அனுமன் ஜெயந்தி – 19.12.2025
அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, பல இடங்களில் உள்ள பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயரின் திருத்தலங்களின் சிறிய தொகுப்பை காண்போம்!
திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் “ஸ்ரீ சஞ்சீவிராயர்’’ என்னும் திருநாமத்தில் அனுமன் அருள்பாலிக்கிறார். சுமார் ஒன்பது அடி உயரத்தில் அனுமன் மிக கம்பீரமாக காட்சியளிக்கிறார்.
அமைவிடம்: அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண சமேத ஸ்ரீ சஞ்சீவிராயர் திருக்கோயில், காக்களூர் கிராமம், திருவள்ளூர் மாவட்டம். சென்னை சென்ட்ரலில் இருந்து பல மின்சார ரயில்கள் செல்கின்றன. அதில் பயணித்து, புட்லூரில் இறங்கி ஆட்டோவில் பயணித்தால் காக்களூர் சஞ்சீவிராயர் கோயிலை அடைந்துவிடலாம்.
சென்னை கிண்டியில் “ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி’’ அருள்பாலிக்கிறார். இவருக்கு அமாவாசை அன்று விசேஷ பூஜைகள் நடைபெறுகின்றன.
அமைவிடம்: நம்பர் 635, எம்.கே.என்.ரோடு, மாங்குளம், கிண்டி. (லேண்ட் மார்க்; ரேஸ்கோஸ் பாலம் அருகில்).
பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும், ராமபிரானின் குலதெய்வமான அரங்கநாதஸ்வாமி வீற்றிருக்கும் திருவரங்கத்திற்கும் (ஸ்ரீ ரங்கம்), பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது தலமும், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள, 60-வது சிவஸ்தலமான ஜம்புகேஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் திருவானைக்காவல் என்கின்ற இரு ஊர்களின் எல்லைப்பகுதியில், அனுமன் கோயில்கொண்டுள்ளார். இக்கோயிலை “எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில்’’ என்று அழைக்கிறார்கள்.
அமைவிடம்: திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்தும் அல்லது சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும், ஸ்ரீ ரங்கம் பேருந்தில் ஏறி, திருவானைக்காவல் தெப்பக்குளம் என்ற நிறுத்தத்தில் இறங்கி, எல்லைக்கரை ஆஞ்சநேயர் கோயில் எங்கு உள்ளது? என்று அங்கு யாரை கேட்டாலும் வழி சொல்வார்கள்.
வண்டலூர்- கேளம்பாக்கம் ரோடில் உள்ள புதுப்பாக்கம் என்னும் இடத்தில், கஜகிரி என்னும் மலையின் மீது அனுமன் அருள்கிறார். பெயருக்கு ஏற்றால் போல், மலையானது யானையின் வடிவில் காணப்படுகிறது. மலைக்கு செல்ல, படிகள் மூலமாகவும் செல்லலாம், வாகனங்கள் மூலமாகவும் செல்லலாம்.
அமைவிடம்: சென்னை வண்டலூரில் இருந்து சுமார் 14கி.மீ., பயணித்தால் இக்கோயிலை அடைந்துவிடலாம். அதே போல், சென்னை வேளச்சேரியில் இருந்து 22 கி.மீ., தொலைவிலும், சென்னை கேளம்பாக்கத்தில் இருந்து 4 கி.மீ., தூரத்திலும் இந்த கோயிலை அடைந்துவிடலாம். தனி வாகனத்தில் செல்வது சிறப்பானதாக இருக்கும்.
திருச்சி ஸ்ரீ ரங்கத்தில், ஸ்ரீ வியாசராஜ மடம் பிரபல்யம். இங்குஸ்ரீ வியாசராஜர் குருபரம்பரையில் வந்த ஐந்து மூல பிருந்தாவனம் உள்ளது. மேலும், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமனும் வீற்றிருக்கிறார்.
அமைவிடம்: திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் இருந்தும், சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் ஸ்ரீ ரங்கத்திற்கு பேருந்துகள் செல்கின்றன. அதில் பயணித்தால், கடைசி நிறுத்தம் ஸ்ரீ ரங்கம்தான். அங்கு இறங்கி “ராகவேந்திரா ஆர்ச்’’ என்று ஸ்ரீ ரங்கம் பேருந்து நிறுத்தத்திற்கு நேர் எதிர் திசையில் ஒரு ஆர்ச் இருக்கும். அதில் பயணித்தல் நடந்து செல்லும் தூரத்துலேயே ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ வியாசராஜர் மடத்தை அடைந்துவிடலாம்.
பூலோக வைகுண்டமான ஸ்ரீ ரங்கம் ரங்கநாதஸ்வாமி க்ஷேத்திரத்திற்கு அடுத்தபடியாக, சென்னையில் இருக்கக்கூடிய திருவல்லிக்கேணி பார்த்தசாரதி க்ஷேத்திரமும் சிறப்புமிக்கது. இங்கு துவஜஸ்தம்பத்திற்கு அருகில் தூணில் அனுமன் அருள்கிறார். இவருக்கு எதிர்புறத்தூணில் ராமர் காட்சியளிக்கிறார்.
அமைவிடம்: சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தும், பல வழித்தடத்தில் இருந்தும் திருவல்லிக்கேணிக்கு பேருந்துகள் செல்கின்றன.
திருச்சியில் இருந்து 41 கி.மீ., தொலைவில் இருக்கும் ஊர் முசிறி. இங்கு “பால அனுமன்’’ வீற்றிருக்கிறார். இவருக்கு சர்க்கரை பொங்கல்தான் நிவேதனமாக வைக்க வேண்டுமாம். அப்படி வைக்கவில்லை என்றால், குரங்கு ஒன்று வந்து அரிசி போன்றவற்றை எடுத்துக் கொண்டு சென்றுவிடுமாம்.
அமைவிடம்: திருச்சியில் இருந்து சேலம், நாமக்கல் ஆகிய பேருந்துகளில் ஏறி, முசிறி கைகாட்டி என்னும் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து அக்ரஹாரம் ஆஞ்சநேயர் கோயில் என்று கேட்டு ஆட்டோவிலோ அல்லது நடந்தோ செல்லலாம். சென்னையில் இருந்து வருவோர், சேலம் – நாமக்கல் பேருந்தில் ஏறிவந்தால், அதே நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளலாம். சென்னையில் இருந்து திருச்சி பேருந்தில் ஏறினால், “சமயபுரம் டோல் கேட்’’ என்னும் நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து சேலம், நாமக்கல், முசிறி ஆகிய பேருந்துகளில் பயணிக்கலாம். பெங்களூரில் இருந்து பயணிப்போர்; திருச்சி பேருந்தில் பயணிக்கலாம்.
திருத்தணியில் இருந்து சுமார் 15 கி.மீ., தூரம் பயணித்தால், அழகான பசுமையான நல்லாட்டூர் என்னும் கிராமத்தை அடையலாம். இங்கு “ஸ்ரீ வீர மங்கள ஆஞ்சநேயஸ்வாமி’’ அருள்புரிகிறார். கொசஸ்தலை ஆற்றின் அருகே இவர் இருக்கிறார்.
அமைவிடம்: திருத்தணியில் இருந்து 15 கி.மீ., தூரத்திலும், நகரியில் இருந்து 12 கி.மீ., தூரத்திலும் இத்திருக்கோயிலை அடையலாம்.
சென்னை போரூரில், “ஸ்ரீ வீர ஆஞ்சநேயசுவாமி’’ இருக்கிறார். மிக அருமையான கோயிலாகும். கோயில் அருகில் “சீதா ராம புஷ்கரணி’’ ஒன்றும் இருக்கிறது.
அமைவிடம்: 22, ராமகிருஷ்ணன் 1வது தெரு, குயப்பேட்டை, ராமகிருஷ்ணா நகர், போரூர், சென்னை – 600116. (போரூர் காவல் நிலையம் அருகில் உள்ளது).
கர்நாடக மாநிலத்தில், கோலார் என்னும் மாவட்டம் உள்ளது. இங்கிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரத்தில் பயணித்தால், “முளுபாகிலு’’ என்னும் இடம் வருகிறது. இந்த இடத்தில்தான் வியாசராஜர் பிரதிஷ்டை செய்த முதல் ஆஞ்சநேயர் கோயில் கொண்டிருக்கிறார்.
அமைவிடம்: வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் இருந்து 80 கி.மீ., தொலைவில் இருக்கிறது முளுபாகிலு. அதே போல், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் இருந்து 30 கி.மீ., தூரத்திலும்
முளுபாகிலை அடையமுடியும்.
பெங்களூருக்கும் – மைசூருக்கும் இடைப்பட்ட சாலையில் ஸ்ரீ காலி (Gaali) ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. விருஷபாவதி மற்றும் அதன் துணை நதியான பஸ்சிமா வாஹினி ஆகிய இரண்டு நதிகள் சங்கமிக்கும் இடத்தில், மகான் ஸ்ரீ வியாராஜ தீர்த்தர், காலி ஆஞ்சநேயரை கண்டெடுத்ததாக கூறப்படுகிறது.
அமைவிடம்: பெங்களூர் – மைசூர் சாலையில், பெங்களூரில் இருந்து சுமார் 7 கி.மீ., தூரத்தில் பயணித்தால், காலி ஆஞ்சநேயர் கோயிலை அடைந்துவிடலாம்.
கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டத்தில் உள்ள பகுதி பேலூர். இங்கு, 12-ஆம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்ட “சென்ன கேசவர் கோயில்’’ மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயிலை “விஜயநாராயணா’’ கோயில் என்றும் அழைப்பதுண்டு. இக்கோயில் உள்ளே, வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருக்கிறார்.
அமைவிடம்: ஹாசன் நகரத்திலிருந்து 35 கி.மீ தொலைவிலும், சிக்கமங்களூரில் இருந்து 26 கி.மீ தூரத்திலும் இந்த கோயிலை அடையலாம். பெங்களூருவிலிருந்து சுமார் 220 கி.மீ தொலைவிலும் இக்கோயில் உள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூர் மாகாணத்தில், “ஸ்ரீ வரதாஞ்சநேயர்’’ என்னும் அனுமன் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிவருகிறார். அனுமனுக்கு மேலே, அழகிய ராமர், சீதா, லட்சுமணன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
அமைவிடம்: பெங்களூர், மெஜஸ்டிக் கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து 12 கி.மீ., பயணித்தால், இந்த திருக்கோயிலை அடைந்துவிடலாம்.
கர்நாடக மாநிலத்தின் பிரபலமான இடங்களில் ஒன்று ஹூப்ளி. இங்கிருந்து 17 கி.மீ., தூரம் பயணித்தால், தார்வாடு என்னும் ஊர் இருக்கிறது. இங்கு “ஹனுமந்தா’’ என்னும் பெயரில் அருள்பாலிக்கிறார் அனுமன். இக்கோயிலுக்கு மூன்று நிலை ராஜகோபுரம் உள்ளன. அவை தெற்கு நோக்கிய வாறு அமைதியான சூழலில் காட்சியளிக்கிறது.
அமைவிடம்: தார்வாடில் இருந்து 7 கி.மீ., பயணித்தால், இக்கோயிலை அடைந்துவிடலாம். அதேபோல், ஹூப்ளியில் இருந்து 17 கி.மீ., பயணித்தாலும், இந்த ஹனுமந்தா கோயிலை அடைந்துவிடலாம்.
பெங்களூர், கெம்பேகவுடா பேருந்து நிலையத்தின் அருகில் “மின்டோ ஆஞ்சநேயஸ்வாமி’’ திருக்கோயில் உள்ளது. அக்காலத்தில், பிரிட்டிஷ் அதிகாரியான லாட் மவுண்ட்பேட்டன், வைஸ்ராயகளாக இருந்த விலிங்டன், இர்வின் ஆகியோர் இந்த அனுமனை தரிசித்துள்ளனர்.
அமைவிடம்: பெங்களூர், கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து மிகமிக அருகில் இந்த கோயில் அமைந்துள்ளது. கெம்பேகவுடா பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் இரண்டே இரண்டு கி.மீ., தூரம் பயணித்தால் போதும்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில், “ஸ்ரீ வீர ஆஞ்சநேயஸ்வாமி’’ இருக்கிறார். பல ஆச்சரியங்களை கொண்ட இக்கோயில், ஆங்கிலேயர் காலத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த சர் தாமஸ் மன்றோ இக்கோயிலை தரிசித்துவிட்டு, இதன் மகிமைகளை 01.10.1914 தேதியிட்ட மெட்ராஸ் மாவட்ட அரசிதழில் பதிவு செய்திருக்கிறார்.
அமைவிடம்: ஆந்திரப் பிரதேசம், கடப்பா மாவட்டம், சக்ராயப்பேட்டை மண்டலம், வீரன்காட்டுப்பள்ளே கிராமத்தில் அமைந்துள்ளது. காந்தி சேத்திரம் என்றும் பிரபலமாக அழைக்கப்படும் இந்த இடம், ராயச்சோட் சாலையில் உள்ள வெம்பள்ளே கிராமத்திலிருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ராயச்சோட்டே மற்றும் வேம்பள்ளேயிலிருந்து பேருந்துகள் உள்ளன.
ஸ்ரீ ராகவேந்திரஸ்வாமி, ஜீவ சமாதியான மந்திராலயத்தின் அருகில், அதோனி என்னும் கிராமம் இருக்கிறது. இங்கு, “ஸ்ரீ மங்கராய ஆஞ்சநேயர்’’ என்னும் பெயரில் அனுமன் சேவை சாதித்து வருகிறார். வசிஷ்ட மகரிஷி, காசியபமகரிஷி போன்ற ரிஷிகளும், புரந்தரதாசர், விஜயதாசர் போன்ற தாசர்களும் இங்கு வசித்ததாக கூறப்படுகிறது.
அமைவிடம்: ஆந்திர மாநிலம், மந்திராலயத்தில் இருந்து 49 கி.மீ., பயணித்தால், இத்திருத்தலத்தை அடைந்துவிடலாம்.
தெலுங்கானா மாநிலம், பீச்சுபள்ளி என்ற கிராமத்தில், கிருஷ்ணா நதிக்கரை ஒட்டி “பீச்சுபள்ளி ஸ்ரீ ஆஞ்சநேய ஸ்வாமி’’ அருள்கிறார். குர்ரம்கடா, நிஜாம் கோண்டா ஆகிய இரண்டு தீவுகளின் நடுவில் மிக அழகாக இக்கோயில்அமைந்துள்ளது.
அமைவிடம்: ஆந்திர மாநிலம் கர்னூல் என்னும் இடத்தில் இருந்து 47கி.மீ தூரத்தில் பீச்சுபள்ளியை அடைந்துவிடலாம். அதே போல், கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் இருந்து 68 கி.மீ தொலைவிலும் இந்த
திருத்தலத்தை அடையலாம்.
திருப்பதி திருமலையில், மகான் ஸ்ரீ வியாசராஜர் பிரதிஷ்டை செய்த அனுமன் இருக்கிறார். இவரை “முக்யபிராணர்’’ என்று அழைக்கிறார்கள். சுமாமி புஷ்கர்ணிக்கு அருகில் அஹ்னிகா மண்டபம் என்னும் ஒரு சிறிய மண்டபம் இருக்கிறது. அதன் உள்ளேதான் முக்யபிராணர், திருமலைக்கு வருபவர்களை அருள்கிறார்.
அமைவிடம்: சென்னையில் இருந்து திருப்பதிக்கு 133 கி.மீ., பயணித்தால் திருப்பதியை அடைந்துவிடலாம்.
ஆந்திரப் பிரதேசம் விஜயவாடா அருகே “மச்சாவரம்’’ என்னும் பகுதியில் உள்ளது. இங்கு, “தாசாஞ்ஜநேயர்’’ மிகவும் பிரசித்தி. தாசாஞ்ஜநேயர் இரண்டு முதல் மூன்று அடி உயரம் கொண்டவராக இருக்கிறார். அவரது கைகள், மார்பு மற்றும் கால்களில் அழகான ஆபரணங்களை சாற்றிக் கொண்டுள்ளார். கோயில், மிக அமைதியாக காணப்படுகிறது. சற்று தூரத்தில் “கிருஷ்ணா ஆறு’’ பாய்ந்து ஓடுகிறது.
அமைவிடம்: விஜயவாடா மத்திய பேருந்து நிலையத்திலிருந்து 6 கி.மீ தொலைவிலும், விஜயவாடா ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ தொலைவிலும், இந்தக் கோயில் அமைந்துள்ளது.
