×

பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்று அழைக்கிறோம்?

?பெற்றவர்களை ஏன் அம்மா அப்பா என்று அழைக்கிறோம்?
– ராமகிருஷ்ணன், விழுப்புரம்.

தமிழ் மொழியில் மூன்று அடிப்படையான எழுத்துக்கள் இருக்கின்றன. ஒன்று உயிர் எழுத்து. இன்னொன்று மெய்யெழுத்து. மூன்றாவது இந்த இரண்டும் சேர்ந்த உயிர் மெய் எழுத்து. நம்முடைய உடம்பில் உயிரும் உண்டு. மெய் என்று சொல்லப்படுகின்ற உடலும் உண்டு. எங்கோ இருந்த உயிருக்கு ஒரு உடம்பைத் தேடிக் கொடுத்து உலவ விட்டவர்கள் என்பதால் பெற்றவர்களை அம்மா அப்பா என்று அழைக்கின்றோம். அம்மா அப்பா எனும் வார்த்தைகள், உயிரெழுத்து (அ), மெய் எழுத்து (ம்), உயிர்மெய் எழுத்து (மா) என்ற மூன்று எழுத்தின் கலவையாக இருப்பதை கவனிக்க வேண்டும். ஒரு குழந்தைக்கு உயிரை கொடுப்பவர் தந்தை. அதை கருவறையில் வைத்து அந்த உயிருக்கு மெய் (கண், காது, மூக்கு, உடல் உறுப்புகள்) கொடுப்பவள் தாய். இந்த உயிரும் மெய்யும் கலந்து உயிர் மெய்யாக வெளிப்படுவது குழந்தை. அதனால்தான் நம்மை பெற்றவர்களை நாம் அம்மா அப்பா என்று அழைக்கின்றோம்.

?கற்றாரை கற்றாரே காமுறுவர் என்கிற பழமொழி சரியா? நடைமுறையில் சரியாக வருகிறதா?
– லட்சுமி, சிவகங்கை.

“கற்றாரை கற்றாரே காமுறுவர்’’ என்றிருக்கிறதே. ஆனால், நடைமுறையில் அப்படி இல்லையே சுவாமி. ஒரு வித்வானுக்கு இன்னொருவரைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறதே. ஏழாம் பொருத்தமாக அல்லவா இருக்கிறது.
‘‘அப்படியே எல்லா விஷயங்களையும் எடுத்துக் கொள்ளக்கூடாது… ‘‘படிச்சவன் யோக்கியன்’’ என்று சொல்வது போலத்தான். நடைமுறையில் அப்படி இப்படித்தான் இருக்கும்.
‘‘இல்லை தெரியாமலா இப்படி சொல்லி இருப்பார்கள்’’.
‘‘அப்படியானால் இப்படி பொருள் கொள்ளுங்கள்… சரியாக இருக்கும்…’’
கற்றாரை, கற்று யாரே (கற்றாரே) காமுறுவர்? என்று எடுத்து கொள்ளுங்கள். நடைமுறைக்கு சரியாக வரும்.

?பல ஆண்டுகளாகவே இந்து மதம் கூறும் மறுபிறவித் தத்துவத்தை மறுப்பவர்களுக்கு, அதைப்புரிய வைப்பது எப்படி?
– ஆர். உமாராமர், நெல்லை.

போன பிறவியில் தான் யாராக இருந்தேன்; எந்த ஊர்; அப்போது பெயர் என்ன; உறவினர்கள் யார் யார்? எனும் தகவல்களை எல்லாம் சொல்லி, ஆச்சரியப் படுத்திய நிகழ்ச்சிகள் பல. அவையெல்லாம் பத்திரிகைகளிலும் வெளியாயின. அதற்கும் மேலாக இக்கேள்விக்கு காஞ்சி ஸ்ரீ மகா சுவாமிகள் கூறிய விளக்கத்தைப் பார்க்கலாம். (மிகச் சுருக்கமாக) அயல்நாட்டைச் சேர்ந்த வேற்றுமதத்தவர் ஒருவர், ஸ்ரீ மகா சுவாமிகளைத் தரிசிக்க வந்தவர், இந்த மறுபிறவியைப் பற்றிக் கேட்டார். அவரை அருகில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி, அன்று பிறந்திருக்கும் குழந்தைகளைப் பற்றிய தகவல்களைச் சேகரித்து வரச் சொன்னார். அவரும் அப்படியே செய்தார்.

வந்தவுடன் அவரிடம் ஸ்ரீ மகா சுவாமிகள், ‘‘ஒரு ஜீவன் பிறந்து, அதன்பின் தவறுகள் செய்து கஷ்டத்தை அனுபவிக்கிறது என்பது இருக்கட்டும். இப்போது பிறந்த இந்தக் குழந்தைகள் என்ன பாவம் செய்தன? ஒன்று தொட்டிலில்; ஒன்று தரையில்; ஒன்று அங்க ஹீனமாக; ஒன்று வியாதியுடன்; ஒன்று பிறந்த உடனேயே தாயைவிட்டுப் பிரிந்து, உடல் நிலை சரியில்லாததால் தனியாக என்று இவ்வளவு வேறுபாடுகள் ஏன்? ஒன்று, கருணை வடிவான தெய்வத்திற்குக் கருணை இல்லை என்பதாகும்; அல்லது, இந்த ஜீவன்கள் எல்லாம் முற்பிறவியில் செய்த நல்லவை-கெட்டவைகளுக்கு ஏற்ப, இந்தப் பிறவியில் அதாவது மறுபிறவியில் இவ்வாறு பிறந்திருக்கின்றன என்பதாகும். தெய்வத்திற்குக் கருணை இல்லை என்று யாரும் சொல்ல மாட்டார்கள். ஆகவே முற்பிறவியின் நன்மை-தீமைகளின் விளைவே இது என்பதை ஏற்கத்தான் வேண்டும்’’ என்றார் ஸ்ரீ மகா சுவாமிகள்.

?இறை வழிபாட்டில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்று கூறுகிறார் களே! அப்படி என்றால் என்ன?
– கே.பிரபாவதி. மேலகிருஷ்ணன்புதூர்.

தெய்வ வழிபாட்டில் மிகவும் முக்கியமான நான்கு படிகள் இவை. நூல்கள் இவற்றை விரிவாகச் சொல்லும். எளிமையாகச் சொல்ல வேண்டுமானால், பூ, பிஞ்சு, காய், கனி. பூ உதிர்ந்து போகாமல் பிஞ்சாக மாறுகிறது. பிஞ்சு வெம்பிப் போகாமல் காயாக மாறுகிறது. காய் வீணாகாமல் கனியாக மாறுகிறது. அதுபோல், சரியை முதல் ஞானம் வரையிலான நான்கு நிலைகளும், தெய்விகத்தில் நாம் அடைய வேண்டிய நிலைகளையே – வழிகளையே – அவ்வாறு கூறுகின்றன. பக்தியின் மூலமாக, தூய்மையான அன்பு செயல்பாடுகளின் வழியே, படிப்படியாகப் பக்குவம் அடைந்து முன்னேறி முக்தி அடைவதே, சரியை முதலான அந்நான்கும் காட்டும் வழிகள்.

?முருகப் பெருமான் ஆலயங்களில் காவடி சுமந்து சென்று, பக்தர்கள் வழி படுவதன் ஐதீகம் என்ன?
– வண்ணை கணேசன், சென்னை.

காவடி- கா அடி! ‘‘முருகப் பெருமானே! உன் திருவடிகளில் வந்து விழுந்திருக்கும் என்னைக் காப்பாற்று!’’ என்பதற்காகவே, காவடி எடுக்கப்படுகிறது. காவடியில் முன்னும் பின்னுமாக இரு பகுதிகள் உண்டு. அவற்றில் முன்பகுதி, நாம் செய்த புண்ணியம். அது தெய்வத்திடம் நம்மை இழுத்துச் செல்கிறது. பின் பக்கம் இருக்கும் பகுதி நம்முடைய பாவம். அது நம்மைப் பின்னால் இழுக்கிறது. முயன்று, முயற்சி செய்து போய், நாம் தெய்வ அருளைப் பெறுகிறோம். இதுவே காவடியின் ஐதீகம். இடும்பன் மூலமாக வந்தது, இந்தக் காவடி சுமக்கும் ஐதீகம்.

?சங்கடஹர சதுர்த்தி, விநாயக சதுர்த்தி இரண்டுக்கும் என்ன வேறுபாடு?
– அயன்புரம். த. சத்தியநாராயணன்.

விநாயகர் திரு அவதாரம் செய்த திருநாள் – விநாயக சதுர்த்தி. சாபம் பெற்ற சந்திரன், விநாயகரை வழிபட்டுத் தன் கஷ்டங்கள் எல்லாம் நீங்கி, சாப நீக்கம் பெற்ற திருநாள் – சங்க(ஷ்)ட ஹர சதுர்த்தி. சங்கடங்களை-கஷ்டங்களை அபகரிக் கக்கூடிய சதுர்த்தி என்பது பொருள். சங்கடஹர சதுர்த்தி விரதம், தேய்பிறை சதுர்த்தியன்று கடைப்பிடிக்க வேண்டிய விரதம். அன்று விரதம் முடித்து மாலையில் வழிபாடு செய்யும்போது, சதுர்த்தி திதி இருக்க வேண்டும். கஷ்டங்களை – சங்கடங்களை அபகரிக்கக் கூடிய சங்க(ஷ்)டஹர சதுர்த்தி.

?மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள் இருக்கிறார்களா?
– சிவசங்கர், டெல்லி.

நம்முடைய ஆன்மிகப் பெரியவர்கள் மரணத்தைக் கண்டு அஞ்சாதவர்கள். பாரதி, ‘‘காலா உன்னை நான் சிறு புல் என மதிக்கின்றேன்; என் காலருகே வாடா, உன்னை சற்றே மிதிக்கின்றேன்’’ என்று காலனையே அதட்டியவர். “அச்சமில்லை அச்சமில்லை” என்று கம்பீரமாகப் பாடியவர். அப்பர், ‘‘கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணையாவது நம சிவாயவே” என்று துணிந்து நின்றவர்.

ஒருமுறை மாவீரன் நெப்போலியனிடம் ஒருவர் கேட்டார்.

‘‘மரணத்தை பற்றிய அச்சம் உங்களுக்கு இல்லையா?’’
‘‘இல்லை’’
‘‘வியப்பாக இருக்கிறது. மரணத்தை கண்டு அஞ்சாதவர்கள் இருக்க முடியுமா?’’
‘‘நான் இருக்கிறேன், அதுதான் எப்படி?’’ என்று நெப்போலியன் திருப்பிக் கேட்டான்.

Tags : Amma Appa ,Ramakrishnan ,Villupuram ,
× RELATED வெற்றி தரும் வியாசராஜர் அமைத்திட்ட அனுமன்கள்