ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் பேறு பெற்றோர்

கிறிஸ்தவம் காட்டும் பாதை

மனிதர்களை நல்லவர்கள், கெட்டவர்கள் என்று பிரிக்க முடியுமா? முடியாது, மிகவும் நல்லவர்கள் என்று நாம் நினைப்பவர்கள் சில நேரங்களில் மிகவும் மோசமான தவறுகளைச் செய்கிறார்கள். கொலைகாரர்கள்கூட சில சமயங்களில் தங்கள் செயல் நியாயமானது என்று நிலை நாட்டுகிறார்கள். மோசமானவர்கள் பலர் மெல்ல மெல்ல நல்லவர்கள் ஆகிறார்கள். நல்லவர்கள் பலர் சீரழிந்து போகிறார்கள். எனவே ஒட்டு மொத்தமாக எவரையும் நல்லவர், கெட்டவர் என்று முத்திரை குத்தித் தரம் பிரித்துவிட முடியாது.

ஆனால், நாம் செய்யும் ஒவ்வொரு செயலையும் நல்ல செயல், தீய செயல் என்று நாம் தரம் பிரித்துப் பார்த்துவிட முடியும். தவறான செயல்களைத் திருத்துவதன் மூலம் ஒருவரின் தவறு செய்யும் வழக்கத்தைத் தடுக்க முடியும். சரியான செயல்களை பாராட்டுவதன் மூலம் ஒருவரின் நல்ல பண்புகளை வளர்க்க முடியும். இதனால்தான் தவறைத் திருத்து. தவறு செய்பவரை மன்னித்து விடு என்று எல்லா மதங்களும் சொல்கின்றன. நமக்கு அருகாமையில் நடக்கின்ற குற்றங்களைத் தடுத்து நிறுத்துவோம். குற்றம் செய்த மனிதர்கள் திருந்தி வாழ அவர்களை மன்னித்து அன்பு காட்டுவோம். மனிதர்கள் தவறுபவர்கள்தான். அவர்களை மன்னிப்போம், அவர்களது தவறுகளைத் திருத்துவோம்.  

‘‘ஆண்டவருக்கு அஞ்சி அவர் வழிகளில் நடப்போர் பேறு பெற்றோர். உமது உழைப்பின் பயனை நீர் உண்பீர். நீர் நற்பேறும் நலமும் பெறுவீர்.  உம் இல்லத்தில் உம் துணைவியார் கனி தரும் திராட்சைக்கொடிபோல் இருப்பார். உண்ணும் இடத்தில் உம் பிள்ளைகள் ஒலிவக்கன்றுகளைப்போல் உம்மைச் சூழ்ந்திருப்பர். ஆண்டவருக்கு அஞ்சி நடக்கும் ஆடவர் இத்தகைய ஆசி பெற்றவராய் இருப்பார். ஆண்டவர் உமக்கு ஆசி வழங்குவாராக! எம் வாழ்நாள் எல்லாம் நீர் நல்வாழ்வைக்காணும்படி செய்வாராக! நீர் உம் பிள்ளைகளின் பிள்ளைகளை காண்பதாக! உமக்கு நலம் உண்டாவதாக’’ - (திருப்பாடல்கள் 128: 1-6)

அன்பே மகிழ்ச்சி, அன்பே வாழ்க்கை, அன்பே ஞானம். அன்பு உருவாக்கும் சக்தி. அது அனைத்தையும் ஒன்றுபடுத்தும் சக்தி. அனைத்து வகையான கூட்டுறவுக்கும் அடிப்படையாக இருப்பது அன்புதான். நீங்கள் உங்கள் நண்பனிடத்திலோ அல்லது மற்றவர்களிடத்திலோ ஒன்றுபட்டிருந்தால் உங்களால் அவர்களை இதய பூர்வமாக நேசிக்க முடியும். சுயநலம் கருதாத தெய்வீக அன்பின் மூலம் அனைத்தையும் சாதிக்க முடியும். அன்பானது, வெறுப்பு மற்றும் விரோதத்தைப் போக்குகிறது. அன்பின் மூலம் ஒருவர் மற்றொருவரை சரியாகப் புரிந்துகொள்கிறார்.

‘‘நீ உன்னை நேசிப்பதுபோல பிறரையும் நேசிக்க வேண்டும்’’ என்பது அறம் பற்றிய சுருக்கமான அறிவிப்பு. அனைவரிடத்திலும் அன்பு செலுத்துவதே உறவின் அடையாளம். அன்பு இல்லாமல் வாழ்க்கை இல்லை. படைக்கப்பட்ட அனைத்திலும் இறைவன் இருக்கிறான். ஒவ்வொரு உருவத்தின் மூலம் அவர் காட்சி அளிக்கிறார். ஆகவே எல்லா உயிர்களிடத்திலும் அன்பு செலுத்துங்கள். இறைவனிடம் பக்தி செலுத்துதல், மனிதகுலத்தை முழுமையாக நேசித்தல் ஆகியவை இருபெரும் அடிப்படைக்கொள்கைகள். அனைவரிடத்திலும் அன்புடன் பழகுங்கள். அனைத்து உயிர்களிடத்திலும் கருணை காட்டுங்கள். இது இறைவனுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. இறைவனிடம் அன்பு செலுத்தும் பாவனையில் அனைவரிடத்திலும் அன்பு செலுத்துங்கள்.

- ‘‘மணவைப்பிரியன்’’ஜெயதாஸ் பெர்னாண்டோ

Related Stories: