மணவாழ்வை நிர்ணயிக்கும் ஜாதகத்தின் தன்மைகளும் கோயில்களும்

அவரவர்கள் கர்ம வினை, ஊழ்வினைக்கேற்ப ராகு கேதுக்கள் பலன்களைத் தருவார்கள். மிக அதீது உச்ச யோக பலன்களையும், மிக மோசமான நீச தோஷ பலன்களையும் அருளும் வல்லமை பெற்றவர்கள். ‘‘அவரவர் விதி வழி வந்தனர் யாவரும்’’ என்பது திருமுறை வாக்காகும். இப்படி ஒருவர் கூட்டுவிப்பார்கள். இருக்கும் ஸ்தானத்திற்கு ஏற்ப பலன்களும், தசா புக்தி காலங்களில் வாங்கியுள்ள சாரம், பார்க்கும் கிரகம், சேர்ந்து இருக்கும் கிரகத்திற்கு ஏற்ப பலன்களைத் தருவார்கள்.

பாவம், புண்ணியம் என்பதைப்பற்றிப் பல வகையான கருத்துக்கள், நம்பிக்கைகள், நம் சமூகத்தில் காலம் காலமாகத் தொடர்ந்து வந்துகொண்டிருப்பவை. இது ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவும் பேசப்படுகிறது. இருந்தாலும் கெட்டுப்போனால், துன்பம், துயரம் அனுபவித்தால் பாவம் செய்தவன். நல்ல நிலையில் இருந்தால், யோக போக சுகத்தை அனுபவித்தால் புண்ணியம் செய்தவன் என்ற பேச்சு வழக்கில் உள்ளது.

எது எப்படியோ ஜோதிட சாஸ்திரத்தில் இந்த இரண்டு பாம்புகளுக்கும் மிக முக்கியமான அந்தஸ்து கொடுக்கப்பட்டுள்ளது. எந்த துறையில் ஒருவர் உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் அதில் ராகு, கேதுவின் பங்கு நிச்சயம் இருக்கும். காரணம் பூர்வ புண்ணிய கர்மவினை சம்பந்தமான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. ஞானத்தையும், மோட்சத்தையும், யோகத்தையும், போகத்தையும் தரக்கூடிய ஆற்றல், வல்லமை, அதிகாரம் உள்ள கிரகங்கள் என்றால் அது மிகையாகாது.

கால சர்ப்ப தோஷம், காலசர்ப்ப யோகம் என்பது ராசிக் கட்டத்தில் ராகு-கேதுக்களின் பிடியில் மற்ற கிரகங்கள் இருப்பது, இந்த அமைப்புக்கள் பற்றி பழமையான ஜோதிட நூல்களில் மாறுபட்ட கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளது. பிற கிரகங்களின் சேர்க்கை நீச கிரக பார்வை, சேர்க்கை தோஷத்தையும், பாக்கிய கிரகங்களின் பார்வை, உச்ச கிரக சேர்க்கை யோகத்தையும் தருவதாக வழி வழியாக வந்த ஜோதிட ஆசிரியர்களின் கணிப்பாக இருக்கிறது. இந்த அமைப்பானது ஏற்ற இறக்கத்தையும், லாப நஷ்டங்களையும், விபரீத ராஜயோகத்தையும் கொடுக்கும்.

பொதுவாக இத்தகைய அமைப்பு உடையவர்கள் சுமார் 40 வயதிற்கு மேல் ஏற்றமான பலன்களை அனுபவிப்பார்கள். இதில், லக்னாதிபதி, யோக கிரகங்கள், தசைகள் முதலியவற்றைக் கணக்கில் கொண்டு தெரிந்துகொள்ள வேண்டும். லக்கினத்தில் ராகு, ஏழில் கேது அல்லது லக்கினத்தில் கேது, ஏழில் ராகு இருப்பது களத்திர தோஷம். இது திருமண வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும்.

கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள், பிரிவினைகள், வழக்குகள், விவாகரத்து போன்றவை எல்லாம் இந்த அமைப்பின் மூலம்தான் வரும். மற்ற கிரகங்கள் பலமாக இருந்தால் பெரிய அளவில் பிரச்னை இருக்காது. கேது ஆன்மிகத்தில் ஈடுபாட்டைக் கொடுப்பார். யோகம், ஞானம் சித்திக்கும். அறக்கட்டளை, கோயில் திருப்பணிகளில் ஈடுபடும் பாக்கியம் உண்டு.

இரண்டில் ராகு, எட்டில் கேது அல்லது இரண்டில் கேது, எட்டில் ராகு இருப்பது பொதுவாகப் பல பிரச்னைகளை தரக்கூடியது. குடும்பத்தில் எப்போதும் ஒரு நிம்மதியற்ற, நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தும். திருமணத்தடை, தாமதத் திருமணம், இரண்டாம்தார அமைப்பு, விரக்தி, சஞ்சலம், இனம் புரியாத பயம், கவலைகள் ஏற்படும். தன் பேச்சினாலே இவர்கள் பல நல்ல விஷயங்களைக் கெடுத்துக் கொள்வார்கள். உணர்ச்சிவசமாகப் பேசிவிட்டு பின்பு வருந்துவது இவர்களின் வாடிக்கையாகும்.

ராகு மூலம் பணம், சொத்து குவியும். உழைப்பில்லாத செல்வம் சேரும். திடீர் நஷ்டங்கள், பொருட்கள் தொலைந்துபோவது போன்றவையும் இருக்கும்.

நான்கில் ராகு, பத்தில் கேது அல்லது நான்கில் கேது, பத்தில் ராகு இருப்பது பல முன்னேற்றங்களையும், தடைகளையும் தரும். ராகு, கேதுவைப் பொருத்தவரை நிறை குறைகள் கலந்து இருக்கும். குறிப்பாகக் கல்வியில் நல்ல மேன்மை பெற்றால், உடல்நலத்தில் அடிக்கடி பிரச்னைகள் வரும். தாயார் உடல்நலம் பாதிக்கப்படும். ஒன்றைக் கொடுப்பது ஒன்றைக் கெடுப்பது பாம்புகளின் குணாதிசயமாகும்.

அடிக்கடி இடமாற்றம், ஊர் மாற்றம் இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய்க் கோளாறுகள், கர்ப்பப்பை பிரச்னைகள் இருக்கும். தகாத பழக்கங்கள், உறவுகள் பிற பெண்களுடன் சேர்க்கை வரும் வாய்ப்புள்ளது. மருத்துவ சம்பந்தமான துறையில் ஜீவனம், தொழில் அமையும். ஐந்தாம் வீட்டில் ராகு அல்லது கேது இருப்பது புத்திர தோஷமாகும். சுகஸ்தானம், வீரியஸ்தானம் சரியாக இல்லை என்றால் புத்திர பாக்கியம் தாமதமாகும். கேது சாஸ்திர ஞானத்தைத் தருவார். கணபதி உபாசகர் மற்றும் காளி, பிரத்யங்கிரா, வாராகி அம்மன் போன்ற தெய்வங்களை உபாசனை செய்வார்கள்.

பிள்ளைகளின் வாழ்க்கை சம்பந்தமாக கவலைகள், வருத்தங்கள் இருக்கும். ஏதாவது ஒரு வகையில் மனக்குறை, அமைதியின்மை இருந்துகொண்டே இருக்கும்.

அயன, சயன போக ஸ்தானமான 12ஆம் வீட்டில் ராகு-கேது இருந்தால் அடிக்கடி பயணங்கள், அலைச்சல் இருக்கும். தூக்கம் சரியாக இருக்காது. எப்போதும் பரபரப்பாக, வேலை, தொழில் என்று அலைந்துகொண்டே இருப்பார்கள்.

ஏழாமிடம் யோகம்  தோஷம்:

சந்திரன் 7 ஆம் இடத்தில் இருப்பது சிறப்பான யோகமாகும். ஜாதகர் கலா ரசிகராக இருப்பார். இயற்கை அழகை மிகவும் நேசிப்பார்கள். காதல் வயப்படுவார்கள். பெரும்பாலானவர்கள் காதல் திருமணம் செய்துகொள்வார்கள். ஒருவிதமான காந்த கவர்ச்சி தன்மை இருக்கும். குரு பார்வை பெற்றால் குரு சந்திர யோகம், கஜ கேசரி யோகம் உண்டு. பட்டம், பதவி, பாராட்டு கிடைக்கும். உயர்ந்த உச்ச அந்தஸ்து அமையும்.

நிதித்துறை, நீதித்துறையில் இருக்கும் அமைப்பு உண்டு. சந்திரன், சனி பார்வையில் இருந்தால் சஞ்சலம், சபலம், மாறுகண், முகத்தில் ஒளி இழந்த நிலை. மங்கு என்று சொல்லப்படும் கருமை படர்ந்த முக அமைப்பு இருக்கும். வயோதிகர் அல்லது இரண்டாம் தாரமாகச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எதிர்பாராத வகையில் திடீர் அவசர திருமணமாக அமையும். புதன் பார்வை சந்திரனுக்கு இருந்தால் இயல், இசை, நாட்டியம் என புகழ் பெறுவார்கள். கவர்ச்சிகரமான உடல் அமைப்பு இருக்கும். காதல் திருமணம் செய்துகொள்வார்கள். அதீதமான காமசுகரசனை இருக்கும்.

பெற்றோர்களின் சம்மதமின்றி திருமணம் செய்பவர்களாக இருப்பார்கள். எந்த கவலையையும் அதி விரைவில் பார்வையில் சந்திரன் இருப்பது சந்திர மங்கள யோகம். சொத்து சுகம் சேரும். தம்முடைய ஆடைகள், விருப்பங்களை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்வார்கள். எந்த விஷயத்திலும் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். சூரியன், சந்திரன் சம சப்தமாகப் பார்ப்பது பௌர்ணமி யோகம். சொத்து, செல்வாக்கு இருக்கும். மனைவி மூலம் பாக்கியம் யோகம் கிடைக்கும். உயர் உச்ச பதவிகள் தேடி வரும். ராகு, கேது, சந்திரன் சம்பந்தம் காரணமாக நிம்மதி இல்லாத தன்மை ஏற்படும். மனஉளைச்சல், விரக்தி, தற்கொலை எண்ணங்கள், பிரிந்து வாழ்வது, வாக்குவாதம் என வாழ்க்கை போர்க்களமாக அமையும்.

சுக்கிரனின் பார்வை சந்திரனுக்கு ஏற்படும்போது சகல யோகங்களும் சித்திக்கும். எல்லோரையும் சுண்டி இழுக்கின்ற கவர்ச்சிகரமான உடல் அமைப்பு. முக அமைப்பு இருக்கும். வாழ்க்கையை ரசித்து ருசிக்க வேண்டும் என்பதில் தீராத மோகமுடையவர்களாக இருப்பார்கள். கலைத்துறையில் ஜொலிக்கும் யோகத்தை சந்திரனும், சுக்கிரனும் அருள்வார்கள். ஏழாம் வீட்டில் சுக்கிரன் இருப்பது பாக்கிய தனலட்சுமி யோகம். நமது வாழ்க்கையில் சந்தோஷமான தருணங்களைத் தருவது சுக்கிரனின் அருட்கொடையே. எட்டாததை எட்டச் செய்வார். கிட்டாததைக் கிட்டச் செய்வார். எல்லா சுக போகங்களுக்கும் கர்த்தா. அயன சயன போகத்தை அள்ளி வழங்குபவர் காம காரகன், களத்திரகாரகன், விந்தைகள் புரியும்.

மாயக்கிரகம், காமக்களியாட்டங்களை நடத்தும் தலைமைச் செயலாளர். சுக்கிரனின் சாகசங்கள், திருவிளையாடல்கள், எல்லாத் துறைகளிலும் பரந்து விரிந்து கிடக்கிறது. ஆடம்பரமான சொகுசு வாழ்க்கையைத் தருபவர் சுக்கிரன். சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் ஆண், பெண் இருபாலருக்கு வசிய சக்தி இருக்கும். பெண்கள் கருப்பு, மாநிறமாக இருந்தாலும் அவர்களிடம் எல்லோரையும் சுண்டி இழுக்கும் காந்த கவர்ச்சி இருக்கும். முகமும் கண்களும் பேசும், ஒளி வீசும். சுக்கிரன் திருமணப் பந்தத்திற்கும், இல்லற சுகத்திற்கு முக்கிய கிரகமாக இருக்கிறார். ஆண் ஜாதகத்தில் மனைவியைப் பற்றியும், பெண் ஜாதகத்தில் கணவரைப்பற்றியும் அறிய வைப்பவர். விளங்க வைப்பவர்.

திருமணத்திற்குப் பொருத்தம் பார்க்கும்போது ஆண், பெண் இந்த இரண்டு ஜாதகங்களிலும் சுக்கிரனின் அமைப்பைக் கவனிப்பது மிக மிக இன்றியமையாததாகும். சுக்கிரன் சுப பாக்கியத்தைத் தரும் சூப்பர் சுபகிரகம். இவர் 7 ஆம் வீட்டில் இருப்பது ஒரு வகையில் பாக்கியம், மற்றொரு வகையில் துர்பாக்கியமாகும். களத்திரகாரர்கள் சுக்கிரன் களத்திர ஸ்தானத்தில் இருப்பது களத்திர தோஷம். அதிலும் நீசமாக இருக்கக் கூடாது. 6, 8, 12-க்குடையவர்கள் சேர்க்கை பெற்றால் இல்லறம் கசக்கும். கணவன், மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், பிரிந்து வாழ்வது என பிரச்னைகள் வரும்.

பலம் பெற்ற சுக்கிரன் சமயோசிதமாகவும், தந்திரமாகவும் ஜாதகரை வழி நடத்துவார். இவர்கள் செய்யும் திரை மறைவு வேலைகள், பிறர் தொடர்பு காரணமாக இல்வாழ்க்கையில் இடைவெளி ஏற்படும். யோகத்தையும், தோஷத்தையும், கௌரவத்தையும், அவமானங்களையும் ஒரு சேர வழங்கும் தன்மை சுக்கிரனுக்கு உண்டு. 7-ல் சுக்கிரன் நல்ல ஆதிபத்தியம் பெற்று அமர்ந்தால் ஜாதகர் ராஜபோகத்தை அனுபவிப்பார். பலம் குறைந்த சுக்கிரன் தருவதுபோல் தந்து எல்லாவற்றையும் கெடுத்து விடுவார். தகாத உறவுகள், கீழோர் சேர்க்கை, சிறுநீரகக் கோளாறுகள், ஆண், பெண் மர்ம உறுப்புகளில் பிரச்னை, நோய்கள் வரும்.

கண், தோல், கட்டிகள், ஆறாப் புண்கள், நாடி நரம்புகள் தளர்ச்சி, விந்து குறைபாடு என பல வகைகளில் ரோகத்தைத் தருவார். லக்னாதிபதி, சந்திரன் பலமாக இருந்தால் சுக்கிரனின் நீசகெடுபலன்கள் கணிசமாகக் குறையும். மேலே சொல்லப்பட்டுள்ள கிரக அமைப்புள்ள அன்பர்கள் பொதுவாகவே செல்ல வேண்டிய சில கோயில்கள் உள்ளன. முதலில் ராகு - கேதுவுக்கான ஆலயமான பேரையூர் நாகநாதர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். இத்தலம் புதுக்கோட்டையிலிருந்து பொன்னாமராவதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது.

திருமணம் ஆனவர்களும் கூட இத்தலத்திற்கு சென்று வரலாம். அதேபோல கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருநல்லூர் எனும் தலத்தில் அருளும் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலுக்குச் சென்று வாருங்கள். மணவாழ்வினில் சுக்கிரனால் ஏற்படும் தொந்தரவுகளை நீக்க கும்பகோணம், ஆடுதுறை அருகிலுள்ள கஞ்சனூர் தலத்திற்குச் சென்று வாருங்கள். அதேபோல கும்பகோணத்திற்கு அருகேயுள்ள திருவெள்ளியங்குடியில் அருள்பாலிக்கும் சுக்கிராச்சாரியார் வணங்கிய கோலவில்ராமனையும் தரிசித்து வாருங்கள். மேலே சொல்லப்பட்டுள்ள பிரச்னைகள் நீங்கி மணவாழ்வு சிறக்கும்.

Related Stories:

>