கண்ணனும் கந்தனும்

இறைச்சுவை இனிக்கும் இலக்கியத் தேன்-51

இந்து மக்கள் பெரிதும் வழிபடும் இணையற்ற தெய்வங்களாக கண்ண பெருமானும், கந்த பெருமானும் விளங்குகிறார்கள். இருவருமே தெய்வீகக் குழந்தைகள். எனவே உள்ளத்தில் மகிழ்ச்சி ஊற்றெடுக்க அருளாளர்கள் அனைவருமே இரண்டு குழந்தைத் தெய்வங்களையும் உச்சி முகர்ந்து மெச்சி மகிழ்கிறார்கள்.

கோகுலக் கண்ணனுக்கும், குன்றுதோறாடும் குமரனுக்கும் விசேஷமாக விழாவாகக் கொண்டாடப்படும்  கோகுலாஷ்டமியும், ஆடிக்கிருத்திகையும் இப்போதைய ஆடி மாதத்தில் அடுத்தடுத்த நாளிலே அனுஷ்டிக்கப் படுவது ஒரு அதிசயமான அனுபவம் அல்லவா!‘குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள்.

தெய்வங்களே குழந்தைகளாகிக் கொஞ்ச வரும்போது இன்பம் இரட்டிப்பாகி மிஞ்சும் அல்லவா!‘ஆறு துணை’ என்ற பாடலில் மகாகவி பாரதியாரும் அடுத்தடுத்தே வேலவனையும், வேய்ங்குழல் நாயகனையும் வேண்டுகின்றார்.

வெற்றி வடிவேலன் -- அவனுடை

வீரத்தினைப் புகழ்வோம்;

சுற்றிநில் லாதேபோ! -- பகையே!

துள்ளி வருகுதுவேல்.

தாமரைப் பூவினிலே -- சுருதியைத்

தனியிருந் துரைப்பாள்

பூமணித் தாளினையே -- கண்ணிலொற்றிப்

புண்ணிய மெய்திடுவோம்.

பாம்புத் தலைமேலே -- நடஞ் செயும்

பாதத்தினைப் புகழ் வோம்

மாம்பழ வாயினிலே -- குழலிடஞ

வண்மை புகழ்ந்திடுவோம்.

பக்திப் பாவலர்களின் கண்கள் இரண்டாகவே கண்ணனும், கந்தனும் விளங்குகின்றார்கள்.

‘ஏறி மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே’ என்ற வண்ணம் ஆடும் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறான் முருகன்.

கண்ணனோ மயில் இறகினை தலையில் அணிந்த வண்ணம் தவழ்ந்து வருகின்றான்.

கண்ண பெருமானுக்கு மயில் இறகினை அணிவித்தது யார் தெரியுமா?

கந்தன் ஏறி விளையாடுகின்ற மயில் தான்.

ஊத்துக்காடு வெங்கட சுப்பையரின் உன்னதமான கற்பனை அவரின் பிரபலமான கீர்த்தனை ஒன்றில் இவ்வாறு வெளிப்படுகின்றது.

ஆடாது அசங்காது வா கண்ணா ( நீ )

உன் ஆடலில் ஈரேழு புவனமும் அசைந்து

அசைந்து ஆடுதே எனவே (ஆடாது)

ஆடலை காண (கண்ணா உன் )

தில்லை அம்பலத்து இறைவனும்

தன் ஆடலை விட்டு இங்கே கோகுலம் வந்தார்

ஆதலினால் சிறு யாதவனே

ஒரு மா மயிலிறகனி மாதவனே நீ ( ஆடாது )

சின்னஞ்சிறு பதங்கள் சிலம்போளிதிடுமே

அதை செவி மடுத்த பிறவி மனம்களிதிடுமே

பின்னிய சடை சற்றே வகை கலைந்திடுமே

மயில் பீலி அசைந்தசைந்து நிலை கலைந்திடுமே

பன்னிரு கை இறைவன் ஏறும் மயில் ஒன்று

தன் பசுந்தோகை விரித்தாடி பரிசளிதிடுமே

கண்ணபெருமானின் நடனம் கண்டு கந்த பெருமானின்

 மயில் அளித்த பரிசே கண்ணன் சூடியுள்ள மயிற்இறகு!

 

கந்தனின் கையில் சூரனை வதைத்த சுடர்வேல் ஒளி வீசுகின்றது.‘வேலை வணங்குவதே வேலை’ என்றும் ‘வீரவேல் , விண்ணோர் சிறை மீட்ட தீரவேல், செவ்வேல், திருக்கைவேல் என்றும் அடியார்கள் புகழ்ந்து பாடுகின்றார்கள்.கண்ணனும் கையில் வேல் ஏந்தி இருக்கின்றான் என்பதை ஆண்டாள் பெருமாட்டி திருப்பாவையில் திறம்படச் சொல்லுகின்றார்.‘அன்றிவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி!’ என்றும் பாசுரத்தில் ‘வென்று  பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி’ என்று அருளிச் செய்திருக்கின்றார்.

மயிலும், வேலும் மட்டுமா?

இருவர் உதடுகளிலும் புல்லாங்குழல் நல் இசை பொழிகின்றது எப்படி என்கிறீர்களா? குழல் ஊதி மனமெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன் என்பது நம் அனைவருக்குமே நன்கு தெரிந்த ஒன்று.  ஆனால் முருகனும் வேணுகானம் இசைப் பதில் வித்தகன் என்று சங்கப் புலவர் நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் சாற்றுகின்றார். ‘குழலன், கோட்டன், குறும் பல்லியத்தன்’ என்பது திருமுருகாற்றுப் படையின் தொடர்.

பகவத்கீதை அருளிய பரந்தாமனை ‘கிருஷ்ணம் வந்தே ஜகத் குரும்’ என புராணங்கள் புகழ்கின்றன. அவ்வண்ணமே பிரணவ உபதேசம் தந்தைக்கும். அகத்தியர்க்கும், அருணகிரியார்க்கும் வழங்கிய  வேலவனை பரமகுரு, குருநாதன், குரு சுவாமி என்று புகழ்கின்றோம்.  தமிழ் மூதாட்டியான ஔவையிடம் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து முருகப்பெருமான் சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா? என்று கேட்டதை அறியாதவர்கள் யாவருமே இருக்க முடியாது.

மாடு மேய்க்கும் இளஞ்சிறுவனாக முருகன் வந்தான் என்னும் போது நம் நினைவிற்கு ஆயர்பாடியில் ஆனிரை மேய்த்த கண்ண பெருமான் கட்டாயம் வருவாரே! கண்ணன் பிறப்பிலும், கந்தன் அவதாரத்திலும் வியக்கத்தக்க ஒற்றுமை ஒன்று உள்ளது.

இருவரும் பிறந்தது ஒரிடத்தில்!

‘‘ஒருத்தி மகனாய்ப் பிறந்து ஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர’’

என்று ஆண்டாள் பெருமாட்டி

கிருஷ்ணாவதாரத்தைப் பாடுகின்றாள்.

அவ்வாறே விண்ணுலகில் நெருப்புப் பொறிகளாகப் பிறந்த கந்தன் மண்ணுலகில் சரவணத்தில் ஆறு தாமரை மலர்களில் குழந்தையாகத் தவழ்ந்தான்.

  பரமேஸ்வரன் - பார்வதி பாலனாகிய ஆறுமுகனை கார்த்திகைப் பெண்கள் ஆறுபேர் பாலூட்டி  வளர்த்தனர்.

‘உலகையொடு கிர்த்திகையர் அறுவரும் எடுக்க

அவர் ஒருவர் ஒருவர்க்கு ஓர்ஓர் புத்திரன் ஆனதுவும்,

என்று அருணகிரியார் பாடுகின்றார்.

சிறைச்சாலையில் தேவகி வசுதேவர் குழந்தையாய்ப் பிறந்த கண்ணன் ஆயர்பாடியில் யசோதை- நந்த கோபரால் வளர்க்கப் பெறுகிறான்.   ‘அவுணர் குலம் அடங்க பொடியாக்கிய பெருமான்’ என்றும் ‘சூரன் உடல் அற, வாரி சுவறிட, வேலை விட வல பெருமாளே’ என்றும் முருகனைப்

புலவர்கள் போற்றுகின்றனர்.

அவ்வாறே ‘ பாண்டவர் வாழ்ந்திட, மீண்டு அவர் நாடுற குருக்ஷேத்திரப் போரில் வெற்றிச் சங்கை ஊதினார் கண்ண பெருமான்.

 இருவருமே குழந்தைக் கடவுளர்கள். பொதுவாக உள்ளன்போடு பாசம் மிக, நேசம் மீதூர நாம் குழந்தைகளிடம்

கொஞ்சினால் கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளங்கொண்ட குழந்தைகள் தம்மிடம் உள்ளவற்றை தயங்காது மறைக்காது

மற்றவர்களுக்கு தந்துவிடும் சுபாவம் கொண்டது.

அவ்வாறே தெய்வீகக் குழந்தைகளான கண்ணனிடமும், கந்தனிடமும் நாம் நடந்து கொண்டால் வேண்டும் வரங்களை எளிதாகப் பெற்றுவிடலாம்.

‘நின்பால் இரப்பவை

பொன்னும் பொருளும் போகமும் அன்று

அன்பும், அருளும், அறனும்’

என்று ஷண்முகனிடம் வேண்டுகிறார்

சங்கப் புலவர்.

‘இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்

உன்தன்னோடு

உற்றோமே ஆவோம் ! உனக்கே நாம்

ஆட்செய்வோம் !

மற்றை நம் காமங்கள் மாற்றலோர் எம்பாவாய்

என்று பரந்தாமனை வேண்டுகிறாள்

திருப்பாவை பாடிய திருப்பாவை !

சுப்ரமண்ய புஜங்கம், பஜகோவிந்தம் என  அற்புதமான துதிகள் இரண்டு பாடி இரு கடவுளர்களின் இணையடிகளில்

விழுகின்றார் ஆதி சங்கரர்.

மகாகவி பாரதியாரின் இறைச்சுவை இனிக்கும் இலக்கியத்தேனாக கண்ணன் - கந்தன் பாடல்கள் விளங்குகின்றன.

‘‘உருவாய் அறிவில் ஒளிர்வாய் - கண்ணா!

உயிரின் அமுதாய்ப் பொழிவாய் - கண்ணா!

கருவாய் என்னுள் வளர்வாய் - கண்ணா!

கமலத் திருவோடு இணைவாய் - கண்ணா!

முருகா! முருகா! முருகா

வருவாய் மயில் மீதினிலே!

வடிவேல் உடனே வருவாய்!

தருவாய் நலமும், தகவும் , புகழும்

தவமும், திறமும், தனமும், கனமும்!

(தொடரும்)

திருப்புகழ்த்திலகம் மதிவண்ணன்

Related Stories:

>