சேரும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி; ஒரத்தி ஊராட்சியில் பெண்கள் நாற்று நடும் போராட்டம்

மதுராந்தகம்: தொடர் மழை காரணமாக ஒரத்தி ஊராட்சியில் சேரும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி, அப்பகுதி மக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்டம், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் ஒரத்தி ஊராட்சி உள்ளது, ஒரத்தியில் இருந்து தொழுப்பேடு வரை செல்லும் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. ஒரத்தி பஜார் வழியாக செல்லும் இந்த சாலையானது, பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் ஒரத்தி பஜார் பகுதியில் பள்ளம் படுகுழிகள் ஏற்பட்டு போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் நீண்ட காலமாக இருந்து வருகிறது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடத்தில் புகார் தெரிவித்தும், இந்த சாலை சீரமைக்கப்படாமல் இருந்தது. இதனால், இப்பகுதி மக்கள் இந்த சாலையை கடப்பதற்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த இரு தினங்களாக இப்பகுதியில் பெய்த மழையின் காரணமாக அந்த சாலையில் தண்ணீர் தேங்கி சேரும், சகதியுமாக விவசாயம் செய்யும் வயல்வெளி போல மாறிப்போனது.இதனால், இந்த சாலையை கடக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்களும், மாணவ, மாணவியரும் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி வந்தனர். இருசக்கர வாகனங்கள், சைக்கிள் கூட அவ்வழியாக செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே, இந்த சாலையை சீரமைத்து தர அதிகாரிகளை வலியுறுத்தும் விதமாகவும், அவர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் நேற்று அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் அந்த குறிப்பிட்ட மோசமான நிலையில் சேரும் சகதியமாக வயல்வெளி போல் காணப்படும் அந்த சாலையில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு வயல்வெளியில் நாற்று நடுவது போல் அந்த சாலையில் நாற்று நட்டு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது….

The post சேரும், சகதியுமான சாலையை சீரமைக்க கோரி; ஒரத்தி ஊராட்சியில் பெண்கள் நாற்று நடும் போராட்டம் appeared first on Dinakaran.

Related Stories: