காஞ்சிபுரம்: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்று உறுதி மொழி எடுத்துக்கொண்டனர். தமிழகம் முழுவதும் பெருகிவரும் போதைப்பொருள் பயன்பாடுகளை தடுத்திடவும், போதை பொருட்கள் கடத்தலை இரும்பு கரம் கொண்டு தடுத்திடவும் மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் உத்தரவு பிறப்பித்துள்ளார். பொதுமக்கள், இளைஞர்கள், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும் கேட்டுக் கொண்டுள்ளார். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டம் பள்ளிக்கல்வி துறையின் சார்பில், 3 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைபொருள் விழிப்புணர்வு மெகா மனித சங்கிலி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. காஞ்சிபுரம் நகரின் முக்கிய சாலைகளான காமராஜர் சாலை, இந்திரா காந்தி சாலை, மேற்கு ராஜ வீதி, செங்கழு நீரோடை வீதி, பூக்கடை சத்திரம், கிழக்கு ராஜவீதி, பஸ் நிலையம், உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட போதைப் பொருள் விழிப்புணர்வு மனிதச் சங்கிலியில் காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி, மாவட்ட போலீஸ் எஸ்பி சுதாகர், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிகளுடன் கைகோர்த்து மனித சங்கிலி அமைத்து, போதைப்பொருள் குறித்து விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர். செங்கல்பட்டு: செங்கல்பட்டு அண்ணா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு மாவட்ட காவல்துறை சார்பில், போதைபொருள் ஒழிப்பு வாரவிழாவை முன்னிட்டு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்விற்கு, பள்ளி தலைமை ஆசிரியை தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக செங்கல்பட்டு எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணாசிங், நகராட்சி ஆணையர் மல்லிகா, நகர்மன்ற தலைவர் தேன்மொழி நரேந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். இதில், எஸ்.பி.சுகுனாசிங் பேசுகையில், ‘தற்போது கஞ்சா, அபின், உள்ளிட்ட மோசமான போதை பொருட்கள் மறைமுகமாக விற்பனை ஆகின்றது. ஆனால், பான்பராக், ஹான்ஸ், சிம்லா, எம்டிஎம் கூல்-லிப் உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் அனைத்து கடைகளிலும் திருட்டுத்தனமாக விற்கப்படுகிறது. இவை அனைத்தும் உடலுக்கு மோசமான விளைவுகளை உண்டாக்குவதோடு புற்றுநோய் போன்ற பல்வேறு நோய்களை உருவாக்கும் அபாயம் உள்ளது. அதிலும், குறிப்பாக தற்போது மாணவர்களுக்காகவே தயார் செய்யப்பட்டு பள்ளி கல்லூரிகளுக்கு எதிரில் உள்ள கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதை காவல்துறை ஆய்வு செய்து கடுமையாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், 20க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவிகளாகிய நீங்கள் போதை பழக்கங்களுக்கு அடிமையாகாமல் நன்றாக படித்து வாழக்கையில் உயர்வதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என பேசினார். இதில், மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்கள், மாணவிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். திருப்போரூர்: திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. திருப்போரூர் ஒன்றியக் குழுத்தலைவர் எஸ்.ஆர்.எல்.இதயவர்மன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஒன்றிய குழு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகள் பாதுகாப்பு, காவல்துறை நடவடிக்கைகள், பாலியல் துன்புறுத்தல், பாலியல் சீண்டல் ஆகியவற்றை செய்யும் சமூக விரோதிகளிடம் இருந்து குழந்தை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து இளைஞர்களை போதைப் பழக்கத்தில் இருந்து மீட்டெடுத்தல், அவர்களுக்கு தேவையான ஆலோசனை வழங்குதல் குறித்து பலரும் பேசினர். இதையடுத்து ஒன்றியக்குழுத் தலைவர் தலைமையில் அனைவரும் போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கை உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில், ஒன்றிய குழு உறுப்பினர்கள் வினோத், கல்யாணி ராமகிருஷ்ணன், ஊராட்சி மன்ற தலைவர்கள் கேளம்பாக்கம் ராணி எல்லப்பன், படூர் தாரா சுதாகர், கோவளம் சோபனா தங்கம் சுந்தர் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். இதேபோன்று, கேளம்பாக்கத்தில் உள்ள தனபாலன் கல்லூரியில் போதைப் பொருளுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியின் தலைவர் புகழேந்தி தனபாலன் தலைமை தாங்கினார். இயக்குனர் தேவி புகழேந்தி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பியூலா பத்மாவதி வரவேற்றார். தாம்பரம் மாநகர காவல் ஆணையத்தின் கானத்தூர் உதவி ஆணையர் ரவிக்குமார் கலந்துகொண்டு போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், அவற்றை போக்குவதில் மாணவர்களின் பங்கு குறித்தும் பேசினார். இதைத்தொடர்ந்து போதைப் பொருள் தடுப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். …
The post காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு; மனித சங்கிலி மாணவ, மாணவியர் பங்கேற்பு appeared first on Dinakaran.