எண்ணெய் உறிஞ்சும் சிவலிங்கம்

மார்க்கண்டேயருக்கு இத்தலத்தில் சிரஞ்சீவியாக இருக்க ஈசன் வரம் அளித்தார். அத்தகைய சிறப்பு பெற்ற தலம் திருநீலக்குடி. பாற்கடலை அமிர்தம் பெற வேண்டி தேவர்களும், அசுரர்களும் கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டார். அது அவர் வயிற்றுக்குள் செல்லாமல் தடுக்க உமை அவரின் கழுத்தைப் பிடிக்க விஷம் அவர் கழுத்தில் தங்கியது. இறைவனும் நீலகண்டேஸ்வரர் என்று பெயர் பெற்றார்.

இத்தலத்தில் இறைவன் நீலகண்டேஸ்வரருக்கு செய்யப்படும் நல்லெண்ணெய் அபிஷேகம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்குள்ள மூலவருக்கு எண்ணெய்யால் அபிஷேகம் செய்யும்போது பாத்திரம் பாத்திரமாக நிறைய எண்ணெய்யை சுவாமியின் மீது ஊற்றி அபிஷேகம் செய்வார்கள். எவ்வளவு எண்ணெய் ஊற்றி அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் சிவலிங்கத்திற்கு உள்ளேயே உறிஞ்சப்பட்டு விடுவது அதிசயமாக உள்ளது.

நாள் பூராவும் எண்ணெய் அபிஷேகம் செய்தாலும் அத்தனையும் உறிஞ்சப்பட்டு விடுகிறது. இதில் ஆச்சர்யம் என்னவெனில் அபிஷேகம் செய்த அடுத்த நாள் சுவாமியை பார்த்தால் அவரது சிவலிங்கத் திருமேனி கிட்டதட்ட 1 வருடமாக எண்ணெயே தடவாவது போல் அவ்வளவு உலர்ந்து காய்ந்து காணப்படும்.அபிஷேகம் செய்யப்படும் எண்ணெயெல்லாம் எங்கு மாயமாகிறது என்பது இத்தனை காலமும் யாருக்கும் புலப்படவில்லை. எண்ணெய் அபிஷேகம் செய்யப்பட்டுக் கொண்டே இருப்பதால் சிவலிங்கத் திருமேனி வழுவழுப்பாக இருப்பதற்கு பதில் சொர சொரப்பாகவே இருக்கிறது. ஈசன் ஆலகால விஷம் உண்டு தொண்டையில் விஷம் இருப்பதால் அந்த விஷத்தன்மையைக் குறைக்க வேண்டியே இங்கு எண்ணெய் அபிஷேகம் செய்யப்படுகிறது என்பது ஐதீகம். சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெயை உட்கொண்டால் தீராத நோய்களும் குணமாகும்.இத்தலத்தில் இரண்டு அம்மன் சந்நதிகள் உள்ளன. ஒரு அம்மனின் பெயர் பக்தனது விருப்பத்தை நிறைவேற்றும் ஸ்ரீபக்தபீஷ்டப்பிரதாயனி என்கிற ஸ்ரீ தவக்கோல அம்மை. 2-வது அம்மனின் பெயர் திருமணக்கோலத்தில் உள்ள ஸ்ரீஅனூபமஸ்தநி என்கிற ஸ்ரீஅழகாம்பிகை.

ஐந்து இலைகள் கொண்ட வில்வமரம் இத்தலத்தின் தலவிருட்சமாக இருந்தாலும், கோயிலின் உட்பிராகாரத்தில் இருக்கும் பலா மரம் சிறப்பு வாய்ந்தது. இது தெய்வீகமான பலா மரம் என்று அழைக்கப்படுகின்றது. அந்த மரத்தில் காய்க்கும் பலாப்பழத்தை அறுத்து அதன் சுளைகளை சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பின்னர்தான் அதை நாம் சாப்பிட வேண்டும். ஆனால் சுவாமிக்கு நிவேதனம் செய்யாமல் பலாப்பழத்தையே வெளியில் எடுத்துக் கொண்டு போனால் நிச்சயமாக அப்பலாப்பழத்தில் வண்டுகள் உண்டாகிப் பழம் கெட்டுப் போகும் என்று சொல்லப்படுகிறது. பரீட்சித்துப் பார்ப்பதற்காக மீறி எடுத்துச்சென்று தண்டனை பெற்றவர்களும் உண்டென்று கூறுகிறார்கள்.இத்தலத்தில் வழிபட்டால் ஆயுள் பலம் கூடும் என்பது ஐதீகம். எம பரிகாரம், ராகு தோஷ பரிகாரங்கள் இத்தலத்தில் பக்தர்களால் செய்யப்படுகிறது. தேவி தீர்த்தம், மார்க்கண்டேய தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், க்ஷீர குண்டம் என்று நான்கு சிறப்பு வாய்ந்த தீர்த்தங்களை கொண்ட தலமாக இக்கோயில் விளங்குகிறது. கும்பகோணத்திற்கு அருகே இத்தலம் அமைந்துள்ளது.

Related Stories: