சூரிய, சந்திர பிரபைகளில் ஜொலித்திடும் சர்வேஸ்வரன்

உலகிற்கு ஒளி வழங்கும் தேவர்களான சூரியனையும், சந்திரனையும் அன்பர்கள் கண்கண்ட தெய்வங்களாகப் போற்றுகின்றனர். இரண்டும் வட்ட வடிவமானவை.  வட்ட வடிவங்களை மண்டலம் என்பர். அதையொட்டிச் சூரிய, சந்திரைச் சூர்ய மண்டலம் என்றும், சந்திரமண்டலம் என்றும் அழைக்கின்றனர். தென்னகத்து  ஆலயங்களில் சிவபெருமானைச் சூர்ய பிறை, சந்திர பிறை ஆகிய வாகனங்களில் அமர்த்தி உலாவரச் செய்கின்றனர்.

மேலும், சூரியவட்டம், சந்திரவட்டம் என்றும் வழங்குகின்றனர். சிவபெருமான் வீற்றிருக்கும் கமலாசனத்தில் ஏராளமான சூர்ய, சந்திர, அக்னி மண்டலங்கள்  இருக்கின்றன என்றும், அவை ஒவ்வொன்றிலும் முறையே பிரம்மா, விஷ்ணு, தேவர்கள், அக்னி பகவான்கள் வீற்றிருப்பதாக பூஜா பத்ததி நூல்கள் கூறுகின்றன.  சிவபெருமானின் அம்சமே சூரிய மண்டலத்தின் மத்தியில் பிரம்மனாகவும், சந்திர மண்டலத்தின் நடுவே திருமாலாகவும் அக்னி மண்டலத்தின் நடுவே  உருத்திரனாகவும் வீற்றிருந்து முறையே படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய முத்தொழில்களையும் நடத்தி வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

இந்த மூன்று மண்டலங்களுக்கு நடுவிலேயும் சிவபெருமான் எண் கரங்களுடன் உமையை இடப்பாகம் கொண்டு அர்த்தநாரியாகச் சூலத்தைச் சுழற்றி  ஆடுகின்றான். இவை முறையே சௌர தாண்டவம். அமிர்த தாண்டவம், அக்னி தாண்டவம் என்று அழைக்கப்படுகின்றன. இம்மூன்று மண்டலங்களுக்கு நடுவே  இறைவன் பார்வதியுடன் வீற்றிருந்தவாறும், நடனமாடியவாறும் காட்சியளித்ததைப் புராணங்கள் விரிவாகவும், சிறப்பாகவும் கூறுகின்றன.

சிவபெருமான் ஆதியில் சூரிய மண்டலத்தின் நடுவில் ஆதிப்பிரம்மனாக வீற்றிருந்து உலகத்தைப் படைத்தையும், அதன் நடுவில் நடனமாடியவாறு  காட்சியளித்ததையும், நினைவு கூரும் வகையில் அவரைச் சூரிய மண்டலத்தின் நடுவே சிவபெருமானை அமர்த்தி உலாவரச் செய்கின்றனர். இந்தச் சூரியமண்டல  வாகனம் பெரிய பட்டையான வட்டமாக, சக்கரம் போல் இருக்கிறது. பட்டைப் பகுதியில் தீச்சுடர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மண்டலத்தினை ( வட்டத்தை)  இரண்டு புறத்திலும் இரண்டு யாளிகள் தாங்குகின்றன. சூரியவட்டத்தின் நடுவே தாமரை ஆசனம் பீடமாக அமைக்கப்பட்டுள்ளது.

சந்திரப் பிறை

பெரும்பாலும் சந்திரப்பிறை வாகனத்தை மூன்றாம் பிறை வடிவில் அமைக்காமல் முழு வட்டமாகவே அமைக்கின்றனர். பெரும் அகன்ற வட்டமான வளையமாக  அமைப்பதே நடைமுறையில் இருக்கிறது. வட்டமான அகன்ற பரப்பில் முல்லைக் கொடிகள் நட்சத்திர வடிவங்கள் ஆகியன அமைக்கப்படுகின்றன. சந்திர  பிறையின் நடுவில் விரிந்த அல்லி மலர் போன்ற பீடம் அமைக்கப்பட்டுள்ளது. பீடத்தின் முன்புறம் ஒரு பெண் அதனைச் செலுத்தும் கோலத்தில்  காணப்படுகிறாள். இந்த சாரதிப் பெண்ணைக் கிருத்திகாதேவி என்று கூறுகின்றனர். சிலர் அப்சரப் பெண் என்கின்றனர்.

இவள் அழகிய தோற்றம் கொண்டவளாக இருக்கின்றாள். பீடத்தின் முன்புறம் பத்து மான்கள் சந்திரப்பிறையை இழுத்துச் செல்லும் கோலத்தில் உள்ளன. பாய்ந்து  வரும் இந்தக் கலைமான்களின் கூட்டம் பார்க்கப் பரவசமாக இருக்கிறது. சந்திர மண்டலத்தில் பவனி வரும் பெருமானைத் தரிசிப்பவர்கள் அழகிய உடலையும்  அமைதியான மன நிலையையும் பெறுவர். இல்லறம் செழித்து இன்பம் பெறுவர். நோயற்ற வாழ்வைப் பெறுவர் என்பது நம்பிக்கையாகும். தொண்டை மண்டலம்,  நடுநாட்டு ஆலயங்களில் பெருந்திருவிழாவின் இரண்டாம் நாள் காலையில் சூரியப் பிரபை வாகனத்திலும், இரவில் சந்திரப் பிரபை வாகனத்திலும் பெருமானை  அமர்த்தி உலாவரச் செய்கின்றனர்.

சோழநாட்டுக் கோயில்களில் இரண்டாம் நாள் இரவு உலாவில் சிவபெருமானைச் சூரிய பிறையிலும், அம்பிகையைச் சந்திர பிறையிலும் அமர்த்தி வீதியுலா  காண்கின்றனர். ( சிவபெருமானைச் சூரிய பிறையிலும், அம்பிகையை சந்திரப் பிறையிலும் பவனி வரும் வேளையில் சுப்பிரமணியரை அக்னி மண்டலத்தின்  நடுவில் அமர்த்தி உலாவரச் செய்ய வேண்டும் என்பது அன்பர்கள் கருத்தாகும். நடைமுறையில் அக்னி மண்டல வாகனத்தை இப்போது எங்கும் காண  முடியவில்லை.)

சூரிய பிரபைக்குப் பொன் மஞ்சள் நிறம் தீட்டி, அதிலுள்ள ஜ்வாலைகளுக்குச் செந்நிறம் பூசுவது வழக்கம். சந்திர பிறைக்கு வெண்ணிறம் தீட்டி, அதில்  நீலவண்ணத்தில் பூக்களை அமைக்கின்றனர். சூர்யபிரபையைத் தங்க முலாம் பூசியும், சந்திரப்பிரபையை வெள்ளித் தகடு கொண்டு வேய்ந்தும்  அழகுபடுத்துகின்றனர். இந்தத் தகடுகளில் அழகிய பூவேலைப்பாடுகள் அமைக்கப்படுகின்றன. சூரிய மண்டலத்தின் உச்சியில் சூரியனின் முகத்தையும், சந்திர  மண்டலத்தின் உச்சியில் சந்திரனின் முகத்தையும் அமைத்துள்ளனர்.

 - அருண வசந்தன்

Related Stories:

>