பூந்தமல்லியில் இன்று நாகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்

பூந்தமல்லி: பூந்தமல்லியில் உள்ள மிகப் பழமையான நாகாத்தம்மன் ஆலயத்தில் இன்று காலை மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சென்னை அருகே பூந்தமல்லி, நகர், அண்ணாசாலை பகுதியில் மிகப் பழமையான  நாகாத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து, அம்மனுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபட்டு வருவது வழக்கம். இக்கோயிலில் திருக்கோயில் ஆகம விதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த சில மாதங்களாக நாகாத்தம்மன் கோயிலில் பல்வேறு சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் நடைபெற்று முடிந்தன. மேலும், இக்கோயிலில் புதிதாக ராஜகோபுரம் அமைக்கப்பட்டு, அதற்கான சுதை சிற்ப வேலைப்பாடுகளுக்கு வர்ணம் தீட்டும் பணிகள் நடந்து முடிந்தன. இதைத் தொடர்ந்து, இக்கோயில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கோ பூஜை, கஜ பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் நேற்று மாலை 3ம் கால யாகபூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில், இன்று காலை நான்காம் கால யாக பூஜையுடன் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ராஜகோபுரம், மூலவர் விமானம், கௌமாரி, வைஷ்ணவி, துர்க்கை முதலான பிரகார சந்நிதிகளில் சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி, மகா கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். பின்னர் அங்கிருந்த ஏராளமான பக்தர்கள்மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அனைத்து பக்தர்களும் அம்மனை பரவத்துடன் தரிசித்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் டி.அன்புரோஸ், பி.மகாலிங்கம், கே.சம்மந்தன், கே.வெங்கடேசன், வி.பி.ஆறுமுகம், கே.மூர்த்தி, ஏ.எம்.சீனிவாசன் மற்றும் விழாக் கமிட்டியினர், ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர். கும்பாபிஷேகத்தை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது….

The post பூந்தமல்லியில் இன்று நாகாத்தம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.

Related Stories: