வயலூர் மேவும் பெருமாளே

அருணகிரி உலா-119

க்ஷே த்திரக் கோவைப் பாடலில் அடுத்ததாக அருணகிரி நாதர் வயலூரைக் குறிப்பிடுகிறார். ‘முத்தைத்தரு’ எனத் துவங்கி முதல் திருப்புகழைப் பாடிய பின்னர் நிஷ்டையில் ஆழ்ந்து விட்டார் அருணகிரியார். முருகன் அவரை வயலூருக்கு வரும்படி அழைத்தான். வயலூர் சென்றடைந்த அருண

கிரியாருக்கு அங்குள்ள பொய்யா கணபதி ‘திருப்புகழ்’ எனும் பெயரை அமைத்துக் கொடுத்து முருகனைப் பாடும் விதமும் கற்பித்தார்.

இதை ‘‘பக்கரை விசித்ரமணி, பொற்கலனை இட்ட நடை, பட்சியெனும் உக்ர துரகமும், நீபப் பக்குவ மலர்த்தொடையும், அக்குவடு பட்பொழிய  பட்டுருவ விட்டருள் கை வடிவேலும், திக்கது மதிக்கவரு குக்குடமும், ரட்சைதரு சிற்றடியும், முற்றிய பனிரு தோளும், செய்யப்பதியும் (வயலூர்) வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பென எனக் கருள்கை மறவேனே’’ என்று நமக்கு உணர்த்துகிறார்  அருணகிரியார். வயலூரில் 18 பாக்கள் பாடியுள்ளார்.

‘‘குடதிசை வாராநி போலும்  படர்நதி  காவேரி  சூழும்

குளில்  வயலூரார மேவும் பெருமாளே ’’

என்றழைத்து ‘‘பரிபுர பாதா! சுரேசன் தரு மகள் நாதர்! அராவின் பகை மயில் வேலாயுதா!  ஆடம்பர! நாளும் பகர்தல் இலா தாளை ஏதும் சிலதறிய ஏழை நான் உன் பதி பசு பாசோபதேசம் பெறவேணும்’’ என்று இறைஞ்சுகிறார்.

பதி = கடவுள்; பசு = ஜீவாத்மா, பாசம் = மும்மலம்.

‘‘பாச ஞானத்தாலும் பசு ஞானத்தாலும்

பார்ப்பரிய  பரம்பரனைப்  பதிஞானத்தாலே

நேசமொடும் உள்ளத்தே நாடி…’’  

[சிவஞானசித்தியார்]

வயலூர் முருகனிடம் திருப்புகழில் நாட்டம் வைத்துத் துதிக்கும் படியாக அபரிமித சிவ

ஞானத்தை அளித்து என்று என் சோர்வை நீக்கி அருள்வாயோ என்று கேட்கிறார்.

‘‘திருப்புகழை  உற்றுத்துதிக்கும்  வகை

அபரிமித சிவ உறிவு சிக்குற்றுணர்ச்

சியினில்

ரக்ஷித்தளித்தருள்வது எந்த நாளோ’’

[ இதல் கடின ….. ’ திருப்புகழ்]

‘எல்லாம் ஈசன் செயல்’ என்பதை உணர்த்தும் அருமையான வயலூர்த் திருப்புகழைப் பார்ப்போம்.

 ‘‘என்னால் பிறக்கவும் என்னால்  இறக்கவும்

என்னால் துதிக்கவும் கண்களாலே

என்னால் அழைக்கவும் என்னால் நடக்கவும்

என்னால் இருக்கவும் பெண்டிர்வீடு

என்னால் சுகிக்கவும் என்னால்  முசிக்கவும்

என்னால் சலிக்கவும் தொந்த நோயை

என்னால் எரிக்கவும் என்னால் நினைக்கவும்

என்னால் தரிக்கவும் இங்கு நான் ஆர்?’’

திருச்சிக்கு மிக அருகிலுள்ள கோயிலுள் நுழையும் போது நேரே அக்னீசுரர் எனும் திருநாமமுடைய சிவபெருமான் தரிசனமளிக்கிறார். இடமாக வலம் வரும்போது பொய்யாக் கணபதி தரிசனம் தருகிறார். இவரே ‘வித்தசு மருப்புடைய பெருமாள்’, ‘செய்ப்பதியும் வைத்து உயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு’ என்று

அருணகிரியார்க்கு அருளிய விநாயகப் பெருமாள்,

‘‘கமலத்தே’’ எனத் துவங்கும் பாடலில்,

‘‘அருளிற் சீர் பொயாத கணபதி

திருவக்கீசன் வாழும் வயலியின்

அழகுக் கோயில் மீதில் மருவிய

பெருமாளே’’

என்று இருவரையும் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

[அக்கீசன் = அக்னீசுரர்]

‘ஆனாத  பிருதிவி’ எனத்துவங்கும் திருஏரகத் திருப்புகழில் ‘‘மைக்காவில்  பரிமள நாவீசு வயலி அக்கீசர் குமர’’ என்று குறிப்பிடுகிறார். [ இருண்ட சோலையின் நறுமணமும் பொலிவும் மிக்குள்ள வயலூரில் எழுந்தருளியுள்ள அக்னீசுரர் எனும் திருநாமத்தையுடைய சிவனாரது குமரனே!]

அருணகிரியாரை வணங்கி, அழகிய வயலூரில் குமரனைக் கண்டு  மகிழ்கிறோம். வாரியார் சுவாமிகள் வாழ்வில் இம்முருகன் நிகழ்த்திய ஒரு திருவிளையாடலை இங்கு நினைவு கூர்கிறோம்.

சுவாமிகள் வயலூர் சென்றிருந்த போது குருக்கள் தட்டில் எட்டணா இட்டார். அன்றிரவு அறங்காவலர் கனவில் தோன்றிய முருகப் பெருமாள் ‘‘என் பக்தனிடமிருந்து எட்டணா வாங்கிக் கொண்டாயே, உன்னால் ராஜ கோபுரம் கட்டி விடமுடியமா?’’ என்ற போது அவர் அதிர்ந்து விட்டார். முன்தினம் திருப்புகழ் சபையார்கள் வந்திருந்தனர் வருகைப்பதிவேட்டில் என்று தெரிந்ததும் ‘முருகன் உத்தரவு’ என்று கூறி வாரியார் சுவாமிகளுக்கு எட்டணா மணியார்டர் அனுப்பிவைத்தார். சுவாமிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

மூன்று மாதங்களுக்குப் பின் சுவாமிகள் திருச்சியில் உரையாற்றச்  சென்றிருந்த போது அறங்காவலர் அவரைச் சந்தித்துக் கனவில் முருகன் இட்ட உத்தரவைக் கூறினார். அத்துடன் வயலூர் கோயிலுக்கு ராஜ கோபுரம் கட்டவேண்டிய பணியை சுவாமிகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று  கேட்டுக் கொண்டார். சுவாமிகளிடம் அந்த அளவிற்குப் பணம் கிடையாது. ஆனால் விவரம் அறிந்த பல அன்பர்களும் தாமாகவே முன்வந்து பொருளுதவி செய்யவே, ராஜ கோபுரம்   கட்டும் பணி வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

இதன் பின்னர் திருச்சியில் மட்டுமல்ல, அருகிலிருந்த வயலூர் முருகன் உலகப் பிரசித்தி அடைந்து விட்டான். திருப்புகழ் நேயர்கள் வாழ்வில் ஒருமுறையேனும் கட்டாயம் சென்று தரிசிக்க வேண்டிய தலம் வயலூர்.அருணகிரிநாதர் வயலூரில் இருக்கும் பொழுதே முருகன் அடுத்ததாக அவரைத் தான் குடியிருக்கும் விராலித் தலத்திற்கு வரும்படி அழைத்தான் என்பதை ஒரு வயலூர் திருப்புகழில் அருணகிரியார் குறிப்பிடுகிறார்.

‘‘தாமரையின் மட்டு வாசமலர் ஒத்த

தாளிணை நினைப்பில் அடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாக மகிழ், கற்ப

தாருவென மெத்திய விராலி

மாமலையில் நிற்ப நீ கருதியுற்ற

வாவென அழைத்தென் மனதாசை

மாசினை அறுத்து ஞானமுதளித்த

வாரம் இனி நித்த மறவேனே ’’

என்று பாடுகிறார்.

மணம் நிறைந்த தாமரையின் மலருக்கு ஒப்பான உனது திருவடிகளின் நினைப்பே இல்லாத அடியேனை, மகரந்தப் பொடி நிறைந்த கொன்றை, சுரபுன்னை மகிழமரம் இவைகள் கற்பக விரு க்ஷங்கள் எனும்படி நிறைந்துள்ள விராலிமலையில் நாம் வீற்றிருக்கிறோம். நீ  அங்கு வருவாயாக’ என்று கூறி அழைத்தாய்; என் மனமாசுகளை ஒழித்து ஞான அமுதத்தைத் தந்தாய் ; அந்த உன் அன்பை ஒரு நாளும் நான்  மறக்கமாட்டேன் ’’ என்கிறார்.

வயலூர் வரும்படி முருகன்  முன்பு  அழைத்தது பற்றியும் ஒரு திருப்புகழில் பாடுகிறார்.

‘‘வினையேனைக் கரு விழாது சீரோதி   அடிமை பூணலாமாறு

கனவிலாள்  சுவாமீ  நின் மயில்வாழ்வும்

கருணை வாரி  கூரேக  முகமும்  வீர  மாறாத

கழலு நீப வேல் வாகு  மறவேனே’’

[சீரோதி = சீரான  திருப்புகழை ஓதி]

‘‘ஒழுக்கமற்ற   என்னை   மீண்டும்   பிறப்பில்  விழாத வண்ணம்  உனது சீர்மிக்க   திருப்புகழை  நான் ஓதி உனக்கு அடிமை பூணும்படி எனது கனவில் வந்து ஆண்டருளிய சுவாமியே !

மயில்மேல் வீற்றிருக்கும் உனது தரிசனத்தையும், கருணைக் கடல் போன்றதும் மிக்க

ஒளி வீசுவதும் ஆகிய உனது ஒற்றைத் திருமுகத்தையும், வீரம் என்றும் மாறாது விளங்கும்

உனது திருவடியையும், கடம்பையும், வேல்  ஏந்திய புய அழகையும் மறக்க மாட்டேன்’’ என்கிறார்.

வயலூரிலும்  ஆதிநாயகி அம்பிகையின் பெருமைகளைக் குறிக்கும் பாடலைப் பாடியுள்ளார்.

‘‘காளி  திரிபுரை அந்தரி சுந்தரி

நீலி கவுரி பயங்கரி சங்கரி

காருணிய சிவை குண்டலி சண்டிகை  

த்ரிபுராரி

காதல் மனைவி பரம்பரை அம்பிகை

ஆதி மலைமகள் மங்கலை பிங்கலை

கான நாடனம் உகந்தவள் செந்திரு   

அயன்மாது

வேளின் இரதி அருந்ததி இந்திர

தேவி முதல்வர் வணங்கி த்ரியம்பகி

மேகவடிவர் பின் வந்தவள் தத்தருள்  இளையோனே’’

இப்பாடலில் மிக அழகான ஒரு குறிப்பையும் அளிக்கிறார்.

‘‘வேலு மயிலு நினைந்தவர் தம் துயர்

தீர, அருள் தரு கந்த, நிரந்தர

மேலை வயலை உகந்துள நின்றருள்  பெருமாளே’’

வேலையும் மயிலையும்  நினைக்கின்ற  அடியாரது துன்பம் திரும்பும்படியாக அருள்பாலிக்கின்ற தந்தனே! முடிவற்றவனே!

மேலை வயலூர் என்னும் திருத்தலத்தில் உளம் மகிழ்ந்து நின்றருளும் பெருமாளே!  என்று உருகுகிறார்.

‘விகடபரிமள’ எனத் துவங்கும் ஒரு நீண்ட பாடலில்

‘‘அயில் கையில்  வெயிலெழ  மயில்மிசை

அக்குக்குடக் கொடி செருக்கப் பெருக்கமுடன்

வயலி நகருறை சரவணபவகுக

இயலும் இசைகளு  நாடனமும்  வகைவகை

சத்யப்படிக்கினிற  தஸ்த்யர்க்குணர்த்தியருள்  தம்பிரானே ’’

என்று நிறைவு செய்கிறார்.

 [‘‘வேலாயுதம் திருக்கையில் ஒளி வீசு,  மயிலின் மீது விளங்கி, அந்தக் கோழிக் கொடி  பெருமையுடன் விளங்க, செல்வச் செழிப்புடன் வயலூரில் வீற்றிருக்கும் சரவணபவனே (சரவணப் பொய்கையில் உதித்தவனே) குகனே! இயல், இசை எனப்படும் முத்தமிழையும்  பிரிவு  பிரிவாக, உண்மையான முறையில், இனிமையுடன் அகஸ்திய முனிவர்க்கு உபதேசித்தருளிய தம்பிரானே!]

 மற்றொரு பாடலில் பின்வருமாறு  பாடுகிறார்;

‘‘மோகன  விருப்பைக் காட்டி ஞானமுமெடுத்துக் காட்டி

மூதமிழ் முனிக்குக் கூட்டு குருநாதர்’’

ஞான சாத்திரங்களை விரித்து எடுத்து உரைத்தும், பழந்தமிழ் இலக்கணத்தை அவருக்குத் தெளிவித்தும் அருளிய குருநாதனே என்று

கூறுகிறார் இங்கு.

திருவுரூப  எனத்துவங்கும்  வயலூர்த் திருப்புகழில்,

‘மநு  நியாய சோணாடு தலைமையாகவே  மலை

வயலி மீது வாழ்தேவர் பெருமாளே ’’

என்று சோழநாட்டை ஆண்ட மனு நீதிச்  சோழன் பற்றிக் குறிப்பிடுகிறார்.

சோழநாடு வளமிக்க நாடு, அறம் செழித்த நாடு பசுவின்  கன்றின் துன்பத்தைக்

கண்ணுற்று தன் அருமை  மகனை  வீதியில்  கிடத்தி

அவன் மேல் தேரூர்ந்த மனுநீதிச் சோழன் ஆண்ட  திருநாடு.

ராஜ கெம்பர வளநாடு எனும் பகுதியைச் சார்ந்தது.

‘‘ஏழ்தலம் புகழ் காவேரியால்  விளை

சோழ மண்டல  மீததே  மனோகர

ராஜ கெம்பர நாடாளு நாயக, வயலூரா ’’

என்று திருவாவினன் குடியில் மட்டுமல்ல, வேறு பல திருத்தலங்களிலும் வயலூரானைக் குறிப்பிட்டுபாடி இன்புறுகிறார் அருணகிரியார். திருவண்ணாமலைக்கு அடுத்ததாக வயலூரில் தான் முருகனுடைய அனுக்ரஹம் பெற்று ‘கைத்தல நிறைகனி அப்பமொடு அரல் பொரி கப்பிய கரிமுகன் அடிபேணி…..’’ என்று அருணகிரியார் என்று பாடத் தொடங்கியது வயலூரில் தான் எனும் போது வயலூர்குமரனை எண்ணி மனம் கசிகிறது.

(உலா தொடரும்)

சித்ரா மூர்த்தி

Related Stories: