×

வேதங்கள் புகழும் வேழ முகத்தோன்

மனதை மயக்கும் காலை வேளை. அருணோதயம் மனதைக் கவர்ந்தது. கூட்டமாக பல மாணவர்கள் கணாத மகரிஷியின் ஆசிரமத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தார்கள். அவரிடம் ஞான உபதேசம் பெறவே இத்தனைக் கூட்டமும் அங்கு சென்று கொண்டிருந்தது. மாணவர்கள் அனைவரும் கணாத ரிஷிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு, பாடம் கேட்க ஆயத்தமாக அமர்ந்து கொண்டார்கள். கணாத ரிஷி வகுப்பை ஆரம்பித்தார். ‘‘எனதருமை சீடர்களே! இன்று நான் உங்களுக்கு உபதேசிக்கும் பாடம் அதிரகசியமானது. பிரம்ம ஞானத்தை எளிதில் தரக் கூடியது. ஆம். வேதத்தின் உட்பொருளை நன்கு விளக்க வந்த உபநிஷதங்கள் 108 என்று ஒரு கணக்கு உண்டு. அந்த 108க்குள் மிக முக்கியமான உபநிஷத்தான் இன்றைய பாடம். எல்லோரும் நான் சொல்வதைக் கேட்டு என் பின்னே சொல்லுங்கள்.’’ கட்டளை இட்டுவிட்டு பக்தியோடு கைகளைக் குவித்துக் கொண்டு உபநிஷத் மந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார், ‘‘பத்ரம் ...ஸ்ருணு யாம தேவா...’’

‘‘குருதேவா! மங்களத்தையே நாங்கள் பார்க்க வேண்டும், கேட்க வேண்டும் வணங்க வேண்டும் என்று பொருள் கொண்ட மந்திரம்.இது எப்படி பிரம்மத்தை உணர்த்துகிறது.’’ முதன்மை வகித்த மாணவன் தனது சந்தேகத்தைக் கேட்டான். கணாத ரிஷியினிடம் காணப்படும் அசாத்திய தேஜஸ், அவனிடமும் காணப்பட்டது. ‘‘எந்த ஒரு காரியம் தொடங்கும் முன்பும், ‘‘சுக்லாம் பரதரம் விஷ்ணும்’’ என்று தொடங்கும் ஒரு கணபதி த்யான மந்திரத்தை சொல்கிறோம். அதில், நேரடியாக கணபதியை குறிக்கும் வார்த்தைகள் எதுவும் இல்லை. இருப்பினும், பிரசன்ன வதனம் அதாவது மங்களமான முகத்தை உடையவர் என்ற பொருளுடன் வரும் ஒற்றை வார்த்தையைக் கொண்டே அது அந்த கணேசரைக் குறிப்பதாக நமது ஆச்சாரியர்கள் உபதேசிக்கிறார்கள். ஆக மங்களம் என்ற ஒரு வார்த்தை, அந்த கணேசனை குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.

எனவே, மேல் சொன்ன வேத மந்திரம் கணபதியையே நினைக்கச் சொல்கிறது. அவனது புகழையே கேட்கச் சொல்கிறது. அவனுக்கே அனைத்தையும் அர்ப்பணம் செய்ய வேண்டும் என்று சொல்கிறது. அப்படிச் செய்தால் ஔவையாரைப்போல நாமும் அந்த கஜ முகனால் ரட்சிக்கப்படுவோம். ஆம். தனது நண்பர்களான சுந்தரரும், சேரமான் பெருமாளும் தனக்கு முன்னமே கைலாய யாத்திரை சென்று விட்டனர் என்று அறிந்த ஔவை, கணபதியை சரண் புகுந்தார். (தத்துவ நிலையை தந்து என்னை ஆண்ட வித்தக விநாயக விரை கழல் சரணே - விநாயகர் அகவல்) அவர் ஔவையாரின் நண்பர்களை முன்னமே திருக்கயிலாயம் சேர்த்து விட்டார்.

மொத்தத்தில் விநாயகனை சரண் புகுந்தால் நடக்காதது தான் என்ன? அவனை சரணடைந்தால் ஆதித்தன் முதலிய நவக்கிரகங்களும் நமக்கு நன்மையே செய்யும் என்று உபநிஷத் சொல்கிறது. (ஸ்வஸ்தி ந: பூஷா விஷ்வ வேதா:) கணபதி என்றிட கலங்கும் வல்வினை, கணபதி என்றிட காலனும் கை தொழும் என்று சொன்னதும் இதன் பொருட்டே’’ கணாத ரிஷி சொல்லி முடித்தார். ‘‘கணபதியை சரணாகதி செய்வது இவ்வளவு மகத்துவம் வாய்ந்ததா?’’ சீடர்கள் வாயைப் பிளந்தார்கள். ‘‘இல்லாமல் போகுமா? அதனால்தானே உபநிஷத் அடுத்த வரியிலேயே, ‘நமஸ்தே கணபதயே’...” என்கிறது. அதாவது கணேசனை வணங்குகிறேன் என்று பொருள்.

‘‘சரணடைந்தோருக்கு அரணாக இருக்கும் ஏகதந்தனின் பெருமையை இன்னும் விளக்கிக் கூற வேண்டும் முனிவரே” சீடர்கள் கை கூப்பிய படியே வேண்ட முனிவர் விளக்க ஆரம்பித்தார். ‘‘திருஞான சம்பந்தர் மதுரையில் சமணர்களோடு வாதம் செய்தார். வாதத்தின் ஒரு அங்கமாக தான் எழுதிய வேத சாரமான பாடலை சம்பந்தர், வைகையின் நீரோட்டத்தில் விட்டார். அவர் எழுதிய பாடல் நீரால் அடித்துச் செல்லப்படாமல், நீரோட்டத்திற்கு எதிர் திசையில் சென்று வெற்றியை நிலைநாட்டியது.

அப்போது பரமேஸ்வரன் வேத சாரமான சம்பந்தரின் பாடலை வைகையிலிருந்து எடுத்து வருமாறு விநாயகருக்கு ஆணை இட்டார். விநாயகரும் அதை செவ்வனே முடித்துவிட்டு ஈசனிடம் வந்து ‘‘கைலாசத்தில் அனேக பூத கணங்கள் இருக்க, ஏட்டை எடுக்க என்னை அனுப்பியது ஏன்?’’ என்று பரமனை கேட்டார். அதற்கு ஈசன் “தத் த்வமஸி” என்றாராம். அதாவது வேத ருபனான நீ ( விநாயகர்) தான் வேதசாரமான பாடலை எடுத்து வர வேண்டும் என்று பொருள். (சம்பந்தரின் பாடலை மீட்டு வந்த விநாயகரை இன்றும் திரு ஏடகம் என்னும் திருத்தலத்தில் தரிசிக்கலாம்.) இப்படி ஈசனாலேயே வேதத்தின் பொருளாக அங்கீகரிக்கப்பட்டவர் அவர்.

கண்ணன், வசுதேவர் - தேவகிக்கு மகனாகப் பிறந்தார். ஆனால் நந்தகோபரின் மகனாக வளர்ந்தார். சிறையில் இருந்த வசுதேவரும் தேவகியும் கம்சனால் தன் மகனுக்கு எந்தத் தீங்கும் நேரக்கூடாது என்று வருந்தினர். கண்ணனை துயர் நெருங்காது காக்கும் படி விநாயகனை வேண்டி சிறையில் இருந்தபடியே பூஜித்தார்கள். (விடமடசு வேலை - திருப்புகழ்). அவர்கள் பக்திக்குக் கட்டுப்பட்டு கண்ணனை, கண்ணின் மணிபோல கணேசர் காத்தார் என்று சொல்லவும் வேண்டுமா? ஆக, மொத்தத்தில் உலகை காக்கும் மாயவனை காத்த பெருமைக ணபதியை சேரும். எனவே, அவர்தான் உலகை காக்கிறார் என்பதில் என்ன பிழை.?

உலகில் தீயவற்றை அழிக்கும் பரமேஸ்வரன் திரிபுர அசுரர்களை அழிக்க அழகிய தேர் ஏறிச் சென்ற போது, அதன் அச்சை, லீலையாக முறித்து தனக்குக் கிடைக்க வேண்டிய முதல் மரியாதையை கேட்டு வாங்கிக் கொண்டார். (கைதல நிறை கனி - திருப்புகழ், விநாயக புராணம்) பரமேஸ்வரனே அவரடி பணிந்த பிறகு அவரை உலகை அழிப்பவர் என்பதில் குற்றமில்லை. ஆகவே, உபநிஷத் ‘‘த்வமேவ கேவலம் கர்தாஸி, தர்தாஸி, ஹர்தாஸி” விநாயகனை உலகை படைத்து காத்து அழிப்பவன் என்கிறது.

“சுவாமி இந்த கணேசரின் வடிவம் எத்தகையது?” மாணவர் கூட்டத்திலிருந்து சரியான ஒரு கேள்வி வந்தது. “ நீங்கள் இவ்வாறு கேட்பீர்கள் என்று உபநிஷத் அறிந்திருக்கிறது. அதனால் தான் அடுத்த வரியில் இருந்து அவனது உருவத்தை பற்றிய விளக்கம் வருகிறது. சொல்கிறேன் கேளுங்கள்.” கணாதர் மாணவனின் கேள்வியை பாராட்டிய படியே உபநிஷத் வாக்கியங்களை விளக்க ஆரம்பித்தார். “ அந்த கணேசன் வாக்காகவும், அதன் பொருளாகவும் இருக்கிறான். ( வாக்மய... சின்மய) அவனது தந்தை ஈசன், சொல்லின் வடிவாகவும் தாய்பார்வதி அதன் பொருளாகவும் இருப்பதாக அனைத்து புராணங்களும் சொல்கிறது.

காளிதாசனும் சொல்கிறான். இப்படி சொல்லாகவும் பொருளாகவும் இருக்கும் பார்வதி பரமேஸ்வரன் அன்பாக ஒருவரை ஒருவர் நோக்கிய போது உருவானவர் இந்த கணேசர். (காமேஸ்வர முகா லோக கல்பித ஸ்ரீ கணேஸ்வரா - லலிதா ஸஹஸ்ரநாமம்) இப்படி சொல்லும் பொருளும் சேர்ந்தபோது தோன்றிய கணேசரை சொல்லாகவும் பொருளாகவும் வேதங்கள் வர்ணிப்பது சாலச் சிறந்தது. சொல்லின் வடிவத்தில் இருக்கும் விநாயகர், ஆனந்த வடிவினனாக இருக்கிறார் என்கிறது உபநிஷத்.

“ஆனால் குரு தேவா! இவ்வளவு மகிமை வாய்ந்த கணபதியை, மண்ணில் உருவம் செய்தா வழிபட வேண்டும்?” மாணவனின் குரலில் வருத்தம் த்வனித்தது.  ‘‘மாணவர்களே! நான் உங்களுக்கு தைத்ரீய உபநிஷத் பாடம் நடத்தியது நினைவில் உள்ளதா?. அதில் பர பிரம்மத்திடமிருந்து முதலில் தோன்றியது ஆகாயம் என்றும். அதிலிருந்து வாயு அதிலிருந்து அக்னி அதிலிருந்து நீர் அதிலிருந்து மண் தோன்றியதென்று கூறியிருந்தேன். (ஆகாஷாத் வாயு:....) இறுதியில் தோன்றிய மண்ணிடம் மட்டுமே , சப்த ஸ்பர்ச ரூப ரசம் கந்தம், என்ற ஐந்து குணங்களும் இருக்கிறது. ஆகவே, மண்ணில் அனைத்து பூதங்களும் அடங்கியிருக்கிறது என்று சொல்லலாம். அதனால் தான் மண்ணால் விநாயகர் உருவம் செய்து அதை வழிபடுகிறோம். ஏனெனில் அந்த கணேசர் பஞ்ச பூத வடிவத்தில் இருப்பவர். இதை உபநிஷத் ஆணித்தரமாக சொல்கிறது.

இப்படி பஞ்ச பூத வடிவினரான கணேசர் மூலாதாரத்தில் வீற்றிருக்கிறார் என்கிறது உபநிஷதம். ‘‘த்வம் மூலாதார ஸ்திதோசி நித்யம்”. உடலில் இருக்கும் ஏழு ஆதார சக்கரங்களில் மூலாதாரத்தில் இருப்பவர் விநாயகர் என்று பொருள். இந்த சக்கரத்திற்கு அதி தேவதை இந்திரன். இந்த இந்திரன் ஒரு முறை கஜமுகாசுரனால் வெல்லப்பட்டான். தனது சபைக்கு தினமும் சென்று தோப்புக்கரணம் போட வேண்டும் என்று அசுரன் இந்திரனுக்கு ஆணையிட்டான். இந்திரன் இந்த தண்டனையால் வெட்கி விநாயகரை சரண் புகுந்தான். அவர் கஜமுகாசுரனை சம்ஹரித்து இந்திரனைக் காத்தார்.

 இந்திரன் இதனால் பேருவகை அடைந்து விநாயகர் சந்நதியில் தோப்புக்கரணம் போட்டான். அன்று முதல் தான் விநாயகரை தோப்புக்கரணம் செய்து வணங்கும் மரபு ஏற்பட்டது (விநாயக புராணம்). இப்படி மூலாதாரத்திற்கு அதிபதியான இந்திரனே, பூஜித்த பெரும் தேவன் நம் கணேசர். அவரை சரண் புகுந்தால் குண்டலினி ரூபத்தில் இருக்கும் ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் சேர்த்து வைப்பார் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. அதைத்தானே வள்ளி நாச்சியாரின் திருமணத்தில் செய்தார்.’’ பெரிய பதிலை சொல்லி நிறுத்தினார், கணாத முனிவர்.

 ‘‘சுவாமி அந்த பரம்பொருளை வணங்க சிறந்த மந்திரம் எது.? அந்த மந்திரத்தின் பொருள் என்ன?’’ ஞானம் பெரும் வேட்கையில் ஒரு மாணவன் கேட்டான். கணாதர் சிரித்துக் கொண்டே பதில் சொல்ல ஆரம்பித்தார்.
‘‘ஓம் என்னும் பிரணவத்தின் ரூபமாக விளங்கும் விநாயகர் “ கம்” என்னும் மந்திரத்தால் அறியப்படுகிறார். இந்த கம் என்ற இரண்டெழுத்தில் பெரும் பொருள் புதைந்திருக்கிறது. ஆம் “க்” என்ற சொல் நடப்பன இருப்பன கிடப்பன பறப்பன ஓடுவன நீந்துவன இப்படி அனைத்து ஜீவராசிகளையும் குறிக்கும்.

“அ” என்ற சொல்லில் காக்கும் தெய்வமான நாரணன் வசிப்பதாக அவனே சொல்கிறான்.(அக்ஷராணாம் அகாரோஸ்மி - பகவத் கீதை) எனவே “அ” என்ற எழுத்து காப்பதை குறிக்கும். கணேசர் அனைத்தையும் காக்கும் உயர் திரு தெய்வம் என்பதையே இந்த அவரது மூல மந்திரம் சொல்கிறது. ( கனாதீதம்.... கணபதிர் தேவதா) இந்த கம் என்னும் மந்திரத்தால் அந்த ஏக தந்தனை த்யானியுங்கள். அதுவே முக்திக்கு வழி என்று உபநிஷத் போதிக்கிறது.

“ஏக தந்தாய வித்மஹே வக்ரதுண்டாய தீமஹி தன்னோ தந்திப் பிரசோதயாத்” என்ற அவரது காயத்ரி மந்திரம் இதையே உபதேசிக்கிறது.

இதில், ஒற்றைக் கொம்புடையவன் என்று பொருள் படும் நாமம் இரண்டு முறை வருகிறது. ( ஏகதந்த, தந்தி) ஏன் அவரது ஒற்றை கொம்பிற்க்கு இவ்வளவு மகத்துவம் என்றால், யானைகள் தங்களின் தந்தத்தை மிகவும் பெருமையாக எண்ணும்.இது ஆணவத்தையும் உடலின் மீது வைத்துள்ள ஆசையையும் குறிக்கும். ஒருமனிதன் ஆணவத்தையும் உடலாசையையும் விட்ட பிறகு தான் அவனுக்கு ஞானம் கை கூடும். என்ற தத்துவத்தையே அவரது ஒற்றைத் தந்தம் உணர்த்துகிறது.  “ புரியவில்லையே சுவாமி” ஒரே குரலில் சீடர்கள் அவரை இடையில் வெட்டினார்கள். அதைக் கேட்டு மெல்ல புன்னகைத்தார் முனிவர்.

“ விளக்குகிறேன் கேளுங்கள். கணேசர் தன் தந்தத்தை இழந்து எழுதியது எதை? வேத சாராமான மஹா பாரதத்தை. ஆகவே ஞானம் அடைய - உடலாசையையும் ஆணவத்தையும் அழிக்க வேண்டும். இதுவே அவர் உணர்த்தும் பெரும் தத்துவம். புரிகிறதா? அதனால்தான் அவரது தியாகத்தை குறிக்க அவரது தந்தத்தைப் பற்றி இருமுறை அவரது காயத்ரி சொல்கிறது. (பாரதத்தை மேரு வெளி வெளி திகழ் - திருப்புகழ்) என்று முனிவர் அழகாக உபதேசிக்கும்போது அந்த குருகுலமே செந்நிற ஜோதியால் நிரம்பியது.

அந்த ஒளிப் பிழம்பின் மத்தியில் மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்தார் விநாயகர். அவரது கைகளில் பாசமும் அங்குசமும் மின்னியது. அங்குசம் பணிந்தவர்களின் குரோதம் என்னும் மலத்தைப் நீக்குகிறது. பாசம் பந்த பாசங்களிலிருந்து முக்தி வழங்குகிறது. வலது கையை அபய ஹஸ்தமாகக் கொண்டு காட்சி தந்தார். அது, அபயம் என்றவர்களுக்கு இல்லை பயம் என்று குறிப்பால் உணர்த்தியது.(ஏகதந்தம்.... நம:). முனிவரும் அவரது மாணவர்களும் அந்த பரம்பொருளை வணங்கி வலம் வந்து வழிபட்டார்கள். வேத சாரமான வேழ முகத்தான் பேச ஆரம்பித்தார்.

‘‘கணாத ரிஷியே! என் சம்பந்தமாக வேத சாரமாக உன்னால் உரைக்கப்பட்ட இந்த உபநிஷத் கணபதி அதர்வ சீர்ஷ உபநிஷத்” என்று இனி வழங்கப் படும். அதர்வ சீர்ஷ மகரிஷி இதை உணர்ந்து, இதன்படி நடந்து, என்னை வந்து சேருவார். அவரே மற்ற அனைவருக்கும் ஒரு முன்னுதாரணமாக அமைவார். இந்த உபநிஷத்தை மூன்று வேளையிலும் ஒருவன் ஜபித்தால், அவன் அனைத்து துக்கத்திலிருந்தும் உடனே விடுபடுவான். வாழி நீ! வளர்க உம் வேதத் தொண்டு.” என்று கூறி அனைவருக்கும் தனது கண்களால் ஆசி வழங்கிய படியே மறைந்தது அந்த மூல முதற் பொருள். அதைக் கண்டு வியந்த அனைவரும் ஜெய கோஷம் செய்தார்கள்.

வேதத்தின் பொருளை விளக்க வந்த உபநிஷத்களில் ஒன்றான இந்த உபநிஷத் விநாயக பக்தர்களால் கணபதி உபநிஷத் என்றே அழைக்கப் படுகிறது. இதில் கூறப்படும் அவரது பெருமையை ‘‘ கணேச வித்யா ’’ என்றே அழைக்கிறார்கள். வித்யைகளை போதிக்கும் இந்த உபநிஷத்துகளை ஒதுக்க கூடாது. காரணம் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜர் ‘‘ ராம ரஹஸ்யோபநிஷத் ’’ என்னும் உபநிஷத்தின்படி நடந்தே ராம தரிசனம் பெற்றார். ஆகவே, வேத வழி கூறும் வித்யையினால் விநாயகனின் அருள் பெறுவோம்.

ஜி.மகேஷ்

Tags :
× RELATED ALP ஜோதிடம் ஓர் அறிமுகம்