுப்படுத்தும் வல்லமை பெற்ற குரு

ஞானமாகிய வித்தைக்கும் குருபகவானே காரணமாகின்றார். உலகியல் சாஸ்திரங்களில் நிபுணத்துவம் பெற புதன் காரணமாக இருந்தாலும், ஞான சாஸ்திரங்களில் ஒருவன்வல்லமை பெற வேண்டும் என்று சொன்னால், குருவின் பலம் வேண்டும். அதனால் தான், மோட்சம் தருகின்ற வீடாகிய பன்னிரண்டாம் வீட்டுக்கும் குருபகவானை அதிபதியாகி வைத்தார்கள் நம்முடைய பெரியவர்கள். குருபக்தி என்பது ஒவ்வொருவர் வாழ்விலும் இருக்க வேண்டும்.

குரு பக்தியும், குருவின் ஆசியும் இல்லாவிட்டால், குவலயத்தில் வாழ்வில்லை. எந்த பாவமாக இருந்தாலும், அந்த பாவத்தில்  எத்தனை பாவ கிரகங்கள்  இருந்தாலும்,  அந்த பாவத்துவத்தை நீக்கி, சுபத்துவத்தை அதிகப்படுத்தி விடுவார் குரு. பாவத்தின் தீமையை கட்டுப்படுத்தும் வல்லமை குரு பகவான் ஒருவருக்கே  உண்டு. அவருடைய பலவீனமான பார்வை கூட, ஏதோ ஒரு விதத்தில் அந்த பாவத்தின் நேர்மறை சக்தியை (positive energy) அதிகப்படுத்தி விடுவதை பல ஜாதகங்களில் காண முடியும்.

பிரகஸ்பதி

குரு பகவானை  பிரகஸ்பதி என்று அழைப்பது உண்டு. பிரகஸ்பதி என்று சொன்னாலே “அறிவில் சிறந்தவர்”  என்று பொருள்.  நூறு அசுவமேத யாகம் செய்தவன் இந்திரப் பதவியை பெறத்  தகுதி படைத்தவன் ஆவான். ஆனால் அது போல் பல மடங்கு யாகாதி அனுஷ்டானங்கள் கற்றுச் சிறந்தால் தான்  ஒருவன் குருதேவராக அமைய முடியும். புராணங்களில் கூட, நாம் ஒரு விஷயத்தைப் பார்க்கலாம். இந்திர பதவியை ஒருவன் வலிமையான தவத்தினால் அடைந்துவிட முடியும். ஆனால், இந்திரனுக்கு குருவாக இருக்கக்கூடிய பிரகஸ்பதி பதவியை அவ்வளவு எளிதாக யாராலும் அடைய முடியாது.

 

குருவின் ஸ்தான பலமும் பார்வை பலமும்

அடுத்து குருவின் திருஷ்டி பலம் மிகச் சிறப்பாக எல்லா ஜோதிட நூல்களிலும் சொல்லப்படுகிறது. குருவின் பார்வை எத்தனை தோஷம் இருந்தாலும் அந்த தோஷத்தை நீக்கவல்லது. குரு கிரகத்தை ஜோதிட நூல்களில் ராஜகிரகம் என்று சொல்லுகின்றனர். குருவை பொருத்தவரையில் ஸ்தான பலத்தை விட பார்வை பலம் மிகச்சீரிய நன்மைகளைச் செய்யும். பொதுவாக குரு, எந்த வீட்டில் தனித்து நின்றாலும், அவருடைய தசா புத்தி காலங்களில் நற்பலன்களைத்  தருவதில்லை. இதை ஜோதிட நூல்கள் ”அந்தணன் தனித்து நின்றால் அவதிகள் மெத்த உண்டு” என்று சொல்கின்றன.  

குருவின் காரகமும் ஆதிபத்யமும்

12 ராசிகளில் 3 ஜல ராசிகள் முக்கியமானவை. 1.கடகம் 2.மீனம் 3.மகரம் இதில் கடகத்தில் குரு பகவான் உச்சம் அடைகிறார். மீனத்தில் ஆட்சி நிலையை அடைகிறார். மகரத்தில் நீசம் அடைகிறார். எனவே கடல் கடந்து பொருள் ஈட்டவும் வணிகம் செய்யவும் குரு ஆதிபத்தியம் வேண்டும். குருபகவானுக்கு சூரியன், சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் நட்பு கிரகங்களாக இருக்கும். சனி, ராகு, கேது சம கிரகங்கள். புதன் சுக்கிரன் பகை கிரகங்கள். குருவினுடைய காரகத்துவங்களில்  இரண்டு காரகத்துவங்கள் மிக மிக முக்கியமானவை.

ஒன்று பொருள் காரகத்துவமான பணம். தன காரகன் என்று குருவை அழைப்பார்கள். அதைப்போலவே உயிர் காரகத்துவமான புத்ரகாரகத்துவமும் குருபகவானுக்கு உண்டு. குருபகவான் ஆட்சி, உச்சம் பெற்றால் பல்வேறு விதமான நன்மைகளைச் செய்வார். அறிவின் மூலம் புகழடையச் செய்வார். வேத ஆகம சாஸ்திரங்களில் வல்லமை அடையச் செய்வார். குறைபடாத செல்வத்தை அள்ளி அள்ளித் தருவார்.அவர் நீச, பகை பலன் பெற்றால் , ஞாபக மறதி, ஆசாரம் இல்லாத தன்மை, பழிச்சொல், பொருள் இழப்பு போன்றவற்றை ஏற்படுத்துவார்.

12 பாவங்களிலும் குருபகவான் தரும் பலன்கள்

12 பாவங்களிலும் குருபகவான் நிற்கும்போது ஏற்படும் பலன்களையும் தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாகவே குரு ஜென்மத்தில் இருந்தால்,  நீண்ட ஆயுள் இருக்கும். நல்ல நட்பு கிடைக்கும். லக்கினத்தில்  குரு பலம் இழந்து பாவிகளுடன் சேர்க்கை பெற்றிருந்தால், உடல்நிலை பாதிப்பு, காரிய தடைகள் ஏற்படும். குரு,  இரண்டாம் வீடான குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து, சுப கிரகத்தின் கூட்டணியோடு இருந்தால் பணவரவு நன்றாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். இரண்டாவது வீட்டில் குரு தனித்து இருந்தாலோ வறுமை வாட்டும். மூன்றாம் வீட்டில் குரு இருந்தால் முயற்சியில் வெற்றி கிடைக்கும்.  மூன்றாம் வீட்டில் குரு தனித்து இருந்தாலோ இளைய சகோதர தோஷம் ஏற்படும்.

நான்காம் வீட்டில் குரு இருந்தால் வசதி வாய்ப்பு கிடைக்கும். செல்வம், செல்வாக்கு அசையா சொத்து யோகம் இருக்கும். ஐந்தாம் வீட்டில் குரு இருந்தால் நல்ல அறிவாற்றல் ஏற்படும். சிறந்த குடும்ப வாழ்க்கை அமையும். ஐந்தில் குரு தனித்து இருந்தால் புத்திர தோஷம் ஏற்படும். ஆறாம் வீட்டில்  குரு இருந்தால் எதிரிகளை வெல்லும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரம் ஆரோக்கியம் அமையும். ஆறாம் வீட்டில் குரு பலம் இழந்து இருந்தால் வயிறு கோளாறு ஏற்படும். குரு ஏழாம் வீட்டில் சுபர் சேர்க்கை பார்வையுடன் இருந்தால் மன வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும்.  நல்ல  வசதியான பெண் மனைவியாக அமைவாள். குரு பலம் இழந்தால் மண வாழ்க்கையில் பிரச்சினை ஏற்படும்.

எட்டாம் வீடான ஆயுள்  ஸ்தானத்தில் குரு இருந்தால் நீண்ட ஆயுள் ஏற்படும்.  குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும்.ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் குரு  இருப்பது நன்மை. தன வரவு கிடைக்கும். பூர்வீகத்தால் அனுகூலம் கிடைக்கும். பத்தாம் வீட்டில் குரு இருந்தால் பதவி யோகம் தேடி வரும். பொதுக்காரியங்களில் ஈடுபாடு இருக்கும். குரு தனித்து இருந்தால் தொழிலில் தடைகள் அதிகரிக்கும்.

லாப ஸ்தானமான 11ஆம் வீட்டில் குரு இருந்தால் தாராளமான தன வரவு கிடைக்கும். 12 ஆம் வீடான விரய ஸ்தானத்தில் குரு இருந்தால் வீண் செலவுகள் ஏற்படும். 12ஆம் வீட்டில் குரு அமர்ந்து சுபரான புதன், சுக்கிரன் பார்வை பெற்றால் நிம்மதியான இல்லற வாழ்க்கை அமையும்.

குரு பகவான் தரும் யோகங்கள்

குரு பகவான் தரும் யோகங்கள் பலப்பல. மிக முக்கியமான நான்கு யோகங்கள். கஜகேசரி யோகம், ஹம்ஸ யோகம், அஷ்டலட்சுமி யோகம், அகண்ட சாம்ராஜ்ய யோகம். இது தவிர, குரு சந்திர யோகம், குரு மங்கள யோகம் உண்டு.

குருவுக்குச்  செய்ய வேண்டிய வழிபாடு

குருபகவான் வண்ணமயமான எட்டு குதிரைகள் பூட்டிய தேரில் அமர்ந்து வருவார். இவர் திசை  குபேர திசை (வடக்கு). இவருடைய ஜென்ம நட்சத்திரம் சுக்கிரனுடைய நட்சத்திரமான பூராட நட்சத்திரம்.  இவருக்கு உரிய நாள் வியாழக்கிழமை. அவிட்டம், பூராடம் நட்சத்திரங்களில் செய்யப்படும் காரியங்கள் குருபகவானை மகிழ்விக்கும். எனவே குரு கிரகத்தின் வழிபாடுகளை இந்த நாட்களில் நடத்த வேண்டும். குரு பகவானுக்கு உரிய நைவேத்தியங்கள் பசுவின் பால்,  சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், வெள்ளை கொண்டை கடலை சுண்டல்.

குருபகவான் அதிதேவதை இந்திரன். பிரத்யதி தேவதை நான்முகன்.

குரு என்றாலே இருளை அகற்ற வல்லவர் அல்லவா! எனவே குரு பகவானுக்கு தீபம் ஏற்றி பரிகாரம்  செய்வது  மிகவும் சிறந்தது. தினமும் பூஜை அறையில், அகலில் நெய் தீபம் ஏற்றுவதன் மூலம், குருபகவானை சாந்தம் அடையச் செய்யலாம். குரு தசா புத்தி அந்தரம் நடைபெறும் காலங்களில், அரச மரத்தை ஒட்டி உள்ள ஆறு, குளம் போன்றவற்றில் மூழ்கி, அரச மரத்தை சுற்றி வர வேண்டும். இது வியாழக்கிழமை  செய்யலாம்.  இதற்கு “வியாழ முழுக்கு” என்று சொல்வார்கள். குரு பகவான் பூஜித்த மூன்று தலங்கள் தமிழகத்தில் உண்டு. தென்குடித்திட்டை, திருவலிதாயம், திருச்செந்தூர்.வருடம் ஒரு முறை இக்கோயில்களுக்கு சென்று வருவது குரு தோஷங்களை குறைக்கும்.

குரு பார்க்க கோடி புண்ணியம் என்று சொல்வது எப்படி?

நிறைவாக குரு பார்க்க கோடி புண்ணியம் என்று சொல்வது எப்படி என்பதற்கு ஒரு சின்ன கதை. ஒரு முறை, ஒரு குழந்தைக்கு ஜாதகம் கணித்தார் முனிவர். ஜாதகத்தை கணித்த அவர் குரு பகவானிடம் சொன்னார். “இந்த குழந்தைக்கு ஆயுள் தோஷம் இருக்கிறது. இது இன்னும் சில நாட்களில் ஒரு பாம்பு கடித்து இறந்து விடும்”. அப்படிச் சொல்லிவிட்டு அவர் சொன்னார்.

“ இதுவரை என்னுடைய ஜாதக கணக்குகள் தப்பியது இல்லை. அதைப்போல இந்த நிகழ்வும் நிச்சயமாக நடைபெறும்.”

சொல்லிவிட்டு ஆயுள் பங்கம் நடைபெறும் நாளில் நீங்களும் என்னுடன் வாருங்கள் சென்று பார்ப்போம் என்று அழைத்தார். அந்த ஆயுள் பங்கம் நிகழ வேண்டிய நாளும் வந்தது.

தன்னுடைய ஜோதிட சாஸ்திரம் மிகச்சிறந்த குருவின் முன்னிலையில் செய்முறையாக நிறைவேறப்  போவதை நினைத்தார். குருவை  அழைத்துக்கொண்டு அந்த காட்சியைக் காணச் சென்றார். இருவரும் ஒரு இடத்தில் காத்திருந்தார்கள். சொன்ன நேரமும் வந்தது.

ஜோதிட முனிவர் சொன்னார்.

“பாருங்கள். துல்லியமாக இந்த குழந்தைக்கு உயிர் பங்கம் ஏற்படக்கூடிய நேரம் இன்னும் சில வினாடிகளில் வந்து விடுகிறது ” குரு கேட்டார்.

“நீங்கள் நாகம் கடித்து இந்த குழந்தை இறந்துவிடும் என்று சொன்னீர்கள். எங்கும் நாகம் காணோமே. அந்த குழந்தை நன்றாகத்தானே இருக்கிறது” என்று சொன்னவுடன் ஜோதிடர் உற்றுக் கவனித்தார்.

“இந்த நேரத்தில் நாகம் வந்திருக்க வேண்டுமே, என்ன காரணம் வரவில்லை ” என்று நினைத்து அவர் பார்த்த பொழுது அந்த வீட்டின் ஒரு மூலையில் இருட்டான பகுதியில் இருந்து ஒரு நாகப்பாம்பு  வந்தது.

தம்  ஜோதிடம் மிகத் துல்லியமாக நடைபெற இருக்கிறது என்ற மகிழ்ச்சியில் பக்கத்தில் இருந்த குரு பகவானிடம் சொன்னார் .

“பாருங்கள். அதோ பாருங்கள்.  நாகம் வந்து குழந்தையின் அருகில் நிற்பதைப்  பாருங்கள்”. குரு அந்தக்  குழந்தையையும், நாகத்தையும் உற்றுப் பார்த்தார். வினாடிகள் நகர்ந்தன. ஆனால் அந்த நாகப்பாம்பு அங்கும் இங்கும் கொஞ்சநேரம் இருந்ததே தவிர குழந்தையை ஒன்றும் செய்யவில்லை. நேரம் கடந்து கொண்டிருந்தது. சற்று நேரத்தில் அந்த பாம்பு வந்த வழியே திரும்பி விட்டது. இப்பொழுது ஜோதிடருக்கு குழப்பம்.  “ஏன் இந்த நிகழ்வு நடைபெறவில்லை? இதுவரை நம்முடைய ஜோதிட கணக்குகள் எதுவும் தவறியது இல்லையே? இப்போது கணிப்பில் என்ன தவறு நிகழ்ந்தது?” என்று மறுபடியும் அந்த ஜாதக கட்டங்களை  பார்த்தார். பார்த்துவிட்டு உதட்டை பிதுக்கினார்.

“என்ன காரணத்தினால் இந்த தவறு நிகழ்ந்தது என்று தெரியவில்லையே” என்று நினைத்துக்கொண்டு, தனக்கு ஜோதிடத்தை கற்பித்த குருவிடம் போய் காரணத்தைக்  கேட்டார்.

“இந்த நேரத்தில் இந்த குழந்தையின் உயிர் பிரிய வேண்டுமே, ஆயுள் தோஷம் என்று கணக்கில் வருகிறதே,”  என்று கேட்டார். “என் கணக்கில்  ஏதாவது தவறா?” என்று கேட்க ,அவருக்கு கற்பித்த குருவும் ஜாதக கட்டங்களையும் கணக்குகளையும் பார்த்துவிட்டு,  “நீ சரியாகத்தான் போட்டு இருக்கிறாய். ஒரு தவறும் இதில் இல்லை. இந்த நிகழ்ச்சி நடைபெற்று இருக்கவேண்டும். நடைபெறவில்லை.”

அப்போது ஜோதிடர் குருவிடம் கேட்டார். “இந்த நிகழ்வு நடைபெறாமல் இருக்க வேண்டும் என்றால் என்ன பரிகாரம் ஆகியிருக்க வேண்டும்?” ஜோதிடரின் குரு சொன்னார்.“ஒரே ஒரு பரிகாரம் தான். குரு பார்த்து இருக்க வேண்டும். ஆனால் இந்த ஜாதகத்தில் குரு பார்வை இல்லையே.” அப்பொழுதுதான் ஜோதிடர்சொன்னார்.  “நீங்கள் சொன்னது சரிதான். ஜாதகத்தில் தான் குரு பார்வை இல்லையே தவிர, நான் இந்த நிகழ்வை பார்ப்பதற்காக அசல் குருவை அழைத்து சென்றிருந்தேன்.

அவர் அந்தக்  குழந்தையைப் பார்த்தார். இந்த நிகழ்ச்சி நடந்திருக்க வேண்டிய நேரத்தில் சர்வ வல்லமையுள்ள நிஜ குருவே தனது திறனுள்ள பார்வையால் குழந்தையைப் பார்த்ததால், குழந்தையின்   ஆயுள் பங்கம் பங்கப்பட்டு, ஆயுள்  யோகமாக மாறி விட்டது” என்று சொன்னார். இதைத்தான் குரு பார்க்க கோடி நிவர்த்தி என்று சொல்லுகின்றார்கள். அப்படிப்பட்ட குரு பகவானை தினந்தோறும் வணங்கி தியானித்தால், குரு அருள் என்பது பூரணமாக கிடைக்கும். அதில் எந்தச்  சந்தேகமும் இல்லை.

Related Stories: