திருமண யோகம் தரும் ஸ்ரீபார்த்தசாரதி பெருமாள்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்துள்ளது தேவபாண்டலம் கிராமம். பஞ்ச பாண்டவர்கள் இந்த கிராமத்திற்கு வந்ததால் இக்கிராமம் தேவபாண்டலம் என பெயர்பெற்றது. இங்கு சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு சவுந்தரவல்லிதாயார் சமேத ஸ்ரீபார்த்தசாரதிபெருமாள் கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் திருமண நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுகிறது. காரணம் திருமண தடைபோக்கும் தலமாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

மேலும் வைகுண்ட ஏகாதசி அன்று சொர்க்கவாசல் திறப்பு மற்றும் சுவாமி உற்சவம் நடைபெறுகிறது. மாசிமக தீர்த்தவாரி உற்சவம், தை உற்சவம் போன்ற நிகழ்ச்சிகள் வெகு விமரிசையாக நடைபெறும். இந்த கோயிலுக்கு பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக்கோயிலுக்கு சுமார் 5 ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன.

பாண்டவர்கள் பசி தீர்த்த கோயில்

இந்த கோயில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு முஸ்குந்த சக்கரவர்த்தி என்ற மன்னரால் கட்டப்பட்டதாகும். கோயிலின் சிறப்பு குறித்து பூசாரி கூறுகையில், இந்த கோயிலுக்கு பஞ்சபாண்டவர்கள் வந்தபோது அவர்களுக்கு கடும்பசி ஏற்பட்டுள்ளது. வழக்கமாக நடைபெறும் அன்னதானம் முடிந்து விட்டதால் அவர்களுக்கு உணவு அளிக்க முடியவில்லையாம். உடனே கோயிலில் பூஜை செய்தவர் பஞ்ச பாண்டவர்களிடம், நீங்கள் அருகில் உள்ள மணிமுத்தாற்றில் நீராடிவிட்டு வாருங்கள், உணவு அருந்தலாம் என கூறினர் ஆனால் ஏற்கனவே சமைத்த பாத்திரத்தில் உணவு அனைத்தும் தீர்ந்து விட்ட நிலையில் ஒரே ஒரு பருக்கை சாதம் மட்டுமே இருந்துள்ளது.

அதனை எடுத்துப்பார்த்த பூசாரி இறைவனிடம் இறைவா என்ன இது சோதனை? இப்படி பஞ்ச பாண்டவர்களுக்கு உணவு அளிக்க வேண்டுமே, கருணை காட்டு என்று வேண்டி உள்ளார். இதனால் மனமிறங்கிய இறைவன் சூரியபகவான் வழங்கிய அட்சயபாத்திரத்தில் ஒரு பருக்கை சாதத்தை வைக்க அதில் உணவு அள்ள அள்ள குறையாமல் வந்து கொண்டே இருந்ததாம். அந்த உணவை பஞ்ச பாண்டவர்களுக்கு வழங்க அவர்களின் பசி தீர்ந்தது. அவர்களும் மன நிறைவுடன் இங்குள்ள பெருமாளை வணங்கி சென்றுள்ளனர் என்று தெரிவித்தார்.

 

திருமண பாக்கியம்  

இநத கோயிலுக்கு வரும் பக்தர்கள் முக்கிய வேண்டுதலாக திருமணம், குழந்தை பாக்கியம் மற்றும் கடன் தொந்தரவுக்கு இங்கு வந்து வேண்டிக் கொண்டு சென்றால் பக்தர்களின் குறை தீரும் என்பது ஐதீகம். வைகுண்ட ஏகாதசியில் 20 நாட்கள் நடைபெறும் உற்சவத்தில்  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்கின்றனர். இந்த கோயிலில் சவுந்தரவல்லித்தாயாருக்கு தனி சன்னதி உள்ளது. ஸ்ரீபார்த்தசாரதிபெருமாள் இறைவனுக்கு தேரோட்டி வேடத்தில் ஒரு கையில் சாட்டையுடன் தேரோட்டுவதுபோல் காட்சியளிப்பார். சக்கரத்தாழ்வாருக்கு தனி சன்னதி உள்ளது. கோயில் முன்பு பலிபீடம் மற்றும் கொடிமரம் உள்ளது. அதில் கையில் புல்லாங்குழல் வாசித்தபடி அருள்பாலிக்கும் கிருஷ்ண பகவான், கருடாழ்வார், ஆஞ்சநேயர் சிலைகள் உள்ளன. அருகே உள்ள தனி மண்டபத்தில் விநாயகர் சிலை உள்ளது.

செல்வது எப்படி?

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் இருந்து சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தேவபாண்டலத்தில் பார்த்தசாரதி பெருமாள் கோயில் உள்ளது. பேருந்து வசதி உண்டு.

Related Stories: