மறக்காதிரு மனமே!

குறளின் குரல்: 134

ஒரு தனிமனிதன் தன் வாழ்க்கையில் வெற்றிபெற என்னென்ன குணங்களையெல்லாம் கொண்டிருக்க வேண்டும் என்பதை வள்ளுவர் பல இடங்களில் வலியுறுத்துகிறார். தனிமனித ஒழுக்கத்தின் தேவையையும் சமுதாய ஒழுக்கத்தின் அவசியத்தையும் ஆற்றல்களையும் ஒருவன் எவ்விதமெல்லாம் பெருக்கிக் கொள்ள முடியும் என்பதையும் வள்ளுவம்போல் தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும் இன்னொரு நூல் இல்லை. திருக்குறளை மிஞ்சிய வாழ்க்கை வழிகாட்டியும் உலகில் வேறு எதுவும் இல்லை.

வாழ்வில் வெற்றிபெற ஞாபகசக்தி அவசியமாகிறது. சில விஷயங்களை ஒருநாளும் மறந்துபோகாமல் இருக்க வேண்டியது மிக முக்கியம். ஒரு காலத்தில் செய்ய வேண்டிய ஒரு செயலை அந்தக் காலம் கடந்த பின் செய்து பயனில்லை.எனவே, மறதியின்மை தேவை என அடித்துச் சொல்லவென்றே ஓர் அதிகாரத்தைப் படைக்கிறார் வள்ளுவர். 'பொச்சாவாமை’ என்ற அதிகாரம் முழுவதும் (அதிகார எண் 54) மறதியின்மையின் முக்கியத்துவம்தான் பேசப்

படுகிறது. பொச்சாவாமை என்றால் மறதியின்மை எனப் பொருள்.

மறதியின்மையைப் பற்றிப் பேசும் இந்த அதிகாரத்தின் பத்துக் குறட்பாக்களையும் நாம் மறுபடி மறுபடிப் படித்து, மறக்காமல் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்!

'இறந்த வெகுளியின் தீதே சிறந்த

உவகை மகிழ்ச்சியின் சோர்வு.’

(குறள் எண் 531)

மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கினால் வரும் மறதி, அளவு கடந்த சினத்தைக் காட்டிலும் தீங்கானது.

'பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை

நிச்ச நிரப்புக் கொன்றாங்கு.’

(குறள் எண் 532)

நாள்தோறும் வரும் வறுமை அறிவைக் கொன்றுவிடும். அதுபோல மறதி ஒருவனின் புகழைக் கெடுத்துவிடும்.

பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுவுலகத்

தெப்பானூ லோர்க்குந் துணிவு.’

(குறள் எண் 533)

மறதியால் சோர்ந்து நடப்பவர்க்குப் புகழுடன் வாழும் தன்மை அமையாது. உலகில் எல்லா நூல்களையும் ஆராய்ந்தவர்கள் ஏற்றுக் கொள்ளும் முடிவு இதுவே.

'அச்ச முடையார்க்கு அரணில்லை

ஆங்கில்லை பொச்சாப் புடையார்க்கு நன்கு.’

(குறள் எண் 534)

பயத்தினால் நடுங்குகிறவர்களுக்கு அவர்களைச் சுற்றிப் பாதுகாப்பாக அரண் கட்டப்பட்டிருந்தாலும் அந்த அரணால் எந்தப் பயனும் இல்லை. அதுபோலவே என்னதான் உயர்ந்த நிலையில் இருந்தாலும் மறதி உடையவர்க்கு அதனால் பயன் இல்லை.

'முன்னுறக் காவா திழுக்கியான் தன்பிழை

பின்னூ றிரங்கி விடும்.’

(குறள் எண் 535)

வரும் இடையூறுகளை முன்னே அறிந்து காத்துக் கொள்ளாமல் மறந்து சோர்வடைந்தவன், பின்பு அவை வந்த நேரத்தில் தன் பிழையை நினைத்து வருந்துவான்.

இழுக்காமை யார்மாட்டும் என்றும் வழுக்காமை

வாயின் அதுவொப் பதில்.

(குறள் எண் 536)

ஒருவரிடம் மறவாமை என்கிற பண்பு பொருந்தியிருக்குமானால், அதைப்போன்ற நன்மை வேறு எதுவும் இல்லை.

'அரியவென் றாகாத இல்லைபொச் சாவாக்

கருவியால் போற்றிச் செயின்.’

(குறள் எண் 537)

மறதியில்லாமலும் அக்கறையுடனும் செயல்பட்டால் ஒருவனால் முடியாதது என்று எதுவுமே இருக்காது.

'புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது

இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.’

(குறள் எண் 538)

புகழுக்குரிய கடமைகளைப் போற்றிச் செய்ய வேண்டும். அவ்விதம் செய்யாமல் மறந்து புறக்கணிப்பவர்களுக்கு ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை.

'இகழ்ச்சியில் கெட்டாரை உள்ளுக தாம் தம்

மகிழ்ச்சியின் மைந்துறும் போழ்து.’

(குறள் எண் 539)

தாம் தம் மகிழ்ச்சியால் கர்வம் கொண்டு கடமையை மறந்திருக்கும்போது அவ்வாறு சோர்ந்திருந்த காரணத்தினால் மறதிமூலம் அழிந்தவரை நினைவில் கொள்ளவேண்டும்.

'உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்

உள்ளியது உள்ளப் பெறின்.’

(குறள் எண் 540)

நினைத்ததை மறவாமல் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருக்க இயலுமானால், நினைத்ததை நினைத்தபடியே அடைவது என்பது எளிதாகும்....  மறதியை மையமாக வைத்து ஒரு புகழ்பெற்ற சம்ஸ்க்ருத நாடகம் எழுதப்பட்டுள்ளது. காளிதாசர் எழுதிய சாகுந்தலம்தான் அந்தப் படைப்பு. காட்டில் வசிக்கும் கண்வ மகரிஷியின் வளர்ப்பு மகள் சகுந்தலையும் காட்டிற்கு வேட்டையாட வந்த மன்னன் துஷ்யந்தனும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்பட்டு கந்தர்வ விவாகம் செய்துகொள்கிறார்கள். சகுந்தலை கருவுறுகிறாள். தான் நாட்டுக்குத் திரும்பியபின் மறுபடி வந்து அவளை அழைத்துச் செல்வதாக வாக்குறுதி கொடுத்துவிட்டு நாடு திரும்புகிறான் துஷ்யந்தன்.

கவலையோடு அவனுக்காக சகுந்தலை காத்திருக்கும் கட்டத்தில்தான் விதி விளையாடத் தொடங்குகிறது. கோபத்திற்குப் பெயர்பெற்ற முனிவர் துர்வாசர் தன் முன்னே வந்ததை அவள் கவனிக்கவில்லை. சூழ்நிலை மறந்து அவள் தன் காதலன் நினைவில் தோய்ந்திருக்கிறாள். தனக்கு உரிய மரியாதையை சகுந்தலை தரவில்லை என துர்வாசர் கடும் சீற்றம் கொள்கிறார்.

அவள் துஷ்யந்தனையே நினைத்திருந்ததாலேயே தன்னை மதிக்க மறந்தாள் என்பதை ஞானதிருஷ்டியால் அறிந்த முனிவர், 'தன்னிலை மறக்குமளவு உன் நினைவில் தங்கிய அவனது நினைவிலிருந்து நீ மறந்துபோகக் கடவாய்' எனச் சபிக்கிறார். பின்னர் மனமிரங்கி அடையாளப் பொருளைக் கண்டால் உன் நினைவு அவனுக்கு வந்துவிடும் என சாப விமோசனமும் தருகிறார்.

 கந்தர்வ விவாகத்தின்போது அவன் அணிவித்த மோதிரம்தான் அந்த அடையாளப் பொருள். ஆனால் சகுந்தலை குளத்தில் நீராடும்போது மோதிரம் நழுவி, வாயைத் திறந்த ஒரு மீனின் வயிற்றுக்குள் போய்விடுகிறது.அடையாளப் பொருளைத் தொலைத்த சகுந்தலையின் வாழ்க்கை என்னவாகிறது, அந்தப் பொருள் மீண்டும் எப்படிக் கிடைத்தது என்பதையெல்லாம் சுவாரஸ்யமாக விவரிக்கிறது சாகுந்தலம்.

இந்நாடகத்தின் மூலக் கதை வியாசரது மகாபாரதத்தில் வரும் கிளைக்கதை. மூலத்தில் சொல்லப்படாத மறதியைத் தன் படைப்பில் புகுத்தி இந்நாடகத்தை உலகத்தின் சிறந்த நாடகங்களில் ஒன்றாக்கி விடுகிறார் காளிதாசர். இந்த வடமொழி நாடகத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்ட தனித்தமிழ் அன்பரான வேதாசலம் என்கிற மறைமலை அடிகள், இதைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்....  

இருபெரும் இதிகாசங்களில் ஒன்றான ராமாயணத்திலும் ஒரு பாத்திரத்திற்கு ஏற்பட்ட மறதிபற்றிப் பேசப்படுகிறது. அது அளவுக்கு மீறி மது அருந்தியதால் ஏற்பட்ட அலட்சிய மறதி. சுக்ரீவன்தான் அந்தப் பாத்திரம். வாலி வதைக்குப் பின் சீதையைத் தேடிக் கண்டுபிடிக்க உதவுகிறேன் என முன்னரே வாக்குக் கொடுத்தவன் சுக்ரீவன். ஆனால் வாலி கொல்லப்பட்டு, தான் மன்னனானதும் ஏற்கெனவே கொடுத்த வாக்குறுதியை மறந்து போகிறான். மது அருந்தி போக இன்பங்களில் வாழ்க்கையைக் கழிக்கத் தொடங்குகிறான்.

மழைக்காலம் முடிந்ததும் உதவுவான் என எண்ணிய ராம லட்சுமணர்களுக்கு ஏமாற்றம். லட்சுமணன் கடும் சீற்றத்தோடு சுக்ரீவனைச் சந்திக்கச் செல்வதையும் சுக்ரீவன் தன் மறதி குறித்து மன்னிப்பு வேண்டிப் பின்னர் உதவத் தொடங்குவதையும் விவரிக்கிறது ராமாயணத்தின் கிஷ்கிந்தா காண்டம்....  

மறக்காமல் சரியான நேரத்தில் பிரார்த்தனை செய்வதன்மூலம், நினைத்ததைப் பெற முடியும் என்பது ஆன்மிகத்தில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. சத்தியவானின் உயிரைக் காப்பாற்றிய சாவித்திரி, தன் கணவனுக்கு உயிராபத்து வரவிருக்கும் நாளை முன்னமேயே அறிந்து அப்போது விரதமிருந்து இறைவனைப் பிரார்த்தித்தாள் என்கிறது புராணம்.

மார்க்கண்டேயனும் தன் உயிருக்கு ஆபத்து நேரும் காலத்தில் சிவபெருமானைப் பிரார்த்தனை செய்துதான் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டான்.

எனவே, தேர்வு நேரத்தில் கோயிலுக்குச் சென்று வழிபடும் மாணவர்களை நாம் கிண்டல் செய்யத் தேவையில்லை. அந்த நேரத்துப் பிரார்த்தனை அவர்களுக்கு பதற்றத்தைப் போக்கி மன வலிமையைத் தருவதை நாம் பார்க்கிறோம்.

இறைவனிடம் எல்லா நாட்களிலும் பொதுவாக வேண்டுதல் சரியா? நமக்குத் துன்பம் வரும்போது வேண்டுதல் சரியா? துன்பத்தின்போது மட்டுமே இறைவனைப் பிரார்த்திப்பது என்ன நியாயம் என்றெல்லாம் கேள்விகள் கேட்கப்படுகின்றன.இறைவன் தாயைப் போன்றவன். 'அழுத பிள்ளை பால் குடிக்கும்’ என்ற பழமொழி நம்மிடையே உண்டு. தாய்ப்பால் கூட அழுதால்தான் கிடைக்கும் என்கிறபோது இறைவனிடம் அழுது வேண்டுவதில் தவறில்லையே?

இறைவனைப் பக்தி செய்யும் நெறிபற்றிப் பேசும் திருஞானசம்பந்தர், 'காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி' என்கிறார். 'அழுதால் உன்னைப் பெறலாமே' என்பது மாணிக்கவாசகரின் மாணிக்க வாசகம். இறைவனை வழிபடும்போது பக்தியால் இயல்பாகக் கண்ணீர் வருமானால் அது பக்தியில் உயர்ந்த நிலை எனப்படுகிறது.

நம் துன்பங்களைச் சொல்லி பக்திசெய்யும் போதுதானே கண்ணீர் வரும்? எனவே அந்தந்த நேரத்தின் தேவைக்கேற்ப மறக்காமல் இறைவனை அழுது வேண்டுவது தவறே அல்ல. அரவிந்தரின் மனைவி மிருணாளினிக்கு திடீரென்று கடுமையாக உடல்நலம் குன்றியது. மிருணாளினி கொல்கத்தாவில் இருந்தாள். அரவிந்தர் புதுச்சேரியில் தவ வாழ்வில் ஈடுபட்டிருந்தார். மிருணாளினி தானும் அரவிந்தருடன் இணைந்து தவம் செய்யப் புறப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் நோய்வாய்ப்பட்டாள்.

 அப்போது மிருணாளினியின் பெற்றோருக்கு திடீரென்று அரவிந்தர் சொன்ன ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. மிருணாளினிக்கு ஒரு குறிப்பிட்ட காலத்தில் கண்டம் இருக்கிறது என்றும் அந்தக் காலத்தில் மறக்காமல் தன்னிடம் ஞாபகப்படுத்தினால் விசேஷப் பிரார்த்தனை செய்து மிருணாளினியைப் பாதுகாக்கத் தன்னால் இயலும் என்றும் அவர் சொல்லியிருந்தார்.

அந்தக் காலகட்டம் அதுதான். மிருணாளினியின் பெற்றோர் நல்ல வேளையாக ஞாபகம் வந்ததே என எண்ணி உடனடியாக மிருணாளினிக்காக விசேஷப் பிரார்த்தனை மேற்கொள்ளுமாறு 'அரவிந்தருக்கு அவரின் புதுச்சேரி விலாசத்திற்கு ஒரு கடிதம் எழுதினார்கள்.

ஆனால் அந்தத் தபால் சற்றுத் தாமதமாகவே புதுச்சேரி வந்து சேர்ந்தது. அதைப் பிரித்துப் படித்த அரவிந்தர், 'அடடா காலம் கடந்துவிட்டதே!’ என வருந்தினார். ஆமாம். அரவிந்தர் கைக்கு அந்தக் கடிதம் கிடைக்கும்போதே மிருணாளினி காலமாகி விட்டிருந்தாள்.இந்தச் சம்பவம் நமக்குத் தெரிவிக்கும் கருத்து, மறந்துவிடாமல் உரிய நேரத்தில் தொடர்ந்து பிரார்த்தனை செய்வதன்மூலம் நாம் இறையருள் பெற்று நினைத்ததை அடைய இயலும் என்பதே....

செய்ய வேண்டிய செயலைச் செய்ய மறப்பதை வள்ளுவர் கண்டிக்கிறார். மறதியின்மை தேவை என வலியுறுத்துகிறார். வாழ்வில் வெற்றிபெற விரும்புபவனுக்கு மறதி இருக்கக் கூடாதுதான். அதில் இரண்டாம் கருத்து இருக்க வாய்ப்பில்லை. ஆனால் சில விஷயங்களில் மறதி ஒரு வரம்தான்.

'ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டு

பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு

சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச்

சுட்டிட்டு நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே!'

என்கிறது திருமூலரின் திருமந்திரம். இதுவே வாழ்க்கை. இறந்தவரை மெல்ல மெல்ல நாம் மறக்கிறோம். நினைப்பொழிகிறோம். அந்த மறதி இறைவன் கொடுத்த வரம். இல்லாவிட்டால் தொடர்ந்து மனிதர்கள் வாழ்வது எப்படி?

'இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாணநன்னயம் செய்து விடல்!’ -என்கிறார் வள்ளுவர். நமக்குத் துன்பம் இழைத்தவர்களுக்கு நாம் கொடுக்கும் தண்டனை என்பது அவர்கள் வெட்கப்படும்படி அவர்களுக்கு நன்மை செய்வதுதான் என்கிறது வள்ளுவம்.

ஆனால், அப்படி அவர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமானால் முதலில் அவர்கள் நமக்கிழைத்த துன்பத்தை நாம் மறக்கத்தான் வேண்டும். அதுபோன்ற சந்தர்ப்பங்களில் மறதி பாராட்டத் தக்கதுதான்.விலங்குகளில் யானைக்கும் பாம்புக்கும் ஞாபக சக்தி அதிகம் என்கிறார்கள். அவை தங்களுக்குக் கெடுதல் செய்தவர்களை நினைவில் வைத்திருந்து பழிவாங்கும் என்று பழங்கதைகள் சொல்கின்றன. வாழைப்பழத்தில் ஊசி வைத்துக் கொடுத்தவனை யானை தண்டித்தது முதல் இதற்கான உதாரணக் கதைகள் பல...

முதுமைக் காலத்தில் சிலருக்கு மறதி ஒரு நோயாகவும் ஏற்படுகிறது. டிமென்ஷியா என்னும் அந்த மறதி நோய் குறித்த விழிப்புணர்வும் அத்தகையோரைப் பரிவுடன் பாதுகாக்க வேண்டியதன் அவசியமும் இப்போது பரவலாகப் பேசப்படுகின்றன. குறிப்பிட்ட காலத்தில் நடந்ததை மறந்துபோதல் அம்னீஷியா எனப்படுகிறது. இதுகுறித்தும் இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டுவருகிறது.

காதல் நினைவுகள் மனத்தை விட்டு அகலுவதில்லை. அதனால் படும் துயரங்கள் ஏராளம். எனவேதான் 'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா? 'எனக் காதல் வயப்பட்ட தலைவி ஏங்கிப் பாடுவதாக எழுதினார் கண்ணதாசன். ஆனந்த ஜோதி திரைப்படத்தில் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைப்பில் பி.சுசீலா குரலில் ஒலித்த இந்தப் பாடலை மறக்காமல் பலரும் நினைவில் வைத்திருக்கிறார்கள்! இது அவரின் கவிதை வரிகள். உரைநடையிலும் ஓர் இடத்தில் ஞாபகசக்தி எப்படிப்பட்டது என்பதைப் பற்றி நகைச்சுவையுடன் நமக்கு ஞாபகப் படுத்துகிறார் கண்ணதாசன்:

'ஞாபக சக்தியை வளர்க்க ஒரு மாத்திரை இருக்கிறது. அந்த மாத்திரையைச் சாப்பிட்டால் போதும். எல்லாமே மறக்காமல் ஞாபகமிருக்கும். அந்த மாத்திரையை நானே சாப்பிட்டிருக்கிறேன். அந்த மாத்திரையை உங்களுக்கும் பரிந்துரைக்கிறேன். அந்த மாத்திரையின் பெயர்...அடடா..அதுதானே மறந்துவிட்டது!'...

*கடற்கரையில் தன் நண்பன் மாதவனைப் போன்ற தோற்றமுடைய ஒருவனைப் பார்த்ததும் அவனிடம் பேசத் தொடங்கினார் மறதிப் பேர்வழி.  'என்ன மாதவா... மெலிஞ்சுபோய் ஒரேயடியா ஆளே மாறிட்டியே?' என்றார். அவனோ 'நான் மாதவன் இல்லை, என் பெயர் பரமசிவம்' என்றான். நம் ஆள் விடுவாரா?`ஆள்தான் ஒரேயடியா மாறிட்டேன்னு பாத்தா பேரக்கூட மாத்திட்டியே?’ என்றார் அவர்!

(குறள் உரைக்கும்)

தொகுப்பு: திருப்பூர் கிருஷ்ணன்

Related Stories:

>