ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 109 (பகவத்கீதை உரை)
உண்பது மற்றும் உறங்குவதன் முக்கியத்துவத்தை விவரித்த கிருஷ்ணன், உடற்பயிற்சியைப் பற்றியும் கூறுகிறார். முறையான, தொடர்ந்த உடற்பயிற்சியும் யோகம் சித்திப்பதற்கான அடிப்படைகளில் ஒன்று என்று வலியுறுத்துகிறார்.
யுத்தாஹார விஹாரஸ்ய யுக்தசேஷ்டஸ்ய கர்மஸு
யுக்தஸ்வப்னாவபோதஸ்ய யோகோ பவதி துக்கஹா (6:17)
‘‘மிதமாக உண்டு, உடற்பயிற்சி செய்பவனுக்கு, அளவுடன் கர்மங்களைச் செய்து, உறக்கத்திலும், விழிப்பிலும் முறையை கடைபிடிப்பவனுக்கு, யோகம் துன்பத்தைத் துடைப்பதாகிறது.”
மிதமாக உண்பது சரி, மிதமாக உறங்குவதும் சரி, ஆனால் உடற்பயிற்சியால் யோகம் கிட்டுகிறது என்றால் என்ன? இயல்பான உடல் இயக்கங்களை ஒழுங்குபடுத்துவதுதான் கிருஷ்ணன் குறிப்பிடும் உடற்பயிற்சி. மனக்கட்டுப்பாட்டுக்கு இந்தப் பயிற்சி உதவுகிறதா என்றுதான் பார்க்க வேண்டும் – உடல் கட்டுக்கு அல்ல! கட்டுமஸ்தான தேகம் என்பது கடுமையான உடற்பயிற்சியின் பலனாக இருக்கலாம்; ஆனால் அது மனக்கட்டுப்பாட்டுக்கும் வழி வகுக்கிறதா என்று சிந்திக்க வேண்டும். அதாவது, உடலைப் பெரிதும் வருத்திக்கொள்ளாமல் தினசரி நடைமுறைகளுக்குத் தேவையான அந்தந்த அவயவங்களின் நிதானமான அசைவுகள்தான் சரியான உடற்பயிற்சி.
ஜிம்முக்குப் போய், பணம் கட்டி, அங்கிருக்கும் உபகரணங்களின் உதவியுடன் சதைத் திரட்சிக்கான பல பயிற்சிகளை மேற்கொள்ளலாம்; ஆனால் அவை எந்த வகையில் மன வளர்ச்சிக்கும் அதன் தொடர்பான யோகத்துக்கும் வழி வகுக்கும் என்பது சிந்தனைக்குரிய கேள்வி. ஒரு மாணவன் பரிட்சை எழுதிக் கொண்டிருக்கிறான். வலது கை பேனாவைப் பிடித்திருக்கிறது. கேள்விகளுக்கான விடைகள் அவனுக்குத் தெரிந்ததாகவும், தான் ஏற்கெனவே நன்கு படித்து உள்வாங்கிக் கொண்டவையாகவும் இருக்குமானால், பேனா, விடைத்தாளில் ஓட்டமாக ஓடுகிறது. அதே பதில் தெரியவில்லை என்றால்? எழுதுகோல் பிடித்திருக்கும் கையில் இறுக்கம், தரையில் ஊன்றியிருக்கும் கால்களில் இறுக்கம், கழுத்தில் இறுக்கம், நினைவுக்குக் கொண்டுவர முயலும் வகையில் நெற்றியிலும், புருவங்களிலும் சுருக்கம், விரல்களை முஷ்டியாக்கிக் கொண்ட இடது கையில் அழுத்தம்….
பதில் தெரிந்து எழுதுவதால், வலது கை விரல்களுக்கு இயல்பான பயிற்சி கிடைக்கிறது. தெரியாவிட்டால் அந்த கரத்துக்கு மட்டுமல்லாமல் கிட்டத்தட்ட உடல் முழுவதுக்குமே அனாவசிய அழுத்தம்தான் உண்டாகிறது. தனியே உடற்பயிற்சி என்று செய்யும்போது இப்படி தேவையில்லாமல் உடல் உறுப்புகளை இம்சை படுத்தாமல், அதாவது இதிலும் அளவுக்கு மிகாமல், மேற்கொள்ள வேண்டும் என்றுதான் சொல்ல வருகிறார் கிருஷ்ணன். அதாவது உடற்பயிற்சி செய்யும்போது மனம் இலகுவாக இருக்க வேண்டும் என்பதும், இந்த நிலைதான் ஒரு யோகியின் இலக்கணமாக இருக்க வேண்டும் என்பதும் உள்ளீடு.
யதா விநியதம் சித்தமாத்மன்யேவாவதிஷ்டதே
நிஸ்ப்ருஹ ஸர்வகாமேப்யோ யுக்த இத்யுச்யதே ததா (6:18)
‘‘ஆசைகள் மீதான பற்றறுத்து, நிர்மயமாக அடங்கிய மனது, ஆன்மாவிலேயே நிற்கும் பயிற்சி கொண்டவன், யோகத்தில் உறுதி பெற்றவனாகக் கருதப்படுகிறான்.’’
நிர்மயமான மனம் என்பது என்ன? எல்லாவற்றையும் பாஸிடிவ் ஆக பார்ப்பது, நினைப்பது, பேசுவது மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்வது. இப்படி ஒரு நிலை வரவேண்டும் என்றால், பொதுவான பற்றற்ற தன்மையை அனுபவிக்க வேண்டும். கிடைப்பதில் திருப்தி கொள்ள வேண்டும்; கிடைக்காததில் கவனம் செலுத்தக் கூடாது. தன்னை மீறிய செயல்களில் ஆர்வம் காட்டக் கூடாது.
பாஸிடிவ் குணம் என்பது என்ன?
ஒரு மகானிடம் அன்பர் ஒருவர் சற்றே முகவாட்டத்துடன் வந்தார். ‘‘எனக்கு எந்த நற்பலனுமே உரிய நேரத்தில் கிடைக்க மாட்டேனென்கிறது. இவ்வளவு ஏன், என் வீட்டுத் தோட்டத்தில் நான் வளர்த்து வரும் டிசம்பர் பூச்செடிகூட ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில்தான் பூக்கிறது!” என்றார்.
அவருடைய விரக்தி மகானுக்கு நியாயமாகவே பட்டது. ஆனாலும், ‘‘டிசம்பரில் பூக்காவிட்டால் என்ன, அடுத்த இரண்டு மாதங்களிலாவது பூக்கிறதே. பூக்காமலேயே போய்விடவில்லையே!” என்று ஆறுதலாகச் சொன்னார். ‘‘இன்னொரு சிறப்பையும் நீங்கள் கவனிக்க வேண்டும். மற்றவர்களெல்லாம் டிசம்பர் மாதத்தில் அந்தப் பூவைப் பயன்படுத்தும்போது, உங்களுக்கு அது கிடைக்காமல், நீங்கள் ஒதுக்கப்பட்டாலும், பிறர் யாரும் பயன்படுத்த முடியாத காலத்தில் அந்தப் பூ உங்கள் பயன்பாட்டுக்குக் கிடைக்கிறது; அதனால் நீங்கள் தனித்து அடையாளம் காணப்படுகிறீர்கள்,” என்று மேலும் ஆறுதலளித்தார்.
ரோஜா செடியில் முள்ளாக இருக்கிறதே என்று விசனப்படுவதைவிட, அந்த முட் செடியிலும் மென்மையான ரோஜா மலர்கிறதே என்றுதான் பார்க்க வேண்டும். முட்களுக்கிடையே மலரைக் காண்பவனுக்கு இறைவனின் கருணை புரியும் – அந்த முட்கள், மலர்களைக் காப்பாற்றுவதற்காகவே உருவானது என்று. இந்தக் கண்ணோட்டத்தில் அவன் ரோஜாவுடன் மட்டுமல்லாது, முட்களுடனும் நட்பு பூண்டவன் ஆகிவிடுவான். ‘முட்கள் இன்றி மலர் இருக்க முடியாது; அதற்காகவே முட்கள் இருக்கின்றன,‘ என்றும் எண்ணத் தொடங்கி விடுவான்.
மாறாக, செடியில் முட்களை மட்டும் பார்ப்பவனுடைய கண்களுக்கு ரோஜா தெரியாது. இது ரோஜா செடியா, கள்ளிச் செடியா என்று வித்தியாசம் பாராட்டத் தெரியாதவனாகவே அவன் இருப்பான். முள்ளைக் கண்டவன், நாளாவட்டத்தில் முள்ளுடன் நட்பாவான். போகிற போக்கில் அவனுக்கு ரோஜாவே முள்ளாகத் தெரிந்தாலும் ஆச்சரியம் இல்லை. ஆமாம், அவன் பார்ப்பதை, அதை மனம் உணர்வதை வைத்துதான் அவனுடைய குணாதிசயமே அமைகிறது.
டிசம்பர் மாதத்தில் பூக்க வேண்டிய பூ, செடிகளில் காணக் கிடைக்காத ஏக்கத்தில் தோயும் ஒருவனுக்கு அவநம்பிக்கை வளர்வதால், பிப்ரவரி மாதத்துப் பூக்களையும் அவனால் அடையாளம் கண்டு கொள்ள முடியாமல் போய்விடக் கூடும்! பொதுவாகவே, கடவுளுக்கு எதை, யாருக்கு, எப்போது தரவேண்டும் என்பது தெரியும். கிடைக்கும் வாய்ப்புகளுக்கும், கடந்துபோகும் வயதுக்கும் சில பேரால், சில சமயங்களில் தொடர்புபடுத்திக்கொள்ள முடியாதுதான். ஆனால், சரியான தகுதியிருப்பவர்கள், அவசரப்படும்போது இழப்புகளை சந்திப்பதும், அவர்களே பொறுமை காக்கும்போது கூடுதல் ஆதாயங்களை ஈட்டுவதும் நடைமுறையில் காணமுடிகிறது. காத்திருத்தலால் ஏற்படும் அமைதியின்மையை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியுமானால், சற்றே காலம் தாழ்ந்தாவது சாதிப்பது எளிதாகும்.
இரண்டு பேர் ஸ்ரீமன் நாராயணனை நேரில் காண கடுந்தவம் இருந்தார்கள். அதைக் கண்ட நாரதர், அவர்களுக்காக சிபாரிசு செய்ய வைகுந்தம்போய் நாராயணனிடம், ‘‘அந்த இரு பக்தர்களின் விருப்பத்தை நிறைவேற்றக்கூடாதா?” என்று கேட்டார்.வழக்கம்போல நாராயணன் மெல்லச் சிரித்தார். பிறகு, ‘‘சரி, அவர்களிடம் போய், நான் ஒரு ஊசி காதுக்குள் யானையை நுழைத்து கொண்டிருப்பதாகவும், அந்த வேலை முடிந்ததும் அவர்களுக்குக் காட்சி தருகிறேன் என்றும் சொல்,” என்று நாரதரிடம் சொன்னார்.
அவர்களிடம் சென்ற நாரதர் இறைவன் தெரிவித்ததைச் சொன்னார். அவ்வளவுதான், முதலாமவர் பெரிதாக சிரித்தார். ‘‘ஊசி காதுக்குள் யானையை நுழைப்பதா? ஆகக்கூடிய வேலையா இது? தரிசனம் கொடுக்காமல் தவிர்ப்பதற்காகவே திருமால் அப்படிச் சொல்லியிருக்கிறார்; சே!” என்று அலுத்துக்கொண்ட அவர், தன் தவத்தை அந்த அளவிலேயே நிறுத்திவிட்டு அங்கிருந்து அகன்றார்.
இரண்டாமவரோ, ‘‘அடடா, எப்பேர்பட்ட அரிய வேலையை பகவான் செய்து கொண்டிருக்கிறார்! அவரால் மட்டுமே அதைச் செய்ய முடியும், நான் நம்புகிறேன்; பொறுமையாகவே காத்திருக்கிறேன். அதோடு அவர் வரும்வரை தொடர்ந்து தவத்தை மேற்கொள்கிறேன்,” என்று இறைவனின் பராக்கிரமத்தை வியந்து பாராட்டினார்.
உடனே அங்கே ஒரு பேரொளி தோன்றியது. இறைவன் இரண்டாமவருக்கு தரிசனம் தந்தார்.ஆகவே, பொறுத்திருப்பதிலும் நன்மை விளையத்தான் செய்கிறது. நியாயமான பொறுமை, அந்த நன்மையைச் சற்று காலதாமதமாக அளிக்கலாமே தவிர, முற்றிலும் இல்லாமல் செய்துவிடாது – பிப்ரவரியில் பூக்கும் டிசம்பர் பூக்களைப் போல!அதாவது அமைதியைக் கடைபிடிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்வதே ஒரு யோகியின் முக்கியமான பணியாக இருக்கிறது.
யாரைச் சந்தித்தாலும், எங்கே சந்தித்தாலும், அவருடன் விருப்பு-வெறுப்பின்றி பழக முடியுமானால் அதுதான், மனம் ஆன்மாவில் நிலைத்திருக்கிறது என்பதற்கான அடையாளம். ‘அவன் முகமே சரியில்லே. சரியான ஃப்ராடு என்று முகத்திலேயே எழுதி ஒட்டியிருக்கிறது,‘ என்ற அனுமானம், குறிப்பிட்ட நபர் மட்டும் என்றில்லை, சந்திக்கும் யாரைப் பார்த்தாலும் இப்படித் தோற்றுவிப்பதற்கு சாத்தியம் இருக்கிறது. இதற்குக் காரணம், மனம் ஆன்மாவை விட்டு விலகி இருப்பதுதான்.
பொதுவாகவே பொறுப்பைத் தட்டிக் கழிக்கும் குணம் உள்ளவர்களுக்கு இந்த மனப்பான்மை உருவாக வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள், உளவியல் நிபுணர்கள். ‘நம்மிடம் ஏதேனும் உதவி கேட்டு விடுவானோ! அதனால் நமக்கு நஷ்டத்தை உண்டாக்கி விடுவானோ?‘ என்றெல்லாம் சந்தேகப்பட்டுக் கொண்டே பழகுபவர்களுக்கு, எதிரே இருப்பவர்கள் மோசமானவர்களாகத்தான் தெரிவார்கள்.
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகும்போதுதான், தேவைப்படுவோருக்கு நம்மால் இயன்ற உதவிகளைச் செய்ய முடியும். அதனால் உதவி பெற்றவர் அடையும் சந்தோஷத்தைவிட நம் ஆன்மா அடையும் மகிழ்ச்சி அதிகமாகவே இருக்கும். இதை நம்மால் உணர முடியும்.
ஆமாம், மனசுக்கு நிறைவான ஒரு செயலைச் செய்து முடித்த பிறகு, புது உற்சாக ஊற்று பீறிடுகிறதே, அது மனசுக்குரியதல்ல; ஆன்மாவுக்குரியது! இந்த நிலை நீடித்திருக்காமல் மனம் குரங்காய் மாறி, கிளைக்குக் கிளை தாவும்போது, ஆன்மா ஒதுங்கி, அமைதியாகி விடுகிறது.
யோகாப்பியாசம் என்பது உடற் பயிற்சி என்பதைவிட மனப் பயிற்சி என்றே சொல்லலாம். இது உலகியல்புகளை பாஸிடிவ் ஆக அணுக மனசுக்கு சொல்லித் தருகிறது. இந்தப் பயிற்சியால் அதுவரை விரோதம் பாராட்டியவனிடம் நட்பைத் தேட உங்களால் முடியும். கெட்ட மனிதருக்குள் ஒளிந்திருக்கும் நல்ல மனிதரைக் கண்டு பிடிக்க முடியும். இதனால் நம்மிடையே இருக்கும் நெகடிவ் உணர்வுகள் நம்மை விட்டு விலகுவதை உணர முடியும். அதுவரையிலான கெடு எண்ணங்கள் மறைந்து விடுவதையும் உணர்ந்து அனுபவிக்க முடியும்.
யோகாப்பியாசத்தின் பலனாக, இதுவரை கோபத்தில், கோபத்தை மட்டுமே வெளிப்படுத்தி வந்த நம் மனம், அதிலிருந்து விலகி, மன்னிப்பையும் காட்ட ஆரம்பிக்கும். இது, மனம் ஆன்மாவில் ஒடுங்குவதை அறிவிக்கிறது. தன் பயிற்சிகளால் ஒரு யோகி, ஆன்மாவுக்கு சுகமளிக்கிறான். அதன் மூலம் ஆன்மாவுக்குள் பரமாத்மாவை தரிசிக்கிறான். அதனால் யோகிக்கு தியானமும், பரம்பொருளின் தரிசனமும் எளிதாகின்றன.
(கீதை இசைக்கும்)
பிரபு சங்கர்
