வழிகாட்டியாக வந்த பைரவர் : வாசகர்களின் ஆன்மிக அனுபவம்

கந்தன் கருணை

எனது மகள் வயிற்று பேத்தியின் திருமணத்தை கடந்த 26.11.2020 அன்று ஆற்காடு அடுத்த ரத்தினகிரி மலை முருகன் கோயிலில் செய்யத் தீர்மானித்திருந்தோம். ‘கொரோனா’வை முன்னிட்டு,  முக்கியமானவர்களை மட்டும் அழைக்க முடிவு செய்திருந்தோம். எதிர்பாராத விதமாக, நிவர் புயல் உருவாகி 24.11.2020 முதல் கனமழை பெய்ய ஆரம்பித்து, திருமண நாள் வரை நீடித்தது.  முருகப்பெருமான் சந்நதியின் முன்பு, திருமாங்கல்யதாரணம் முடித்து விட்டு, மலையை விட்டு கீழே இறங்கி கோயிலுக்குச் சொந்தமான அறைகளை ஒட்டிய நடைபாதையில், மணமக்கள் மாலை  மாற்றும்போது, திருமணத்திற்கு மிகச் சொற்ப அளவில் வருகை தந்தவர்கள் வாழ்த்துவதாக இருந்தார்கள். ஆனால், விடாது பெய்து வந்த கனமழையால், மலையை விட்டு கீழே இறங்க முடியவில்லை.  காலை 8.10 மணிக்கு, முருகப்பெருமான் சந்நதி முன்பு, தவத்திரு. பாலமுருகன் அடிமை சுவாமிகள், அவரது ஆசியுடன் திருமாங்கல்யத்தை வாழ்த்தி, எடுத்துக் கொடுத்த பிறகு திருமாங்கல்ய தாரணத்தை  முடித்துக்கொண்டு, சந்நதி பிரகாரம் பின்புறமுள்ள விசாலமான இடத்தில் மழையினால் எவ்வித இடையூறுமின்றி வந்திருந்த அனைவரும் மணமக்களை அட்சதை தூவி வாழ்த்தினர். இந்த 85 வயதிலும்,  முருகப் பெருமான் அருளால் பலமுறை பலனை அனுபவித்து வந்தவன் என்பதால், இந்நிகழ்விலும் கனமழை நீடித்தபோதும், திருமணம் இனிதே நடைபெற்றதை என் வாழ்நாளில் மறக்க இயலாது.

- வா. அனந்தகிருஷ்ணன், வேலூர் - 632503.

வழிகாட்டியாக வந்த பைரவர்

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், அயன் தத்தனூர் கிராமத்தில், அய்யனார், பெரிய கருப்புசாமி சின்னகருப்புசாமி ஆகிய சுவாமிகள் அடங்கிய ஆலயத்தில் குட முழுக்கை, திருநெறித் தமிழ் வேதம் ஓதி, தமிழ் முறைப்படி செய்ய சிவனடியார் பலருடன் சென்றோம். அந்த ஆலயம் கிராமத்தின் வெளியே காட்டுப்பகுதியில் உள்ளது. அங்கு ஜன நடமாட்டம் யாருமில்லை. எங்கள்  ஆசான் அடியவர், என்ன கருப்புசாமி உன் ஆலயம் எங்குள்ளது. வழி தெரியவில்லையே என்று இறைவனை வேண்டினோம். அப்பொழுது நான்கு நாய்கள் கூட்டமாக வந்து எங்களைப் பார்த்துவிட்டு,  எங்களுக்கு முன்னே சென்றன. நாங்கள் ஏதோ தெரு நாய்கள் என்று அலட்சியமாக இருந்தோம். முன்னே சென்ற நாய்கள் சற்று நின்று எங்களை திரும்பிப் பார்த்தன. எங்களுக்கு ஏதோ பொறி  தட்டியதுபோல் இருந்தது. நாங்கள் இது ஏதோ தெய்வ சங்கல்பம் போல தெரிகிறது வாருங்கள் என்று அதன்பின் தொடர்ந்து செல்வோம் எனக்கூறி அதன் பின்னேயே சென்றோம். அவை மீண்டும் முன்  நோக்கிச் சென்று, நாங்கள் குடமுழுக்கு செய்ய வேண்டிய கோயில் வாயிலில் போய் நின்றன. நாங்கள் கோயிலுக்குள் சென்று அங்கு பெரிய கருப்பன் சுவாமியின் முன் பைரவர் சிலை இருப்பதைக் கண்டு  எல்லோரும் அந்த பைரவர்களை (நாய்) முன்னால் தரையில் விழுந்து நன்றியுடன் தொழுது எழுந்தோம். எங்கள் உடல் சிலிர்த்து ஒரு பரவசம் உண்டாகியது. சிறிதுநேரம் எங்களுக்கு ஒன்றும் புரியாமல்  இறைவனை வேண்டிநின்றோம்.

- A.S. அனந்தசயனம், திண்டிவனம்.

மாமன் பெருமாளும் மருமகன் முருகனும் அருளிய மழலைச் செல்வம்

எனக்குத் திருமணமாகி சில நாட்களில் என் மனைவி கருவுற்றாள். வெகு சந்தோஷமாக இருந்த எங்களுக்கு அது நிலைக்கவில்லை. ஆம், குழந்தை கருவிலேயே கலைந்தது. பின் அடுத்தடுத்து இவ்வாறே  நிகழ நமக்கு குழந்தை பாக்கியம் வாய்க்குமோ வாய்க்காதோ என்று என் மனைவியும் நானும் கவலையுற்றிருந்தோம். ஆனால், திரும்பவும் கருவுற்ற மனைவியை கண்ணும் கருத்துமாய் கவனித்து  வந்ததில் வளையணி விழா முடிந்து நல்லமுறையில் மருத்துவமனையில் சேர்த்து அருமையான ஓர் ஆண்குழந்தை பிறந்து மூன்று நாட்கள் முடிவதற்குள் அந்தக் குழந்தை இறந்துவிட்டது. என்ன  செய்வதென்று தவித்திருந்த வேளையில் திருச்செந்தூரில் ஆதிசங்கரரால் ஓதப்பட்ட சுப்ரமணிய புஜங்கம் படித்தால் குழந்தை பாக்கியம் கிட்டும் என்று புத்தகம் படித்து தெரிந்துகொண்டேன். நண்பரான  உதவி ஸ்டேஷன் மாஸ்டரிடமிருந்து அந்தப் புத்தகத்தைப் பெற்று படிக்கத் தொடங்கினேன்.

இதற்கிடையில் என் மாமனார் அறிவுரைப்படி என் மாமியார், மைத்துனன், மனைவி, நான் என்று எல்லோரும் திருப்பதிக்கு புறப்பட்டு செல்லும்போது திருவண்ணாமலையில் இறங்கி

அண்ணாமலையாரை தரிசித்தோம். ரமண மகரிஷி ஆஸ்ரமம் சென்றோம். அங்கு நாங்கள் சென்ற சமயத்தில் ரமணரின் தாயார் சந்நதியில் ஒரு வயதான புரோகிதர் தீபாராதனைகள்  காட்டிக்கொண்டிருந்தார். அவர் தீபாராதனைக் காட்டிய பிறகு, என் மைத்துனனைப் பார்த்து, உன்னை மாமா என்று அழைக்க ஒரு குழந்தை பிறக்கும் என்றார். பெற்றோர்களாகிய நாங்கள் இருவரும்  பிறக்கப் போகும் குழந்தைக்கு அங்கேயே வெங்கடரமணன் என்று பெயர் சூட்டினோம். திருப்பதியிலிருந்து திரும்பி வந்ததும், எங்கள் குடும்ப மருத்துவரான ஆங்கிலோ இந்திய மருத்துவரிடம்  ஆலோசனைக்காக சென்றபோது. அவர் என் மனைவி கருவுற்றிருப்பதாக சொன்னார். குழந்தை பிறந்தவுடன் திருச்செந்தூருக்குச் சென்று குடும்பத்துடன் சென்று நேர்த்திக்கடன் நிறைவேற்றினோம். மாமன்  பெருமாளும் மருமகன் முருகனும் என் வாழ்வில் விளக்கேற்றினார்கள்.

- இரா. சாரங்கபாணி, சென்னை - 600116

காத்யாயினி காப்பாற்றுவாள்

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், பிள்ளையார்பட்டியில் உலகப் பிரசித்தி பெற்ற கற்பக விநாயகர் திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலின் சுற்றுப் பிராகாரத்தில் காத்யாயினி அம்மன்  வீற்றிருக்கிறாள். இந்த அம்மனை தொடர்ந்து 11 வாரம் குங்குமம் அர்ச்சனை செய்து வணங்கி வருகின்றார்கள். இவ்வாறு வணங்கிவந்தால் திருமணத் தடை அகலும், பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கு,  குழந்தை பாக்கியம் உண்டாகும். பெண்களின் மாதவிலக்கில் பிரச்னை இருப்பின் தீர்ந்துவிடும். இதில் 90% சதவீதம் பலனும், பயனும் அடைந்துள்ளனர். அவ்வாறு பலனும், பயனும் அடைந்தவர்கள்  அம்மனுக்கு பாவாடை சாத்தி, மாலையணிவித்து, அர்ச்சனை அல்லது பாலாபிஷேகம் செய்து பிரார்த்தனையை நிறைவுசெய்கிறார்கள். இது நான் கண்ட உண்மை.

- வ. பழநிகுமார் , கண்டவராயன்பட்டி.

Related Stories: