10 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தவிப்பு-அதிகாரிகள் நேரில் ஆய்வு

சிதம்பரம் : சிதம்பரம் அருகே கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் வரத்தால், 10 கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தவித்து வருகின்றனர். தண்ணீர் திறப்பு குறைப்பால், இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்ப குறைந்தது 3 தினங்கள் ஆகும் என கூறப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் கீழணைக்கு வந்து அங்கிருந்து கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப்பட்டு கடலில் கலக்கிறது. கடந்த இரு தினங்களாக சுமார் ஒரு லட்சத்து 90 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் சிதம்பரம் அருகே உள்ள தீவு கிராமங்களான திட்டுக்காட்டூர், கீழகுண்டலபாடி, அக்கரை ஜெயங்கொண்டபட்டினம் ஆகிய கிராமங்களில் மேலும் தண்ணீர் புகுந்தது.கடந்த 3 தினங்களாக இந்த கிராமங்களை வெள்ளம் சூழ்ந்த நிலையில் நேற்று 4வது நாளாக தண்ணீர் அதிகரித்து காணப்பட்டது. இதனால் ஏராளமான வீடுகளை சுற்றி தண்ணீர் நின்றதால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று சிதம்பரம் அருகே உள்ள வீரன்கோவில்திட்டு, சின்னகாரமேடு உள்ளிட்ட மேலும் சில கிராமங்களுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது. கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்து வீடுகளை சூழ்ந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் கால்நடைகளும் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவற்றை பாதுகாப்பான மேடான இடங்களுக்கு ஓட்டிக் சென்று கட்டி வைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த சிதம்பரம் கோட்டாட்சியர் ரவி, தாசில்தார் ஹரிதாஸ் மற்றும் அதிகாரிகள் தண்ணீர் சூழ்ந்த கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று கணிசமான அளவில் குறைக்கப்பட்டது. அதனால் இன்னும் இரு தினங்களில் தற்போது வெள்ளம் சூழ்ந்துள்ளகிராமங்களில் தண்ணீர் வடியும் என தெரிகிறது. இதனால் இந்த கிராமங்களில் இயல்பு வாழ்க்கை திரும்ப குறைந்தது 3 தினங்கள் ஆகும். இதனால் கிராம மக்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி உள்ளனர்….

The post 10 கிராமங்களை சூழ்ந்த வெள்ளம் 500க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் தவிப்பு-அதிகாரிகள் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: