ஏரிக்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு-அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

திருபுவனை : மடுகரை-  கடலூர் சாலையில் மடுகரை ஏரிக்கரை உள்ளது. இந்த சாலையின் வழியாக தமிழகப் பகுதியில் இருந்து பல்வேறு வாகனங்களில் மக்கள் புதுவைக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர்.  இந்நிலையில் மடுகரை,  கரியமாணிக்கம்,   நெட்டப்பாக்கம்   மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள இறைச்சி மற்றும் மீன் கடைகளின் கழிவுகள்  சாலையோர ஏரி பகுதியிலும், குளம்,  குட்டை,  நீர் பிடிப்பு பகுதிகளிலும்  கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகின்றது. மேலும், அப்பகுதியில் நோய் தொற்று பரவி பாதிப்புக்கு  உள்ளாகின்றனர். நீர்நிலைகளிலும் இறைச்சி கழிவுகளை வீசுவதால் நீர்நிலைகளும் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். இதில் இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த நடவடிக்கைகளை எடுக்க ஆணையர் ஆலோசனை வழங்கினார்.  அதன்பிறகு ஆணையர் ஜெயக்குமார் தலைமையில் இறைச்சி கடை உரிமையாளர்களுடன் காவல்நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. அதில், நெட்டப்பாக்கம் கொம்யூன்  பஞ்சாயத்துக்கு உட்பட்ட  ஊர்களான மடுகரை, நெட்டப்பாக்கம்,  கரியமாணிக்கம் மற்றும் அதனை சுற்றிய கிராமப்புறங்களில் உள்ள இறைச்சி கடை உரிமையாளர்கள், இறைச்சி கழிவுகளை  ஆற்றங்கரை மற்றும்  நீர்நிலைகளில் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு, நோய் பரவும் அபாயம் இருப்பது குறித்து  கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  அதற்கு மாற்று ஏற்பாடாக தற்போது இறைச்சி கடைக்காரர்கள், தாங்களாகவே அவர்களுடைய சொந்த இடத்தில் சுகாதார முறைப்படி   முறையாக சணல் சாக்கில் கட்டி மண்ணில் புதைக்க வேண்டும்  என அறிவுரை கூறப்பட்டது. அதன் பிறகு கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் அதற்கான தனியான ஒரு இடம் ஒதுக்கி, அந்த இடத்தில் இறைச்சி கழிவுகளை சுகாதார முறைப்படி அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க கொம்யூன் பஞ்சாயத்து நிர்வாகம் திட்டத்தினை  செயல்படுத்தும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.  இதனை சிறிது காலம் கடை உரிமையாளர்கள் கடைபிடித்து வந்துள்ளனர்.  ஆனால் தற்போது மீண்டும் சாலை ஓரங்களிலும். குளம்,  குட்டை  உள்ளிட்ட  நீர்நிலைகளிலும் இறைச்சி கழிவுகளை கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் ஆணையர் தகுந்த நடவடிக்கை எடுத்தும், அதனை  இறைச்சி கடை உரிமையாளர்கள் முறையாக கடைபிடிக்காததால் நீர்நிலைகள் பாதிக்கப்படுவதோடு சுகாதார  சீர்கேடும், துர்நாற்றமும் வீசுகிறது. இதனால் சாலையில்  செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.  எனவே இறைச்சி கழிவுகளை முறையாக அப்புறப்படுத்த தனியாக ஒரு இடத்தினை தேர்வு செய்து, அந்த இடத்தில் கழிவுகளை சுகாதார முறைப்படி  முறையாக அழிக்கும் வேலையை அரசு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகளை கொட்டும் கடை உரிமையாளர்களை கண்டறிந்து, அவர்கள் மீது சட்டப்படி  நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூகஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்….

The post ஏரிக்கரையில் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் சுகாதார சீர்கேடு-அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: