திருமண வரமருளும் திருஅம்பர் மாகாளம் ஈசன்

திருமாளம்,  திருவாரூர்

Advertising
Advertising

மன்மதன் தேவர்களால் ஏவப்பட்டு, விசுவாமித்தர முனிவரின் தவத்தைக் குலைக்க அவர்மீது மலர்க்கணைகளைத் தொடுத்தான். அதனால் சினம் கொண்ட முனிவர் இந்திரனை சபிக்க, அவன் மாகாளநாதரை வழிபட்டு சாபம் நீங்கப் பெற்றான். அதன் காரணமாக இத்தலம் மாரபுரி என்ற பெயரைப் பெற்றது.அஷ்டநாகங்களில் ஒன்றாகிய வாசுகி என்ற நாகம் தனக்கு ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷத்தைப் போக்கிக் கொள்ள இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தனது தோஷம் நீங்கப் பெற்றது. அம்பன், அம்பாசுரன் என்ற இரு அரக்கர்களை கொன்ற பாவம் நீங்க மாகாளி பூசித்தது; ஆதலின் இஃது “மாகாளம்” எனப்பட்டது. சோமாசி மாற நாயனார் யாகம் செய்த திருத்தலம். சோமாசி மாற நாயனார், நாள்தோறும் சுந்தரருக்கு அவர் திருவாரூரில் இருந்தபோது உணவுக்குத் தூதுவளை கீரை கொண்டுவந்து தரும் தொண்டைச் செய்து வந்தார். சுந்தரரின் துணைவியாரான பரவையாரும் அதை நன்கு சமைத்துப் பரிமாற, சுந்தரர் விரும்பிச் சாப்பிட்டு வந்தார். ஒரு நாள் சுந்தரர் “நாள்தோறும் இக்கீரை கொணர்ந்து தருபவர் யார்?” என்று கேட்டு, சோமாசிமாறரைப் பற்றியறிந்து

நேரில் கண்டு, அவர் விருப்பம் என்ன? என  கேட்டார். அதற்கு சோமாசிமாறர், “தான் செய்யவிருக்கும் சோமயாகத்திற்குத் திருவாரூர் தியாகேசப் பெருமான் எழுந்தருளி அவிர்ப்பாகம் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அதற்குச் சுந்தரர் உதவ வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார். மறுக்க விரும்பாத சுந்தரர், சோமாசிமாறரை அழைத்துக்கொண்டுத் திருவாரூர்ப் பெருமானிடம் வந்து வேண்டுகோளைத் தெரிவித்தார். அதற்கு இசைந்த இறைவன், “தான்வரும் வேடம் தெரிந்து இவர் எனக்கு அவிர்ப்பாகம் தர வேண்டும்” என்று பணித்தார்; சோமாசிமாறரும் அதற்குச் சம்மதித்தார்.யாகம் நடைபெறும் இடத்திற்குத் தியாகராஜப் பெருமான், புலையர் வேடத்தில், நான்கு வேதங்களையும் நான்கு நாய்களாக்கி உடன் பிடித்துக்கொண்டு, தோளில் இறந்துபோன கன்றினைப் போட்டுக்கொண்டு, தடித்த பூணூலணிந்து, தலையில் தலைப்பாகை (முண்டாசு) கட்டிக்கொண்டு, விநாயகரையும், முருகப்பெருமானையும் சிறுவர்களாக்கிக் கொண்டு, உமாதேவியை புலையச்சி வேடத்தில் தலையில் கள்குடம் ஏந்தியவாறு அழைத்துக்கொண்டு வந்தார். வெறுக்கத்தக்க இக்கோலத்தில் வந்த இறைவனைப் பார்த்து, எல்லோரும் அபசாரம் நேர்ந்து விட்டதென்று எண்ணியும், இக்கோலத்தைக் கண்டு பயந்தும் ஓடினர்.

ஆனால் சோமாசிமாறரும் அவர் மனைவியாரும் அவ்விடத்திலேயே (அச்சத்துடன் நிற்க - தந்தையார் வருவதைக் குறிப்பால் விநாயகர் சோமாசிமாறருக்கு உணர்த்தி அவர்கள் அச்சத்தை நீக்கினார்) நின்று இறைவனை அந்நீச வடிவிலேயே வீழ்ந்து வணங்கி வரவேற்க - இறைவன் மகிழ்ந்து சோமாசிமாறருக்குக் காட்சி தந்து அருள்புரிந்தார் என்பது தலவரலாறு. வைகாசி ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா நடக்கிறது. இந்த விழாவில் காலில் செருப்பு, கையில் மத்தளம், அருகில் மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவன் அருள்பாலிப்பது சிறப்பு. திருவாரூரில் இருந்து தியாகராஜர் இவ்விழாவுக்கு எழுந்தருள்வதால், அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது.புலத்தியர் மரபில் வந்த சம்சாரசீலன் என்பவனிடம் தேவேந்திரன் தோற்று இத்தல இறைவனிடம் அடைக்கலம் அடைந்தான். சுவாமி பைரவ திருக்கோலம் தாங்கி சம்சாரசீலனைக் கொன்று சட்டைநாதராக எழுந்தருளி தேவேந்திரனை மீண்டும் அமராவதிக்கு அதிபதியாக்கினார். அதனால், இத்தலத்துக்கு இந்திரபுரி என்ற பெயரும் ஏற்பட்டது. சட்டைநாதருக்கு இத்தலத்தில் தனி சந்நதி உள்ளது.

சோமாசிமாறருக்குக் காட்சிக் கொடுத்து அருள்புரிந்த மூர்த்தமே “காட்சிகொடுத்த நாயகர்” எனப் போற்றப்படுகின்றது. இறைவன் யாகத்திற்கு நீசவடிவில் எழுந்தருளியபோது அம்பிகையின் தலையிலிருந்த கள்குடம் பொங்கிய இடம் “பொங்கு சாராயநல்லூர்” (இன்று வழக்கில் “கொங்கராய ‘ நல்லூர்”) என்றும், இறைவன் சுமந்து வந்த பறை தானாக அடிப்பட்ட இடம் “அடியுக்க மங்கலம்” (இன்று வழக்கில் “அடியக்கமங்கலம்”) என்றும், இறந்தக் கன்றை ஏந்திய இடம் “கடா மங்கலம்” என்றும் இன்றும் வழங்கப்படுகின்றது.சோமாசி நாயனார் யாக குண்டம் அமைத்து யாகம் செய்த இடம் அம்பர் மாகாளத்திற்கு அம்பர்பெருந்திருக்கோயிலுக்கும் இடையில் உள்ளது. அந்த இடத்தில் ஒரு மண்டபம் உள்ளது; இன்று அந்த இடம் “பண்டாரவாடை திருமாளம்” என்று வழங்குகின்றது. இன்றும் சோம யாக உற்சவம் இவ்விடத்தில்தான் நடைபெறுகிறது. இத்தலத்தில் மாகாள முனிவர், காளி ஆகியோர் இறைவன் மாகாளநாதரை வழிபட்டுள்ளனர். இறைவன், இறைவி இருவரும் புலையன், புலைச்சியர் உருவத்தில் செப்புச் சிலை வடிவில் இக்கோயிலில் உள்ளனர். சோமாசிமார் நாயனார், அவர் மனைவி ஆகியோரின் உருவச் சிலைகளும் இக்கோயிலில் உள்ளன. சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் கட்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று.இவ்வாலயம் அரிசிலாற்றின் வடகரையில் 5 நிலைகள் கொண்ட கிழக்கு நோக்கிய ராஜகோபுரத்துடன் காட்சி அளிக்கிறது.

மதங்க முனிவரின் தவத்திற்கு மெச்சிய தேவி அவருக்கு ராஜமாதங்கி எனும் பெயரில் மகளாக அவதரித்தாள். தக்கன் பருவம் வந்ததும் இத்தல ஈசனுக்கு மாதங்கியைத்திருமணம் செய்து வைத்தார் மதங்கர். அச்சமயம் ஈசன் தேவியிடம் என்ன வரம் வேண்டும் எனக்கேட்க இத்தலத்தை தரிசிக்கும் திருமணமாகாத கன்னியர்க்கும், காளையர்க்கும் உடனே திருமணமாக வேண்டும் என வரம் கேட்டாள். அதன் படியே நீண்ட நாட்களாக திருமணம் ஆகாதவர்கள் இத்தலத்திற்கு வந்து சிவப்பு அரளிப்பூ மாலைகள் இரண்டு தொடுத்து அதை இறைவன், இறைவிக்கு சார்த்தி ஐந்து வெள்ளிக்கிழமைகள் அர்ச்சனை செய்து வழிபட்டு, பின்பு ஒரு மாலையைப் பெற்று கழுத்தில் அணிந்து கொண்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்பது இவ்வாலயத்தின் சிறப்பு.இறைவர் காளகண்டேசுவரர், மாகாளேச்வரர் எனும் திருப்பெயர்களிலும், இறைவி பட்சநாயகி எனும்  பயட்சயாம்பிகை எனும் திருப்பெயர்களிலும்,  கருங்காலியை தல மரமாகவும், மாகாள தீர்த்தத்தை தல தீர்த்தமாகவும் கொண்டு திருவருட்பாலிக்கும் திருத்தலம்  திருஅம்பர் மாகாளம். +இத்தலம் மக்கள் வழக்கில் “கோயில் திருமாளம்” என்று வழங்குகின்றது.கோயில் திருமாளம், திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், பூந்தோட்டம் பஞ்சாயத்தில் உள்ளது திருமாளம் கிராமம்.

- ந.பரணிகுமார்

நெற்றியில் திலகமிடுவது ஏன்?

பரமேஸ்வரனின் நெற்றிக்கண்ணாக அமையும் பாகத்தில் தான் பொதுவாக பொட்டு  வைக்கும் வழக்கம். குங்குமம், சந்தனம், திருநீர் என்பவை பொதுவாக திலகமிட  பயன்படுத்துகின்றனர்.இந்து மத விசுவாசத்தின் பாகமாக திலகமிடுவதைக் கருதி வருகின்றனர் என்றாலும் இதில் அறிவியல் பூர்வமான கருத்தும் உள்ளது.மனித உடலின் ஐந்தாவது திறன் மையமான நெற்றியின் மத்தியிலே பொட்டுவைப்பது  வழக்கம். இம்மையத்தில் குங்குமம் அணியும் போது சூரியனின் கதிர்களில்  அடங்கியிருக்கும் மருத்துவ குணங்களை உறிஞ்சி எடுத்து மூளைக்குள் செலுத்திவிடும்் தன்மை குங்குமத்துக்கு இருக்கின்றது.பிரம்ம  முகூர்த்தத்தில் சந்தனமும், விடியற்காலை குங்குமமும் மாலைப் பொழுதில்  திருநீரும் அணிவது நரம்பு உறுதிக்கும், நோய் நிவாரணத்துக்கும் உத்தமம்  என்று சூரிய ஒளியையும், மனித உடலையும் சம்பந்தப்படுத்தி செய்யப்படும்  ஆராய்ச்சிகள் வெளிப்படுத்தியுள்ளன.திருநீரை காலையில் நீரில்  குழைத்தும் நடுப்பகலில் சந்தனம் சேர்த்தும் அணிய வேண்டும். மாலையில்  உலர்ந்த திருநீர் அணியவும் என்று விதிமுறைகள் உள்ளன.

- ஆர்.ஜெ. அபிநயா

Related Stories: