×

கடந்தாண்டு வெளியான 241ல் 165 படங்களை நிராகரித்த ஓடிடி நிறுவனங்கள்: திருந்துமா தமிழ் சினிமா?

சென்னை: கடந்த ஆண்டு வெளியான 241 படங்களில் 165 படங்களை ஓடிடி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. இதனால் தமிழ் திரையுலகம் பெரும் அதிர்ச்சியில் உள்ளது. தமிழ் சினிமாவில் ஆண்டுதோறும் 100 படங்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலை போய், சில வருடங்களாக 200 படங்களுக்கு மேல் திரைக்கு வருகிறது. கடந்த 2024ம் ஆண்டில் மட்டும் 241 படங்கள் திரைக்கு வந்தன. இதில் வெற்றி படங்களின் சதவீதம் வெறும் 5 தான். தோல்வி படங்கள் மூலம் ரூ.1800 கோடிக்கு மேல் தமிழ் சினிமா நஷ்டத்தை கண்டது.

இந்நிலையில் கதை சரியாக இல்லாமல், திரைக்கதையில் கவனம் செலுத்தாமல், மேக்கிங்கில் சொதப்பிய படங்கள் என பெரும்பாலான தமிழ் படங்கள் திரைக்கு வந்தன. இதனால் இப்படங்களை ஓடிடி நிறுவனம் தடாலடியாக நிராகரித்துவிட்டது. இதுபோல் 165 படங்களை கடந்த ஆண்டு மட்டுமே ஓடிடி நிறுவனங்கள் நிராகரித்துள்ளன. இது அதற்கு முந்தைய ஆண்டுடன் (2023) ஒப்பிடும்போது 20 சதவீத படங்களை அதிகமாகவே ஓடிடி நிறுவனங்கள் 2024ல் நிராகரித்துள்ளன.

கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய முடியாமல் புதுப் படங்கள் தவித்தபோது, கைகொடுத்தது இந்த ஓடிடிக்கள்தான். அப்போது தயாரிப்பாளர்களுக்கு நல்ல லாபம் தரும் வகையில் அந்த படங்களை ஓடிடி நிறுவனங்கள் வாங்கி வெளியிட்டன. அந்த சமயத்தில் கட்டுப்பாடு இல்லாமல், எல்லா படங்களையும் ஓடிடி நிறுவனங்கள் வாங்கி குவித்தன. ஆனால் அதில் சில படங்களுக்கு மட்டுமே நல்ல பார்வைகள் கிடைத்தன. பல படங்களை ஓடிடியில் கூட மக்கள் நிராகரிக்க தொடங்கினர்.

காரணம், அவை கதையில் கோட்டைவிட்ட படங்களாக இருந்ததுதான். இதனால் உஷாரான ஓடிடி நிறுவனங்கள், இனி நல்ல கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களை ஈர்க்கும் மேக்கிங் இருந்தால் மட்டுமே அந்த படங்களை வாங்குவது என முடிவு செய்தன. இதையடுத்து தியேட்டர்களில் ஓடாத எந்த புதுமையும் இல்லாத படங்களை தயவு தாட்சணை பார்க்காமல் ஓடிடி நிறுவனங்கள் அதிரடியாக நிராகரித்தன. இதுபோல் 165 படங்கள் வரை நிராகரித்த ஓடிடி நிறுவனங்கள் வெறும் 76 படங்களுக்கு மட்டுமே டிக் அடித்தன.

அதிலும் 28 படங்கள் இதுவரை ஓடிடியில் வெளியாகாமல் வெயிட்டிங் லிஸ்ட்டில் காத்திருக்கின்றன. இது குறித்து ஒரு ஓடிடி நிறுவன பிரமுகரிடம் கேட்டபோது, ‘‘ரசிகர்கள் மாறிவிட்டார்கள். அவர்கள் உலக சினிமாவை பார்க்கத் தொடங்கிவிட்டார்கள். படத்தின் டிரெய்லரை வைத்தே அது எந்த வெளிநாட்டு படத்தின் காப்பி என்பதை கண்டுபிடித்துவிடுகிறார்கள். சமீபத்தில் கூட அதுபோல் மாட்டிக்கொண்ட ஒரு பெரிய படம் பற்றி எல்லோருக்குமே தெரியும். அதனால் இனி புதுமை மட்டுமே எடுபடும். பழைய உப்புமாவை கிண்டி வந்து கொடுத்தால் அதை அப்படியே ஓடிடி தளங்கள் நிராகரிக்கின்றன.

அவர்களின் பசிக்கு மலையாள சினிமா நன்றாக தீனி போடுகிறது. கடந்த ஆண்டில் மட்டுமே 228 மலையாள படங்கள் திரைக்கு வந்தன. அதில் நேரடியாக ஓடிடியில் வெளியான மலையாள படங்கள் 41. தியேட்டரில் வெளியான பிறகு ஓடிடி நிறுவனங்கள் வாங்கியது 83 படங்கள். மொத்தமாக 124 மலையாள படங்களை ஓடிடிக்கள் வாங்கியுள்ளன. மலையாள படங்கள்போல் தமிழ் படங்களும் எடுக்கப்பட்டால் அதை ஓடிடிக்கள் கண்டிப்பாக நல்ல விலைக்கே வாங்கும்’ என்றனர்.

ஓடிடிக்கள் வாங்கும் தமிழ் படங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, டிஜிட்டல் ரைட்சுக்கான தொகையும் குறைந்துவிட்டனர். விஜய் சேதுபதி நடித்த ‘மகாராஜா’ படத்தையே வெறும் 18 கோடி ரூபாய்க்குதான் நெட்பிளிக்ஸ் வாங்கியது. அதன் பிறகு அந்த படம் ஓடிடியில் பட்டையை கிளப்பியது தனிக்கதை. அதுபோல் நல்ல படங்கள் தியேட்டரை விட ஓடிடியில் அதிகம் சம்பாதிக்கும்போது, அதிலிருந்து குறிப்பிட்ட பங்கு தயாரிப்பாளருக்கு கிடைக்கிறது. எனவே இனிமேல் தமிழ் சினிமா திரைக்கதையில் கவனம் செலுத்தி நல்ல படங்களை தந்தால் மட்டுமே ஓடிடியை நாட முடியும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.

* இதனால் உஷாரான ஓடிடி நிறுவனங்கள், இனி நல்ல கதையம்சம், விறுவிறுப்பான திரைக்கதை, ரசிகர்களை ஈர்க்கும் மேக்கிங் இருந்தால் மட்டுமே அந்த படங்களை வாங்குவது என முடிவு செய்தன.

Tags : Chennai ,
× RELATED சென்னையிலிருந்து பெங்களூருக்கு...