×

ஞானக் கனலாகி நின்ற அருணாசலம்

*கார்த்திகை தீபம் : 10  -12 - 2019

சகலமும் அறிந்த பார்வதி தேவியின் முன்பு அருணாசல மகாத்மியத்தை சொல்கிறோம் என்கிற சந்தோஷமும், இதைச் சொல்ல வைப்பதும் அவளே என்கிற எண்ணத்தோடும் கௌதம மகரிஷி பேசத் தொடங்கினார்.
 
‘‘அருணாசலம் என்பது ஞானக் கனல். அறிந்தும் அறியாமலும், மகிமையை உணர்ந்தும் உணராமலும், போக வாழ்க்கையையே வேண்டிக்கொண்டு வந்து வலம் வந்தாலும், விளையாட்டாகவே இதை வலம் வந்தாலும் சரிதான் அவர்கள் தன்னை அறிதல் என்கிற உச்சபட்சமான ஆத்மிகமான விஷயத்தை அறிந்து கொள்வார்கள். இந்த க்ஷேத்ரம் அப்படித்தான் செய்யும். இது ஈசனின் ஆணை. உலகத்திலுள்ள எந்தவொரு விருத்தியும் இந்த தன்மை என்ற சொரூபத்திலிருந்து தூர விலக்கி வைக்கும். அதாவது தன்மை என்கிற ஞான உணர்விலிருந்து விலக்கியே வைக்கும். ஆனால், இதோ உங்கள் எதிரே விருத்தியடைந்து நிற்கும் இந்த அருணாசல விருத்தியானது உங்கள் தன்மையிலிருந்து தூர விலக்காது.

அதாவது தூர விலக்காத துவைத விருத்தியாகும். அதாவது அத்வைத பொருளாகிய ஆத்ம வஸ்துவே அருணாசலமாகும். உனக்குள் இருக்கும் ஆத்மா வெளியே அருணாசலமாக தோன்றி உன்னை உள்ளுக்குள் செலுத்தும் சூட்சுமமிக்க விருத்தியாகும். அதனால், இந்த விருத்தியான அதாவது ஊனக் கண்களின் எதிரே தோன்றியுள்ள, விருத்தி ரூபத்திலுள்ள அருணாசலத்தை நினையுங்கள். அதையே வலம் வாருங்கள். காலக்கிரமத்தில் அதுவே தன்னோடு சேர்த்துக் கொள்ளும். ஒரு பசுவானது நடப்பட்ட முளைக் குச்சியை சுற்றிச் சுற்றி வரும்போது முளை குச்சியின் அருகே வந்து எப்படி நகர முடியாது நிற்குமோ, அதுபோல அருணாசலத்தை வலம் வர வலம் வர உங்கள் மனம் நகராமல் அருணாசலத்தோடு ஒட்டிக் கொண்டு விடும். அப்புறமென்ன? அதுவே நீங்கள் ஆவீர்கள். ஏற்கனவே அதுவாகவே நீங்கள் இருப்பதையும் உணர்வீர்கள். அங்கு துவைதம் எங்குள்ளது. ஏகமான பிரம்மம் மட்டும் உண்டு. அவ்வளவுதான்.’’
 
பார்வதி தேவி இமைகள் மூடாது நெடுநெடுவென்றிருக்கும் அருணாசலத்தை மீண்டும் பார்த்தாள். அருணாசல மகாத்மியம் என்பது இதுதானா? என்று பேச்சற்று மளெனமாக இருந்தாள்.
 
‘‘ரகசியம்... பரம ரகசியம்... என்கிறார்களே. அதுதானா இது. அருணாசலத்தின் ரகசியம் என்பது இதுதானா.’’ ஒரு இளம் வயது இல்லறச் சீடர் வினவினார்.
 
‘‘இல்லை. ரகசியமே இங்கு இல்லை. உள்ளுக்குள் ஆத்மா உள்ளது. அதுதான் நீங்கள். அதுவே உங்களின் சொரூபம் என்பதுதான் சாதாரண மாயையில் உள்ளவர்களுக்கு ரகசியம். ஆனால், அதே ஆத்மா, ஈசன், பரம்பொருள் இங்கு ரகசியமாக இல்லாது வெளிப்படையாகவே மலை வடிவில் எழுந்தருளியிருக்கிறார். அதை நினைக்க வேண்டும் என்பதில் என்ன கஷ்டம் இருக்கிறது. அதை வலம் வாருங்கள் என்பதில் என்ன சிரமம் வந்துவிடப் போகிறது. அருணாசலத்தை வலம் வருதலும், நீங்கள் உள்ளுக்குள் உங்களின் சொரூபத்தை நோக்கி நகர்தலும் ஒன்றே. நான் யார் என்று ஆராயப்புகும் ஞான விசார முயற்சிகளில் ஐயம் ஏற்பட்டால் அருணாசலத்தை வலம் வாருங்கள். அருணாசலம் எனும் வார்த்தையே மகாவாக்கியம். அந்த நாமமே அகத்தையே அதாவது அகந்தையை வேரோடு அறுக்கவல்லது.

அதற்கு இங்கு வாழும், இனி வரப்போகும் ஞானிகளே சாட்சியாகும். எனவே, அருணாசல மலையின் மகிமையை தெரிந்து கொண்டு வருதல் என்பது சிரத்தையை அதிகமாக்கும். சிந்தையின் ஏகாகிரகத்தை இன்னும் கூர்மையாக்கும்.  பக்தியையும் புஷ்டியாக்கும். எப்பேற்பட்ட வஸ்து இது? பெறுதற்கும் அரிதான பேறான ஞானத்தை வழங்கவல்லதான அருட்பெரும் ஆற்றலல்லவா இது என்பதைப் புரிந்துகொண்டு வரும்போது இன்னும் நெருங்கிச் சென்று விடலாமே? உன்னை அறிவதற்கு நான் யார் என்று தன்னை சமர்ப்பிக்கும் சரணாகதி இங்கு எளிதாக சாத்தியமாகி விடுமே?’’
 
‘‘அருணாசல கிரிவலம் வருவதற்கும், தியானம் முதலிய ஆன்மிக சாதனைகளை மேற்கொண்டு செய்வதற்கும் ஏதேனும் தொடர்புண்டா, மகரிஷி அவர்களே.’’ ஹடயோகி ஒருவர் கௌதமரை பணிந்து கேட்டார்.
 
‘‘தியானத்தின்போது உங்களுக்குள் ஏற்படும் போராட்டங்கள் அதிகமானது. நீங்கள் கொஞ்சம் அயர்ந்தாலும் மனம் ஓரிடத்தில் நிற்காது ஓடுவதை கவனிப்பீர்கள். உங்களின் சொரூபத்தை நாடிய உங்களின் முயற்சியில் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்திருப்பீர்கள். ஆனால், கிரிவலம் செய்யும்போது நாளாவட்டத்தில் பெரும் முயற்சியின்றியே உங்களின் மனம் அடங்குவதை உணருவீர்கள். அவ்வளவு ஏன், உலகாயதமான பிரார்த்தனைகளுக்குக்கூட கிரிவலம் வருவோர் போகப்போக மனம் பக்குவம்பெற்று வைராக்கியத்தையும், தன்னில் மூழ்கும் விவேகத்தையும் பெறுவார்கள். இது எப்படியெனில் ஈர விறகானது காய்ந்து காய்ந்து ஒருநாள் சட்டென்று பற்றிக் கொள்வதுபோல உலக வாசனைகளில் மிக அதிகமாக ஊறிய மனம் கிரி பிரதட்சணம் வரவர தானே தீப்பற்றி எரிகிறது.

ஒருமுறை கிரிவலம் வருவதாலேயே மீண்டும் மீண்டும் அந்த மலை ஈர்த்து தன்னை மீண்டும் வலம் வரச் செய்யும் மகத்துவம் வாய்ந்தது. சத்சங்கமாக நாம் இங்கு சேர்ந்திருந்து உபதேசங்களை பெறுகிறோம். குருவின் அருளும், உபதேசங்களும் ஒருவருக்குள் புகுந்து ஆத்மீகமான வாழ்க்கையில் ஒருவரை முன்னே செலுத்துகின்றன. அப்படி வெளிப்புறமாக சத்சங்கம் அமையாதவர்களுக்கும், மானிட உருவில் குரு இவர்தான் என்று தெரியாதவர்களுக்கும் இந்த அருணாசலமே குருவாகவும், சத்சங்கமாக செயல்பட்டு அவர்களை நற்பாதையில் செலுத்திக் கொண்டபடியே செல்லும்.’’
 
‘‘ஏன், இந்த மலை ரூபத்தில் சிவபெருமான் இருக்க வேண்டும்.’’ வேதமறிந்த அந்தணர் கைகூப்பி கேட்டார்.
 
‘‘நீங்கள் உங்களை இப்போது எப்படி உணர்கிறீர்கள்.’’ கௌதமர் கூர்ந்து பார்த்துக் கேட்டார்.
 
‘‘எப்படி எனில்...’’
 
‘‘உடலாகவா. மனதாகவா. புத்தி யாகவா...’’
 
‘‘நான் இந்த மூன்றுமாக என்னை சேர்த்துக் கொண்டு இந்த உடலே நான் என்று நிச்சயித்த உணர்வோடு இருக்கிறேன்.’’
 
‘‘அதாவது, நான் எனில் இந்த உடம்பைத்தான் நீங்கள் காட்டுகிறீர்கள். உடலோடுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அப்படித்தானே.’’
 
‘‘ஆமாம், மிக நிச்சயமாய் நான் அப்படித்தான் உணர்கிறேன்.’’
 
‘‘இன்னும் கூர்மையாக ஒன்று சொல்லட்டுமா. நீங்கள் உங்கள் உடலைத்தான் நான் என்று அபிமானிக்கிறீர்கள் அல்லவா’’
 
‘‘ஆமாம்... ஆமாம்...’’ என்று அந்தக் கேள்விக்கு அங்கிருப்போர் அனைவருமே சேர்ந்து தலையசைத்தனர்.
 
‘‘அப்படியா... அதுபோல அந்த சாட்சாத் சிவபெருமான், நாம் நம் உடலை நான் என்று அபிமானிப்பதுபோல இந்த அருணாசல மலையை நான் என்று அபிமானிக்கிறார். ஞானமே உருகொண்ட ஈசன், தூல உருகொண்ட மலையாக தன்னையே இந்த மலையாக அபிமானித்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன். இந்த மலை வேறல்ல. சிவம் வேறல்ல. அருணாசல மலையே சிவபெருமான். சிவபெருமானே அருணாசல மலையாக வீற்றிருக்கிறார். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம். உங்களின் ஆத்மாவை வலம் வந்திருக்கிறீர்களா. ஆத்மப் பிரதட்சணம் செய்திருக்கிறீர்களா. கவலைப்படாதீர்கள். இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள். இந்த கிரியை வலம் வருதலே கிருபையைப் பெறும் வழி. அசலமான மலையை சுற்றும்போது மனம் நிச்யலமாக மாறும் பாருங்கள். சலசலத்துக் கொண்டிருக்கும் மனதை அசலமாக்கும் மலை இதுவேயாகும். ஆதியந்தமற்ற அந்த ஆத்மா அருணாசலமாக இங்கு எழுந்தருளியுள்ளது’’ என்று சொல்லிவிட்டு கண்களில் நீர்பொங்க மௌனமானார்.

எல்லோரும் வியப்போடு கௌதமரையே பார்த்தபடி இருந்தனர். எப்பேற்பட்ட விஷயமாக இந்த மலை விளங்குகிறது. ஏதோ எல்லோரும் கிரிவலம் செல்கிறார்களே என்று நானும் சென்றேன். ஆனால், இது இவ்வளவு பெரிய விஷயமாக இருக்கிறதே. மலை விழுங்கி மகாதேவன் என்பதைவிட மகாதேவனையே விழுங்கி வீற்றிருக்கும் மலையாகவே அல்லவா இது இருக்கிறது. வேத, வேதாந்தங்களும் அறுதியிட்டு கூறும் வஸ்து இங்கு இப்படி எழுந்தருளியிருக்கிறதே. கிட்டும் தூரத்திலிருந்து எட்டிய தூரம் இருப்பவர்கள் வரை எல்லோருமே இதை தரிசிக்கலாமே.
 
கௌதம மகரிஷி பார்வதிதேவியை முன்னிட்டுக் கொண்டு பேசியதைக் கேட்ட அனைவரும் தங்களை மறந்து கிடந்தனர். இன்னும் சொல்ல மாட்டீர்களா... கேட்கும்போதே அமுத ஊற்று பொங்குகிறதே என்று வியப்பும் ஏக்கமும் மேலிட்டன. அங்கிருப்போர் அனைவரின் இருதயமும் கௌதமமகரிஷி என்கிற குருவின் வாக்குகளால் ஆன அருள் வெள்ளத்தால் நிறைந்தது.
 
‘‘இன்னும் ஒரு பெருஞ்சிறப்பை தாங்கள் கூற வேண்டுகிறேன். ஸ்மரணாத் அருணாசலம்... என்கிறார்களே. அதாவது நினைத்தாலே முக்தி கிடைக்கும் என்கிறார்களே. அது எப்படி?’’
 
‘‘ஆஹா... ஸ்மரணாத் அருணாசலம். அருணாசலத்தை நினைத்தாலே முக்தி. திருவாரூர் என்கிற ஆரூரில் பிறக்க முக்தி. ஆகவே, அந்த தலத்தில் பிறப்பது என்பது நம்முடைய முந்தைய கர்மவினைப்படி ஆகும். சிதம்பரத்தை தரிசிப்பது என்பது பார்வையற்றோருக்கு எப்படி சாத்தியம்? சிதம்பரத்தை அடைந்து தரிசிக்காமலேயே ஒருவருடைய பிறப்பு அமைந்து விடலாமல்லவா? அதுபோலவே காசியில் சென்று மரிப்பது என்பது எல்லோருக்கும் சாத்தியமானதுதானா? ஆனால், அருணாசலம் எனும் திருப்பெயரை நினைப்பதில் என்ன தடை உள்ளது. அருணாசலம் என்பதே ஆத்ம சொரூபம்தான். உங்கள் எல்லோருக்குள்ளும் நான் இருக்கிறேன் என்கிற தூய உணர்வே அருணாசலம். அதனோடு நீங்கள் உடலையும், இன்னாராக இருக்கிறேன் என்கிறபடியாக ஆயிரம் விஷயங்களை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.

இன்னாராக என்பதே அகங்காரம். எனவேதான், இந்த இன்னாராக இருக்கும் இந்த நான் யார் என்று விசாரித்தால் அகங்காரம் பதுங்கும். அதுமட்டுமில்லாது தன் பிறப்பிடத்தை நோக்கி நகரும். இது ஞானயோகம். நம் அகத்திலே அருணாசலம் என்று எண்ணியபடி இருந்தாலே அது உங்களின் அகந்தையின் வேரையே அறுத்துப்போடும். ஆகவே, அருணாசலமும் ஆத்மாவும் வேறுவேறு அல்ல. ஏதோ ஒருகட்டத்தில் உள்ளிருக்கும் அருணாசலம் உங்களை கபளீகரம் செய்யும். இங்கு ஸ்மரணம் என்பது இடையறாத ஒரு ஒழுக்கை குறிப்பது. நீர் தாரை போன்ற தொடர்ந்த அருணாசல சிந்தனை. அது நிச்சயம் முக்திப் பதத்தில் சேர்க்கும். எனவேதான், இது மிக எளிதானதாக சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. இன்னொரு கோணத்தில் பார்த்தால், நான் என்கிற அகந்தையான ஜீவத்துவத்தை எல்லோரும் அழிக்கவே விரும்புகிறார்கள். ஆத்மீகப் பார்வையில் செல்பவர்கள் இந்த அகந்தையை என்ன செய்வதென்று புரியாது திகைப்பார்கள்.

ஆனால், இந்த நான் எனும் அகந்தை தானாகச் சென்று ஆத்மாவைச் சென்று அடைந்து விட முடியாது. தானே தன்னை அழித்துக்  கொள்ளவும் முடியாத இயலாமையோடு கூடியது. அப்போதுதான் முதலில் இந்த அருணாசலம் எனும் நாமமும், அதனூடாக அருளும் உடனடியாக வருகிறது. இதை நாம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் நிகழும் அதிசயம். எனவே, அருணாசலம் எனும் இந்த மலை நான் எனும் அகந்தையை உள்ளுக்குள் தள்ளியும், உள்ளிருக்கும் அருணாசல ஆத்மா அதை கவர்ந்திழுக்கவும் செய்யும். இதுவே அருணாசல குரு செய்யும் ஆற்புதம் ஆகும்.’’ கௌதம மகரிஷி சொல்லி முடித்தவுடன் பார்வதி தேவி மெல்ல எழுந்தாள். அங்கிருக்கும் வேதியர்கள், முனிவர்கள், ரிஷிகள், யோகிகள் எல்லோரும் எழுந்தனர். பார்வதி தேவி மெல்லிய குரலில் ‘‘சிவோஹம்... சிவோஹம்... சிவம் அஹம்... சிவம் அஹம்... அஹமே சிவம்... அஹமே சிவம்’’ என்றாள். அனைவரும் மீண்டும் அதையே சொன்னார்கள்.

* கிருஷ்ணா

Tags : Arunachalam ,wisdom canal ,
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மீது வழக்கு