மன்னனுக்கு சாபவிமோசனம் தந்த வானமாமலை பெருமாள்

*நாங்குநேரியில் அருள்பாலிக்கிறார்

Advertising
Advertising

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் வீற்றிந்து அருள்பாலிக்கிறார் அருள்மிகு வானமாமலை பெருமாள். பல்வேறு புராண வரலாற்றை கொண்டுள்ள இத்தலம் மிகவும் பிரசித்திப்பெற்றதாகும். ஸ்கந்த மற்றும் நாரத புராணங்களில் இடம்பெற்றுள்ள, லட்சுமி தாயார் இக்கோயிலில் குழந்தையாக பிறந்ததால் இத்திருத்தலம் ஸ்ரீவரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசேசன் இக்கோயிலில் தவமிருந்து மகாவிஷ்ணுவை சுமக்கும் பாக்கியம் பெற்றார். கருடாழ்வாரும் இக்கோயிலில் தவமியற்றி வைகுண்டவாயிலில் நிற்கும் பேறுபெற்றார்.

முன்னொரு காலத்தில் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சிந்து தேசத்து மன்னர் வழி தவறி தனது நண்பர்களையும், பணியாளர்களையும் விட்டு நெடுந்தூரம் சென்றுவிட்டார். காட்டிற்குள் ஒரு சிறு குடிசையும் அதில் சிறிது உணவையும் கண்ட மன்னர் அந்த உணவை உண்டு பசியாறினார்.”குஷாணனா” என்ற முனிவர் தன் குடிசைக்குள் வேறு ஒருவர் இருப்பதையும் விஷ்ணுவிற்கு படைப்பதற்காக தான் வைத்திருந்த உணவையும் அதனை அங்கு இருந்தவர் சாப்பிட்டுவிட்டதையும் கண்டு, அந்த மன்னனை நாயாக மாறும்படி சபித்தார்.

சாபம் பெற்ற மன்னர், எப்பொழுது, தான் சாப விமோசனம் அடைவேன் என முனிவரை வேண்டினார். “உலகத்தின் மிக்சிறந்த தீர்த்தத்தில் நீ நீராடும் போது, உன் சாபம் நீங்கப்பெறுவாய்” என ஆசி கூறினார். நாயாக மாறிய மன்னனை காட்டில் அலைந்து திரிகையில் வேடர்கள் பிடித்து வானமாமலை கோயில் அமைந்துள்ள இடத்திற்கு கொண்டுவந்தனர்.

பின்னர் கோயிலில் உள்ள சேற்றுத்தாமரை தீர்த்தத்தில் நாயாக இருந்த மன்னர் நீராடியபோது சாப விமோசனம் பெற்றார். பின்னர் இந்த கோயிலை மன்னர் வழிபட்டு நாடு திரும்பினார். இக்கோயிலில் உள்ள சேற்றுத்தாமரை தீர்த்தம் திருப்பாற்கடல் என அழைக்கப்படுகிறது. இக்கோயிலில் அமைந்து ஒவ்வொரு தூண்களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள், அனுமனை அணைந்து நிற்கும் ராமபிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பங்களும் மிகச்சிறப்பானவையாக உள்ளன. கருவறையில் தோத்தாத்திரி நாதர் பட்டாபிஷேக கோலத்தில் காட்சி தருகிறார். ஸ்ரீதேவி, பூதேவி இருபுறமும் இருக்க ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டிருக்கின்றனர்.

தங்கமயமான ஆதிஷேசன் குடை பிடிக்க வைகுண்டத்தில் மகாவிஷ்ணு இருக்கும் கோலத்தை இங்கே காணலாம். பிறகு, மார்கண்டேயர், சந்திர, சூரியர், வெளியே விஸ்வக்சேனர் என 11 பேர் ஏகாசனத்தில் இருப்பது கண்கொள்ளா காட்சியாகும். நம்மாழ்வார் இந்த கோயிலின் இறைவனை “நோயற்ற நோண்பு” என 10 பாசுரங்களில் (2590 & 2600) பாடிப்பரவி மங்களாசாசனம் செய்துள்ளார். இக்கோயிலுக்கு திருச்சிரீவரமங்கை, திருவரமங்கை, திருச்சீரிவரமங்கள நகர், தோத்தாத்ரீ ஷேத்திரம், வானமாமலை என பல பெயர்கள் உள்ளன.

108 வைணவ திவ்ய தேசங்களில், 8 சுயம்பு சேத்திரங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று இந்த கோயில் ஆகும். இங்கு இறைவனுக்கு தினமும் எண்ணெய்யால் அபிஷேகம் செய்யப்பட்டு அந்த எண்ணெய் ஒரு கிணற்றில் ஊற்றப்படுகிறது. அதில் இருந்து எடுத்துப் பிரசாதமாக தரப்படுகிறது. இந்த பிரசாத எண்ணெய் சகல நோய்களையும் தீர்க்கும் என நம்பப்படுகிறது.

இங்கு நம்மாழ்வாரைத்தவிர இதர ஆழ்வார்களுக்கு தனிச்சன்னதி உள்ளது. நம்மாழ்வார் மட்டும் உற்சவர் முன் வைக்கப்பட்டிருக்கிறார். சடகோபத்திலே (ஜடாரி) பொறிக்கப்பட்டு சிறப்பு மரியாதையுடன் இடம்பெற்றுள்ளார்.

Related Stories: