நீங்கள் விரும்பியது கிடைக்க பகவதி சேவா பூஜை செய்யுங்கள்

பிரபஞ்சம் முழுவதும் தெய்வீக சக்தி நிறைந்திருக்கிறது. அந்த தெய்வீக சக்தியிடம் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விடுபவர்களுக்கு அனைத்து வகையான நன்மைகளும் உண்டாகும். உலகியல் வாழ்க்கை வாழ்கின்ற மனிதனுக்கு பலவகையான தேவைகள் இருக்கின்றன. அந்த தேவைகளை சில பூஜைகள், வழிபாட்டு முறைகளை கடைபிடித்து தெய்வத்தை வழிபடுவதன் மூலம் வேண்டிய பலன்களை பெறுகின்றனர். அந்த வகையில் ஒருவருக்கு வாழ்க்கையில் பல வகையான நன்மைகளை தரக்கூடிய “பகவதி சேவா பூஜை” செய்யும் முறை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

இந்த பகவதி பூஜை கேரள மாநில மக்கள் செய்யும் ஒரு பூஜை முறையாகும். பகவதி பூஜை கோயில்களில் அல்லது நல்ல நட்சத்திர தினத்தில் வீட்டிலே செய்யப்படுகிறது. பூஜை தொடங்குவதற்கு முன்பே பூஜை செய்யும் வேதியர் தன்னுடைய உடல் மற்றும் மனதை தூய்மையாக்கிக் கொண்டு, தூய்மையான ஆடைகளை அணிந்து காப்பு மந்திரங்களை துதித்து தன்னை வெளிப்புற தீயசக்திகள் தாக்காதவாறு தற்காத்து கொண்டு திட சித்ததுடன் பகவதி சேவா பூஜையை செய்வார். இந்த பூஜை மாலை வேளைகளில் மட்டுமே செய்யப்படும் பூஜை என்பதால், பூஜை செய்யும் வேதியர் மேற்கு திசையைப் பார்த்தவாறு அமர்ந்து பூஜை செய்வார்.

இந்த பகவதி பூஜை தொடங்குவதற்கு முன்பாக தரையில் அரிசி பொடி, மஞ்சள் பொடி, மாவிலை பொடி ஆகிய மூன்றையும் சேர்த்து கலக்கப்பட்ட பொடியை கொண்டு பத்மம் எனப்படும் தாமரை கோலம் அல்லது ஸ்வஸ்திகா கோலத்தை வரைந்து கோலத்தின் நான்கு புறங்களிலும், நான்கு குத்து விளக்குகளில் தீபம் ஏற்றி, வைப்பார். பகவதி என்றாலே சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய தேவியர்களை குறிக்கும் ஒரு பொதுவான பெயராகும். எனவே பத்ம கோலத்திற்கு நடுவே எந்த தேவியின் சாந்நித்தியத்தை வர வைக்க வேண்டுமோ அந்த தேவிக்கு உரிய மந்திரங்களை துதித்து, தெய்வ சக்தியை வரவழைப்பார்.

சக்தி வடிவில் வந்திருக்கும் தேவிக்கு தூய்மையான நீர் மற்றும் இதர நைவேத்திய பொருட்களை படைத்து அவற்றை தேவாமிர்தமாக மாற்றுவதற்கான மந்திரங்களை துதித்து தேவிக்கு பூஜைகள் செய்யப்படும். இந்த பூஜைகள் செய்யப்பட்ட பிறகு இறுதியாக தேவியை மகிழ்விக்கும் புஷ்பாஞ்சலி பூஜை புரோகிதரால் செய்யப்படும். அப்போது பக்தர்கள் அனைவரும் லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற பாடல்களை துதித்து தேவியை வழிபடுவது சாலச் சிறந்ததாகும். பூஜைகள் முடிந்ததும் நைவேத்தியங்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும்.

இந்த பகவதி சேவா பூஜை செய்து கொள்ளும் நபர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தார் தெய்வங்களின் ஆசிகளைப் பெறுகின்றனர். நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களும், பெண்களும் பூஜைகளை செய்வதால் விரைவில் திருமணம் நடைபெறும். நோய்கள் நீங்கி ஆயுள் அதிகரிக்கும். துஷ்ட சக்தி பாதிப்புகள் நீங்கும். குடும்பத்தில் தொடர்ந்து ஏற்படுகின்ற கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ வளம் உண்டாகும்.நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். விருப்பங்கள் நிறைவேறும்.

Tags : Bhagavathi Seva Pooja ,
× RELATED குழந்தை செல்வம் அருளும் அப்பர் சுவாமிகள் ஆலயம்