×

மூலாதாரத்தில் நின்றருளும் அம்பிகை!

மூலாதாரைக நிலயா
ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ
மணிபூராந்தருதிதா
விஷ்ணுக்ரந்தி விபேதிநீ
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா
ருத்ரக்ரந்தி விபேதிநீ

நாம் இந்த முறை ஆறு நாமங்களாக தொகுப்பாக பார்க்கலாம். ஏன் ஆறு நாமங்களை பார்க்க வேண்டுமெனில், இந்த ஆறு நாமங்களை சேர்த்துப் பார்த்தால்தான், இந்த நாமங்களினுடைய தாத்பர்யம் நமக்கு நன்கு விளங்கும்.

இன்னொரு காரணம், ஸ்ரீ வித்யா சம்பிரதாயத்தினுடைய ஆதிகுருவான தத்தாத்ரேயர், தத்தாத்ரேய சம்ஹிதை என்றொரு உபதேசம் இருக்கிறது. அந்த தத்தாத்ரேய சம்ஹிதையில் சில விஷயங்களை சொல்லும்போது, இந்த ஆறு நாமங்களையும் தொகுத்து சில விஷயங்களை சொல்கிறார். அவர் சொல்லக் கூடிய விஷயங்களை இந்த ஆறு நாமாக்களுக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

பொதுவாகவே லலிதா சஹஸ்ர நாமத்திற்கு பாஷ்யம் செய்யும்போது தத்தாத்ரேய சம்ஹிதையும் சேர்த்துச் சொல்வார்கள். ஏனெனில், இந்த ஆறு நாமங்களில் உள்ள விஷயங்களை அந்த குறிப்பிட்ட ஸ்லோகத்தில் சொல்லியிருப்பார். அப்படி பார்த்தோமெனில், இந்த ஆறு நாமங்களையும் ஒரு தொகுப்பாக பார்ப்பதுதான் நமக்கு சரியாக இருக்கும்.

இதற்கு முந்தைய பல நாமங்களில் குலம், அகுலம் என்றெல்லாம்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

அம்பிகையினுடைய குண்டலினி சொரூபத்தைத்தான் கடந்த சில நாமங்களில் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில் குலம், அகுலம் போன்ற யோக மார்க்கமான சில விஷயங்களெல்லாம் வருகின்றது. அதனுடைய தொடர்ச்சிதான் இப்போது நாம் பார்க்கப் போகும் நாமங்களும்.

குலம், அகுலம், குலாசாராம், சமயாசாரம் என்றெல்லாம் பார்த்தோம். பஹிர்முக பூஜை, அந்தர்முக பூஜை என்றெல்லாம் என்னவென்று பார்த்தோம். யோக மார்க்கமாக நம்முடைய சுஷும்னா நாடி, அதிலுள்ள சக்கரங்களெல்லாம் என்னவென்று பார்த்தோம்.

இப்போது இந்த நாமங்களில், அம்பாள் குண்டலினியாக இருக்கிறாள். அதில் அவளுடைய செயல்பாடு என்ன? அவள் நமக்குள் எப்படி செயல்படுகிறாள்.

மூலாதாரைக நிலயா
ப்ரஹ்மக்ரந்தி விபேதிநீ
மணிபூராந்த ருதிதா
விஷ்ணுக்ரந்தி விபேதிநீ
ஆஜ்ஞா சக்ராந்தராலஸ்தா
ருத்ரக்ரந்தி விபேதிநீ

என்பது இந்த ஆறு நாமங்கள்.

இதில் முதல் நாமமாக மூலாதாரைக நிலயா… மூலாதார – ஏக – நிலயா. இதில் ஏக நிலயா என்றால் என்னவென்று புரிந்துகொள்ள வேண்டும். ஒருவரை பார்த்து அவர் அங்கு இருப்பார் என்பதற்கும், அவர் அங்கேயேதான் இருப்பார் என்று சொல்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. அங்கு இருப்பார் என்றால் இப்போது அங்கு இருப்பார் என்று அர்த்தம். அங்கேயேதான் இருப்பார் எனில் எப்போதுமே அங்கேயேதான் இருப்பார் என்று அர்த்தம்.

அது ஏன் மூலாதார ஏக நிலயா? அது ஏன் மூலாதாரத்திலேயே இருப்பவள்?

மற்ற சக்கரங்களிலெல்லாம் அம்பிகை மேல்நோக்கி பிரவேசிக்க வேண்டும். மணிபூரகம், சுவாதிஷ்டானம் என்றெல்லாம் மேல் நோக்கி பிரவேசிக்க வேண்டும். அந்த சக்கரங்களிலெல்லாம் அந்தர்யாமியாக இருக்கிறாள். நாம் அதைப்பற்றி பேசவில்லை. ஆனால், குண்டலினியாக இருக்கிற அம்பாள், மேலேயிருக்கிற ஒவ்வொரு சக்கரத்திற்கும் பிரவேசம் செய்வாள். ஆனால், மூலாதாரத்தில் நாம் அறிந்தாலும், அறியாவிட்டாலும் . நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் எல்லா ஜீவராசிகளினுடைய முதுகுத் தண்டினுடைய கடைசி பாகத்தில், சுஷும்னா நாடியினுடைய கடைசி பாகத்தில் அம்பாள் இருக்கிறாள். ஏதோ மூலாதாரம் குண்டலினி போன்றவை நமக்கு மட்டும் என்பதெல்லாம் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் நாம் ஒரு இடம், ஒரு ஊர் என்று சொன்னால் , நாம் பாரத தேசம் என்று சொன்னால் அதற்கும் ஒரு குண்டலினி இருக்கிறது. ஒவ்வொரு புண்ணிய க்ஷேத்ரங்களுக்கும் ஒரு குண்டலினி இருக்கிறது. குண்டலினி என்றால் நமக்கு மட்டும் என்பது கிடையாது. செடி, கொடி, விலங்குகள் என்று எல்லாவற்றிலும் இருக்கிறது. மனிதர்களுக்குள் இன்னும் விசேஷமாக இருக்கிறது.

இப்படி எல்லாருடைய மூலாதாரத்திலும் இருப்பதால் மூலாதாரைக நிலயா… என்று வர்ணிக்கிறார்கள்.

அடுத்தடுத்த சக்கரங்களை பார்ப்பதற்கு முன்பு வேறு சில விஷயங்களை பார்க்கலாம்.

நம்முடைய உடம்பில் கிட்டத்தட்ட 108 சக்கரங்கள் உள்ளன. இந்த 108 சக்கரங்களினுடைய ஸ்தானங்களும் சூட்சுமமாக உள்ளன. அதிலும் இந்த ஏழு சக்கரங்களுமே முக்கியமாகும். மூலாதாரத்திலிருந்து சஹஸ்ராரம் வரையிலும் ஆகும். அதேபோல், நமக்குள் சூட்சுமமாக சில கிரந்திகள் உள்ளன. அதாவது கிரந்திகள் என்றால் முடிச்சுகள் என்று பெயர். ஒரு கயிற்றில் முடிச்சு போட்டால் என்ன அர்த்தமெனில், அந்த முடிச்சு என்பது ஒரு தடையாகும்.

எப்படி சக்கரங்கள் சூட்சுமமாக இருக்கிறதோ, இந்த கிரந்திகளும் நமக்குள் சூட்சுமமாக இருக்கின்றன. இப்படி சூட்சுமமாக எத்தனை கிரந்திகள் இருக்கின்றன என்பது தெரியாது. ஆனால், இதில் 24 கிரந்திகள் மிகவும் முக்கியம். இந்த 24 கிரந்திகளை அவிழ்ப்பதற்குத்தான், இந்த தடைகளை நீக்குவதற்குத்தான் காயத்ரீ மந்திரத்தில் 24 அட்சரங்கள் இருக்கின்றன என்று சொல்வது வழக்கம். அதற்குப் பிறகு இந்த 24 கிரந்திகளை இன்னும் வகைப்படுத்தி மூன்றே மூன்றாக சொல்வது வழக்கம். ஏனெனில், 108 சக்கரங்கள் எனில் நம்மால் யோசிக்க முடியுமா? எனவே, அதையே சுருக்கி ஏழு சக்கரங்கள் என்று சொல்லி விட்டார்கள். அதேபோல், நமக்குள் 24 கிரந்திகளை சுருக்கி மூன்று என்று சொல்லி விட்டார்கள். அப்படிப்பட்ட மூன்று கிரந்திகளினுடைய விஷயங்களைத்தான் நாம் இந்த நாமங்களில் பார்க்கப் போகிறோம்.

இந்த மூன்றிற்கும் முறையே ப்ரம்ம கிரந்தி, விஷ்ணு கிரந்தி, ருத்ர கிரந்தி என்று பெயர்களாகும்.

இந்த மூன்று கிரந்திகளையும் அம்பாள் அவிழ்த்து விட்டால், மற்ற எல்லா கிரந்திகளும் தன்னால் அவிழ்ந்து விடும்.

சஹஸ்ரார சக்கரத்தை விட்டுவிட்டு மீதி ஆறு சக்கரங்களை ஸ்ரீ வித்யா சாஸ்திரம் மூன்று கண்டங்களாக பிரிக்கின்றன. இரண்டிரண்டு சக்கரங்களாக ஒரு கண்டம் என்று மூன்று கண்டங்களாக பிரிக்கிறார்கள். மூலாதாரமும் சுவாதிஷ்டானமும் சேர்ந்து ஒரு கண்டம். அதற்கு அக்னி கண்டம் என்று பெயர். மணிபூரகமும் அநாகதமும் ஒரு கண்டம். அதற்கு சூரிய கண்டம் என்று பெயர். விசுக்திக்கும் ஆக்ஞாக்கும் ஒரு கண்டம். அதற்கு சந்திர கண்டம் என்று பெயர். இதை ஸ்ரீ வித்யா, பஞ்சதசாக்ஷரியோடு தொடர்புபடுத்துகிறது.

இப்போது அம்பிகை குண்டலினியாக மூலாதாரத்திலிருந்து சென்று சஹஸ்ராரம் வரை செல்வதுதான் பெரிய யாத்திரை. நாம் க்ஷேத்ராடணம் செல்கிறோம். அதற்கான உண்மையான சூட்சுமம் என்னவெனில், நாம் வெளியில் இந்த க்ஷேத்ரங்களுக்கெல்லாம் யாத்திரை செய்யச் செய்ய, அம்பிகை நமக்குள் ஒரு யாத்திரை செய்வாள். அவள் நமக்குள் மூலாதாரத்திலிருந்து புறப்பட்டு ஒரு யாத்திரை செய்வாள். நாம் திருவாரூர் என்றால் அகுல சஹஸ்ராரம். காஞ்சி புரம் என்றால் மூலாதாரம். அங்கிருந்து திருவானைக்காவல் சுவாதிஷ்டானம். திருவண்ணாமலை மணிபூரகம். சிதம்பரம் அநாகதம். காளஹஸ்தி விசுக்தி. காசி ஆக்ஞா. கைலாசம் சஹஸ்ராரம். மதுரை துவாத சாந்தம். திருப்பெருந்துறை என்கிற ஆவுடையார்கோவில் ஷோட சாந்தம். இப்படியெல்லாம் நாம் யாத்திரை செய்யச்செய்ய அவள் ஒரு யாத்திரை செய்வாள்.

இப்படியாக அம்பிகை மூலாதாரம் – சுவாதிஷ்டானம் என்கிற இந்த சக்கரங்களை கடக்கும்போது ஒரு கண்டத்தை கடக்கிறாள். அதாவது அக்னி கண்டத்தை கடக்கிறாள். அப்படி கடக்கும்போது நமக்குள் இருக்கும் பிரம்ம கிரந்தி என்கிற முடிச்சு அவிழ்ந்து விடும்.

நமக்கு எடுத்தவுடனே அது எப்படி நடக்கும்? எப்போது நடக்கும்? அதை உணர முடியுமா? என்றெல்லாம் கேள்விகள் வரும்.
(சுழலும்…)

Tags : Ampiga ,Nilaya Brahmakrandti Vibethini ,Manaipurandrutitha ,Vishnukranti ,Vibethini ,Aajna ,Ruthrakranti Vibetin ,
× RELATED வெற்றி தரும் வியாசராஜர் அமைத்திட்ட அனுமன்கள்