இறைவனிடம் சரண் புகுவோர்க்கு துன்பம் இல்லை

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார் திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?என் மகன் ஆஸ்திரேலியாவில் எம்.பி.ஏ படித்து வருகிறான். கடந்த ஜனவரியில் நான் வாழ விரும்பவில்லை என்று சொல்லி விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சித்தான். என் மகனை திருமணக் கோலத்தில் பார்ப்பேனா? பேரப் பிள்ளைகளைக் காண இயலுமா? உரிய வழி சொல்லுங்கள்

- ஷைலஜா, கோயமுத்தூர்.

புனர்பூசம் நட்சத்திரம், கடக ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனின் ஜாதகப்படி தற்போது புதன் தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. உங்களுடைய மகனின் ஜாதக பலத்தின்படி பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் உண்டாகியிருக்கும் பிரச்னை அவரை இவ்வாறு அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. அவரது எதிர்கால வாழ்வு என்பது அந்நிய தேசத்தில் அமைவதே நல்லது. அதே நேரத்தில் அவரைத் தனியாக வசிக்கவிடுவதும் அத்தனை உசிதமில்லை. உங்கள் கணவரின் நிலை குறித்தும் கடிதத்தில் விரிவாக எழுதியுள்ளீர்கள். பொறுப்பற்ற மனிதரைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. உங்கள் மகனின் நலம் கருதி சொத்துக்களை உருமாற்றம் செய்துவிட்டு அவரோடு சென்று வசிக்க முயற்சியுங்கள். கணவரின் வாழ்விற்குத் தேவையான அத்தியாவசிய செலவுகளுக்கு மட்டுமான தொகையை வங்கியில் டெபாசிட் செய்துவிடுங்கள்.

உங்கள் மகனை உங்களால் மட்டுமே நல்லபடியாக வாழ வைக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். கொஞ்சம், கொஞ்சமாக அவருடைய பிரச்னைகளில் இருந்து அவரை மீட்டெடுக்க உங்களால் இயலும். ஆனால் அவரோடு நீங்கள் இணைந்து வசிக்க வேண்டியது அவசியம். காலம் கடத்தாமல் உடனடியாக செயலில் இறங்குங்கள். உங்களுடைய சம்பாத்யமும், இத்தனை வருட காலமாக நீங்கள் கண்டு வந்த சிரமங்களும் யாருக்காக என்பதை அமைதியாக யோசித்துப் பாருங்கள். கடன் பிரச்னைகளை எல்லாம் உங்களால் எளிதாக சமாளிக்க இயலும். சோட்டாணிக்கரை பகவதி அம்மனை தரிசித்து உங்கள் மகனுக்காக மனமுருகி பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பகவதியின் அருளால் உங்கள் மகனின் வாழ்வு மறுமலர்ச்சி காணும்.

?31 வயதாகும் என் மூன்றாவது மகன் சற்று மனவளர்ச்சி குன்றியவன். அவனது தந்தை இறந்துவிட்டார். 65 வயதாகும் எனக்கு புற்றுநோய் வந்து சிகிச்சை பெற்று வருகிறேன். என் காலத்திற்குப் பிறகு அவனது நிலை என்னாகுமோ என்ற கவலை வாட்டுகிறது. அவனது சகோதரர்கள் நன்றாக கவனித்துக் கொள்வார்களா? ஆறுதல் அடைய வழி சொல்லுங்கள்.

பகவதியம்மை, கன்னியாகுமரி.

 ‘மரத்த வச்சவன் தண்ணி ஊத்துவான்’ என்று சொல்வார்கள். இவ்வுலகில் வாழும் ஜீவராசிகள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டவை. படைத்த இறைவனே அவற்றை வளர்க்கவும் செய்வான் என்ற நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளுங்கள். நாம் இல்லாவிட்டால் நமது பிள்ளையின் நிலை என்னவாகுமோ என்று நீங்கள் அஞ்ச வேண்டிய அவசியமில்லை. நாம் உயிருடன் இருக்கும் வரை மூளை வளர்ச்சி குன்றிய பிள்ளையை பார்த்துக் கொள்ள வேண்டியது நம் கடமை. அதை நீங்கள் சரிவர செய்து வருகிறீர்கள். நாம் இறந்துவிட்டால் என்ன செய்வது என்பது குறித்து நாம் கவலைப்படக் கூடாது. சித்திரை நட்சத்திரம், கன்னி ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மூன்றாவது மகனின் ஜாதகப்படி தற்போது குரு தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவரது ஜாதகத்தில் மூத்த சகோதரர்களைப் பற்றிச் சொல்லும் 11ம் இடத்திற்கு அதிபதி சூரியன் ஏழில் உச்சம் பெற்று ஜென்ம லக்னத்தின் மீது தனது நேரடிப் பார்வையை செலுத்துகிறார். நிச்சயமாக அவரது சகோதரர்கள் அவரை நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். ஆண்டவனின் அருளால் பொருளாதார ரீதியாக உங்களுக்கு எந்தவிதமான குறையும் உண்டாகவில்லை. நீங்கள் தினமும் தேவாரம், திருவாசகம், பன்னிரு திருமுறைகள் ஆகியவற்றை மனமுருகிப் பாடி பிரார்த்தித்து வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் அவ்வாறு பிரார்த்தனை செய்யும்போது மனவளர்ச்சி குன்றிய மகனையும் அருகில் வைத்துக் கொள்ளுங்கள். தொடர்ந்து தினமும் இதே பிரார்த்தனையை செய்து வாருங்கள். இறைவனின் திருவடியைச் சரண் அடைபவர்களுக்கு எந்தவிதமான குறையும் உண்டாகாது. கவலை வேண்டாம்.

?பெற்றோர் இறந்துவிட்ட நிலையில் நான் மட்டும் தனியாக வசித்து வருகிறேன். ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறேன். திருமணம் ஆகவில்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் பத்து ரூபாய் கூட சேமிக்க முடியவில்லை. எனது தங்கையும் கணவனால் கைவிடப்பட்டு தனது ஒரே மகளுடன் தனியாக வசித்து வருகிறாள். இறுதிமூச்சு உள்ளவரை என்னால் உழைத்து சம்பாதித்து வாழ இயலுமா? வழி சொல்லுங்கள்.

- கிருபாஷங்கர், கடலூர்.

உங்கள் தாயாருக்கு அவரது கணவர் ஆகிய உங்கள் தந்தை இறுதிச் சடங்கினைச் செய்ததாகக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். வயிற்றில் பிறந்த ஆண் வாரிசு ஆகிய நீங்கள் உயிருடன் இருக்கும்போது கணவர் இறுதிச் சடங்கினைச் செய்ய சாஸ்திரம் அனுமதிக்காது. அவர் முறையாகச் செய்திருந்தாலும் மகன் ஆகிய நீங்கள் உங்கள் தாயாருக்குச் செய்ய வேண்டிய கர்மாவினைச் சரிவர செய்து முடிக்கும்வரை அவரது ஆன்மா சாந்தி அடையாது. அதே போல உங்கள் தந்தையார் தனது உடலை அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்கு தானமாகக் கொடுத்து விட்டதாகவும் குறிப்பிட்டு உள்ளீர்கள். இவ்வாறு உடல்தானம் செய்தவர்களுக்கும் சம்ஸ்காரம், நாராயணபலி அதன் பின்பு கரும காரியம் என பல்வேறு கடமைகளை சாஸ்திரம் வலியுறுத்திச் சொல்கிறது. இவை எல்லாவற்றையும் அவர்களது வாரிசு ஆகிய நீங்கள்தான் செய்து முடிக்க வேண்டும். தர்மசாஸ்திரம் அறிந்த பண்டிதர்களை அணுகி இவற்றை சரிவரச் செய்து முடியுங்கள். தனியாக வசிக்கும் உங்கள் சகோதரியையும் அவரது குமாரத்தியையும் அழைத்து வந்து உங்களோடு வைத்துக் கொண்டு பராமரிக்க முயற்சியுங்கள். இந்த முயற்சி உங்கள் பெற்றோரின் ஆன்மாவினை குளிர வைக்கும். ஐம்பத்தியோரு வயதாகும் நீங்கள் ஆட்டோ ஓட்டித்தான் பிழைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவிட்டம் நட்சத்திரம், கும்ப ராசி, துலாம் லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதக பலத்தின்படி சிறிய அளவிலான மெஸ் போன்ற உணவு சம்பந்தப்பட்ட தொழிலையும் சுயமாகச் செய்ய இயலும். உங்கள் ஜாதகத்தை ஆராயும்போது கல்லின் வடிவில் இருக்கும் பெருமாள் உங்கள் குலதெய்வமாக இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக உள்ளது. உங்கள் தந்தையின் பெயரும் அதனை உறுதி செய்கிறது. அரியலூருக்கு அருகில் உள்ள கலியவரதப்பெருமாள் ஆலயத்திற்கு ஏதேனும் ஒரு புதன்கிழமை நாளில் சென்று வழிபடுங்கள். அதன்பின்பு உங்கள் வாழ்வினில் உண்டாகும் மாற்றத்தினை அனுபவித்து உணர்ந்து தொடர்ந்து அதே பாதையில் பயணியுங்கள். உங்கள் வாழ்விற்கான பொருளை உணர்ந்து கொள்வீர்கள்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,

தினகரன்

ஆன்மிக மலா்

229, கச்சோரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம்.

பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம்,

ராசியை குறிப்பிடவும்.

Related Stories: