கடவுளை நம்புபவர்கள் கலங்கத் தேவையில்லை

வாசகா்களின் பிரச்னைகளுக்கு பதிலும் பரிகாரமும் சொல்கிறார்

Advertising
Advertising

பிரச்சனைகள் தீர்க்கும் பரிகாரங்கள்

திருக்கோவிலூர் ஹரிபிரசாத் சர்மா

?எனது காதல் திருமணம் பெற்றோர்கள் சம்மதத்துடன் நடந்தது. ஆறரை வயது மகனுக்கு சரியாக பேச்சு வரவில்லை. இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கும் மற்றவர்களின் ஏளனத்திற்கும் ஆளாகி உள்ளேன். எந்தக் குறையும் இல்லாத பெண் குழந்தை பிறக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.  உரிய பரிகாரம் சொல்லுங்கள்.

- மதுரை வாசகி.

சதயம் நட்சத்திரம், கும்ப ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகனே எந்தக் குறையும் இல்லாமல்தான் பிறந்திருக்கிறார். சரியாக பேச்சு வரவில்லை என்பதெல்லாம் ஒரு குறையே அல்ல. அறிவாற்றல் சிறப்பாக உள்ளதால் நீங்கள் அவரைப்பற்றிக் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஜாதகத்தின்படி தற்போது குரு தசையில் சனி புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் வாக்கு ஸ்தானத்தில் குரு அமர்ந்திருந்தாலும் வக்ரம் பெற்ற நிலையில் கேதுவுடன் இணைந்திருப்பதால் சரியாக பேச்சு வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார். குரு ஸ்தலம் ஆகிய திருச்செந்தூருக்கு வியாழக்கிழமை நாளில் உங்கள் மகனை அழைத்துச் செல்லுங்கள். குமரகுருபரர் எனும் மாபெரும் கவியை பேச வைத்த அதே தெய்வம் உங்கள் மகனுக்கும் நன்றாகப் பேசும் திறமையை அருளும். குமரக்கடவுளின் மேல் முழுநம்பிக்கையையும் வைத்து பிரார்த்தனை செய்யுங்கள். வியாழன் தோறும் ஸ்கந்த குருகவசம் படித்து வாருங்கள். உங்கள் மகனின் காதுகளில் ஸ்கந்த குரு கவசம் ஒலித்துக் கொண்டே இருக்கும்படியான ஏற்பாட்டினைச் செய்யுங்கள். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, தனுசு லக்னத்தைச் சேர்ந்த உங்களுக்கு இந்த ஒரு மகனே போதுமானது. பேர்சொல்லும் பிள்ளையாக உங்கள் மகன் உருவெடுப்பார்.

?+1 படிக்கும் என் மகள் இதுவரை பருவம் அடையவில்லை. பள்ளியில் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளாகிறாள். அவள் எப்போது பருவம் அடைவாள்? பரிகாரம் ஏதும் செய்ய வேண்டுமா?

- சாரதா, கோவை.

மிருகசீரிஷ நட்சத்திரம் முதல் பாதம், (ரோகிணி என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்) ரிஷப ராசி, கன்னி லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதகத்தில் சந்திரனுடன் சனி-ராகு இணைந்துள்ளனர். குறிப்பாக சந்திரனுடன் மிக நெருக்கத்தில் அதாவது கிட்டத்தட்ட ஒரே பாகையில் சஞ்சரிக்கும் சனி பகவான் அவர் பருவம் அடைவதில் தடையினைத் தோற்றுவித்துள்ளார். பெண்கள் பருவமடைய செவ்வாய் கிரஹத்தின் ஆதரவு தேவை. செவ்வாய் மூன்றாம் பாவகத்தில் கேதுவுடன் இணைந்திருப்பதும் தடையினைத் தோற்று வித்திருக்கிறது. என்றாலும் தற்போது நடந்து வரும் தசாபுக்தியின் காலம் சாதகமாக உள்ளதால் 25.03.2020ற்குள் பூப்பெய்தி விடுவார். செவ்வாய்க்கு உரிய துவரை தானியத்தையும், கேதுவிற்கு உரிய கொள்ளு தானியத்தையும் ஒன்றாக அரைத்துப் பொடியாக்கி வாரம் மூன்று முறை சாதத்தில் கலந்து சாப்பிடச் செய்யுங்கள். அவரது உடல் சூட்டினைத் தூண்டுகின்ற வகையில் அவருக்கான உணவு வகைகள் அமைதல் நன்று.  ஏதேனும் ஒரு செவ்வாய்க்கிழமை நாளில் மருதமலைக்குச் சென்று முருகப்பெருமானை தரிசித்து விட்டு பாம்பாட்டி சித்தர் சந்நதிக்கு உங்கள் மகளை அழைத்துச் செல்லுங்கள். அந்த நாள் முழுவதும் பெரும்பான்மையான நேரத்தினை பாம்பாட்டி சித்தர் குகையிலேயே கழிப்பது அந்தப் பெண்ணின் உடல்நிலையில் மாற்றத்தை உருவாக்கும். மருதமலையான் திருவருளால் உங்கள் மகளின் வாழ்வினில் வசந்தம் வீசும்.

?80வது வயதில் இருக்கும் நான் சதாபிஷேகம் செய்துகொள்ள விரும்புகிறேன். என்னுடைய பிறந்த தேதி அன்று எந்த நட்சத்திரம் என்பது சரியாகத் தெரியவில்லை. என்னுடைய ஜென்ம நட்சத்திரம் என்ன, எந்த நாளில் செய்து கொள்ள வேண்டும் என்பதனைத் தெரிவியுங்கள்.

- சங்கரன், குடியாத்தம்.

நீங்கள் பிறந்த தேதி 06.07.1939 என்றும் வெகுதானிய வருடம் ஐப்பசி மாதம் வியாழக்கிழமை காலை 09.00 மணி முதல் 11 மணிக்குள்ளாக பிறந்திருப்பதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஆங்கிலத் தேதிக்கும் தமிழ் வருடம் மற்றும் மாதத்திற்கும் தொடர்பில்லாமல் உள்ளது. 1939ம் வருடம் ஜூலை மாதம் என்பது தமிழ் வருடக் கணக்கினைப் பொறுத்த வரை பிரமாதி வருடம் ஆனி மாதம் என்று வரும். வெகுதானிய வருடம் வராது. மேலும் ஏழாம் மாதம் அதாவது ஜூலை மாதத்திற்கும் ஐப்பசி மாதத்திற்கும் எந்தவிதமான தொடர்பும் உண்டாகாது. தமிழ் வருடக் கணக்கினைத் தவறாகப் புரிந்து வைத்திருக்கிறீர்கள். நீங்கள் குறிப்பிட்டிருக்கும் 06.07.1939 என்ற தேதியும், வியாழக்கிழமை நாள் என்பதும் பொருந்திப் போகிறது. இரண்டு இடங்களில் நீங்கள் ஆங்கிலத் தேதியை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருப்பதால் அதனையே உங்கள் பிறந்த தேதியாகக் கொண்டு கணித்துப் பார்த்ததில் பிரமாதி வருடம், ஆனி மாதம், சதயம் நட்சத்திர நாளில் பிறந்திருக்கிறீர்கள் என்பது தெரிய வருகிறது. எனவே, இந்த வருடம் ஆனி மாதம் சதயம் நட்சத்திரம் வருகின்ற 23.06.2019, ஞாயிற்றுக்கிழமை நாளில் சதாபிஷேகம் செய்து கொள்ளுங்கள். இறைவனின் திருவருளால் உங்களுடைய சதாபிஷேக வைபவம் நல்லபடியாக நடந்து நீங்களும், உங்கள் குடும்பத்தினரும் தேக ஆரோக்கியத்துடன் தீர்க்காயுளைப் பெற பிரார்த்திக்கிறோம்.

?15 வயதில் இருந்து கலைநிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வரும் என்னை தற்போது யாரும் அழைக்க முன்வருவதில்லை. வேறுவேலைகள் ஏதும் எனக்கு தெரியாது. தற்போது அறுவை சிகிச்சை செய்து உடல்நலமும் சரியாக இல்லை. கலைநிகழ்ச்சிகள் எனக்கு கிடைத்து தொழில் சிறக்க நல்லதொரு பரிகாரம் கூறுங்கள்.

- ஜான்ஹோஸ், கன்னியாகுமரி.

சதா எந்நேரமும் எல்லாம் வல்ல சிவபெருமானையும் சரஸ்வதியையும் மனதில் நிலைநிறுத்தி வணங்கி வருவதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். கடவுளை நம்பினோர் கைவிடப்படார் என்பதை மனதில் நிலைநிறுத்துங்கள். மகம் நட்சத்திரம், சிம்ம ராசி, விருச்சிக லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் தொழில் ஸ்தானத்திற்கு அதிபதியாகிய சூரியன் மூன்றாம் வீட்டில் அமர்ந்துள்ளது நல்ல நிலையே. மிமிக்ரி கலைஞர் ஆகிய உங்களுக்கு தொண்டைப் பகுதி வலிமையானதாக அமைய வேண்டும். அத்தகைய அமைப்பினை உங்கள் ஜாதகம் கொண்டுள்ளதால் உங்கள் ஆயுள் முழுவதும் நீங்கள் ஒரு கலைஞராகத் திகழ்வீர்கள். தொழிற் ஸ்தானத்தில் ராகுவும், சந்திரனும் இணைந்திருப்பதால் உள்ளூரில் வாய்ப்பு தேடாமல் வெளியூரில் தேடுங்கள். உங்களை ஏதேனும் ஒரு கலைக்குழுவினரோடு இணைத்துக் கொள்ளுங்கள். ஒரு பெண் நிர்வகிக்கும் அந்தக் கலைக்குழுவின் மூலமாக அந்நிய தேசம் செல்வதற்கான வாய்ப்பும் வந்து சேரும். உள்நாட்டில் விட வெளிநாட்டில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் நிச்சயமாகக் கிடைக்கும். உங்களுடைய ஜாதக பலத்தின்படி 14.10.2019ற்குப்பின் நல்லகாலம் என்பது பிறக்கிறது. அன்றாடம் சரஸ்வதி தேவியை துதித்து வருவதே போதுமானது. பிரகாசமான எதிர்காலம் நிச்சயம் உண்டு.

?என் கணவர் தன்னைவிட பத்து வயது மூத்த பெண்ணோடு பழக்கம் வைத்திருக்கிறார். அவர் வேலைக்குச் சென்ற இடத்தில் பழக்கம் உண்டானதால் அதனை விடுத்து என்னோடு அழைத்து வந்துவிட்டேன். அவரும் சந்தோஷமாக இல்லை, நானும் சந்தோஷமாக இல்லை. மீண்டும் எங்கள் வாழ்வினில் மகிழ்ச்சி எப்போது வரும்? நல்ல வழி காட்டுங்கள்.

- ஓர் வாசகி, தென்காசி.

 அனுஷம் நட்சத்திரம், விருச்சிக ராசி, மீன லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் கணவரின் ஜாதகப்படி தற்போது சுக்கிர தசையில் சுக்கிர புக்தி நடந்து வருகிறது. அவருடைய ஜாதக பலத்தின்படி தற்போது உத்யோக ஸ்தானம் என்பது மிகவும் நன்றாக உள்ளது. அவர் மீதான சந்தேகத்தின் காரணமாக அவரை வேலை பார்க்கவிடாமல் செய்வது தவறு. அவருடைய ஜாதக பலத்தின்படி உள்ளூரில் உத்யோகம் என்பது அத்தனை சிறப்பாக இல்லை. வெளியூரில் சென்று வேலை பார்ப்பதால் மட்டுமே அவரால் நன்றாக சம்பாதிக்க இயலும். விசாகம் நட்சத்திரம், துலாம் ராசி, மேஷ லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தின்படி தற்போது புதன் தசையில் புதன் புக்தி நடந்து வருகிறது. உங்கள் ஜாதகத்தில் ஏழாம் வீட்டிற்கு அதிபதி சுக்கிரன் மூன்றாம் வீட்டில் புதனுடன் இணைந்து அமர்ந்திருப்பதால் குடும்ப வாழ்வினில் இதுபோன்ற பிரச்னைகளை சந்திக்க வேண்டி நேர்ந்திருக்கிறது. உங்கள் இருவரின் ஜாதகங்களையும் ஆராய்ந்ததில் உங்கள் கணவர் வேலை பார்க்கும் ஊருக்கே நீங்களும் இடம் மாறிக் கொள்வது நல்லது என்று தோன்றுகிறது. திங்கள் மற்றும் புதன்கிழமை நாட்களில் அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று கீழ்க்கண்ட ஸ்லோகத்தினை சொல்லிக்கொண்டே ஆலயத்தினை மூன்று முறை வலம் வந்து வணங்குங்கள். பார்வதி -பரமேஸ்வரனின் அருளால் உங்கள் குடும்பத்தில் உள்ள பிரச்னைகள் முடிவடைந்து நலமுடன் வாழ்வீர்கள்.

“சாம்பேய கௌரார்த சரீரகாயை கர்ப்பூர கௌரார்த சரீரகாய

தம்மில்லகாயை ச ஜடாதராய நம:சிவாயை ச நம: சிவாய.”

?எனது மகளுக்கு இரண்டு முறை திருமண ஏற்பாடு செய்து நின்றுவிட்டது. அவளது ஜாதகத்தில் ஏதாவது தோஷம் இருக்கிறதா? அவளை விட ஆறுமாதம் வயதில் இளைய மாமன்மகனுக்கு பெண்ணைத் தரலாமா? அவளது திருமணம் எப்போது நடைபெறும்? பரிகாரம் ஏதேனும் உண்டா?

- திருநெல்வேலி வாசகி
.

உத்திராடம் நட்சத்திரம், மகர ராசி, தனுசு லக்னத்தில் பிறந்திருக்கும் உங்கள் மகளின் ஜாதகப்படி தற்போது ராகு தசையில் குரு புக்தி நடந்து வருகிறது. ஒரு பெண் தன்னைவிட வயதில் இளைய ஆண்மகனைத் திருமணம் செய்ய தர்மசாஸ்திரம் அனுமதி அளிக்காது. என்றாலும் உங்கள் மகளின் ஜாதகத்தில்  லக்னாதிபதி குரு வக்ரம் பெற்றிருப்பதும், அவருடைய ஜாதகத்தில் உண்டாகியிருக்கும் சூரியன்-செவ்வாய்-சனியின் இணைவும் இதுபோன்ற சூழலுக்கு ஆளாக்குகிறது. ஹஸ்தம் நட்சத்திரம், கன்னி ராசியில் பிறந்திருக்கும் உங்கள் அண்ணன் மகனோடு அதாவது பெண்ணின் தாய்மாமனின் பிள்ளையின் ஜாதகத்தோடு உங்கள் பெண்ணின் ஜாதகம் நன்கு பொருந்தியிருப்பதால் அவரைத் திருமணம் செய்வதில் எந்தவிதமான தவறும் இல்லை. முக்கியமாக பெண்ணிற்கும், மாப்பிள்ளைக்கும் மனப்பொருத்தம் உள்ளதா, ஒருவருக்கொருவர் பரஸ்பரம் பிடித்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொண்டு திருமணத்திற்கான முயற்சியில் இறங்குங்கள். திருமணத்தை ஏதேனும் ஒரு பெருமாள் கோயிலில் வைத்து நடத்துவது நல்லது. புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்குச் சென்று நெய்விளக்கேற்றி வைத்து வழிபட்டு வாருங்கள். 12.05.2020ற்குள் உங்கள் மகளின் திருமணம் நடந்துவிடும்.

வாசகா்கள் தங்கள் பிரச்னைகளை,

பிரச்னைகள் தீா்க்கும் பரிகாரங்கள்

தினகரன்

ஆன்மிக மலா்

229, கச்சேரி சாலை, மயிலாப்பூா், சென்னை-600 004 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். பரிகாரம் கேட்பவா்கள் கண்டிப்பாக தம் பெயா்/பிறந்த நேரம், தேதி, மாதம், வருடம், நட்சத்திரம், ராசியை குறிப்பிடவும்.

Related Stories: