சாய்பாபாவின் கருணை : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

ஆண்டாள் தந்த அருளாசி

கொரோனா முடிந்த நிலையில், அரசு 50 சதவீத மக்கள் ஆலயங்களில் தரிசனம் செய்யலாம் என்ற ஆணை பிறப்பிக்கப்பட்டதை அறிந்து, நான் என் குடும்பத்தாருடன் ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை - நாச்சியார் என்றழைக்கப்படும் ஸ்ரீ ஆண்டாளை தரிசிக்கச் சென்றோம். சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வந்தோம். என்னுடைய பேத்தி (வயது - 1) யின் காலில் அணிந்திருந்த வெள்ளிக் கொலுசு காணவில்லை. வருத்தத்துடன் ஆலய வாசலில் நாங்கள் எல்லோரும் அமர்ந்தோம். அப்போது, ஒரு பத்து வயதுள்ள பெண் பிள்ளை எங்களை நோக்கி வந்தது. இது உங்களுடைய கொலுசா? என்று கேள்வி கேட்டது. ஆம் என்று நாங்கள் கூற அதைத் தந்துவிட்டு ஓடி விட்டது. இந்நிகழ்ச்சி ஆண்டாளே நேரில் வந்து அருளாசி வழங்கியது போலிருந்தது. இன்று வரை இந்நிகழ்ச்சி என் நினைவில் மட்டுமல்ல, நெகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

- இல. வள்ளிமயில், மதுரை - 625006.

ஈசனின் அருள்மழை

நானும், என் நண்பரும் மதுரை மீனாட்சி ஆலயத்தில் பிரதோஷம் காணச் சென்றோம். கூட்டமோ அளவு கடந்த கூட்டம். என் நண்பர் மாற்றுத் திறனாளி என்பதால் கூட்டத்தைக் கடந்து, தரிசனம் செய்ய முடியவில்லை. நந்தியின் பூசைகளை மிக விரும்பிப் பார்ப்பவன். நாங்கள் சென்ற நேரம் கூட்டம் நிறைய இருந்தது. அவர் முகம் வாடியிருந்தது. எனக்கும், என் நண்பனின் நிலைகண்டு மிக வருத்தமே. பூசையன்று காவலுக்கு நின்றிருந்த ஆய்வாளர் என் நண்பனை நோக்கி வந்தார். என் நண்பனின் கையைப் பிடித்து அழைத்துப்போய், நந்தியின் அருகில் அமர வைத்து எல்லா அபிஷேகங்களையும்,  கண் குளிர காண வைத்தார். ஈசனே நேரில் வந்து எங்கள் இருவருக்கும் தரிசனம் தந்தது போலிருந்தது. நாங்கள் அவரை ஆய்வாளராக எண்ணவில்லை; அருள் மழைப் பொழிந்த ஈசனாகவே பார்த்தோம். இறைவன் அவர் வடிவில் வந்திருந்து. அருள் மழை பொழிந்தமைக்கு நன்றியைத் தெரிவித்தோம். அவரோ, புன்னகைத்து, எங்களைப் பிரசாதம் வாங்கித் தந்து, வழியனுப்பி வைத்தார். மனதிற்கு நிறைவாய் இருந்தது.

- சு. இலக்குமணசுவாமி, மதுரை - 625006.

அருளால் என்னை அடிமையாக்கிய அம்மன்

எனது வீட்டிலிருந்து சிறிது தொலைவிலிருக்கும் நாகை மாவட்டம் தேவூர் ஸ்ரீசெல்லமுத்து மாரியம்மன் கோயில் வேண்டுவோருக்கு வேண்டியதைத் தருவாள். எனது மகனின் பிறந்தநாளை காரைக்காலில் உள்ள எனது அண்ணனின் வீட்டில் சிறப்பாக கொண்டாடுவதற்காக, எனது மனைவி முதல் நாளே முடிவு செய்திருந்தாள். மறுநாள் காலையில், நீங்கள் வாருங்கள். நாம் இருவரும் நம் மகன் பிறந்த நாளன்று அபிஷேகத்திற்கு கொடுத்துள்ளேன் என்றாள். நான் சிறிது அலட்சியமாக, நீ மட்டும் போ என்று கூறிவிட்டு எனது விவசாய நிலத்தைப் பார்ப்பதற்காகச் சென்றேன். அப்போது மழைநீர் அதிக அளவில் வயலில் சென்று கொண்டு இருந்தது. அப்போது என் இரு கைகளாலும் வரப்பு ஓரத்தில் உள்ள மண்ணை அள்ளி முழுவதுமாக அடைத்துவிட்டு என் கைகளை கழுவும்போது பார்த்தேன். என் விரலிலுள்ள ஒரு பவுன் மோதிரம் சேற்றில் சிக்கி காணாமல் போய்விட்டது. எவ்வளவு முயற்சி செய்து தேடியும் கிடைக்கவில்லை. நான் மிகவும் கஷ்டத்துடன் வீட்டுக்கு வந்து இரண்டு சல்லடையை எடுத்துக்கொண்டுபோய் சேற்றையும், தண்ணீரையும் அள்ளிப் போட்டு ஆறு மணி நேரமாக தேடிக் கொண்டே இருந்தேன். கிடைக்கவே இல்லை. என் மனைவியிடம் இருந்து போன் வந்தது. நீங்கள் அம்மனை அலட்சியப்படுத்தி விட்டுப் போனீர்கள். அதனால்தான் உங்களுக்கு இவ்வளவு கஷ்டம் என்றாள். அடுத்தநொடியே மனம் உருகி வேண்டிக் கொண்டு, வயலின் வாய் மடையில் உள்ள சேற்றை சல்லடையில் அள்ளி வைத்துக் கொண்டு உன் அருளால் என் மோதிரம் இதில் இருக்க வேண்டும் என் கண்ணில் காட்டு தாயே! அம்மா... என்றேன். என்ன ஒரு அதிசயம்! உடனே, என் கையில் மோதிரம் தட்டுப்பட்டு கிடைத்து விட்டது. நான் பெரும் மகிழ்ச்சியுடன் என் வீட்டிற்குப்போய், என் மனைவியிடம் சொன்னேன். எல்லாம் அம்மாவின் அருள் என்றாள். அன்று

முதல் நான் நாள்தோறும் காலையிலும் இரவும் ஸ்ரீ தேவூர் செல்லமுத்து மாரியம்மனையே நினைத்து வாழ்ந்து வருகிறேன்.

- S. முருகானந்தம், தேவூர்.

சாய்பாபாவின் கருணை

1957-ம் ஆண்டிலிருந்து ஷீரடி சாய்பாபாவை வணங்கி வருகிறேன். கடந்த பல ஆண்டு

களாக, வியாழக்கிழமை தோறும், வீட்டில் பாபாவுக்கு பிரசாதம் படைத்து, 108 நாமாவளி அர்ச்சனையுடன் பூசித்து வருகிறேன். கடந்த 14.01.2021 வியாழனன்று தைப் பொங்கலை முன்னிட்டு வேலூரில் உள்ள மகன் வீட்டிற்குச் சென்று விட்டபடியால், அன்று பாபாவுக்கு பூசை செய்ய இயலாது போய்விட்டதே என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இருப்பினும், அன்று மாலை அரியூர் பொற்கோயிலுக்குப் போகும் வழியிலுள்ள பாபா கோயிலுக்கு மகன் மற்றும் பேத்தியுடன் சென்றிருந்தேன். நாங்கள் சென்ற நேரம், பாபாவுக்கு அபிஷேகம் செய்ய ஆரம்பமானது. வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் வரிசையில் நின்று சங்கு மூலம் பாபாவுக்கு பாலபிஷேகம் செய்யும் பொன்னான வாய்ப்பு கிட்டியது. என்முறை வந்தபோது, நானும் சங்கு மூலம் பாபாவுக்கு என் கைகளால் பாலபிஷேகம் செய்யும் பாக்கியம் கிடைத்தது. அது மட்டுமல்ல, பாபா கோயிலுக்கு வடக்கே அமைந்துள்ள நீண்ட, பெரிய ஹாலில் உள்ள மற்றொரு பாபா சிலைக்கு, ஏறத்தாழ ஒரு மணி நேரம் பக்திப் பாடலுடன் நடைபெற்ற ஆரத்தி தரிசனத்திலும் கலந்து கொண்டு பாபாவை மனதார வணங்கும் அரிய வாய்ப்பும் கிட்டியது. வியாழனன்று வீட்டில் பாபாவுக்கு வழக்கமான பூசை செய்து வணங்க முடியவில்லையே எனும் எனது  ஏக்கத்தைப் போக்கியதோடு அல்லாமல், எனது கைகளால் பால் அபிஷேகம் செய்யும் வாய்ப்பையும், ஆரத்தி தரிசனத்தையும் நல்கி, பரவசத்தை அளித்து, அருளாசி வழங்கிய பாபாவின் கருணையை, எனது 85வது வயதிலும் என்றென்றும் மறக்க இயலாது. இது ஓர் இறை அனுபவம் என்பதில் ஐயமில்லை.

  - வா. அனந்த கிருஷ்ணன், ஆற்காடு.

Related Stories: