ஐந்து திருமுகங்களை கொண்ட மண்டைக்காடு பகவதியம்மன்

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதியம்மன் கோயில், பெண்களின் சபரிமலை  என்றும் அழைக்கப்படுகிறது. தென் கேரளத்தில் களரிப்பயிற்சி என்னும் போர்க்கலை பயிலும் இடங்களில் உள்ள வழிபாட்டு இடம், பிற்காலத்தில் அம்மன் கோயிலாக மாறியது என்பது இக்கோயிலுடன் இணைந்து கூறப்படும் கூற்றுகளாக உள்ளன. களரிப்பயிற்சி நடக்கும் இடங்களில் காளி படிமத்தை வடக்கு பார்த்து வைப்பர். முதலில் காளிக்கு வழிபாடு பின் பயிற்சி ஆகும். களரி பயிலுவது நின்ற பின், காளி கோயில் பொதுமக்களின் வழிபாட்டுக்குரிய இடமாக மாறியது என்பார்கள். இதுவும் பகவதியம்மன் கோயில் பற்றி கூறப்படும் தகவல்களில் ஒன்றாக உள்ளது.

Advertising
Advertising

இக்கோயில் சித்தருடைய சமாதி என்பது ஒரு கதை. மண்டைக்காடு காடாய் இருந்த சமயம், சித்தர் ஒருவர் இங்கு வந்தார். ஒரு இடத்தில் ஒளி வீசுவதை அறிந்து அங்கே அமர்ந்தார். சித்து வேலைகள் செய்தார். ஒரு நாள் அவர் மாயமாய் மறைந்து விட்டார். சித்தர் ஸ்ரீ சக்கரம் வரைந்த இடத்தில் ஒரு புற்று வளர்ந்தது. மாடு மேய்க்கும் சிறுவர்கள் அதை உடைத்தனர். அதில் இருந்து ரத்தம் கசிந்தது. அச் செய்தியை ஊர் மக்கள் அறிந்தனர். இதனால் அங்கே ஒரு கோயில் உருவானதாகவும் தகவல்கள் கூறுகிறார்கள்.

கேரள மாநிலம் கொல்லம் நகரிலிருந்து யோகினி ஒருவர் மண்டைக்காடு வந்தாள். கடற்கரையில் தவம் இருந்தாள். அந்த இடம் புற்றாக வளர்ந்தது. அதுவே பிற்காலத்தில் வழிபாட்டுக்குரியதானது என்பார்கள். அந்த யோகினியின் பக்தர்கள் இப்போதும் கொல்லத்தில் இருந்து இந்த கோயிலுக்கு வருகிறார்கள். இந்த கோயில் குறித்த நம்பிக்கை ஆழமானதாகவும், பழமையானதாகவும் இருந்தாலும், இந்த கோயிலில் கட்டுமானம்  பிற்காலத்தில் உண்டானது தான். ஆரம்பத்தில் கருவறையும், சித்தர் சமாதி பகுதியும், ஓலை கூரையாகவே இருந்தன. திருவிதாங்கூரின் திவானாக இருந்த வேலுதம்பி தளவாய், இந்த கோயிலை முதலில் அரசுடமையாக்கினார்.

குமரி மாவட்டம் கேரளத்தில் இருந்து தனியாக பிரிந்த கால கட்டத்தில், தமிழக இந்து சமய அறநிலையத்துறையால் இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டது. கொடி மரம் நடப்பட்டது. கருவறையில் இருக்கும் மண் புற்றே பகவதியாகும். இது ஒவ்வொரு நாளும் வளர்ந்து வருவதாக நம்பிக்கை ஆகும். இதனால் சந்தன காப்பு செய்து, வடக்கு நோக்கி அம்மனை ஸ்தாபித்த பின், வளர்ச்சி நின்றதாக சொல்வார்கள். இவள் ஐந்து திருமுகங்களை கொண்டவள் ஆவாள்.  இக்கோயிலில் பரிவார தெய்வங்கள் பிரசன்ன விநாயகர், கடல் நாகர், பைரவர் (சித்தர்) ஆகியோர் ஆவர். பைரவர் எனப்படும் சித்தர் சமாதி கோயில், மேற்கு புறம் உள்ளது. இதன் தல விருட்சம் வேப்பமரம் ஆகும்.

இந்த கோயிலில் மாசி மாதம் நடக்கும் 10 நாள் திருவிழா வெகு விமரிசையாக இருக்கும்.  10வது நாள் நடக்கும் ஒடுக்கு பூஜை மிகவும் பிரசித்தி பெற்றது. சாஸ்தா கோயிலில் தயாரிக்கப்பட்ட பருப்பு உட்பட 11 வகை கறி, குழம்புகள், சாதம் ஆகியவற்றை தலையில் சுமந்து வந்து கோயிலின் கருவறையில் வைப்பார்கள். நள்ளிரவு 1 மணிக்கு பூஜை. இந்த படைப்புக்குரிய சாதம் ஒரே நாளில் விளைந்த புழுங்கல் அரிசியால் சமைக்கப்படுவது விஷேசம் ஆகும். இவற்றை தயாரிக்கும் முறை, கொண்டு வருதல் என்பது இன்னும் மரபு வழியாகவே நடக்கிறது.

இந்த கோயிலில் நேர்ச்சைகள் வில்லுப்பாட்டு, மரம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட கை, கால், உறுப்பு காணிக்கை, வெடி வழிபாடு , முத்தப்பம், மண்டையப்பம், பொங்கல், கை விளக்கு, பூ மாலை, குத்தியோட்டம், கருப்பு வளையல், விளைச்சலில் ஆகியன ஆகும். இவை தவிர  வெண் பொங்கல், சர்க்கரை பொங்கல் முதலியவையும் உண்டு. மண்டைக்காடு கடற்கரை கிராமம். கடலில் கால் நனைத்து அம்மனை வழிபடும் முறையும் உண்டு. நாகர்கோவிலில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.

Related Stories: