×

கடக ராசிப் பெண்

கடக ராசி, கடக லக்கினம் ஜூன் 21 முதல் ஜூலை 22க்குள் பிறந்த பெண்கள் கீழ்க்காணும் பண்புகளைப் பெற்றிருப்பர். கடக ராசியின் அதிபதி சந்திரன் மனோகாரகன் மற்றும் மாத்ருகாரகன் என்பதால் கடக ராசிப் பெண் மனதளவில் மிகவும் மென்மையானவர், தாய்மைப் பண்பு மிக்கவர். தற்காத்துக் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்து சோர்விலாள் பெண் என்ற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க வாழும் குலக்கொடி.தன் பாதுகாப்பில் அதிகம் கவனம் செலுத்துவார்.

தன் குடும்பம், தன் சாதி, சனம், ஊர், உறவு, குலம் கோத்திரம், நாடு நகரம் என்று இருப்பார். வெளியிடங்களுக்குப் போகவோ மற்றவர்களைப் பார்த்துப் பேசவோ பழகவோ அஞ்சுவார் அல்லது தயங்குவார். அவர் அதையெல்லாம் விரும்பமாட்டார். ஆனால் ஒருவரிடம் நம்பிப் பழகிவிட்டால் தனது உடல் பொருள் ஆவி அனைத்தையும் தரச் சித்தமாக இருப்பார். இவருக்குத் தற்காப்பு, குடும்பத்தின் பாதுகாப்பு என்பதில் கவனம் அதிகம்.

பெரும்பாலும் கடக ராசி பெண்கள் இல்லத்தரசிகளாக இருப்பதையே விரும்புவர். தாய்மை உணர்வுடன் கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பர். சமையலில்தான் இவர்கள் மையல் அடக்கம். கணவனையும் ஒரு பிள்ளையைப் போலவே நடத்துவர். பிள்ளைகள் திருமணமாகி போனாலும் தன் அருகில் இருக்க வேண்டும் என்று விரும்புவர்.

பெரிய குடும்பஸ்திரி

பழமையில் ஊறிப் போன இவர்கள் மாமியார், நாத்தனார், கொழுந்தன் என்ற பெரிய குடும்பங்களை விரும்புவர். பெரிய குடும்பம் என்பது கடக ராசியின் தனிப்பெரும் விருப்பம். அனைவரது வீட்டு விசேஷங்களிலும் கலந்து கொள்வர். உறவினர் வேண்டும் என்ற எண்ணத்துடன் உரிமையாக உறுத்தாக பழகுவர். இவர் மட்டும் வீட்டில் இருக்க மற்ற பெண்கள் வெளி வேலைக்குப் போனாலும் இவர் அவர்களை சந்தோஷமாக அனுப்பிவிட்டு வீட்டில் இருந்து தனது வேலைகளை மகிழ்ச்சியுடன் பார்ப்பார். இவரிடம் போட்டி பொறாமை இருக்காது.

தாய்மைப்பண்புக்கு தீய எண்ணம் கிடையாதல்லவா!  இவர் ஒரு குடும்பத்தின் குத்துவிளக்கு. சிறந்த ஆலோசகர். வழிகாட்டி, பெண்களின் முன்மாதிரி. மற்றவர்களின் துன்பங்களைத் துடைப்பவர். நாத்தனார் ஒர்ப்படிகளுடன் இணைந்து பாமா விஜயம் படத்தில் வரும் ‘ஆணி முத்து வாங்கி வந்தேன் ஆவணி வீதியிலே’ என்று பாட்டு பாடியபடி சந்தோஷமாக வீட்டு வேலைகளையும் விசேஷ பூஜைகளையும் செய்வர். வீடுதான் இவருக்கு சொர்க்கம் பாதுகாப்புக் கோட்டை. அதில் இவர் ஒரு முடிசூடா மகாராணி.

மனோரஞ்சனி

கடக ராசிப் பெண்கள் நிறைய வீட்டு வேலைகளை வீடு அல்லது குடும்பம் சார்ந்த வேறு பல வேலைகளைப் பிரியத்துடன் செய்வர். அதே சமயம் வாயு வேகம், மனோ வேகத்தில் இவர்கள் கற்பனை செய்வர். கற்பனைக் குதிரை கட்டற்று பறக்கும். அழகழகாகக் கோலம் போடுவர். தோட்டத்தை அழகாகப் பராமரிப்பர். அனைத்து விழாக்களையும் விரதங்களையும் பூஜைகளையும் கர்ம சிரத்தையாகச் செய்து முடிப்பர். பெரியவர்களை மதிக்கும் இவர்கள் மூத்தோர் சொன்ன சாஸ்திர சாங்கியங்களை கிரமமாகச் செய்வர்.

சாமி பாட்டு, சுலோகம், போன்றவற்றை மனதுக்குள் சொல்லிக்கொண்டே வேலைகள் செய்வர். இவர் வீட்டு வேலை, தையல் வேலை, தோட்ட வேலை என்று எதைச் செய்துகொண்டிருந்தாலும் மனதுக்குள் ஏதேனும் சிந்தனை அல்லது கற்பனை ஓடிக்கொண்டே இருக்கும். கவலைகளைப் பிறரிடம் சொல்லாமல் தனக்குள்ளே புதைத்துக் கொள்வர். யாராவது இவருக்கு நல்ல பேச்சுத் துணை கிடைத்தால் அவர் தான் இவரது ஆப்த நண்பர்; உயிர்த் தோழி; ஆபத்பாந்தவன்; அநாதரட்சகன் எல்லாம். இவருக்குப் பேச பிடிக்கும்.

யாராவது தன் அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தால் போதும்; இவர் அனைத்து வேலைகளையும் ஆசையாகச் செய்து முடிப்பார். இவர் ஒரு விடுதலை விரும்பி. பல நேரங்களில் தனிமையை விரும்புவார். அவ்வாறு தனியாக இருக்கும் போது தானும் தனது நினைவுகளுமாக இருந்து தனக்கு தானே ஏதாவது கற்பனை செய்து கொண்டு வேலைகளைச் செய்வார். இதனால் இவர் இழுத்துப்போட்டுக்கொண்டு வேலைகளைச் செய்வது போலத் தோன்றும். பிறர் தொந்தரவு இல்லாமல் தானே செய்வது சில சமயம் இவருக்கு எளிதாக இருக்கும்.  

நேர்மையின் சின்னம்

பொதுவாக கடக ராசி பெண்ணுக்குத் துரோகம், பொய், பித்தலாட்டம், களவு வராது. இவர் தெளிந்த நீரோடை போன்றவர்.  எனவே எல்லோரிடமும் நேர்மையாகப்  பழகுவார். தனக்குத் தெரிந்தவர்களிடமும் அதே நேர்மையை எதிர்பார்ப்பார்.  யாராவது இவருக்குத் தெரியும்படி  தவறு செய்தால் உடனே பெற்றோரிடமோ கணவரிடமோ சொல்லிக்கொடுத்துவிடுவார். அடுத்தவர் தவறு செய்வதைப் பார்க்க இவருக்கு சகிக்காது. உடனே அவரைத் திருத்தி நல்வழிப் படுத்த வேண்டுமென்று நினைப்பாரே தவிர அவரது குற்றத்தை பறைசாற்ற மாட்டார், தூற்ற மாட்டார்.

புறம் பேச மாட்டார். நூறு சதவித நேர்மையை கற்பை ஒழுக்கத்தை இவர் தன் கணவரிடமும் மற்றவர்களிடமும் எதிர்பார்ப்பார். நூறு சதவிதம் பொஸசிவாக இருப்பார். தன்னிடம் எதையாவது மறைத்தால் கடலைப் போல் பொங்கி எழுவார். சாகத் துணிவார். உலகமே இருண்டுவிட்டதைப் போல கலங்கி அழுவார்.

உள்ளொளி உள்ளவர்

சந்திரனின் ராசி என்பதால் இவருக்கு உள் ஒளி இருக்கும். இவரிடம் எதையும் மறைக்க முடியாது. பொய் சொன்னால் உடனே கண்டுபிடித்து விடுவார். ஒருவரைப் பார்த்ததும் இவர் நல்லவரா மனதில் கள்ளம் உள்ளவரா என்பதைக் கண்டு கொள்வார். பொய் புரட்டு பித்தலாட்டம் செய்வோரை நேரில் கண்ணுக்கு கண் பார்ப்பார். இவர் அமைதியாகத் தான் பார்ப்பார். ஆனால் அவர்கள் அப்படியே தலை கவிழ்ந்துவிடுவர். இவர் பேசாமல் அந்த இடத்தை விட்டுப் போய்விடுவார். அடுத்தவர்களின் குற்றம் குறைகளை வெளியே பேசி மகிழும் அல்லது கிண்டலாகப் பேசி சிரிக்கும் குணம் கிடையாது.

இன்ப துன்ப மாற்றங்கள்

கடக ராசிப் பெண் சந்திரனின் ஆதிக்கத்தில் இருப்பதால் சந்திரன் தேய்ந்து வளர்வதைப் போல இவருக்கும் மன நிலை இன்பமாகவும் துன்பமாகவும் [MOOD SWING] அடிக்கடி மாறும். ஒரு நொடியில் இவர் மனம் மாறிவிடும்.  தவறு செய்தவரிடம் கோபித்துப் பேசிக்கொண்டிருக்கும் போதே சந்தோஷமாக பேசத் தொடங்கிவிடுவார். ஐயோ இன்று அம்மாவிடம் மாட்டினோம் செத்தோம் என்று பயந்துகொண்டே வந்த பிள்ளைகள் அம்மா மனம் மாறியதும் சந்தோஷப்படுவர். பசிக்குதும்மா என்று சொல்லிவிட்டால் எந்தக் கோபம் இருந்தாலும் இவர் மனம் இளகிவிடும் நல்ல சாப்பாடு தயாரிக்கப் போய்விடுவார்.

அன்னபூரணி

கடக ராசிப் பெண் சமையலில் கெட்டிக்காரர். எத்தனை பேர் வீட்டுக்கு விருந்தினர் வந்தாலும் நன்கு சுவையாக சமைத்து அழகாகப் பரிமாறி விடுவார். பசி என்ற குரல் கேட்டால் கலங்கிவிடும் தாயுள்ளம் படைத்தவர். சாப்பாடு போட்டே எல்லோரிடமும் ‘நீங்க நல்லா இருக்கணும் தாயி உங்க பிள்ளைகுட்டி எல்லாம் நல்லா இருக்கணும்’ என்ற வாழ்த்தைப் பெற்றுவிடுவார். விதவிதமான ஊறுகாய் விதவிதமான பொடிகள்  விதவிதமான வற்றல், வடகம்  என்று வீட்டில் பல வகை உணவுகளைத் தயார் நிலையில் வைத்திருப்பார். புதுப் புது உணவுகளை சமைத்து பார்ப்பதில் ஆர்வம் உள்ளவர்.  

நிஷாகந்தி

கடக ராசிப் பெண் இரவில் பார்க்க மிகுந்த அழகுடன் களையாகத் தோன்றுவார்.  பௌர்ணமி நாட்களில் படு உற்சாகமாக இருப்பார். அமாவாசை தினம் வரும் போது மனச் சோர்வுடன் இருப்பார். இரவில் இவருக்குத் தூக்கம் வராது. ஏதாவது கற்பனை செய்துகொண்டே படுத்திருப்பார். இரவில் படம் வரைவது, பாட்டுக் கேட்பது, எழுதுவது, படிப்பது என்றால் இவருக்கு மிகவும் பிடிக்கும். பெரிய பெரிய புத்தகங்களை வாசித்துக்கொண்டிருப்பார். அல்லது விடிய விடிய பழைய படங்களைப் பார்ப்பார்.

காதலும் கல்யாணமும்

கடக ராசிப் பெண்ணுக்கு காமத்தில் அதிக ஈடுபாடு கிடையாது. அவர் அதிலும் பழைய பஞ்சாங்கமாகவே இருப்பார். ஆனால் காதல் ராணி. காதலிப்பதையும் காதலிக்கப்படுவதையும் மிகவும் விரும்புவார். ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தீவிர நம்பிக்கை கொண்டவர். நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று நீரினும் ஆரளவின்றே என்று குறுந்தொகை கூறியதைப் போல இவர் தன்னுடைய கணவர் மீது வைத்திருக்கும் காதல் அளப்பரியது.

அதே காதலை இவரும் எதிர்பார்ப்பார். இவர் படு ‘ரொமான்டிக்காக’ இருப்பது இவர் கணவருக்கு கிடைத்த பெரிய வரம். நிமிடத்துக்கொரு சந்தோஷத்தை தன் கணவருக்குத் தர விரும்புவார். அதை உணர்ந்துகொள்ளும் கணவர் கிடைத்தால் இவரே உலகின் ஒரே அதிர்ஷ்டசாலிப் பெண்.  ஆனால்கணவர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் சகித்துக்கொண்டு தனது  ஆசைகளை மறைத்துக் கொண்டு வாழும் அதிசயப் பெண் இவர்.

பெரும்பாலும் கடக ராசிப் பெண்கள் பெற்றோர் பார்க்கும் கணவரையே திருமணம் செய்வர். அல்லது தங்கள் குடும்பத்துக்குள் அத்தை மகன், மாமன் மகனை காதலிப்பர். சாதி மதம் பார்க்காமல் காதலிப்பவர்கள் இவர்கள் இல்லை. ஜாதகத்தில் சனி, ராகு, கேது சேர்க்கை சந்திரன் அல்லது லக்கினத்துக்கு ஏழாம் இடத்தில் இருந்தால் கலப்புத் திருமணம் நடக்கும். அதற்குப் பிறகு ஏதேனும் ஒரு மதம் அல்லது சாதிக்குள் நிற்பார்.

மதம் அல்லது சாதி  மாறினால் அதுவாகவே ஆகிவிடுவார். இரட்டை வாழ்க்கை என்பது இவர்களிடம் காண முடியாது. காதலுக்காக உயிரையும் கொடுப்பார். சில பெரும் பணக்கார கடக ராசிப் பெண்கள் ஏழைகளைத் திருமணம் முடித்து வறுமையிலும் செம்மையாக வாழ்வதை உலக நடப்பில் காணலாம். கடக ராசிப் பெண்கள் நல்ல வசதியான இளைஞர்களை தவிர்த்துக்கொண்டே வரும்போது திடீரென்று தனது மனதுக்குப் பிடித்த ஒருவருக்கு சம்மதம் தெரிவித்து உயிருக்கு உயிராய் காதலிப்பார். அவர் படிக்காதவராகவோ ஏழையாகவோ இருக்கலாம்.

ஆனால் இப்பெண்ணின் தீவிர ரசிகராக இருப்பார். பணம், பதவி, செல்வாக்கு ஆகியவை எதுவும் இப்பெண்ணுக்கு ஒரு பொருட்டல்ல. காதலும் ரசனையுமே கடக ராசி பெண்ணுக்கு முக்கியம். அதனால் காதலித்துத் திருமணம் முடித்தவருடன் தமிழும் சுவையும் போல நிலவும் ஒளியும் போல வாழ்வார்.

தொழில்

கடக ராசிப் பெண் பெரும்பாலும் சம்பளத்துக்கு வேலைக்குப் போக மாட்டார். அவர் வேலைக்குப் போனாலும் அது அவரது மனதுக்கு திருப்தியாக அமைய வேண்டும்; பணியிடமும் அவருக்கு ஒரு வீடு போலத்தான். அங்கும் உயிரைக் கொடுத்து வேலை செய்வார். சம்பளம் இவருக்கு ஒரு பொருட்டே அல்ல. அலுவலகம் அல்லது பணியிடம் இவருக்கு முக்கியம். அதற்கு விசுவாசமாக இருக்க வேண்டும். கம்பெனி பெயர் கெட்டுப் போகக் கூடாது.

இவர் கற்பனைத் திறம் உள்ளவர் என்பதால் கதை, கவிதை எழுதிச் சிறப்படையலாம். தோட்டம் அமைத்தல், செடி வளர்த்தல், கனி மரம் வளர்த்தல், [ஹார்ட்டிகல்ச்சர்] போன்ற துறை களில் ஈடுபடலாம். அழகு சார்ந்த தொழில்களைச் செய்யலாம். உள் அலங்காரம் [architect, interior designer], அணிமணிகள் தயாரித்தல்; உடை வடிவமைத்தல் [ஃபேஷன் டிசைனர்], இரக்க சிந்தனை கொண்டவர் என்பதால் மருத்துவத் துறை இவருக்கு ஏற்றதாகும்.

மருத்துவர் [அறுவை சிகிச்சை நிபுணர் கிடையாது] செவிலி, அநாதை இல்லம், முதியோர் இல்லங்களில் கேர் டேக்கர் பணிகள் இவருக்குப் பொருத்தமானவை.  
வெளியே அலுவலகத்துக்குப் போகாமல் ஆன்லைனில் செய்யக் கூடிய தொழில்கள் எதையும் செய்யலாம். அதுவும் அவர் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ஓய்வாக இருக்கும் நேரம் மட்டும் தான் செய்வார். மக்களுக்கு நன்மை செய்ய நினைக்கும் அரசியல்வாதி ஆகலாம்.

புதிய கட்சிகளில் ஆரம்பத்தில் இது போன்ற பெண்கள் ஆர்வமாக ஈடுபடுவர். பின்பு கட்சி ஆட்சிக்கு வந்ததும் வின்னி மேன்டலா போல கழட்டிவிடப் படுவர். அல்லது இவரே ஒதுங்கி விடுவார். சேமிப்பு கடக ராசிப் பெண்ணுக்கு சிக்கனமும் சேமிப்பும் இரண்டு கண்கள் ஆகும். வீட்டில் சிறுவாடு சேர்த்தல் என்பது இப்பெண்களின் பிறவிப் பழக்கம் ஆகும். ஒரு பைசா கூட வீணாக்காமல் கடையில் தேவையில்லாமல் எந்தப் பொருளையும் வாங்காமல் சிக்கனமாக இருப்பார். பிள்ளைகளுக்கும் பெரியவர்களுக்கும் வீட்டில் பண்டங்களைச் செய்து கொடுப்பார்.

அனாவசியமாக செலவு செய்ய மாட்டார். கோயில்களுக்கு குடும்பத்துடன் அதிகம் போக விருபும்வார். ஆடம்பரச் செலவை அறவே  வெறுப்பார். திடீரென்று ஏதேனும் மருத்துவ செலவு வந்துவிட்டால் என்ன செய்வது என்று அஞ்சுவார். கையில் பையில் பெட்டியில் வங்கியில் என்று பல இடங்களில் பணத்தைச் சேமித்து வைப்பார். ஒன்று கிடைக்காவிட்டாலும் இன்னொன்று அவசரத்துக்குக் கிடைக்கும் அல்லவா என்று கருதுவார். அவசர தேவைக்கு இவரது உறவினர்களோ நண்பர்களோ கேட்டால் கொடுத்து உதவுவார். மொத்தத்தில் இவர் ஒரு சிக்கனத் திலகம்.  

யதார்த்தவாதி அல்ல; லட்சியவாதி

கடக ராசிப் பெண் இந்தக் கலிகாலத்தில் ஓர் அபூர்வப் பிறவி. ‘தீமை கண்டு பொங்குவாய் வா வா வா’ என்று பாரதியார் அழைத்த புதுமைப் பெண். தீமை மற்றும் அநீதியைக்  கண்டால் இவருக்குக் கோபம் கொந்தளிக்கும்; ஆனால் நல்லவர்களை அன்பால் அரவணைப்பார். தாய் போலப் பாதுகாப்பார். ஒரு நொடியில் தனது கோபம் மறைந்து சமாதானமாவார். இவர் கோபத்தில் கொட்டிய வார்த்தைகள் முள்ளைப் போல குத்தும். இவர் பார்த்த ஒரு பார்வை ‘நீயெல்லாம் ஒரு மனிதனா’ என்று வாழ்நாள் முழுவதும் கேட்டுக்கொண்டே இருக்கும்.

நேர்மை, ஒழுக்கம், விசுவாசம், நன்றி என்ற வார்த்தைகள்தான் கடக ராசிப் பெண்ணின் வாயிலிருந்து வரும். இதே பண்புகளை இவர் மற்றவரிடமும் எதிர்பார்ப்பதால் வேறு  பல ராசிக்காரர்களுக்கு இவர்களுடன் ஒத்துப் போவதில்லை. அண்டை அயலாரிடம் பழக யோசிப்பார். பழகினால் இவர் அவர்களுக்கு ஒரு தாயாக விளங்குவார். ஓடி ஓடி உதவுவார். மற்றவர்களுக்காக இவர்  சிந்திப்பார். இவரைத் தோழியாகப் பெற்றவர்கள் பாக்கியவான்கள். ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.

இவர் அளவாக அழகாகப் பழகுவார். யாரிடமும் அதிக உரிமை எடுத்துக்கொள்ள மாட்டார். அவ்வாறு உரிமையுடன் பழகினால் தன்னை யாரும் வெறுத்து விடுவார்களோ புறக்கணித்து விடுவார்களோ என்று அஞ்சியபடியே அனைவரிடமும் அளவாகப் பழகுவார். இவரால் சகித்துக்கொள்ள முடியாத பெரும் கவலை மற்றவர்கள் இவரை அலட்சியப்படுத்துவதாகும். கடக ராசிப் பெண் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்தவர். சில நேரங்களில் இவருடைய நடத்தை யதார்த்தத்துக்கு ஒத்துவராமல் லூசு போல இருப்பதாக மற்றவர்களுக்குத் தோன்றும்.

ஆனால் அது பற்றி இவர் கவலைப்பட மாட்டார். இவர் ஒரு ‘பெக்யுலியர் டைப்’. தன்னை நேசிக்கும் சொந்த பந்தங்கள், நண்பர்கள், அண்டை அயலாரைப் பொக்கிஷமாக கருதி வாழ்வார். யதார்த்தத்துக்குப் பொருந்தாத இவரது லட்சிய வாதத்தைக் குறித்து மற்றவர்கள் கவலைப்பட்டாலும் இவர் தன்னுடைய கொள்கை, கோட்பாடுகள் குறித்து மகிழ்ச்சியாக இருப்பார். மனமகிழ்ச்சி தானே வாழ்க்கையில் முக்கியம். அது இவரிடம் ஏராளம் உண்டு. இவரிடம் பழகுவோருக்கும் தந்து மகிழ்ச்சியைப் பகிர்ந்தளிப்பார்.

Tags :
× RELATED அனந்தனுக்கு 1000 நாமங்கள்!