பஸ்மாசுரனை வதம் செய்த சென்னகேசவர்

பேளூர், கர்நாடகா

கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் மாவட்டம் பேளூரில் அமைந்துள்ளது சென்னகேசவர் திருக்கோயில். இங்கு மூலவராக சென்னகேசவர் பெயரில் பெருமாள் நின்ற கோலத்தில் அருட்பாலிக்கிறார். தனிச்சந்நதியில் கட்பே சென்னகேசவர் அருள்கிறார். கட்பே சென்னகேசவர் சிலை செய்யும்போது தேரை ஒன்று கல்லில் இருந்து வெளிவந்ததால் இப்பெயர் இடப்பட்டது. கட்பே என்றால் தேரை என்று பொருள். விருகாசுரன் பலவரங்களைப் பெற்றான். அதில் ஒன்று தான், யாருடைய தலையில் தான் கைவைத்தாலும் அந்த நபர் அந்த இடத்திலேயே சாம்பலாகிவிட வேண்டும். என்பது. கண்ணில் கண்டவர்களை எல்லோர் தலையிலும் கைவைத்து சாம்பலாக்கி விட எண்ணினான். இதனாலேயே பஸ்மாசுரன் என அழைக்கப்பட்டான்.

பஸ்மம் என்றால் சாம்பல் என்று பொருள். விருகாசுரனின் அட்டூழியத்தை தாங்க முடியாத தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று முறையிட்டனர். பெண் பித்தனான பஸ்மாசுரனை அவன் போக்கிலே சென்று வதம் செய்ய மோகினியாக வடிவெடுத்தார் பரந்தாமன். விருகாசுரன் முன் சென்று நடனமாடினார். அவனும் ஆடவே, ஆட்டத்தின் உச்சத்தில் தலையில் கைவைப்பதாக பாவனை செய்தார். அதுபோல் விருகாசுரனும் தனது தலைமேல் தன் கையை வைக்க, மறுகணமே விருகாசுரன் பஸ்மமானான். இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்திலேயே பரந்தாமன் அருளாட்சிபுரிய எண்ணினார். அப்பகுதியை பின்னாளில் ஜைனமதத்தைச் சேர்ந்த பிட்டி தேவராய மன்னன் ஆண்டு வந்தான். அப்போது கன்னிப்பருவத்திலிருந்த அவனது மகளுக்கு மனநலம் பாதிக்கப்பட்டு அவதிக்குள்ளானாள். மன்னனின் மனைவி தமிழகத்திலிருந்து அப்போது கர்நாடகத்திற்கு பயணமான ராமானுஜரிடம் மகளை அழைத்துச் சென்றாள்.

ராமானுஜர் அவள் வியாதியை பெருமாளின் துளசி தீர்த்தத்தால் தீர்த்துவைத்தார். மகள் பிணி மாறியதும் ராமானுஜரை நேரில் சந்தித்த மன்னன் அன்று முதல் பெருமாள் பக்தனானான். அன்றிலிருந்து தனது பெயரை விஷ்ணு வர்த்தன் என்று மாற்றிக்கொண்டான். ராமானுஜரின் வேண்டுகோளுக்கிணங்க சென்ன கேசவருக்கு கோயில் எழுப்பினான் விஷ்ணுவர்த்தன். மோகினி அம்சமாக இக்கோயில் மூலவராக பெருமாள் உள்ளார். நெற்றியில் ஸ்ரீசூர்ணம் வைத்து, மூக்குத்தியும் அணிந்து, காலில் சதங்கையும், கொலுசும் அணிந்து நின்ற கோலத்தில் ஆறு அடி உயரத்தில் சேவை சாதிக்கிறார். கேசவன் என்றால் தடைகளை நீக்குபவன் என்று பொருள்.

தொகுப்பு: R.அபிநயா

Related Stories: