செவ்வாய் தோஷம் நீக்கி மணவாழ்வை சிறக்கச் செய்யும் தலங்கள்

வைத்தீஸ்வரன் கோவில், சென்னை - பூவிருந்தவல்லி

நம் உடல் அமைப்பில் முக்கியமாக வெப்பத்திற்கும், ரத்தத்திற்கும் தொடர்பு உள்ள கிரகம். ஆண்மை, வீரியம், போன்ற விஷயங்கள் தடையில்லாமல் சீராக, சிறப்பாக இருக்க செவ்வாயின் பலம் மிக மிக அவசியமாகும். திடகாத்திரமான, கட்டுமஸ்தான உடல் அமைப்பு, உடல் திறன், போட்டி, பந்தயங்கள், வீரதீர செயல்கள், சாகச நிகழ்ச்சிகள், பளு தூக்குதல், தடகள போட்டிகள் போன்றவற்றில் சிறந்து விளங்க செவ்வாயின் அருள் தேவை. ரியல் எஸ்டேட் தொழில்,

கட்டுமானத் தொழில், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங், நெருப்பு சம்பந்தமான தொழில்களில் ஈடுபட செவ்வாய் பலம் தேவை.

மருத்துவத்துறையில் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்களை உருவாக்குபவர் செவ்வாய். ஆண், பெண் இருவரின் ஜாதகத்தை ஜோதிடரிடம் கொடுத்துவிட்டு நல்ல ராசியா, நல்ல நட்சத்திரமா, எத்தனை பொருத்தங்கள் இருக்கிறது என்று கேட்பார்கள். மற்றபடி ஜாதகக் கட்டத்தில் கிரக அமைப்புக்கள் எப்படி இருக்கிறது, யோகத்தை தரக்கூடிய தசைகள் வருமா, தன, குடும்ப, பாக்கியஸ்தானம் நன்றாக இருக்கிறதா? திருமண இல்லற வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்குமா? என்ன தோஷங்கள் இருக்கின்றது என்பதை பற்றி யாரும் அதிகமாக கேட்டுத் தெரிந்துகொள்வதில்லை.

மங்களன் என்று அழைக்கப்படும் செவ்வாய் உடலில் ரத்தஓட்டத்திற்கு காரணகர்த்தா. உடலில் வெப்பத்தை தரக்கூடியவர். உஷ்ண தேகவாகு உள்ளவர்கள். செவ்வாய் ஆதிக்கத்தில் பிறந்திருப்பார்கள். ஒரு ஆண் மகனின் ஜாதகத்தில் செவ்வாய் பலமாக இருந்தால்தான் தன்னம்பிக்கை, திட தைரிய வீரியம், ஊக்கம் போன்ற லட்சணங்கள் இருக்கும். பெண்களின் ஜாதகத்தில் செவ்வாய் முக்கிய பங்கு வகிக்கிறார். பெண்கள் பூப்படைவது செவ்வாயின் அருளினால்தான். மாதவிடாய் சரியான சுழற்சி முறையில் வருவதற்கு செவ்வாயும், சந்திரனும் காரணமாக இருக்கிறார்கள். செவ்வாயின் இந்த ஆதிக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தோஷம் என்ற பெயரில் ஆண், பெண் ஜாதகங்களை பொருத்தம் பார்த்து சூட்சுமமாக சேர்த்தார்கள்.

இல்லறம் என்ற திருமண பந்தத்தில் முக்கிய அம்சமாகும். இதன் வழியாகத்தான் வம்சம் விருத்தியாகிறது. இதற்கான வீரியத்தையும், ஆற்றலையும் தரக்கூடியவர் செவ்வாய். அதன் காரணமாக உள்ளமும், உடலும் சாந்தி அடைகின்றது. ஆகையால்தான் ஜோதிட சாஸ்திரத்தில் செவ்வாய்க்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இத்தகைய வீரியம் மிக்க செவ்வாய் ஜாதகங்களில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் செவ்வாய் தோஷம் என்று சொல்கிறோம். இதற்கேற்ப ஆண், பெண் இரு ஜாதகங்களிலும் 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருக்கும் ஜாதகங்களை ஒன்றுசேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. சில பழமையான ஜோதிட நூல்களில் சந்திரனில் இருந்தும், செவ்வாய் தோஷத்தை கணக்கிடலாம் என்று சொல்லப்பட்டுள்ளது.

மேலும் பெரும்பாலான ஜாதகங்களில் செவ்வாய் தோஷம் நிவர்த்தியாகி இருக்கும். ஏனென்றால் தோஷ நிவர்த்திக்கு நிறைய காரணங்கள், விதிகள், கிரக சேர்க்கைகள், பார்வைகள் விதிவிலக்காக சொல்லப்பட்டுள்ளது. செவ்வாய் தோஷ நிவர்த்தி என்பதற்காக தோஷம் கிடையாது என்று அர்த்தம் அல்ல. பல்வேறு அமைப்புகள் காரணமாக பெரும்பான்மையான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தி ஏற்பட்டு இருக்கும். ஆகையால் தோஷநிவர்த்தி ஆகிவிட்டது என்பதற்காக தோஷமே இல்லாத ஜாதகத்துடன் சேர்க்கக்கூடாது.

செவ்வாய் அமைப்பும் குணாதிசயங்களும்

லக்னத்தில் இருந்து செவ்வாய் எந்த வீட்டில், எந்த இடத்தில் இருக்கிறாரோ அதைப் பொறுத்தே ஒருவரின் குணம், நடத்தை அமைகின்றன. செவ்வாய் தோஷம் உள்ள ஜாதகம் அதாவது செவ்வாய் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய ஸ்தானங்களில் இருக்கும் பலன்கள். அந்தந்த ராசிகளின் தன்மைகளுக்கேற்ப பலன்களின் தன்மை கூடிக்குறைந்து இருக்கும்.

தனம், குடும்பம், வாக்கு என்ற இரண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்

இந்த இரண்டாம் இடத்துச் செவ்வாயால் ஒருவரின் குண இயல்புகளை புரிந்துகொள்ள முடியாது. எந்த நேரத்தில் எப்படிப் பேசுவார் என்பதை கணிக்க முடியாது வார்த்தைக்கு வார்த்தை எதிர்வாதம் இருக்கும். குடும்பத்தில் டென்ஷனான சூழ்நிலைகள் இருக்கும். வீண்பேச்சுக்கள், விதண்டாவாதம், முன்கோபம் இருக்கும். அதே நேரத்தில் நியாய தர்மங்களை எடுத்துரைப்பார்கள். இவர்கள் பேச்சைக் குறைத்து நிதானத்தைக் கடைப்பிடிப்பது நலம் தரும்.

மண், மனை, வீடு, சுக ஸ்தானம் என்ற நான்காம் வீட்டில் செவ்வாய் இருந்தால்

இந்த நான்காம் இடத்து செவ்வாயால் நிறைகுறைகள் உண்டு. அரசாங்க உத்தியோகம் அமையும். அடிக்கடி இடமாற்றங்கள் இருக்கும். பயணங்கள் அதிகம் உண்டு. உஷ்ண தேகம் உடையவர்கள், வயிற்றுக்கோளாறுகள், ஜீரண பிரச்னை மூலம் போன்றவை ஏற்படும். பெண்களுக்கு மாதவிடாய் பிரச்னைகள், கர்ப்பப்பை கோளாறுகள் இருக்கும். அடிக்கடி கருச்சிதைவு ஏற்பட வாய்ப்புள்ளது. சொத்து சேரும். பூமி யோகம் உண்டு. குத்தகை, வாடகை வருமானம் நிறைய வரும். ரியல் எஸ்டேட், கட்டிட கட்டுமானத் தொழில் அமையும்.

கணவன், மனைவி, இல்லறம் என்ற ஏழாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்

இந்த ஏழாம் இடத்து செவ்வாய் அதிக வீரியம் மிக்கதாகும். ஏழாம் இடம் எந்த ராசியோ அதற்கேற்ப பலன்கள் இருக்கும். செவ்வாய் நேராக லக்னத்தைப் பார்ப்பதால் அதிகார தோரணை இருக்கும். கொள்கைப் பிடிப்பு உள்ளவர்களாக இருப்பார்கள். தான் சொன்னதுதான் சரி என்று அடித்துப் பேசுவார்கள். உயர் உச்ச பதவிகளில் அமரும் யோகம் உண்டு. அரசியலில் புகழ் அடைவார்கள். துணிச்சல், எப்போதும் பரபரப்பு, மூக்கின்மேல் கோபம், கட்டப் பஞ்சாயத்து, எதிரிகள், எதிர்ப்புக்கள், தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள், ராணுவம், போலீஸ், தீயணைப்புத்துறை, வீரசாகசச் செயல்கள், உடல் திறன்மிக்க விளையாட்டு என பல அமைப்புகள் இருக்கும்.

ஆயுள், மாங்கல்யம் என்ற எட்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்

இந்த எட்டாம் இடத்து செவ்வாய் பல பிரச்னைகளை ஏற்படுத்துபவராக இருப்பார். எப்பொழுதும் படபடப்பாகவே இருப்பார்கள். விதண்டாவாதங்கள் அதிகம் இருக்கும். இதனால் நட்பு, சொந்த பந்தங்களிடையே சுமுகமான உறவு இருக்காது. எடுத்தெறிந்து பேசி விட்டு பின்பு வருத்தப்படுவார்கள். விபத்துக்கள், வெட்டுக்காயங்கள், கண் நோய்கள், மர்ம ஸ்தானத்தில் நோய்கள் வரவாய்ப்புள்ளது. நல்ல யோக ஆதிபத்யம் உள்ள செவ்வாய், பொன், பொருள் யோகத்தை தருவார். பதவி, அதிகாரம், பூமியால் லாபம், உயில் சொத்து போன்றவை கிடைக்கும்.

அயன, சயன, போக ஸ்தானம் என்ற பன்னிரெண்டாம் வீட்டில் செவ்வாய் இருந்தால்

இந்த பன்னிரெண்டாம் இடத்து செவ்வாயால் நிறை குறைகள் இருக்கும். எந்த ராசியில் இருக்கிறதோ அதற்கேற்ப பலன்கள் அமையும். விடாமுயற்சியுடன் காரியம் சாதிப்பில் வல்லவர்கள். அவ்வளவு எளிதில் சமாதானமாக  மாட்டார்கள். சகோதர உறவுகளிடையே நல்லுறவு இருக்காது. சாதாரண விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சிவசப்படுவார்கள். அதனால் பல நல்ல வாய்ப்புக்களை இழப்பார்கள். கூட்டுத்தொழில் ஒத்து வராது. கணவன், மனைவி இடையே வளர்பிறை, தேய்பிறைபோல் உறவு இருக்கும்.

வழக்குகள், போலீஸ், கோர்ட், பஞ்சாயத்து என வாழ்க்கை முழுவதும் ஏதாவது இருந்துகொண்டே இருக்கும். இந்த செவ்வாய் தோஷம் உண்டாகும் ஸ்தானங்களை கவனித்தால் நமக்கு எளிதாக ஒரு உண்மை விளங்கும். இந்த ஸ்தானங்கள் எல்லாம் வாழ்க்கைக்கு மிக முக்கிய ஸ்தானங்கள். இரண்டாம் இடம் வாக்கு, குடும்பம், நான்காம் இடம் சுகம், வீடு, தாய், ஏழாம் இடம் இல்லற சுகம், கணவன், மனைவி பயணங்கள். எட்டாம் இடம் மாங்கல்யம் தாலி பாக்கியம், ஆயுள், அதிர்ஷ்டம், பன்னிரெண்டாம் இடம் தூக்கம், சம்போகம், படுக்கை சுகம்.

இந்த விஷயங்கள் எல்லாமே ஒருவரின் வாழ்க்கையை நிர்ணயிக்கும் அமைப்புக்களாகும். ஆகையால்தான் ஜோதிட சாஸ்திரத்தை நமக்களித்த சித்தர்கள், முனிவர்கள், சப்த ரிஷி நாடி, போன்றவற்றில் இந்த இடங்களில் செவ்வாய் இருப்பது இப்படிப்பட்ட குண, குற்றங்களை ஏற்படுத்தும் என்று சொல்லி உள்ளார்கள். இது பொதுப்பலன் என்றாலும், அனுபவ ரீதியாக பெரும்பான்மையானவர்களுக்குச் சரியாக ஒத்துப் போகிறது. சிலருக்கு லக்கினம், ராசி, அம்சம் அமைப்பின்படி பலன்களில் சிறிய மாறுபாடு இருக்கும். செவ்வாயின் அமைப்பு எப்படி இருக்கிறது? அவர் எந்த ராசியில் எந்த கிரக சாரத்தில் இருக்கிறார் தோஷம் எப்படி அமைந்துள்ளது என்பதற்கேற்ப அதற்கு இணையான பெண் ஜாதகத்தை சேர்ப்பது நன்மை தரும்.

செவ்வாய் தோஷம் கெடுக்காது. பிரபல ராஜயோகத்தையும் தரும். செவ்வாயால் இல்லறம் கசக்காது. சரியான ஜாதகங்களை ஜோடி சேர்ப்பதன் மூலம் இல்லறம் தேனில் ஊறிய பலாச்சுளைபோல இனிக்கும். செவ்வாய் தோஷத்தை நீக்கும் தலத்தில் மிக முக்கியமானது வைத்தீஸ்வரன் கோவில் வைத்தியநாத சுவாமி ஆலயமாகும். இத்தலத்தில் உள்ள அங்காரகனை தரிசித்து வர செவ்வாய் தோஷத்தால் தடையுற்றிருந்த திருமணம் விரைந்து நடக்கின்றது. அதேபோல சென்னை - பூவிருந்தவல்லியில் வைத்தியநாதசுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலின் மூலவர் பெயரே வைத்தியநாத சுவாமி.

அம்பிகையின் பெயர் தையல் நாயகி அம்மன். நவகிரகங்களில் அங்காரகன் எனப்படும் செவ்வாய்க்குரிய தலமாக இத்தலம் விளங்குகிறது. செவ்வாய்க்கிழமை அன்று வரும் ராகுகால நேரத்தில் இத்தலத்தில் உள்ள அங்காரகனுக்கு அர்ச்சனை செய்து, விளக்குகள் ஏற்றியும் வழிபட, செவ்வாய் தோஷத்தின் வீரியம் குறைந்து திருமணம் நன்முறையில் நடப்பது மட்டுமில்லாமல் திருமணம் ஆனவர்களுக்கும் இனிய மணவாழ்க்கை நீடிக்கின்றது என்பது பக்தர்களின் அனுபவ நம்பிக்கையாகும்.

Related Stories:

>