கர்ம வினைகளை நீக்கும் பஞ்சலிங்கேஸ்வரர்

காவேரிப்பாக்கம் அருகே அருள்பாலிக்கிறார்

Advertising
Advertising

தொண்டை மண்டலத்தில் முக்கிய தலமான காஞ்சிக்கு அடுத்தபடியாக, சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்கள் அதிகம் அமைந்துள்ள ஊர் திருவேணி சதுர்வேதமங்கலம் என்று அழைக்கக்கூடிய காவேரிப்பாக்கம் ஆகும். 108 வைணவ தலங்களில் மிக முக்கியமாக கருதப்படும் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், திசைமுகம் சேரியில் உள்ள ஸ்ரீ பரமபதநாதர் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள ஐந்து சிவாலயங்கள் மிகவும் பழமையானதும் வேண்டிய வரங்களை அள்ளி தரும் வரப்பிரசாதியாக உள்ளது.

இதில் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி காவேரிப்பாக்கம் பஸ் நிலையத்துக்கு மிக அருகில் அமைந்துள்ளது காமாட்சி அம்பாள் சமேத பஞ்சலிங்கேஸ்வரர் கோயில். இக்கோயில் நுழைவுவாயிலில் விநாயகர் வீறுகொண்டு அமைந்துள்ளார். கருவறையில் பஞ்சலிங்கேஸ்வரர் காட்சி அளிக்கிறார். ேமலும் இங்கு பஞ்சபூத வடிவங்களாக தனித்தனி சந்நதியில் சுவாமி காட்சியளிப்பது தனி சிறப்பு. காமாட்சி அம்பாள் தனி சந்நதியில் அருள்பாலித்து வருகிறார். அனைத்து கோயில்களிலும் பஞ்சலோக சிலையாக நடராஜ பெருமான் வீற்றிருப்பார். ஆனால் இங்கு நடராஜர் கற்சிலையாக தரிசனம் தருகிறார்.

பரதம் கற்றுக்கொள்பவர்கள் இங்கு வந்து நடராஜர் முன் சலங்கை வைத்து பூஜை செய்த பின்னர் அரங்கேற்றம் செய்கின்றனர். இக்கோயில் 12 ராசிக்காரர்களுக்கும் வழிபட உலக பஞ்சபூதத் தலமாக விளங்குகிறது. பஞ்சபூதங்களில் நீருக்கு அதிபதியாக அப்புலிங்கம் உள்ளது. மீனம், கடகம், விருச்சிகம் ஆகிய ராசிக்காரர்கள் அப்புலிங்கத்தை வழிபாடு செய்வது  சிறந்தது. 2வதாக லிங்கம் வாயுலிங்கத்தை மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிக்காரர்களும், 3வதாக அக்னி லிங்கத்தை மேஷம், சிம்மம், தனுஷ், ஆகிய ராசிக்காரர்களும், 4வதாக ப்ருத்விலிங்கத்தை (நிலம்) ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிக்காரர்கள் வழிபடுவது சிறப்பு வாய்ந்தது.

5வது லிங்கம் ஆகாய லிங்கம். ராசி மற்றும் நட்சத்திரம் தெரியாதவர்கள் இந்த லிங்கம் வழிபடுவது நல்லது. பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் (நிலம்), திருவானைக்காவல் (நீர்), காளஹஸ்தி (காற்று), திருவண்ணாமலை (அக்னி), சிதம்பரம் (ஆகாயம்) ஆகிய 5 தலங்களுக்கு சென்று வழிபட்ட பலன்கள் கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மேலும் கடன் தொல்லை, நோய் பிரச்னை, திருமண தடை நீங்கும்.

குழந்தை பாக்கியம் கிட்டும். இந்த கோயிலில் தட்சிணாமூர்த்தி இரண்டு, காமாட்சி அம்மன் இரண்டு, பிரம்மா இரண்டு, சண்டிகேஸ்வரர் இரண்டு, வழித்துணை விநாயகர் மற்றும் நாககணபதி என இரு வடிவங்களாக பக்தர்களுக்கு காட்சி அளித்து வருகின்றனர். இங்கு பிரதோஷம், மாத சிவராத்திரி, மஹா சிவராத்திரி ஆகிய நாட்களில் பஞ்சலிங்கேஸ்வரரை தரிசித்தால் கர்ம வினைகள் நீங்கி பிறவி பயனை அடையலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

Related Stories: