முஹர்ரம் பத்து..!

இஸ்லாமிய வாழ்வியல்

Advertising
Advertising

இஸ்லாமிய நாள்காட்டியில் முஹர்ரம் முதல் மாதம் ஆகும். இந்த மாதத்தின் பத்தாம் நாள் ‘ஆஷுரா’  எனப்படுகிறது. ரமலான் மாத நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்பு நபிகளாரும் தோழர்களும் இந்த ஆஷுரா நோன்பைத்தான் கடைப்பிடித்து வந்தனர்.ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு இந்த முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பை விருப்பத் தேர்வாக நபிகளார் அறிவித்துவிட்டார்.  அந்த நாளில் விரும்புவோர் நோன்பு வைக்கலாம். இல்லையேல் விட்டுவிடலாம்.

இஸ்லாமிய வரலாற்றில் முஹர்ரம் பத்தாம் நாளுக்கு இன்னும் சில முக்கியத்துவங்கள் உண்டு. நூஹ் நபி (நோவா) அவர்களையும் அவரைப் பின்பற்றியவர்களையும் வெள்ளப் பிரளயத்திலிருந்து இறைவன் காப்பாற்றிய நாள் இந்தப் பத்தாம் நாள்தான் என்றும் அதற்கு நன்றி செலுத்தும் வகையில் நூஹ் நபி இந்த நாளில் நோன்பு நோற்றார் என்றும் சொல்லப்படுகிறது. அதே போல் இறைத்தூதர் மூஸாவையும் அவரைப் பின்பற்றிய இஸ்ரேவேலர்களையும் ஃபிர்அவ்ன் எனும் கொடுங்கோல் மன்னனின் படைகளிடமிருந்து இறைவன் காப்பாற்றியநன்னாளும் இந்த முஹர்ரம் பத்தாம்நாள்தான்.

நபிகளார் அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா நகருக்குப் புலம் பெயர்ந்து வந்தபோது மதீனாவில் இருந்த யூதர்கள் இந்த நோன்பை மேற்கொண்டிருந்தனர். “நீங்கள் எதற்காக இந்த நோன்பை வைக்கிறீர்கள்?” என்று விசாரித்த போது, “எங்கள் இறைத்தூதர் மோசே(மூஸா நபி)அவர்களுக்கு வெற்றி கிடைத்த நாள்” என்று யூதர்கள் கூறினர். உடனே நபிகளார், “உங்களை விட மூஸாவுக்கு நாங்கள்தாம் அதிகம் நெருங்கியவர்கள். ஆகவே அடுத்த ஆண்டு முதல் முஹர்ரம் ஒன்பது, பத்து அல்லது பத்து, பதினொன்று ஆகிய இரண்டு நாட்கள் நோன்பு இருப்போம்” என்று கூறினார்.

இந்த நபிமொழியின் அடிப்படையில்தான் உலக முஸ்லிம்கள் இன்றளவும் முஹர்ரம் ஒன்பது, பத்து (அல்லது பத்து, பதினொன்று) நாட்களில் உபரி வழிபாடாக இந்த நோன்பைக் கடைப்பிடித்து வருகிறார்கள்.முஹர்ரம் பத்தாம் நாளில்தான் கர்பலா எனும் இடத்தில் நடைபெற்ற போரில் மாபெரும் இஸ்லாமிய ஆளுமையும் நபிகளாரின் அன்புப் பேரனுமாகிய இமாம் ஹுசைன் அவர்கள்வீரமரணம் அடைந்தார். கிலாஃபத் எனும் ஆட்சிமுறைக்குப் பதிலாக மன்னராட்சி முறை உருவாகத் தொடங்கிய காலகட்டம் அது. இமாம் ஹுசைன் அவர்கள் மன்னராட்சி முறையைக் கடுமையாக எதிர்த்தார். முளையிலேயே கிள்ளி எறிய முயன்றார்.  அதற்காக இறைவழியில் போராடவும் துணிந்தார்.

இமாம் அவர்களின் குறைவான எண்ணிக்கையிலான படையும் யஸீதின் பெரும் படையும் மோதின. இறைத்தூதரின் அன்புக்குரிய பேரன் என்றும் பார்க்காமல் யஸீதின் படை இமாம் ஹுசைன் அவர்களைக் கொடூரமாகக் கொன்றது.கர்பலா போரின் சோக வரலாற்றின் சுருக்கம் இதுதான். இந்தப் பத்தாம் நாளை ஷியா பிரிவினர் சோக நாளாகவே இன்றளவும் கடைப்பிடித்து வருகின்றனர். எப்படிப்பட்ட சோகம் என்றாலும் மூன்று நாளுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக் கூடாது என்பது மார்க்கக் கட்டளை. ஆனால் ஷியாக்கள் பல நூறு ஆண்டுகளாக இந்தத் துக்கத்தைக் கடைப்பிடித்து வருகிறார்கள். தங்களின் துயரத்தை வெளிப்படுத்த திறந்த மேனியில் தங்களைத் தாங்களே சாட்டையால் அடித்து வருத்திக் கொள்கிறார்கள்.

முஹர்ரம் பத்தாம் நாள் நோன்பு விருப்பத் தேர்வுதான் என்றாலும் நபிகளார் இந்த நோன்பு நோற்பவர்களைப் பாராட்டியிருக்கிறார்கள். “யார் முஹர்ரம் மாதம் நோன்பு வைக்கிறார்களோ அவர்களின் கடந்த ஓராண்டு பாவங்கள் மன்னிக்கப்படும்” என்று நற்செய்தி அறிவித்துள்ளார்கள்.

- சிராஜுல்ஹஸன்

இந்த வார சிந்தனை

“ரமலான் நோன்புக்கு அடுத்தபடியாகச் சிறந்த நோன்பு எது வெனில் முஹர்ரம் மாத (ஆஷுரா) நோன்புதான்.”- நபிமொழி(ஆதாரம்: முஸ்லிம்)

Related Stories: